ஞாயிறு, ஏப்ரல் 30, 2017

குறள் எண்: 0637 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0637}

செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்

விழியப்பன் விளக்கம்: நூல்களின் வழியே, செயல்களை செய்யும் செய்முறைகளை அறிந்திருப்பினும்; குடிமக்களின் இயல்பை அறிந்து செய்வதே, அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
உறவுகளின் வழியே, இல்லறத்தை நடத்தும் நடைமுறையை அறிந்திருப்பினும்; குடும்பத்தாரின் இயல்பை அறிந்து வாழ்வதே, குடும்பம் ஆகும்.

சனி, ஏப்ரல் 29, 2017

பாகுபலி 2 (2017)


     பெரும்பான்மையில் பலரும் எதிர்பார்த்த "பாகுபலி 2" திரைப்படம் நேற்று (மே 28, 2017) வெளியாகியது. வளைகுடா நாடுகள் போன்ற இடங்களில், 27-ஆம் தேதியே வெளியாகிவிட்டது. அபுதாபியில் 27-ஆம் தேதியே வெளியாகிய நிலையில், நேற்று "மேக்ஸ் (MAX)" திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுபோன்ற திரைப்படங்களுக்கு, "மேக்ஸ்" திரையரங்கம் கூட சிறியது தான்! "ஐமேக்ஸ் (IMAX)" மிகப் பொருத்தமாய் இருக்கும். "இது ஓர் மிகப் பிரம்மாண்டமான திரைப்படம்" என்ற வழக்கமான விமர்சனத்தைத் தாண்டி, ஒரு மாறுபட்ட கோணத்திலானா விமர்சனம் கீழே:
  • படத்தில் பேசப்படும் தமிழ்!  முதலில் குறிப்பிடவேண்டியது, படத்தில் கையாளப்பட்டு இருக்கும் தமிழ் உரையாடல்கள்! எனையொத்த தலைமுறையினர் பலருக்கும் கூட, இந்த தமிழ் உரையாடல்கள் ஓர் புதுமையான அனுபவமாய் இருக்கும். மூத்த தலைமுறையினர், இதுபோன்ற தமிழ் உரையாடல்களை நிறைய, இன்னும் ஆழமாய்/அழகாய் கேட்டிருப்பர்; அவர்களுக்கு இந்த உரையாடல்கள் அதிக ஆர்வத்தை அளிக்காமல் போகக்கூடும். ஆனால், வெகு நிச்சயமாக "இன்றைய தலைமுறையினருக்கு, இது ஓர் வரப்பிரசாதம்!". மொழியின் உச்சரிப்பு கூடுதல் பலம். இந்த அனுபவம், மற்ற இந்திய மொழிகளிலும் இருக்கும் என்றே நம்புகிறேன்; வாய்ப்பு கிடைக்கும்போது, தெலுங்கு/கன்னடம் போன்று நானறிந்த மொழிகளில் பார்த்து இரசிக்கவேண்டும்.
  • திரு. ராஜமெளலி! இம்மனிதரை எப்படி பாராட்டுவது? கதையை எழுதிய திரு. விஜயேந்திர பிரசாத் அவர்களின் பங்களிப்பை, மறுக்கவே முடியாது எனினும்; ராஜமெளியின் திரைக்கதை அமைக்கும் திறம் "இம்மாதிரியான காணொளி ஊடகங்களின்" மிகப்பெரிய பலம்! எளிதாய் சொல்ல வேண்டுமெனில், ஒரு பாடலில் வருவது போல்; இதுவும் ஒரு "ஒரு ஊரில் ஒரு ராஜா" என்பது போன்ற கதைதான்! ஆனால், சொல்லப்பட்டு இருக்கும் விதமும்; காட்சிப் படுத்தப்பட்டு இருக்கும் விதமும் தான், படத்தை இந்த உயரத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது. சபாஷ் யா ராஜமெளலி!!
  • பின்னணி இசை: எனக்கு பெரிய இசை ஞானம் இல்லை. பலரும், இவர் இசை அமைத்திருக்கலாம்/ அவர் இசை அமைத்திருக்கலாம் என பரிந்துரைக்கக் கூடும். ஆனால், என்னளவில் வேறொருவர் பற்றி யோசிக்க ஏதுமில்லை! அவ்வளவு அபாரமாய் இருக்கிறது! மேலும், இங்கே - இசையோ/நடிகரோ/நடிகையோ - இரண்டாம் பட்சம் தான். இந்த படத்தைப் பொறுத்த வரையில்; "கதைதான்" நாயகன்/நாயகி/சூப்பர்ஸ்டார் எல்லாமும்! சொல்லி இருக்கும் விதமும், காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் தான் இங்கே எல்லாமும்! எனவே, எவர் இசை அமைத்திருப்பினும் - இசை தனித்து வெளிப்பட்டு இருக்க வாய்ப்பே இல்லை! ஒருவேளை, பொருந்தாமல் இருப்பின்; தனித்து வெளிப்படக்கூடும். எனவே, பின்னணி இசையில் குறை சொல்ல எதுவுமே இல்லை.
  • நினைவுக் காட்சிகள் (Flash-back Scenes): திரைப்படமோ/நடைமுறை வாழ்வியலோ, நினைவுகளை "மலரும் நினைவுகளாய்" கூறுவது சரியாய்/முறையாய் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அது பார்வையாளர்களை ஈர்க்க தவறிவிடும்! {சுமார் 30 நிமிட இறுதிக் காட்சிகள் தவிர}  இந்த இரண்டாம் பாகம், முழுக்க முழுக்க  நினைவுக் காட்சிகள் தான்! ஆனால், எந்த தொய்வும் இல்லை! படத்தின் "தலைப்பு அட்டைகள் (Title Cards)" ஓடும்போது கூட, முந்தைய பாகத்தை வசனங்களால் சொல்லாமல், சிலை-போன்று "நிற்பிம்பங்களால் (Still Images)" சொல்லி இருப்பது மிகவும் அருமை. "வேறு படங்களில், இதுபோன்று வந்திருக்கிறதா?" என்ற புரிதல் எனக்கில்லை! ஆனால், இதுவோர் அற்புதமான முயற்சி/செயல்! என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த நினைவுக்காட்சிகள் முந்தைய படத்தைப் பார்த்தவருக்கு, நினைவூட்டும் அடிப்படையில் செய்யப்படுவது தான்! பிறகு, அதற்கேன் வசனங்கள்? என்றோர் கேள்வியும்/புரிதலும் என்னுள் எழுந்தன. எனவே, நினைவுக் காட்சிகளை வரையறுக்கும் திறன், தலைப்பு அட்டைகளிலேயே துவங்கி இருக்கிறது. படம் பார்ப்போர், மறக்காமல் அவற்றை அனுபவியுங்கள்.
  • நகைச்சுவை: இம்மாதிரியான கதைகளில், நகைச்சுவையைக் கையாள்வதில், மிக அதிகமான கவனம் தேவை! அளவுக்கதிமான, கதையோடு ஒட்டாத நகைச்சுவைகள் - படத்தின் அனுபவத்தை நீர்த்துப் போகச் செய்யும். முற்பாதியில், கட்டப்பாவை மையப்படுத்திய நகைச்சுவைக் காட்சிகள் அவ்வளவு சிரிப்பை அளித்தும், கதையின் பயணத்தைக் குலைக்காத நகைச்சுவைக்கு காட்சி அமைப்புகள்; நம்மை கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணிக்கும் பிரம்மிப்பை, நம்மையும் அறியாமல் நம்முள் புகுத்துகின்றன.
  • அன்னம் போன்ற கப்பல்: கப்பலை அன்னம் போன்று வடிமைத்து இருப்பது, மிகுந்த பாராட்டுக்குரியது. அந்த காட்சிகள் அனைத்தும் பார்வைக்கு "இராஜவிருந்து!". சிலர், இது போன்ற காட்சிகள் அந்தப் படத்தில் வந்திருக்கின்றன/இந்தப் படத்தில் வந்திருக்கின்றன என்று வாதிக்கக் கூடும்! அதையொத்த கற்பனைகள் வேறு படங்களில் இருந்திருக்கலாம். ஆனால், அதை இந்திய சூழலுக்கு ஏற்ற கற்பனையுடன்; தமிழ் செறிந்த வரிகளுடன் கூடிய பாடலால் காட்சிப்படுத்தி இருப்பதை - வேற்று நாட்டு/மொழி திரைப்படங்களில் பார்க்க முடியாது. அதுதான், இங்கே முக்கியம்; அதுதான் இங்கே அசல். எனவே, அந்த காட்சிகளை பார்த்து மகிழுங்கள்.
  • போர்க்கால நிகழ்வுகள் மற்றும் போர் தந்திரங்கள்: முதலில் குறிப்பிட்ட தமிழ் மொழியைக் கையாண்டிருப்பது போல், போர்க்கால நிகழ்வுகள் மற்றும் போர் தந்திரங்கள் குறித்த காட்சிகள், குறிப்பாய் இன்றைய தலைமுறையினருக்கு - மிகப்பெரிய வரப்பிரசாதம்! நம் தேசத்தை ஆண்ட மன்னர்களின் சிறப்பைக் குறித்து, பிரம்மிப்பாய் உணர வழிவகுப்பவை.
  • வசனங்கள்: மதன் கார்க்கியின் வசனங்கள் மிகவும் அபாரம்! வசனங்கள் ஆழ்ந்த உயிர்ப்பைப் பெற்று; நம்மைக் கவர்வதற்கு கூடுதல் காரணம் - பின்னணி இசையும், அதை நடிகர்கள் உடல் மொழியோடு சொல்லும் விதமும். உதாரணங்கள்: 1. "நீ கூறிய சொல்லால், கூரிய வாளால்" - இந்த வசனத்தை படிக்கும்போதோ, வேறெவரும் சொல்லும் போதோ - அதன் பிரம்மிப்பை உணரமுடியாமல் போகலாம்! காட்சிகளாய் பார்க்கும்போது, நிச்சயமாய் புரியும். 2. நாசர் "சிவகாமியை, சவ-காமி" என்று சொல்லும் தமிழும்/அழகும்! இப்படி பட்டியலிட, நிறைய வசனங்கள் உண்டு! பாடல் வரிகள் - பின்னணி இசையோடு, நெஞ்சை வருடவும்; காமநஞ்சாய் இன்பத்தாக்குதல் நடத்தவும் செய்கின்றன.
  • என்னுடைய ஆவல்: படத்தின் வசனங்களும்/பாடல் வரிகளும் - என்னுடைய எழுத்துகளும், ஓர்நாள் இதுபோல் கேட்கப்பட வேண்டும் என்ற உத்வேகத்தை எழுப்பின! சாத்தியமா? தெரியவில்லை; நிகழ்ந்தால் மகிழ்ச்சியே!! வசனங்களின் பாதிப்பு என்னவென்பதை, இதைப் படிப்போருக்கு கடத்தப்பட வேண்டும்; என்ற முனைப்பில் தான், என் ஆவலை இங்கே தெரிவித்திருக்கிறேன். என்னளவில், இம்மாதிரியான வாய்ப்புகளை, நம் பெருந்தகை குறிப்பிடும் "ஊழ்" வினையாகவே பார்க்கிறேன். ஆம், இம்மாதிரியான வாய்ப்புகள் - ஓர் வரம். "மதன் கார்க்கி" வரம் பெற்றவர்; அவரை மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.
  • அனுஷ்காவின் பாத்திரப் படைப்பு: முதல் பாகத்தில், அனுஷ்கா போன்ற ஒரு திறமை மிக்க நடிகையின் பாத்திரப்படைப்பு மிகவும் சுருக்கமாய் இருந்தது,  பலரையும் போல் எனக்கும் வருத்தமே! ஆனால், திரு. ராஜமெளலி அப்போதே சொல்லிய வண்ணம்; இப்பாகாதில், அனுஷ்காவின் பாத்திரப் படைப்பு சிறப்பு! "மகிழ்மதிக்கு சென்ற பின், அவரின் பாத்திரப் படைப்பு" நீர்த்து இருப்பினும், ஆண்-ஹீரோக்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்திய திரைப்படங்களோடு ஒப்பிடும்போது; இன்னமும் சிறப்பே!
  • ரம்யாகிருஷ்ணனின் பாத்திரப்  படைப்பு: ரம்யாகிருஷ்ணனின் பாத்திரப்  படைப்பு, மிகவும் அருமை! அவரும் திறம்பட நடித்து இருக்கிறார்! இருப்பினும் "நீலாம்பரியின் தாக்கமா என்னவோ?!" அவர் இன்னும் சிறப்பாய் செய்திருக்கலாமே?! என்றோர் ஏக்கம். இது, அவரின் நடிப்பைக் குறை கூறும் முயற்சி இல்லை! மாறாய், மேலும் சிறப்பாய் வெளிப்படுத்தி இருக்கலாமே என்ற ஆவல்.
  • பிரபாஸின் பாத்திரப் படைப்பு: பிரபாஸின் பாத்திரப் படைப்பு பற்றி ஏதும் சொல்லத் தேவையில்லை! அமரேந்திர பாகுபலியோ/மகேந்திர பாகுபலியோ! - அவர் தான் கதையின் மையம்/படத்தின் தலைப்பு. எனவே, அதைப் பற்றி "தனியே சிலாகிக்க" ஏதுமில்லை. சத்யராஜ், நாசர் உட்பட பிறரின் பாத்திரப் படைப்புகளும் மிக அருமை.
*****

  • இந்திய சினிமா: பலரும் "உலக சினிமா" என்ற கனவில் மூழ்கி, சிலாகித்துக் கொண்டிருக்க; ஒருவர் சத்தமில்லாமல் "இந்திய சினிமா" என்ற வரையறையை நிகழ்த்தி இருக்கிறார்! ஆம், தமிழில் வெளியாகி இருப்பதால்; இது தமிழ் சினிமா(வும்) இல்லை! கதையாசிரியரும்/இயக்குனரும் "தெலுங்கு மொழி" பேசுவோர் என்பதால், இது தெலுங்கு சினிமா(வும்) இல்லை! இந்தியாவில் பரவலாய் பேசப்படும் மொழி என்பதால், இது ஹிந்தி சினிமா(வும்) இல்லை! வெளியாகி இருக்கும் மற்ற மொழிகளுக்கும், இதுவே பொருந்தும்! இது முழுக்க/முழுக்க "இந்திய சினிமா!" - ஆம், ஓர் சரித்திரம் எழுதப்பட்டு இருக்கிறது!
  • ஆங்கில மொழியாக்கம்: இது "இந்திய சினிமா" என்பதால், முதன்முதலாய் திரைப்படம் சார்ந்த என் பதிவை; ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க இருக்கிறேன் {மொழிபெயர்ப்பை வெளியிட்டதும், இங்கே இணைப்பைத் தருகிறேன்}. "இப்படியோர் பிரம்மாண்டப் படைப்பு சார்ந்த விமர்சனம், மற்ற மொழி பேசுவோரையும் சேரவேண்டும்!" என்ற தூண்டுகோலே இப்படத்தின் சிறப்புக்கு ஓர் சான்றாகும்.  

*****
  • திரையரங்க அனுபவம்: இன்னும் சில தினங்களில், மீண்டும் ஓர் முறை திரையரங்கில் பார்க்கவிருக்கிறேன். இதைக் குறிப்பிட காரணம், இம்மாதிரியானத் திரைப்படங்களைத், திரையரங்கில் பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தவே! அதிலும், MAX (அல்லது) IMAX வாய்ப்பு இருப்போர், நிச்சயம் அதில் பார்த்து அனுபவியுங்கள். நானும், துபாயில் "தமிழ் வடிவில்" IMAX-இல் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா, என்பதை ஆய்ந்து கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு, ஹிந்தியில் தான் இருக்கிறது {"ஹிந்தி எதிர்ப்பைத் திணித்த" அந்த மொழிவிரோதிகளைச் சபிக்கிறேன். 😊}. எனினும், தமிழில் காண்பதற்கும்/கேட்பதற்கும் இணை ஏது? இல்லையெனில், மீண்டும் MAX-இலாவது பார்க்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். இம்மாதிரியான அனுபவங்களைத் தொடர்ந்து அளித்தால், நிச்சயம் "திருட்டு வி.சி.டி. க்களை வெகுவாய் குறைக்கவாவது செய்யலாம்! இது திரைத்துறையினரை எட்டுமா?!" அதுபோல் "திரையரங்க கட்டணக் கொள்ளையை" குறைக்கும் நடவடிக்கையையும் திரைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்!
                                                                            *****
  • குறைகள்: {படத்தின் ஆரம்பக்காட்சியில், யானை ஒன்று ஓடி வரும் காட்சியின் "வரைகலை (graphics)" மேலும் சிறப்பாகச் செய்யப்பட்டு இருக்கலாம்; அவ்வளவு பட்டவர்த்தனமாய் தெரிவது சரியல்ல! என்பது போன்று...} சில குறைகளைச் சொல்லலாம்! அதைக்கூட "சொல்லில் குற்றமில்லை! {என்று மனமுவந்து பாராட்டி விட்டு} ஆனால், பொருளில் தான் குற்றமிருக்கிறது!!" என்ற நக்கீரர் போல்; கதையில் எந்தக் குற்றமும் இல்லாமல் மிகப் பிரமாண்டமாய் இருப்பதால், இம்மாதிரியான சிறிய விடயங்களில் கோட்டை விட்டிருப்பது நெருடலாய் இருக்கிறது என்ற அளவிலேயே குறிப்பிடத் தோன்றுகிறது.
இது...
 "மகிழ்மதி" சாம்ராஜ்யத்தில் நிகழும் நிகழ்வுகளை 
மகிழ்ந்துணர்ந்து கொண்டாடப்பட வேண்டிய தருணம்! 
மறவாமல் (பிரம்மாண்ட) திரையரங்குகளில் (கண்டு/கொண்டு)ஆடுங்கள்!!

குறள் எண்: 0636 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0636}

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை

விழியப்பன் விளக்கம்: நூல்களின் மூலம் கற்பதுடன், நுண்ணிய சிந்தனை அறிவையும் உடைய அமைச்சர்களை; எதிர்த்து நின்று வீழ்த்தும், நுண்ணிய சூழ்ச்சிகள் எவை உள்ளன?
(அது போல்...)
உறவுகளின் அடிப்படையில் உதவுவதுடன், வலிமையான மனிதமெனும் உணர்வையும் கொண்டு உதவிடுவோரை; விலகிச் சென்று அழிக்கும், வலிமையான எதிரிகள் எவர் உள்ளனர்?

வெள்ளி, ஏப்ரல் 28, 2017

குறள் எண்: 0635 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0635}

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை

விழியப்பன் விளக்கம்: அறவினைகளை அறிந்து, அறிவார்ந்து பேசும் இயல்போடு; எக்காலத்திலும் செயல்திறனும் உடையவரின் பண்புகள் - அமைச்சர்களுக்கு துணையாகும்.
(அது போல்...)
நல்லுறவுகளைக் கொண்டு, அன்பைப் பகிரும் அடிப்படையோடு; எந்நிலையிலும் உறவைக் கைவிடாதோரின் இயல்புகள் - சந்ததியர்க்கு சிறப்பாகும்.

வியாழன், ஏப்ரல் 27, 2017

குறள் எண்: 0634 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0634}

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு

விழியப்பன் விளக்கம்: வினைகளை ஆராய்ந்து அறிவது/வினைகளைத் தெளிவுடன் செய்வது/ இரட்டைச் சாத்தியங்களை ஒதுக்கி; வினைகளை ஒருமுகமாய் விவரித்தல் - இவை அனைத்திலும் சிறந்ததே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
விதிகளை அறிந்து ஏற்பது/அறமுடன் விதிகளை மேற்கொள்வது/அதிகார முறைகேடுகளைத் தவிர்த்து; விதிகளை சமமாய் பகிர்வது - இவை அனைத்திலும் சிறந்ததே சமுதாயம் ஆகும்.

புதன், ஏப்ரல் 26, 2017

குறள் எண்: 0633 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0633}

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு

விழியப்பன் விளக்கம்: படைகளைப் பிரித்தாள்வது, பெரியோரைப் பேணித் துணைக்கொள்வது மற்றும் பிரிந்து சென்றோரைப் பொருத்தருளி ஏற்பது - இவற்றில் சிறந்ததே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
உரிமைகளைப் பகிர்ந்தளிப்பது, முதியோரிடம் பயின்று கற்றுக்கொள்வது மற்றும் பிரிந்த உறவுகளைப் புறங்கூறாமல் இருப்பது - இவற்றில் உயர்ந்ததே இல்லறம் ஆகும்.

செவ்வாய், ஏப்ரல் 25, 2017

குறள் எண்: 0632 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0632}


வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு

விழியப்பன் விளக்கம்: அச்சமற்ற கண்கள், குடிமக்களைக் காத்தல், அறம் கற்றல், கற்றவற்றை ஆய்ந்தறிதல், வினைகளை முடித்தல் - ஆகிய ஐவகை காரணிகளுடன் இருப்பதே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
குற்றமற்ற எண்ணங்கள், பிள்ளைகளை வளர்த்தல், பெற்றோரைப் போற்றுதல், போற்றியவரைப் பேணுதல், பாரம்பரியம் காத்தல் - ஆகிய ஐந்து இயல்புகளுடன் வாழ்வதே இல்லறம் ஆகும்.

திங்கள், ஏப்ரல் 24, 2017

குறள் எண்: 0631 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0631}

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் ஆண்டது அமைச்சு

விழியப்பன் விளக்கம்: செய்தற்கரிய செயல்கள் அனைத்திலும் - முக்கிய கருவிகளுடன், சரியான நேரத்தில், நேர்த்தியான செயல்முறையுடன் - ஆள்வதே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
கிடைக்கற்கரிய உறவுகள் எல்லாவற்றிலும் - பரஸ்பர புரிதலுடன், சரியான விகிதத்தில், முறையான ஒழுக்கத்துடன் - அன்பைப் பரிமாறுவதே வாழ்வியல் ஆகும்.

ஞாயிறு, ஏப்ரல் 23, 2017

அதிகாரம் 063: இடுக்கண் அழியாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை

0621.  இடுக்கண் வருங்கால் நகுக அதனை
           அடுத்தூர்வது அஃதொப்பது இல்

           விழியப்பன் விளக்கம்: இன்னல்கள் நேர்ந்தால், அவற்றை ஒதுக்கி மகிழவேண்டும்;        
           இன்னல்களைக் கடக்க உதவுவதில், அம்மகிழ்சிக்கு இணையானது வேறேதுமில்லை.
(அது போல்...)
           உறவுகள் பிரிந்தால், அதை மதித்து மறக்கவேண்டும்; உறவுகளின் பிரிவைக் கடப்பதில்,
           மறதிக்கு ஒப்பானது எதுவுமில்லை.
      
0622.  வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
           உள்ளத்தின் உள்ளக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: மழை வெள்ளத்திற்கு இணையான இன்னல்களும்; அவற்றை
           சமாளிக்கும் திறமுடையோர், திட்டங்களை மனதில் வகுத்த கணத்திலேயே அழிந்துவிடும்.
(அது போல்...)
           சுனாமி அலைக்கு ஒப்பான தீப்பழக்கங்களும்; அவற்றை நீக்கும்  முனைப்புடையோர்,
           மாற்றுகளை சிந்தனையில் நினைத்த உடனேயே செயலாகும்.
           
0623.  இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
           இடும்பை படாஅ தவர்

           விழியப்பன் விளக்கம்: இன்னல்களுக்கு, இன்னல் அடையாத மனவலிமை கொண்டோர்;
           இன்னல்களுக்கே, இன்னல் அளிக்கும் ஆற்றல் உடையவராவர்.
(அது போல்...)
           குற்றங்களுக்கு, மறுகுற்றம் இழைக்காத அறவுணர்வு உள்ளோர்; குற்றங்களுக்கே,
           குற்றவுணர்வு ஏற்படும் வகையில் செயல்படுவர்.

0624.  மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
           இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

           விழியப்பன் விளக்கம்: எதிர்வரும் தடைகளைக்  கடந்து, வண்டியிழுக்கும் எருதுவைப்
           போல்; வைராக்கியமுடன் பயணிப்போர்க்கு, நேர்ந்த இன்னல்களே இன்னலடையும்.
(அது போல்...)
           எதிர்ப்படும் மிதவைகளைத் தாண்டி, கரைதொடும் அலையைப் போல்; பின்வாங்காமல்
           தொடர்வோர்க்கு, நிகழ்ந்த தோல்விகளே தோல்வியடையும்.

0625.  அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
           இடுக்கண் இடுக்கண் படும்

           விழியப்பன் விளக்கம்: இன்னல்கள் தொடர்ந்து இருப்பினும், அவற்றை அழித்து; தாம்
           அழியாமல் மீண்டெழுவோர்க்கு, நேர்ந்த இன்னல்களே இன்னலுக்கு உள்ளாகும்.
(அது போல்...)
           உறவுகள் தொடர்ந்து வதைத்தாலும், அவற்றை மறந்து; உறவுகளை மறக்காமல
           பயணிப்போர்க்கு, நிகழ்ந்த குழப்பங்களே குழப்பத்திற்கு ஆட்படும்.

0626.  அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று
           ஓம்புதல் தேற்றா தவர்

           விழியப்பன் விளக்கம்: இருக்கும்போது, பெற்றிருக்கிறோம் என்ற சுயநலத்துடன்,
           செல்வத்தைக் காக்காதோர்; அவற்றை இழந்தபோது, இழந்துவிட்டோம் என்று இன்னல்
           படுவரோ?
(அது போல்...)
           வென்றபோது, வென்றுவிட்டோம் என்ற கர்வத்துடன், தோற்றவரை இகழாதோர்;
           தோல்வியைத் தழுவியபோது, தோற்றுவிட்டோம் என்று வருத்தம் அடைவரோ?

0627.  இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
           கையாறாக் கொள்ளாதாம் மேல்

           விழியப்பன் விளக்கம்: "உடம்பு என்பது துன்பத்திற்கு உள்ளாவதே!" என்பதை உணர்ந்து;
           சான்றோர்கள், துன்பத்திற்காகக் கலங்குவதை வழக்கமாக கொள்ளமாட்டார்கள்.
(அது போல்...)
           "அரசியல் என்பது துரோகத்துக்கு ஆட்பட்டதே!" என்பதைப் புரிந்து; கர்மவீரர்கள்,
           துரோகத்துக்காகப் பின்வாங்குவதைக் காரணமாக சொல்லமாட்டார்கள்.

0628.  இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
           துன்பம் உறுதல் இலன்

           விழியப்பன் விளக்கம்: சிற்றின்பங்களில் நாட்டம் கொள்ளாமல், துன்பத்தை
           இயல்பென்போர்; துன்பத்தை எதிர்கொள்வதற்காக, தம் மனத்திடத்தை            
           இழக்கமாட்டார்கள்.
(அது போல்...)
           விதிமீறலில் விருப்பம் இல்லாமல், விதிகளை அவசியமென்போர்; விதிமீறலை
           மேற்கொள்வதற்காக, தம் ஒழுக்கத்தை சிதைக்கமாட்டார்கள்.

0629.  இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
           துன்பம் உறுதல் இலன்

           விழியப்பன் விளக்கம்: இன்பமான நிகழ்வுகளின் போது, அவ்வின்பத்தால் சுயத்தை
           இழக்காதோர்; துன்பமான நிகழ்வுகளின் போது, அத்துன்பத்தால் மனத்திடத்தை
           இழப்பதில்லை.
(அது போல்...)
           சாதகமான சூழலின் போது, அச்சாதகத்தால் ஆதாயத்தைத் தேடாதோர்; சிக்கலான
           சூழலின் போது, அச்சிக்கலால் ஒழுக்கத்தைத் தவறமாட்டார்கள்.

0630.  இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
           ஒன்னார் விழையும் சிறப்பு

           விழியப்பன் விளக்கம்: எதிர்வரும் துன்பத்தையும், இன்பமென தெளிந்து கொள்வோருக்கு;
           அவர்களின் பகைவர்களும் விரும்பும் வண்ணம், சிறப்பு உண்டாகும்.
(அது போல்...)
           விலகிசெல்லும் உறவுகளையும், நட்பென உணரும் அன்பர்களுக்கு; அவர்களின்
           துரோகிகளும் வாழ்த்தும் வண்ணம், சூழல் உருவாகும்.

குறள் எண்: 0630 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0630}

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு

விழியப்பன் விளக்கம்: எதிர்வரும் துன்பத்தையும், இன்பமென தெளிந்து கொள்வோருக்கு; அவர்களின் பகைவர்களும் விரும்பும் வண்ணம், சிறப்பு உண்டாகும்.
(அது போல்...)
விலகிசெல்லும் உறவுகளையும், நட்பென உணரும் அன்பர்களுக்கு; அவர்களின் துரோகிகளும் வாழ்த்தும் வண்ணம், சூழல் உருவாகும்.

இந்த ஹிந்தி எதிர்ப்பு ஆக்கப்பூர்வமானதா???


   சமீபத்தில், நெடுஞ்சாலையில் இருந்த "மைல்கற்களில்" ஆங்கிலத்தில் இருந்த ஊரின் பெயர்களை; ஹிந்தியில் மாற்றி எழுதியதை வைத்து, ஒரு சலசலப்பு எழுந்தது! எதிர்க்கட்சி தலைவர் கூட "முன்பே, முறையற்று, நடந்த ஹிந்தி எதிர்ப்பை" சுட்டிக்காட்டி, மீண்டும் ஒரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். அவரின் தமிழ் உணர்வை மட்டுமல்ல;  மற்றெவரின் தமிழ் உணர்வையும் மறுக்கும் முனைப்பு எனக்கில்லை! ஆனால், இதை தமிழ் உணர்வாய் பார்க்க; என் மனம் ஒப்பவில்லை. இது தமிழை வைத்து நடக்கும் அரசியல்! 1937-இல் முதன்முதலாய் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், 1960-களின் மத்தியில் தி.மு.க. வால் பெரிய அளவில் நடத்தப்பட்டது. மற்ற தமிழர்களுக்கு, ஹிந்தியை மறுத்துவிட்டு; தத்தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஹிந்தியை கற்றுக்கொடுத்த "மறைமுக குடும்ப அரசியல்" ஒருபுறம் இருக்கட்டும். அந்தப் போராட்டத்தால், இவர்கள்/நாம் சாதித்தது என்ன?

       இன்னமும், அந்தப் போராட்டத்தைத் தம் வாழ்நாள் சாதனையாய் மாரடிக்கும் அந்நிகழ்வால் என்ன மாற்றம் நிகழ்ந்தது? 1970-களுக்கு பிந்தைய என் போன்ற தலைமுறையினருக்கு "ஹிந்தியை மறுத்தது மட்டும் தான்" சாதனை! "அதனால், தமிழ் எப்படி வளர்ந்தது?!" என்றால் ஒன்றுமில்லை. அதற்கு முன்னிருந்த தலைமுறையினரில் பெரும்பான்மையினர் "எழுத்துக் கூட்டியாவது" தமிழைப் படிக்கும் திறம் படைத்து இருந்தனர். அதற்கு பின் வந்த தலைமுறையினரில் பலரும் "ஆங்கிலம் கலவாமல் தமிழைப் பேசவே தடுமாறுகின்றனர்!"; கேடடால் "I have studied in English medium yaar" என்று பதில் வரும். இவர்களில் பலருக்கு, தமிழ் எழுத்துக்களே தெரிவதில்லை! பின்னெங்கே, எழுத்துக் கூட்டியாவது படிப்பது? ஒரு மொழியைக்  கற்பதென்பது "சுயவுணர்வு!"; அதிலும் தாய்மொழியைக் கற்பதென்பது "கர்வம் கலந்த சுயவுணர்வு!". "அந்த உணர்வு, பிற மொழியை எதிர்த்தால் தான் வ(ள)ரும்!" என்பது பேரபத்தம்!

   வெகுநிச்சயமாய், ஹிந்தியை அல்லது வேற்று மொழியை எதிர்ப்பதால்; தமிழ் வளரப் போவதில்லை! கவிதைகளாகவும்/தலையங்கங்களாகவும் இதுசார்ந்து சில பதிவுகளை எழுதி இருக்கிறேன். நா(ன்/ம்) தமிழைப் பயில்வதும்/பழகுவதும்/உபயோகிப்பதும்; என்/நம் சுயவுணர்வில் இருக்கவேண்டும்! அது இயல்பாய் எழும்/எழவேண்டும்! பிற மொழிகளை அறிந்தால் தான்; நம் தாய்மொழியின் சிறப்பை முழுதாய் அறியமுடியும்! அதனால் தான், நம் "முண்டாசுக் கவிஞன்" பழமொழிகளைக் கற்றறிந்த பின்னர்; "யாமறிந்த மொழிகளிலே" என்று சூளுரைத்தான். நாமோ, நம் தாயமொழியையும் கற்காமல்; பிற மொழியை(யும்) கற்காமல் "ஆங்கிலம் நம் முப்பாட்டனின் மொழி என்பதாய்; ஆங்கிலத்தில் கதைத்து மார்தட்டிக் கொண்டிருக்கிறோம்!" ஆங்கிலம், இந்தியாவின் மொழி கூட இல்லை! என்ற உணர்வே இல்லாமல்; ஆங்கிலம் மட்டுமே போதுமென்ற மனநிலையோடு, நாமும் வளர்ந்து; நம் பிள்ளைகளையும் வளர்க்கும் நிலையில்...

      மேற்குறிப்பிட்ட "இந்த இந்தி எதிர்ப்பு ஆக்கப்பூர்வமானதா?!" இந்த தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில், பெயர் எழுதுவதில் தெளிவான விதிமுறை சொல்லப்பட்டு இருக்கிறது! ஒவ்வொரு கி.மீ. தொலைவிற்கும் ஒவ்வொரு கலவையில் எழுதப்படுவதாய், தெளிவாய் சொல்லப்பட்டு இருக்கிறது! அதில் தமிழ் மட்டும் ஒரு கி.மீ. யிலும், ஹிந்தி மட்டும் ஒரு கி.மீ. யிலும், இந்தி/தமிழ் கலவை ஒரு கி.மீ. யிலும், தமிழ்/ஆங்கிலம் கலவை ஒரு கி.மீ. யிலும் இருப்பது போல் வரையறுத்து இருக்கிறார்கள். இதிலென்ன, ஹிந்தி திணிப்பு இருக்கிறது என்றே தெரியவில்லை! ஹிந்தி என்ற மொழி, இந்தியாவில் பரவலாய் பேசப்படும் மொழி என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை! அப்படிப்பட்ட மொழியை, தேசிய நெடுஞ்சாலையில் "ஆங்காங்கே" எழுதுவதில் என்ன மொழிக்குற்றம் இருக்க முடியும்? எத்தனை பேர், அந்த மைல்கற்களை வைத்து வாகனத்தை ஓட்டுகிறோம்? குறைந்தது, அதைப் படிக்கவாவது செய்திருக்கிறோமா?!

        பெரும்பாலும், தமிழக எல்லையில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை; நமக்கோ அல்லது நாம் செல்லும் வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு பரிச்சயமானதே! நாம் அதைக் கவனிப்பது கூட இல்லை! பெரும்பான்மையில் பலனளிப்பது, அந்நியர்களான ஓட்டுனர்களுக்கு தான்! என்பதே நடைமுறை. அதில், ஆங்காங்கே "இந்தியில் எழுதுவதில் என்ன தவறு?!" இதற்கேன் இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டம்? அரசியல்வாதிகள் ஆர்ப்பரிக்கிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு அரசியல் ஆதாயம் இருக்கக்கூடும்! ஆனால், நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு ஏன் "இந்த வெற்று ஆர்ப்பாட்டம்/விவாதம்?!" இதுதான் தமிழை அழிக்கப்போகிறது என்பதாய், ஏன் கூக்குரலிட வேண்டும்? தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில், தமிழ் மொழி பாடமாய் இல்லை? எத்தனை விழுக்காடு இருக்கமுடியும்? நம்மில் எத்தனை பேர், நம் பிள்ளைகளை "தமிழ் வழி கல்வியில்" படிக்க வைக்கிறோம்? எத்தனை பேரின் பிள்ளைகள், தமிழை "ஒரு பாடமாய் கூட"...

      படிக்காமல் இருக்கிறார்கள்? பிறகெப்படி, தமிழின் அழிவிற்கு ஹிந்தி(திணிப்பு) காரணமாய் இருக்க முடியும்? முழுக்க முழுக்க தமிழில் பதிவிடும் பிரபலங்களின் பதிவுகளில்; கணிசமான பின்னூட்டங்கள் "ஆங்கிலத்திலும்/தங்கிலீஷீலும்" இருக்கின்றன! எந்த பிரபலமும், மிகுந்த கண்டிப்புடன் "தமிழில் மட்டுமே" கருத்திடவேண்டும் என்று பணிப்பதில்லை! அவர்களுக்கு முக்கியம் "லைக்கு/காமெண்ட்டுகளின் எண்ணிக்கையே!" அவற்றை வைத்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? என்பது இன்றுவரை, எனக்குப் புரியவே இல்லை! ஆனால், அப்படிப்பட்டவர்களில் பலர்தான் "இதை ஹிந்தி திணிப்பு" என்று முழங்குகிறார்கள்! எத்தனை பெற்றோர்கள் "Daddy & Mummy" என்றழைப்பதை விரும்பி ஏற்கிறோம்?! என்பது நமக்கே தெரியும். என்மகளை, இளவயதிலேலேயே "அப்பா"வென அழைக்க அன்புக்கட்டளை இட்ட எனக்கு; "Daddy என்பதை விட; தமிழை ஒத்த "பப்பா" என்ற சொல் உயர்வென தோன்றும்!" நாம் ஒவ்வொருவரும்...

       நம் தாய்மொழியில் உரையாடுவதை வழக்கமாய் கொள்ள ஆரம்பித்தால் "எவனால்/எதனால் நம் தாய்மொழியை அழித்து; நம்முள் வேற்று மொழியை" விதைக்க முடியும்? பிற மொழிகளைக் கற்பதால், நம் தாய்மொழி அழியும் என்ற வாதம் ஆக்கப்பூர்வமற்றது! பிற மொழிகள், நம் தாய்மொழியின் புரிதலை/திறத்தை மென்மேலும் வளர்க்கவே உதவிடும்! தமிழக எல்லையைத் தாண்டிய பின்; ஹிந்தி தெரியாத ஒரே காரணத்தால், வளர்ச்சியை எட்டமுடியாதோர் எண்ணற்றோர்! இதுதான் நடைமுறை எதார்த்தம்! "அகரமுதல எழுத்தெல்லாம்" என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே, உலக மொழிகள் எல்லாமும் "அ"கரத்தில் துவங்குகிறது என்பதை உலகுக்கு உரைக்கும் அளவுக்கு மொழித்திறன் படைத்த பெருந்தகை போன்றோர் பயின்ற/வளர்த்த தமிழை; ஹிந்தியை மைல்கற்களில் ஆங்காங்கே எழுதுவதால், அழிக்க"வே" முடியாது! மாறாய், தமிழைப் பயிலாத/பழகாத, குற்றத்தால் வேண்டுமானால் அழிக்கலாம்! எனவே...

முதலில், நாம் தமிழில் பேச/படிக்க/எழுத கற்போம்! தமிழைக் காப்போம்!!

சனி, ஏப்ரல் 22, 2017

அருணாச்சலம் முருகானந்தம்


          திரு. அருணாச்சலம் முருகானந்தம் - கோவையில் ஓர் ஊரகப் பகுதியைச் சேர்ந்த இவரை; உங்களில் பலருக்கும் முன்பே தெரிந்திருக்கக் கூடும். இன்றுதான், இவரைப் பற்றி; தொலைகாட்சி ஒன்றின் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்தேன். ஹிந்தி மொழியில் "PadMan" என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவருவதாகவும்; அது திரு. அருணாச்சலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியது என்றும் அந்நிகழ்ச்சியில் கூறப்பட்டது. யார் இவர்? என்ற ஆர்வம் எழுந்தது. உடனே, அவரைப் பற்றி இணையத்தில் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய ஆச்சரியம் பல்கிப் பெருகியது. சூழல் காரணமாய் அவரின் உறவுகளாலேயே அவமானப் படுத்தப்பட்டு; தனிமைப் படுத்தப்பட்டது அறிந்து மனம் கனத்தது. அவற்றையெல்லாம் கடந்து, அவரின் எண்ணத்தை செயலாக்கி; அவர் வெற்றியை நிலைநாட்டிய விதம் மனத்தைக் கவர்ந்தது; அவரின் வைராக்கியம் எனக்குப் பிடித்திருந்தது.

      2016-இல் இந்திய அரசின் "பத்மசிறீ" விருதை பெற்றிருக்கிறார்! அப்படி அவர் சாதித்தது என்ன? தன் மனைவி "விடாய்க்கால அணையாடைகளை (Sanitary Pads)" வாங்க இயலாத சூழலில், கந்தலான/அழுக்கான துணிகளை உபயோகிப்பதை பார்த்து வேதனைப்பட்டு இருக்கிறார். அவ்வாடைகள் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது? என்று வியந்து; குறைந்த விலையில் தயாரிக்க ஆராய்ந்திருக்கிறார். மிகக் குறைந்த விலையில், அவ்வாடைகளைத் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து; அதற்கான உரிமம் பெற்றிருக்கிறார். தென்னிந்தியாவில் அதீத பிரபலம் இல்லையெனினும்; வட இந்தியாவில் பல பின்தங்கிய மாநிலங்களில் இவரின் இயந்திரமும், அதன் உற்பத்தியும் மிக பிரபலமாம். பல வெளிநாடுகளிலும், இவரது கண்டுபிடிப்பில் உருவான இயந்திரம் உபயோகப்படுத்தப் படுகிறதாம். அவரைப் பற்றிய தகவல்கள், என்னை மென்மேலும் ஆச்சரிய படுத்தியது. அவரைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர்...

          "அருணாச்சலம் முருகானந்தம்" என தமிழிலோ அல்லது "Arunachalam Muruganantham" என ஆங்கிலத்திலோ இணையத்தில் தேடுங்கள்! "விடாய்க்கால அணையாடைகளை" வாங்கமுடியாத இயலாமையில்; விளைந்த சிந்தனை, அவரை இவ்வுயரம் தொடும் அளவிற்கு உழைக்க வித்திட்டிருக்கிறது. பெரிய அளவில் வியாபாரமாய் செய்ய விருப்பமின்றி, பல பெண்களுக்கும் சேவையின் அடிப்படையில் பயிற்சி கொடுத்து; அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுகிறாராம். மாதவிடாய் காலங்களில், தம் வீட்டுப் பெண்களையே "தீண்டாத தகாதவர் போல்" பாவித்த அன்றைய காலகட்டத்தில்; அந்த சூழலில், அதை அவர்களுடன் "நேரடியாய் விவாதித்து" அதற்கான தீர்வை காணும் அவரின் முனைப்பு பெருத்த போற்றுதலுக்குரியது. இன்றும், மாதவிடாய் சம்பத்தப்பட்ட விடயங்களை; தமக்கு சம்பந்தமில்லை என விலகி நிற்கும் ஆண்களே அதிகம். அவ்வாடைகளின் பெயரைக் கடையில் சொல்லைக்கூட, பலருக்கும் தயக்கம் இருக்கிறது.

         ஆனால், 1962-இல் பிறந்து அன்றைய ஆணாதிக்க சூழலில் வளர்ந்த; இவர் எப்படி இவ்வளவு ஆழமாய் யோசித்து/அணுகி தீர்வைக் காண முடிந்தது? என இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன். என் வியப்பு உங்களையும் சென்று சேரவேண்டும் என்பதற்கே இத்தலையங்கம். மாதவிடாய் சம்பந்தப்பட்ட விடயங்களில்; பெண்களை விட, ஆண்களுக்கு அதிக புரிதல் இருக்கவேண்டும். அந்நிகழ்வுகளை, ஆண்கள் உணர்வுபூர்வமாய்  உள்வாங்கினால் மட்டுமே; அந்த சமயங்களில் பெண்களுக்கு பேருதவியாய் இருக்கமுடியும். உண்மையில், அந்நாட்களில் பெண்களுக்கு உடலியல் சார்ந்த பிரச்சனைகளை விட; உளவியல் சார்ந்த பிரச்சனைகளே அதிகம். அதை மிகச்சரியாய் இந்த மனிதர் உணர்ந்திருப்பதாய் தோன்றுகிறது. அதனால் தான், ஒரு காலகட்டத்தில்; சூழல் காரணமாய் அவருக்கு உறவுப் பெண்களே உதவிட முடியாத போதும், விலங்குகளின் இரத்தத்தை தம் உடலில் "சிறு பைகளில் அடைத்து" கட்டிக்கொண்டு...

    அதிலிருந்து இரத்தத்தைச் சொட்டச்செய்து, தன் ஆராய்ச்சியை செய்திருக்குக்கிறார். என்னவொரு அதிசய மனிதர் இவர்? அவரின் வைராக்கியம் அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட திரைப்படம் வெளிவந்த பின், அவர் மேலும் பிரபலமாகக் கூடும்! இதுபோல், சாதிப்பதற்கான விடயங்களும்/சாத்தியக்கூறுகளும் நம்மைச் சுற்றி ஏராளமாய் இருக்கின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புகளும்/முனைப்புகளும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை! வாழ்க்கையெனும் ஓட்டத்தில், எதற்கு ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடிக் கொண்டிருப்போரே இங்கு அதிகம். இருப்பினும், அந்த ஓட்டத்தின் இடையே கிடைக்கும் நேரத்தில்; இம்மாதிரியான மனிதர்களை பற்றி தெரிந்துகொள்ளவாவது முயல்வோமே? என்னை எட்டிய, இந்த சிந்தனை பிறருக்கு எட்டவேண்டும் என்ற எண்ணத்தில் இதைப் பகிர்கிறேன். இம்மாதிரியான விடயங்களை படிக்கும் போது, நம்முள்ளும் ஏதேனும் ஒரு உந்துததால் எழக்கூடும்.

வாழ்த்துகள் திரு. அருணாச்சலம் முருகானந்தம் அவர்களே!!!

என் அகங்காரத்தின் அகங்காரம்...

குறள் எண்: 0629 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0629}

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்

விழியப்பன் விளக்கம்: இன்பமான நிகழ்வுகளின் போது, அவ்வின்பத்தால் சுயத்தை இழக்காதோர்; துன்பமான நிகழ்வுகளின் போது, அத்துன்பத்தால் மனத்திடத்தை இழப்பதில்லை.
(அது போல்...)
சாதகமான சூழலின் போது, அச்சாதகத்தால் ஆதாயத்தைத் தேடாதோர்; சிக்கலான சூழலின் போது, அச்சிக்கலால் ஒழுக்கத்தைத் தவறமாட்டார்கள்.

சிறுநீர் குடிப்புப் போராட்டம் - நாம் என்ன செய்வது?


       கடந்த 40 நாட்களாக நாட்களாக நடக்கும் "தமிழக விவசாயிகளின்" போராட்டத்தின் ஓர் அங்கமாக; இன்று "சிறுநீர் குடிப்பு போராட்டம்" நடக்கும் என்று அறிவித்து இருக்கிறார்கள்! கேட்கும்போதே, மனதைக் குலைக்கும் அறிவிப்பு இது; அப்படியொன்று நடந்தால்...?! அது எத்தனைப் பெரிய கொடுமையாய் இருக்கும்? 25/30 ஆண்டுகளுக்கு முன்னர், சில ஏக்கர் நிலத்தை வைத்து விவசாயம் செய்வோர் "நிலக்கிழார்" என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்! நல்ல வாழ்க்கையை வாழ்ந்தனர்; அவர்களை நம்பிய சில குடும்பங்களையும் வாழவைத்தனர். நம்மில் பலரும் இதை நம் கண்களால் கண்டும்; காதுகளால் பார்த்தும் இருக்கிறோம். அப்படிப்பட்ட "மனித குலத்தின் முதல் தொழிலும்; இயற்கையை ஒத்த, முதல் சாதனையும் ஆன..." விவசாயம் எனும் உன்னத செயலை; நிலங்கள் பலவும், கட்டிடங்கள் ஆகிய நிலையிலும், செய்யும் இவர்கள் நிலை இப்படி ஆக எவர் காரணம்? இதற்கு "எவர் என்ன செய்வது?"
  • மத்திய அரசு: படியளக்கும் "ஆண்டவர்" என்று அன்போடு அழைக்கப்பட்ட விவசாயிகள், இப்போராட்டத்தை தலைநகர் தில்லியில் மத்திய அரசை எதிர்பார்த்து/வலியுறுத்தி நடத்துவதால்; நேரடியாய், மத்திய அரசை எளிதாய் குறை கூறலாம்! "வெளிநாட்டுப் பயணத்தையே; ஏதோ அடுத்த தெருவிற்கு செல்வது போல், செல்லும் பிரதமர்" ஒருமுறை கூட சந்திக்காதது தவறு என்று தட்டிக்கேட்பதில் எந்த தவறும் இல்லை! அதுபோல் "விவசாய நிலங்களில் கட்டப்பட்ட, ஒரு சாமியார் உருவாக்கிய சிலையை திறக்க, தமிழ்நாட்டின் ஒரு பகுதிக்கு வர முடிந்த பிரதமர்" விவசாயிகளை, ஒருமுறை கூட சந்திக்காதது குற்றம் என்று சுட்டிக்காட்டுவதிலும் எந்த தவறும் இல்லை!! ஆனால், இந்த குற்றச்சாட்டுகளும்/முழக்கங்களும்; விவசாயிகளின் தேவையை/குறையை நிவர்த்தி செய்யப் போவதில்லை!
  • மாநில அரசு: மத்திய அரசையே குறைகூறிக் கொண்டிருப்பதிலும் எந்த நியாயமும் இல்லை! இப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில், இதற்கு இணையாக போராட்டம் நடத்திய வடமாநில விவசாயிகளுக்கு; சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கடன் தள்ளுபடி செய்து, தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள்! அப்படி இருக்கையில், நம் மாநில அரசு; இதைச் சார்ந்து, ஏன் எதையும் செய்யவில்லை? நிதியில்லை என்று எளிதாய் சொல்லக்கூடும்! குறைந்தது, தில்லி சென்று; பிரதமரை சந்திக்க வைக்கவாவது முயன்றிருக்கலாமே? ஆனால், பாவம்... அவர்களுக்கு கட்சி சின்னம் மற்றும் ஆட்சியைத் தக்கவைக்கவே நேரம் போதவில்லை. சில மறுப்புகள் இருப்பினும், இம்மாதிரியான நிகழ்வுகளின் போதுதான்; மறைந்த அந்த "பெண் முதல்வரின்" இழப்பு மிகவும் பூதாகாரமாய் தெரிகிறது! அவர் இருந்திருந்தால், இப்போராட்டம் இத்தனை நாட்கள் நீடித்திருக்க வாய்ப்பில்லை!
  • பொதுமக்களாகிய நாம்: 
  1. ஒருவகையில், நம் கண்ணெதிரே விளைந்த பொருட்களை; அதை விளைவித்தவர், வீட்டு வாசலுக்கே வந்து விற்றவரை; அவற்றை வாங்கியவரை, விவசாயிகளுக்கு பெரிய பிரச்சனை இல்லை! அப்போதும், அவர்களின் பொருளுக்கு தகுந்த விலை கிடைக்கவில்லை என்ற பிரச்சனை இருந்தது! ஆனால், இப்படி பூதாகாரமாய் இல்லை. அதை விடுத்து, எப்போது "குளிர்சாதன அறையில், பதப்படுத்தப்பட்ட" பொருட்களை வாங்க ஆரம்பித்தோமோ; அங்கே ஆரம்பித்தது - விவசாயம் மற்றும் விவசாயிகளின் அழிவின் ஆரம்பப்புள்ளி! பெருந்தொழில் அதிபர்களின் சந்தைத் திறனுக்கு, ஈடுகொடுக்க முடியாதபோது; அப்புள்ளி பல புள்ளிகளாய் பெருகியது. இயலாமையால், தம்முயிருக்கு இணையாய் நினைத்த விளைநிலங்களையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட போது; அப்புள்ளிகள் சிக்கலான கோடுகளால் பின்னப்பட்டு, இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது. சரி, நாம் என்ன செய்யமுடியும்? 
  2. மத்திய/மாநில அரசுகளை "அரசியல்வாதிகள் போல்" குறைகூறிக் கொண்டிருக்காமல்; நம்மால் இயன்ற அளவில் விவசாயம் செய்யவேண்டும்! குறைந்தது, மரங்களையாவது வளர்க்கவேண்டும்; மரம் செழிக்க, மழைப் பெருகும்! மழைப் பெருக, விவசாயம் தழைக்கும். இதுவொன்றும், இமாலய இலக்கு இல்லை! அப்படி வாழ்ந்தவர்கள் தானே நாம்? பின்னோக்கி செல்வது ஒன்றும் பெரிய சவால் இல்லை! இப்போதே, பல குழுக்கள் அதை செய்ய ஆரம்பித்து இருக்கின்றன! எங்கள் கிராமத்தின் அருகில் இருக்கும் திருக்கோவிலூர் நகரில் கூட "நாடொப்பன செய்!" என்றோர் குழு, அதை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. அவை மென்மேலும் பல்கிப் பருக வேண்டும்; விவசாய பொருட்கள் சார்ந்த பெருந்தொழில் அதிபர்களும் பண்ணைகளும் அழியவேண்டும் அல்லது மாறவேண்டும். அதற்கு மரம் வளர்ப்பது முதல் கடமையாகிறது. 
  3. இது நீண்ட காலத் திட்டம்! விவசாயிகளின் பிரச்சனையும் ஒரு பெருநோயே! அதற்கு நிரந்தர மருத்துவம் தான் மாற்று எனினும்; முதலுதவி தான் இப்போதைக்கு தேவை என்பது உண்மை. முதலுதவியை பின்வருவது போல் செய்யலாம்: இயற்கைப் பேரழிவிற்கு நிதி திரட்டுவது போல்; விவசாயிகளின் பிரச்சனைக்கும் விவசாயத்தை/விவசாயியை அழித்ததில், நமக்கு(ம்) பங்கிருக்கிறது என்ற வகையிலாவது, இதை செய்யவேண்டும். அப்படிப்பட்ட முதலுதவி செய்யும் முனைப்பு உள்ளவர்களில் நானும் ஒருவன்; இதை கூட்டுமுயற்சியாய் செய்ய வேண்டும். இதுவரை, அப்படி எவரும் முனைந்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. இருப்பின் சொல்லுங்கள்; அவர்களோடு நம்மை இணைத்துக் கொள்ளலாம். இல்லையெனில், அப்படியோர் முயற்சியை; இப்போதேனும் துவக்கலாம். இனிவரும் காலத்திலாவது, இம்மாதிரியான சூழல் நிகழாவண்ணம் தடுக்கலாம்.
நம்மால் இயன்ற வகையில், முதலுதவியைத் துவங்கலாமே?!
நீண்ட காலத் திட்டத்தையும் நினைவில் நிறுத்துவோம்! செயல்படுத்துவோம்!!

வெள்ளி, ஏப்ரல் 21, 2017

குறள் எண்: 0628 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0628}

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்

விழியப்பன் விளக்கம்: சிற்றின்பங்களில் நாட்டம் கொள்ளாமல், துன்பத்தை இயல்பென்போர்; துன்பத்தை எதிர்கொள்வதற்காக, தம் மனத்திடத்தை இழக்கமாட்டார்கள்.
(அது போல்...)
விதிமீறலில் விருப்பம் இல்லாமல், விதிகளை அவசியமென்போர்; விதிமீறலை மேற்கொள்வதற்காக, தம் ஒழுக்கத்தை சிதைக்கமாட்டார்கள்.

வியாழன், ஏப்ரல் 20, 2017

குறள் எண்: 0627 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0627}

இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

விழியப்பன் விளக்கம்: "உடம்பு என்பது துன்பத்திற்கு உள்ளாவதே!" என்பதை உணர்ந்து; சான்றோர்கள், துன்பத்திற்காகக் கலங்குவதை வழக்கமாக கொள்ளமாட்டார்கள்.
(அது போல்...)
"அரசியல் என்பது துரோகத்துக்கு ஆட்பட்டதே!" என்பதைப் புரிந்து; கர்மவீரர்கள், துரோகத்துக்காகப் பின்வாங்குவதைக் காரணமாக சொல்லமாட்டார்கள்.

புதன், ஏப்ரல் 19, 2017

குறள் எண்: 0626 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0626}

அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்

விழியப்பன் விளக்கம்: இருக்கும்போது, பெற்றிருக்கிறோம் என்ற சுயநலத்துடன், செல்வத்தைக் காக்காதோர்; அவற்றை இழந்தபோது, இழந்துவிட்டோம் என்று இன்னல் படுவரோ?
(அது போல்...)
வென்றபோது, வென்றுவிட்டோம் என்ற கர்வத்துடன், தோற்றவரை இகழாதோர்; தோல்வியைத் தழுவியபோது, தோற்றுவிட்டோம் என்று வருத்தம் அடைவரோ?

செவ்வாய், ஏப்ரல் 18, 2017

குறள் எண்: 0625 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0625}

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்

விழியப்பன் விளக்கம்: இன்னல்கள் தொடர்ந்து இருப்பினும், அவற்றை அழித்து; தாம் அழியாமல் மீண்டெழுவோர்க்கு, நேர்ந்த இன்னல்களே இன்னலுக்கு உள்ளாகும்.
(அது போல்...)
உறவுகள் தொடர்ந்து வதைத்தாலும், அவற்றை மறந்து; உறவுகளை மறக்காமல பயணிப்போர்க்கு, நிகழ்ந்த குழப்பங்களே குழப்பத்திற்கு ஆட்படும்.

திங்கள், ஏப்ரல் 17, 2017

குறள் எண்: 0624 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0624}

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

விழியப்பன் விளக்கம்: எதிர்வரும் தடைகளைக்  கடந்து, வண்டியிழுக்கும் எருதுவைப் போல்; வைராக்கியமுடன் பயணிப்போர்க்கு, நேர்ந்த இன்னல்களே இன்னலடையும்.
(அது போல்...)
எதிர்ப்படும் மிதவைகளைத் தாண்டி, கரைதொடும் அலையைப் போல்; பின்வாங்காமல் தொடர்வோர்க்கு, நிகழ்ந்த தோல்விகளே தோல்வியடையும்.

ஞாயிறு, ஏப்ரல் 16, 2017

குறள் எண்: 0623 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0623}

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்

விழியப்பன் விளக்கம்: இன்னல்களுக்கு, இன்னல் அடையாத மனவலிமை கொண்டோர்; இன்னல்களுக்கே, இன்னல் அளிக்கும் ஆற்றல் உடையவராவர்.
(அது போல்...)
குற்றங்களுக்கு, மறுகுற்றம் இழைக்காத அறவுணர்வு உள்ளோர்; குற்றங்களுக்கே, குற்றவுணர்வு ஏற்படும் வகையில் செயல்படுவர்.

சனி, ஏப்ரல் 15, 2017

குறள் எண்: 0622 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0622}

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்

விழியப்பன் விளக்கம்: மழை வெள்ளத்திற்கு இணையான இன்னல்களும்; அவற்றை சமாளிக்கும் திறமுடையோர், திட்டங்களை மனதில் வகுத்த கணத்திலேயே அழிந்துவிடும்.
(அது போல்...)
சுனாமி அலைக்கு ஒப்பான தீப்பழக்கங்களும்; அவற்றை நீக்கும்  முனைப்புடையோர், மாற்றுகளை சிந்தனையில் நினைத்த உடனேயே செயலாகும்.

வெள்ளி, ஏப்ரல் 14, 2017

குறள் எண்: 0621 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை; குறள் எண்: 0621}


இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்

விழியப்பன் விளக்கம்: இன்னல்கள் நேர்ந்தால், அவற்றை ஒதுக்கி மகிழவேண்டும்; இன்னல்களைக் கடக்க உதவுவதில், அம்மகிழ்சிக்கு இணையானது வேறேதுமில்லை.
(அது போல்...)
உறவுகள் பிரிந்தால், அதை மதித்து மறக்கவேண்டும்; உறவுகளின் பிரிவைக் கடப்பதில், மறதிக்கு ஒப்பானது எதுவுமில்லை.

வியாழன், ஏப்ரல் 13, 2017

அதிகாரம் 062: ஆள்வினை உடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை

0611.  அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
           பெருமை முயற்சி தரும்

           விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினைகள் அடைவதற்கு அரிதானது, என்ற அயர்ச்சி
           இல்லாத நிலைப்பாடு; அவ்வினைகளை முடித்து, உயர்வதற்கு தேவையான முனைப்பை
           அளிக்கும்.
(அது போல்...)
           கொண்டிட்ட உறவுகள் நிலைப்பது சாத்தியமில்லை, என்ற சந்தேகம் இல்லாத மனவுறுதி,
           அவ்வுறவுகளை நிலைப்படுத்தி, வாழ்வதற்கு தேவையானத் தகுதியை அளிக்கும்.
      
0612.  வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
           தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

           விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினைகளில், அவ்வினைகள் தடைபட செயல்படுவது;
           வினைகளை முடிக்காமல் கைவிட்டதற்காக, அவர்களை உலகத்தார் கைவிட
           வழிவகுக்கும்.
(அது போல்...)
           கிடைத்திட்ட பிறப்பில், அப்பிறப்பு பயனின்றி வாழ்வது; பிறப்பின் பயனடையாது
           தோற்றதற்காக, அவர்களை சுற்றத்தார் தாழ்த்திட வித்திடும்.
           
0613.  தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே 
           வேளாண்மை என்னும் செருக்கு

           விழியப்பன் விளக்கம்: முயற்சி செய்தல் என்னும் உயர்வான குணம் உடையவர்களிடம்;
           உதவி செய்தல் என்னும் மேன்மையான உணர்வு நிலைத்திருக்கும்.
(அது போல்...)
           அன்பைப் பகிர்தல் என்னும் சிறப்பான இயல்பை உடையவர்களிடம்; மனிதத்தைக் காத்தல்
           என்னும் உண்மையான அடிப்படை மிகுந்திருக்கும்.

0614.  தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
           வாளாண்மை போலக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: முயற்சியென்னும் உயர்குணம் இல்லாதோரின், உதவி செய்யும்
           உணர்வு; கோழையானோர் தம் கையில் வாளெடுத்து, சுழற்றுவது போல் விரயமாகும்.
(அது போல்...)
           அன்பைப் பகிரும் இயல்பாற்றோரின், மனிதம் காக்கும் அடிப்படை; சுயநலமானோர் தம்
           தலைமையில் வென்று, அரசாள்வது போல் அழிவாகும்.

0615.  இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
           துன்பம் துடைத்தூன்றும் தூண்

           விழியப்பன் விளக்கம்: சிற்றின்பங்களில் ஈடுபட விரும்பாமல், செயலில் ஈடுபட
           விரும்புவோர்; தம் சுற்றத்தின் துன்பங்களைத் துடைத்து, அவர்களைத் தாங்கும் தூணாக
           இருப்பர்.
(அது போல்...)
           சுயநலத்தில் நாட்டம் கொள்ளாமல், பொதுநலம் காத்திட முனைவோர்; தம் சமுதாயத்தின்
           குறைகளைக் களைந்து, அவர்களை வழிநடத்தும் கர்மவீரராக இருப்பர்.

0616.  முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
           இன்மை புகுத்தி விடும்

           விழியப்பன் விளக்கம்: முயற்சியைக் கைவிடாமல் செய்யப்படும் வினைகள், செல்வத்தைப்
           பெருக்கும்; முயற்சி இல்லாத தன்மை, இல்லாமையை உருவாக்கி விடும்.
(அது போல்...)
           நேயத்தை மறக்காமல் தொடரும் உறவுகள், சமுதாயத்தை வலிமையாக்கும்; நேயம்
           இல்லாத உறவுகள், தீவிரவாதத்தை வளர்த்து விடும்.

0617.  மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
           தாள்உளாள் தாமரையி னாள்

           விழியப்பன் விளக்கம்: சோம்பல் உடையோரிடம், இருள்நிறைந்த மூதேவி இருப்பாள்
           என்றும்; சோம்பல் இல்லாதோரிடம், ஒளிமிகுந்த திருமகள் இருப்பாள் என்றும் சொல்வர்.
(அது போல்...)
           தீயொழுக்கம் நிறைந்தோரிடம், பகைநிறைந்த அசுரன் இருப்பான் என்றும்;
           நல்லொழுக்கம் நிறைந்தோரிடம், குணம்மிக்க இந்திரன் இருப்பான் என்றும் சொல்வர்.

0618.  பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
           ஆள்வினை இன்மை பழி

           விழியப்பன் விளக்கம்: ஐம்பொறிகளை அடக்கிடும் திறமையின்மை, எவருக்கும் பழியாகாது!
           ஆனால் தேவையானவற்றை அறிந்து; வினைகளை செய்யும் திறமையின்மை,
           எவருக்கேனும் பழியாகும்!
(அது போல்...)
           ஐம்பூதங்களை அறிந்திடும் ஞானமின்மை, ஒருவருக்கும் குறையாகாது! ஆனால்
           தேவையானோரை அலசி; உறவுகளை வளர்க்கும் ஞானமின்மை, எல்லோருக்கும்
           குறையாகும்!

0619.  தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
           மெய்வருத்தக் கூலி தரும்

           விழியப்பன் விளக்கம்: ஊழ்வினை காரணமாய், இறைவனால் உதவமுடியாது எனினும்;
           உடலை வருத்தி செய்யப்படும் முயற்சி, அதற்கிணையான சன்மானத்தை வழங்கும்.
(அது போல்...)
           மனப்பிணக்கு காரணமாய், உறவுகள் உதவிடாமல் போனாலும்; உண்மையை
           முன்னிறுத்திக் கொள்ளும் நம்பிக்கை, அதற்குரிய பலனைத் தரும்.

0620.  ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
           தாழாது உஞற்று பவர்

           விழியப்பன் விளக்கம்: சோர்வின்றி, இடைவிடாத முயற்சியை மேற்கொள்வோர்;
           ஊழ்வினைகளும் வலுவிழக்கும் விந்தையை அனுபவிப்பர்.
(அது போல்...)
           பொய்யின்றி, விலகிடாத உறவைப் பேணுவோர்; பேரின்னல்களும் வலியிழக்கும்
           அனுபவத்தைப் பெறுவர்.

குறள் எண்: 0620 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0620}

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

விழியப்பன் விளக்கம்: சோர்வின்றி, இடைவிடாத முயற்சியை மேற்கொள்வோர்; ஊழ்வினைகளும் வலுவிழக்கும் விந்தையை அனுபவிப்பர்.
(அது போல்...)
பொய்யின்றி, விலகிடாத உறவைப் பேணுவோர்; பேரின்னல்களும் வலியிழக்கும் அனுபவத்தைப் பெறுவர்.

புதன், ஏப்ரல் 12, 2017

குறள் எண்: 0619 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0619}

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

விழியப்பன் விளக்கம்: ஊழ்வினை காரணமாய், இறைவனால் உதவமுடியாது எனினும்; உடலை வருத்தி செய்யப்படும் முயற்சி, அதற்கிணையான சன்மானத்தை வழங்கும்.
(அது போல்...)
மனப்பிணக்கு காரணமாய், உறவுகள் உதவிடாமல் போனாலும்; உண்மையை முன்னிறுத்திக் கொள்ளும் நம்பிக்கை, அதற்குரிய பலனைத் தரும்.

செவ்வாய், ஏப்ரல் 11, 2017

குறள் எண்: 0618 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0618}

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி

விழியப்பன் விளக்கம்: ஐம்பொறிகளை அடக்கிடும் திறமையின்மை, எவருக்கும் பழியாகாது! ஆனால் தேவையானவற்றை அறிந்து; வினைகளை செய்யும் திறமையின்மை, எவருக்கேனும் பழியாகும்!
(அது போல்...)
ஐம்பூதங்களை அறிந்திடும் ஞானமின்மை, ஒருவருக்கும் குறையாகாது! ஆனால் தேவையானோரை அலசி; உறவுகளை வளர்க்கும் ஞானமின்மை, எல்லோருக்கும் குறையாகும்!

திங்கள், ஏப்ரல் 10, 2017

குறள் எண்: 0617 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0617}

மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள்

விழியப்பன் விளக்கம்: சோம்பல் உடையோரிடம், இருள்நிறைந்த மூதேவி இருப்பாள் என்றும்; சோம்பல் இல்லாதோரிடம், ஒளிமிகுந்த திருமகள் இருப்பாள் என்றும் சொல்வர்.
(அது போல்...)
தீயொழுக்கம் நிறைந்தோரிடம், பகைநிறைந்த அசுரன் இருப்பான் என்றும்; நல்லொழுக்கம் நிறைந்தோரிடம், குணம்மிக்க இந்திரன் இருப்பான் என்றும் சொல்வர்.

ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

குறள் எண்: 0616 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0616}

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

விழியப்பன் விளக்கம்: முயற்சியைக் கைவிடாமல் செய்யப்படும் வினைகள், செல்வத்தைப் பெருக்கும்; முயற்சி இல்லாத தன்மை, இல்லாமையை உருவாக்கி விடும்.
(அது போல்...)
நேயத்தை மறக்காமல் தொடரும் உறவுகள், சமுதாயத்தை வலிமையாக்கும்; நேயம் இல்லாத உறவுகள், தீவிரவாதத்தை வளர்த்து விடும்.

சனி, ஏப்ரல் 08, 2017

குறள் எண்: 0615 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை; குறள் எண்: 0615}

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்

விழியப்பன் விளக்கம்: சிற்றின்பங்களில் ஈடுபட விரும்பாமல், செயலில் ஈடுபட விரும்புவோர்; தம் சுற்றத்தின் துன்பங்களைத் துடைத்து, அவர்களைத் தாங்கும் தூணாக இருப்பர்.
(அது போல்...)
சுயநலத்தில் நாட்டம் கொள்ளாமல், பொதுநலம் காத்திட முனைவோர்; தம் சமுதாயத்தின் குறைகளைக் களைந்து, அவர்களை வழிநடத்தும் கர்மவீரராக இருப்பர்.