வியாழன், ஏப்ரல் 13, 2017

அதிகாரம் 062: ஆள்வினை உடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 062 - ஆள்வினை உடைமை

0611.  அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
           பெருமை முயற்சி தரும்

           விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினைகள் அடைவதற்கு அரிதானது, என்ற அயர்ச்சி
           இல்லாத நிலைப்பாடு; அவ்வினைகளை முடித்து, உயர்வதற்கு தேவையான முனைப்பை
           அளிக்கும்.
(அது போல்...)
           கொண்டிட்ட உறவுகள் நிலைப்பது சாத்தியமில்லை, என்ற சந்தேகம் இல்லாத மனவுறுதி,
           அவ்வுறவுகளை நிலைப்படுத்தி, வாழ்வதற்கு தேவையானத் தகுதியை அளிக்கும்.
      
0612.  வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
           தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

           விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினைகளில், அவ்வினைகள் தடைபட செயல்படுவது;
           வினைகளை முடிக்காமல் கைவிட்டதற்காக, அவர்களை உலகத்தார் கைவிட
           வழிவகுக்கும்.
(அது போல்...)
           கிடைத்திட்ட பிறப்பில், அப்பிறப்பு பயனின்றி வாழ்வது; பிறப்பின் பயனடையாது
           தோற்றதற்காக, அவர்களை சுற்றத்தார் தாழ்த்திட வித்திடும்.
           
0613.  தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே 
           வேளாண்மை என்னும் செருக்கு

           விழியப்பன் விளக்கம்: முயற்சி செய்தல் என்னும் உயர்வான குணம் உடையவர்களிடம்;
           உதவி செய்தல் என்னும் மேன்மையான உணர்வு நிலைத்திருக்கும்.
(அது போல்...)
           அன்பைப் பகிர்தல் என்னும் சிறப்பான இயல்பை உடையவர்களிடம்; மனிதத்தைக் காத்தல்
           என்னும் உண்மையான அடிப்படை மிகுந்திருக்கும்.

0614.  தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
           வாளாண்மை போலக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: முயற்சியென்னும் உயர்குணம் இல்லாதோரின், உதவி செய்யும்
           உணர்வு; கோழையானோர் தம் கையில் வாளெடுத்து, சுழற்றுவது போல் விரயமாகும்.
(அது போல்...)
           அன்பைப் பகிரும் இயல்பாற்றோரின், மனிதம் காக்கும் அடிப்படை; சுயநலமானோர் தம்
           தலைமையில் வென்று, அரசாள்வது போல் அழிவாகும்.

0615.  இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
           துன்பம் துடைத்தூன்றும் தூண்

           விழியப்பன் விளக்கம்: சிற்றின்பங்களில் ஈடுபட விரும்பாமல், செயலில் ஈடுபட
           விரும்புவோர்; தம் சுற்றத்தின் துன்பங்களைத் துடைத்து, அவர்களைத் தாங்கும் தூணாக
           இருப்பர்.
(அது போல்...)
           சுயநலத்தில் நாட்டம் கொள்ளாமல், பொதுநலம் காத்திட முனைவோர்; தம் சமுதாயத்தின்
           குறைகளைக் களைந்து, அவர்களை வழிநடத்தும் கர்மவீரராக இருப்பர்.

0616.  முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
           இன்மை புகுத்தி விடும்

           விழியப்பன் விளக்கம்: முயற்சியைக் கைவிடாமல் செய்யப்படும் வினைகள், செல்வத்தைப்
           பெருக்கும்; முயற்சி இல்லாத தன்மை, இல்லாமையை உருவாக்கி விடும்.
(அது போல்...)
           நேயத்தை மறக்காமல் தொடரும் உறவுகள், சமுதாயத்தை வலிமையாக்கும்; நேயம்
           இல்லாத உறவுகள், தீவிரவாதத்தை வளர்த்து விடும்.

0617.  மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
           தாள்உளாள் தாமரையி னாள்

           விழியப்பன் விளக்கம்: சோம்பல் உடையோரிடம், இருள்நிறைந்த மூதேவி இருப்பாள்
           என்றும்; சோம்பல் இல்லாதோரிடம், ஒளிமிகுந்த திருமகள் இருப்பாள் என்றும் சொல்வர்.
(அது போல்...)
           தீயொழுக்கம் நிறைந்தோரிடம், பகைநிறைந்த அசுரன் இருப்பான் என்றும்;
           நல்லொழுக்கம் நிறைந்தோரிடம், குணம்மிக்க இந்திரன் இருப்பான் என்றும் சொல்வர்.

0618.  பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
           ஆள்வினை இன்மை பழி

           விழியப்பன் விளக்கம்: ஐம்பொறிகளை அடக்கிடும் திறமையின்மை, எவருக்கும் பழியாகாது!
           ஆனால் தேவையானவற்றை அறிந்து; வினைகளை செய்யும் திறமையின்மை,
           எவருக்கேனும் பழியாகும்!
(அது போல்...)
           ஐம்பூதங்களை அறிந்திடும் ஞானமின்மை, ஒருவருக்கும் குறையாகாது! ஆனால்
           தேவையானோரை அலசி; உறவுகளை வளர்க்கும் ஞானமின்மை, எல்லோருக்கும்
           குறையாகும்!

0619.  தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
           மெய்வருத்தக் கூலி தரும்

           விழியப்பன் விளக்கம்: ஊழ்வினை காரணமாய், இறைவனால் உதவமுடியாது எனினும்;
           உடலை வருத்தி செய்யப்படும் முயற்சி, அதற்கிணையான சன்மானத்தை வழங்கும்.
(அது போல்...)
           மனப்பிணக்கு காரணமாய், உறவுகள் உதவிடாமல் போனாலும்; உண்மையை
           முன்னிறுத்திக் கொள்ளும் நம்பிக்கை, அதற்குரிய பலனைத் தரும்.

0620.  ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
           தாழாது உஞற்று பவர்

           விழியப்பன் விளக்கம்: சோர்வின்றி, இடைவிடாத முயற்சியை மேற்கொள்வோர்;
           ஊழ்வினைகளும் வலுவிழக்கும் விந்தையை அனுபவிப்பர்.
(அது போல்...)
           பொய்யின்றி, விலகிடாத உறவைப் பேணுவோர்; பேரின்னல்களும் வலியிழக்கும்
           அனுபவத்தைப் பெறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக