செவ்வாய், மார்ச் 29, 2016

அதிகாரம் 024: புகழ் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 024 - புகழ்

0231.  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
           ஊதியம் இல்லை உயிர்க்கு

           விழியப்பன் விளக்கம்: பிறருக்கு கொடுப்பது மற்றும் புகழுடன் வாழ்வது, இவற்றைத் 
           தவிர்த்து; மனிதர்களுக்கு, அதிக வெகுமதியானது வேறேதுமில்லை.
(அது போல்...)
           அறத்திற்கு பயப்படுதல் மற்றும் பகுத்தறிவுடன் கற்றல், இவற்றைத் தவிர்த்து;
           தேடுவோர்க்கு, சிறந்த குருவானவர் வேறெவருமில்லை.

0232.  உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
           ஈவார்மேல் நிற்கும் புகழ்

           விழியப்பன் விளக்கம்: யாசிப்போர்க்குத் தேவையானதைக் கொடுப்பதை, பாராட்டுவோர்  
           பாராட்டுவன எல்லாம்; கொடுப்பவர்க்கு நிலையான புகழாய் மாறும்.
(அதுபோல்)
           தேடுவோர்க்கு மனிதத்தை கற்பிப்பதை, ஆன்மீகவாதிகள் ஆன்மீகம் என்பதெல்லாம்; 
           கற்பிப்பவரின் பிறவிப் பயனாக மாறும்.

0233.  ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
           பொன்றாது நிற்பதொன் றில்

           விழியப்பன் விளக்கம்: ஒப்பற்ற இப்புவியுலகில்; உன்னதமான புகழுக்கு இணையாய், 
           அழியாமல் நிலைத்திருப்பது வேறெதுவுமில்லை.
(அது போல்...)
           விலைமதிப்பற்ற உடம்பில்; புனிதமான ஆன்மாவுக்கு நிகராய், ஓய்வில்லாமல் 
           செயல்படுவது வேறொன்றுமில்லை.

0234.  நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
           போற்றாது புத்தேள் உலகு

           விழியப்பன் விளக்கம்: புவியுலக எல்லையில், என்றுமழியா புகழ்தரும் செயல்களைச் 
           செய்தால்; "தேவர் உலகம்" தேவர்களைப் போற்றுவதற்கு மாறாய், அவர்களைப் போற்றும்.
(அது போல்...)
           சமதர்ம அடிப்படையில், நிலையான செல்வமான கல்வியைக் கற்பித்தால்; "கற்பவர் 
           உலகம்" செல்வத்தை வணங்குவதைத் தவிர்த்து, குருவை வணங்கும்.

0235.  நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
           வித்தகர்க் கல்லால் அரிது

           விழியப்பன் விளக்கம்: புகழ் பெற்ற செயல்களைச் செய்யும் திறமையானோர் தவிர, 
           மற்றவர்களுக்கு; "சங்கு"போல் - உடலிழந்த பின்னும், நிலைத்து வாழ்வது சாத்தியமில்லை.
(அது போல்...)
           மனிதம் நிறைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் அன்பர்கள் தவிர்த்து, பிறர்க்கு; 
           "தந்தம்"போல் - உறவைப் பிரிந்தும், உயர்ந்து மதிக்கப்படுவது  எளிதல்ல.

0236.  தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
           தோன்றலின் தோன்றாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: உலகமென்னும் மேடையில் தோன்றிவிட்டால், பிறப்பை 
           புகழுடையதாய் ஆக்கும் முனைப்பு இருக்கவேண்டும்! அப்படி ஆக்க இயலாதோர் 
           தோன்றுவது, தோன்றாததற்கு ஒப்பாகும்!
(அது போல்...)
           நட்பென்னும் உறவில் இணைந்துவிட்டால், நட்பை புரிதலுடையதாய் மாற்றும் 
           வைராக்கியம் இருக்கவேண்டும்! அப்படி மாற்ற இயலாதோர் இணைவது,
           இணையாததற்கு இணையாகும்!

0237.  புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
           இகழ்வாரை நோவது எவன்

           விழியப்பன் விளக்கம்: புகழுடன் வாழமுடியாத மனிதர்கள், தம்மையே கடிந்து கொள்ள 
           வேண்டும்! மாறாய்; தம்மை விமர்சிக்கும் மனிதர்களை, கடிந்துகொள்வதில் என்ன 
           காரணம் இருக்கிறது?
(அது போல்...)
           மக்களாட்சியை நிறுவமுடியாத தலைவர்கள், தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டும்! 
           அதை விடுத்து; தம்மை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை, தண்டிப்பதில் என்ன நியாயம் 
           இருக்கிறது?

0238.  வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
           எச்சம் பெறாஅ விடின்

           விழியப்பன் விளக்கம்: தம் ஆயுள் காலத்திற்குப் பின், நிலைத்திருக்கும் புகழைப் 
           பெறவில்லை எனில்; அதுவே - புவியுலகில் வாழ்வோர் எல்லோர்க்கும், உண்மையான 
           பழியாகும்.
(அது போல்...)
           தம் ஆட்சிக் காலத்திற்குப் பின், தொடர்ந்திடும் நேர்மையை நிலைநாட்டவில்லை எனில்; 
           அதுவே - பொதுவாழ்வில் உள்ளோர் எல்லோர்க்கும், உண்மையான தோல்வியாகும்.

0239.  வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
           யாக்கை பொறுத்த நிலம்

           விழியப்பன் விளக்கம்: புகழில்லாமல் வாழ்பவரின் உடலைச் சுமப்பதால், ஒப்பற்ற
           புவியானது; பழியில்லாமல் பெரும்பயன் அளிக்கும், தன் தன்மையிலிருந்து குறையும்.
(அது போல்...)
           நீதியில்லாமல் ஆள்பவரின் ஆட்சியை ஆதரிப்பதால், இணையற்ற மக்களாட்சியானது;
           தீதில்லாமல் பொதுநலம் காக்கும், தன் நிலையிலிருந்து மாறும்.

0240.  வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
           வாழ்வாரே வாழா தவர்

           விழியப்பன் விளக்கம்: புகழ் இல்லாததால் விளையும், பழியை ஒழித்து வாழ்வோரே - 
           வாழ்க்கைப் பயனடைந்தோர் ஆவர்; புகழை ஒழித்து வாழ்வோர், வாழ்க்கைப் 
           பயனடையாதவர் ஆவர்.
(அது போல்...)
           அறம் இல்லாததால் நிகழும், தீமையை விலக்கி பயணிப்போரே - சமுதாயத்தை 
           உயர்த்துவோர் ஆவர்; அறத்தை விலக்கி பயணிப்போர், சமுதாயத்தை உயர்த்தாதவர்
           ஆவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக