சனி, ஏப்ரல் 22, 2017

சிறுநீர் குடிப்புப் போராட்டம் - நாம் என்ன செய்வது?


       கடந்த 40 நாட்களாக நாட்களாக நடக்கும் "தமிழக விவசாயிகளின்" போராட்டத்தின் ஓர் அங்கமாக; இன்று "சிறுநீர் குடிப்பு போராட்டம்" நடக்கும் என்று அறிவித்து இருக்கிறார்கள்! கேட்கும்போதே, மனதைக் குலைக்கும் அறிவிப்பு இது; அப்படியொன்று நடந்தால்...?! அது எத்தனைப் பெரிய கொடுமையாய் இருக்கும்? 25/30 ஆண்டுகளுக்கு முன்னர், சில ஏக்கர் நிலத்தை வைத்து விவசாயம் செய்வோர் "நிலக்கிழார்" என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்! நல்ல வாழ்க்கையை வாழ்ந்தனர்; அவர்களை நம்பிய சில குடும்பங்களையும் வாழவைத்தனர். நம்மில் பலரும் இதை நம் கண்களால் கண்டும்; காதுகளால் பார்த்தும் இருக்கிறோம். அப்படிப்பட்ட "மனித குலத்தின் முதல் தொழிலும்; இயற்கையை ஒத்த, முதல் சாதனையும் ஆன..." விவசாயம் எனும் உன்னத செயலை; நிலங்கள் பலவும், கட்டிடங்கள் ஆகிய நிலையிலும், செய்யும் இவர்கள் நிலை இப்படி ஆக எவர் காரணம்? இதற்கு "எவர் என்ன செய்வது?"
  • மத்திய அரசு: படியளக்கும் "ஆண்டவர்" என்று அன்போடு அழைக்கப்பட்ட விவசாயிகள், இப்போராட்டத்தை தலைநகர் தில்லியில் மத்திய அரசை எதிர்பார்த்து/வலியுறுத்தி நடத்துவதால்; நேரடியாய், மத்திய அரசை எளிதாய் குறை கூறலாம்! "வெளிநாட்டுப் பயணத்தையே; ஏதோ அடுத்த தெருவிற்கு செல்வது போல், செல்லும் பிரதமர்" ஒருமுறை கூட சந்திக்காதது தவறு என்று தட்டிக்கேட்பதில் எந்த தவறும் இல்லை! அதுபோல் "விவசாய நிலங்களில் கட்டப்பட்ட, ஒரு சாமியார் உருவாக்கிய சிலையை திறக்க, தமிழ்நாட்டின் ஒரு பகுதிக்கு வர முடிந்த பிரதமர்" விவசாயிகளை, ஒருமுறை கூட சந்திக்காதது குற்றம் என்று சுட்டிக்காட்டுவதிலும் எந்த தவறும் இல்லை!! ஆனால், இந்த குற்றச்சாட்டுகளும்/முழக்கங்களும்; விவசாயிகளின் தேவையை/குறையை நிவர்த்தி செய்யப் போவதில்லை!
  • மாநில அரசு: மத்திய அரசையே குறைகூறிக் கொண்டிருப்பதிலும் எந்த நியாயமும் இல்லை! இப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில், இதற்கு இணையாக போராட்டம் நடத்திய வடமாநில விவசாயிகளுக்கு; சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கடன் தள்ளுபடி செய்து, தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள்! அப்படி இருக்கையில், நம் மாநில அரசு; இதைச் சார்ந்து, ஏன் எதையும் செய்யவில்லை? நிதியில்லை என்று எளிதாய் சொல்லக்கூடும்! குறைந்தது, தில்லி சென்று; பிரதமரை சந்திக்க வைக்கவாவது முயன்றிருக்கலாமே? ஆனால், பாவம்... அவர்களுக்கு கட்சி சின்னம் மற்றும் ஆட்சியைத் தக்கவைக்கவே நேரம் போதவில்லை. சில மறுப்புகள் இருப்பினும், இம்மாதிரியான நிகழ்வுகளின் போதுதான்; மறைந்த அந்த "பெண் முதல்வரின்" இழப்பு மிகவும் பூதாகாரமாய் தெரிகிறது! அவர் இருந்திருந்தால், இப்போராட்டம் இத்தனை நாட்கள் நீடித்திருக்க வாய்ப்பில்லை!
  • பொதுமக்களாகிய நாம்: 
  1. ஒருவகையில், நம் கண்ணெதிரே விளைந்த பொருட்களை; அதை விளைவித்தவர், வீட்டு வாசலுக்கே வந்து விற்றவரை; அவற்றை வாங்கியவரை, விவசாயிகளுக்கு பெரிய பிரச்சனை இல்லை! அப்போதும், அவர்களின் பொருளுக்கு தகுந்த விலை கிடைக்கவில்லை என்ற பிரச்சனை இருந்தது! ஆனால், இப்படி பூதாகாரமாய் இல்லை. அதை விடுத்து, எப்போது "குளிர்சாதன அறையில், பதப்படுத்தப்பட்ட" பொருட்களை வாங்க ஆரம்பித்தோமோ; அங்கே ஆரம்பித்தது - விவசாயம் மற்றும் விவசாயிகளின் அழிவின் ஆரம்பப்புள்ளி! பெருந்தொழில் அதிபர்களின் சந்தைத் திறனுக்கு, ஈடுகொடுக்க முடியாதபோது; அப்புள்ளி பல புள்ளிகளாய் பெருகியது. இயலாமையால், தம்முயிருக்கு இணையாய் நினைத்த விளைநிலங்களையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட போது; அப்புள்ளிகள் சிக்கலான கோடுகளால் பின்னப்பட்டு, இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது. சரி, நாம் என்ன செய்யமுடியும்? 
  2. மத்திய/மாநில அரசுகளை "அரசியல்வாதிகள் போல்" குறைகூறிக் கொண்டிருக்காமல்; நம்மால் இயன்ற அளவில் விவசாயம் செய்யவேண்டும்! குறைந்தது, மரங்களையாவது வளர்க்கவேண்டும்; மரம் செழிக்க, மழைப் பெருகும்! மழைப் பெருக, விவசாயம் தழைக்கும். இதுவொன்றும், இமாலய இலக்கு இல்லை! அப்படி வாழ்ந்தவர்கள் தானே நாம்? பின்னோக்கி செல்வது ஒன்றும் பெரிய சவால் இல்லை! இப்போதே, பல குழுக்கள் அதை செய்ய ஆரம்பித்து இருக்கின்றன! எங்கள் கிராமத்தின் அருகில் இருக்கும் திருக்கோவிலூர் நகரில் கூட "நாடொப்பன செய்!" என்றோர் குழு, அதை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. அவை மென்மேலும் பல்கிப் பருக வேண்டும்; விவசாய பொருட்கள் சார்ந்த பெருந்தொழில் அதிபர்களும் பண்ணைகளும் அழியவேண்டும் அல்லது மாறவேண்டும். அதற்கு மரம் வளர்ப்பது முதல் கடமையாகிறது. 
  3. இது நீண்ட காலத் திட்டம்! விவசாயிகளின் பிரச்சனையும் ஒரு பெருநோயே! அதற்கு நிரந்தர மருத்துவம் தான் மாற்று எனினும்; முதலுதவி தான் இப்போதைக்கு தேவை என்பது உண்மை. முதலுதவியை பின்வருவது போல் செய்யலாம்: இயற்கைப் பேரழிவிற்கு நிதி திரட்டுவது போல்; விவசாயிகளின் பிரச்சனைக்கும் விவசாயத்தை/விவசாயியை அழித்ததில், நமக்கு(ம்) பங்கிருக்கிறது என்ற வகையிலாவது, இதை செய்யவேண்டும். அப்படிப்பட்ட முதலுதவி செய்யும் முனைப்பு உள்ளவர்களில் நானும் ஒருவன்; இதை கூட்டுமுயற்சியாய் செய்ய வேண்டும். இதுவரை, அப்படி எவரும் முனைந்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. இருப்பின் சொல்லுங்கள்; அவர்களோடு நம்மை இணைத்துக் கொள்ளலாம். இல்லையெனில், அப்படியோர் முயற்சியை; இப்போதேனும் துவக்கலாம். இனிவரும் காலத்திலாவது, இம்மாதிரியான சூழல் நிகழாவண்ணம் தடுக்கலாம்.
நம்மால் இயன்ற வகையில், முதலுதவியைத் துவங்கலாமே?!
நீண்ட காலத் திட்டத்தையும் நினைவில் நிறுத்துவோம்! செயல்படுத்துவோம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக