ஞாயிறு, ஏப்ரல் 23, 2017

அதிகாரம் 063: இடுக்கண் அழியாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 063 - இடுக்கண் அழியாமை

0621.  இடுக்கண் வருங்கால் நகுக அதனை
           அடுத்தூர்வது அஃதொப்பது இல்

           விழியப்பன் விளக்கம்: இன்னல்கள் நேர்ந்தால், அவற்றை ஒதுக்கி மகிழவேண்டும்;        
           இன்னல்களைக் கடக்க உதவுவதில், அம்மகிழ்சிக்கு இணையானது வேறேதுமில்லை.
(அது போல்...)
           உறவுகள் பிரிந்தால், அதை மதித்து மறக்கவேண்டும்; உறவுகளின் பிரிவைக் கடப்பதில்,
           மறதிக்கு ஒப்பானது எதுவுமில்லை.
      
0622.  வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
           உள்ளத்தின் உள்ளக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: மழை வெள்ளத்திற்கு இணையான இன்னல்களும்; அவற்றை
           சமாளிக்கும் திறமுடையோர், திட்டங்களை மனதில் வகுத்த கணத்திலேயே அழிந்துவிடும்.
(அது போல்...)
           சுனாமி அலைக்கு ஒப்பான தீப்பழக்கங்களும்; அவற்றை நீக்கும்  முனைப்புடையோர்,
           மாற்றுகளை சிந்தனையில் நினைத்த உடனேயே செயலாகும்.
           
0623.  இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
           இடும்பை படாஅ தவர்

           விழியப்பன் விளக்கம்: இன்னல்களுக்கு, இன்னல் அடையாத மனவலிமை கொண்டோர்;
           இன்னல்களுக்கே, இன்னல் அளிக்கும் ஆற்றல் உடையவராவர்.
(அது போல்...)
           குற்றங்களுக்கு, மறுகுற்றம் இழைக்காத அறவுணர்வு உள்ளோர்; குற்றங்களுக்கே,
           குற்றவுணர்வு ஏற்படும் வகையில் செயல்படுவர்.

0624.  மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
           இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

           விழியப்பன் விளக்கம்: எதிர்வரும் தடைகளைக்  கடந்து, வண்டியிழுக்கும் எருதுவைப்
           போல்; வைராக்கியமுடன் பயணிப்போர்க்கு, நேர்ந்த இன்னல்களே இன்னலடையும்.
(அது போல்...)
           எதிர்ப்படும் மிதவைகளைத் தாண்டி, கரைதொடும் அலையைப் போல்; பின்வாங்காமல்
           தொடர்வோர்க்கு, நிகழ்ந்த தோல்விகளே தோல்வியடையும்.

0625.  அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
           இடுக்கண் இடுக்கண் படும்

           விழியப்பன் விளக்கம்: இன்னல்கள் தொடர்ந்து இருப்பினும், அவற்றை அழித்து; தாம்
           அழியாமல் மீண்டெழுவோர்க்கு, நேர்ந்த இன்னல்களே இன்னலுக்கு உள்ளாகும்.
(அது போல்...)
           உறவுகள் தொடர்ந்து வதைத்தாலும், அவற்றை மறந்து; உறவுகளை மறக்காமல
           பயணிப்போர்க்கு, நிகழ்ந்த குழப்பங்களே குழப்பத்திற்கு ஆட்படும்.

0626.  அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று
           ஓம்புதல் தேற்றா தவர்

           விழியப்பன் விளக்கம்: இருக்கும்போது, பெற்றிருக்கிறோம் என்ற சுயநலத்துடன்,
           செல்வத்தைக் காக்காதோர்; அவற்றை இழந்தபோது, இழந்துவிட்டோம் என்று இன்னல்
           படுவரோ?
(அது போல்...)
           வென்றபோது, வென்றுவிட்டோம் என்ற கர்வத்துடன், தோற்றவரை இகழாதோர்;
           தோல்வியைத் தழுவியபோது, தோற்றுவிட்டோம் என்று வருத்தம் அடைவரோ?

0627.  இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
           கையாறாக் கொள்ளாதாம் மேல்

           விழியப்பன் விளக்கம்: "உடம்பு என்பது துன்பத்திற்கு உள்ளாவதே!" என்பதை உணர்ந்து;
           சான்றோர்கள், துன்பத்திற்காகக் கலங்குவதை வழக்கமாக கொள்ளமாட்டார்கள்.
(அது போல்...)
           "அரசியல் என்பது துரோகத்துக்கு ஆட்பட்டதே!" என்பதைப் புரிந்து; கர்மவீரர்கள்,
           துரோகத்துக்காகப் பின்வாங்குவதைக் காரணமாக சொல்லமாட்டார்கள்.

0628.  இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
           துன்பம் உறுதல் இலன்

           விழியப்பன் விளக்கம்: சிற்றின்பங்களில் நாட்டம் கொள்ளாமல், துன்பத்தை
           இயல்பென்போர்; துன்பத்தை எதிர்கொள்வதற்காக, தம் மனத்திடத்தை            
           இழக்கமாட்டார்கள்.
(அது போல்...)
           விதிமீறலில் விருப்பம் இல்லாமல், விதிகளை அவசியமென்போர்; விதிமீறலை
           மேற்கொள்வதற்காக, தம் ஒழுக்கத்தை சிதைக்கமாட்டார்கள்.

0629.  இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
           துன்பம் உறுதல் இலன்

           விழியப்பன் விளக்கம்: இன்பமான நிகழ்வுகளின் போது, அவ்வின்பத்தால் சுயத்தை
           இழக்காதோர்; துன்பமான நிகழ்வுகளின் போது, அத்துன்பத்தால் மனத்திடத்தை
           இழப்பதில்லை.
(அது போல்...)
           சாதகமான சூழலின் போது, அச்சாதகத்தால் ஆதாயத்தைத் தேடாதோர்; சிக்கலான
           சூழலின் போது, அச்சிக்கலால் ஒழுக்கத்தைத் தவறமாட்டார்கள்.

0630.  இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
           ஒன்னார் விழையும் சிறப்பு

           விழியப்பன் விளக்கம்: எதிர்வரும் துன்பத்தையும், இன்பமென தெளிந்து கொள்வோருக்கு;
           அவர்களின் பகைவர்களும் விரும்பும் வண்ணம், சிறப்பு உண்டாகும்.
(அது போல்...)
           விலகிசெல்லும் உறவுகளையும், நட்பென உணரும் அன்பர்களுக்கு; அவர்களின்
           துரோகிகளும் வாழ்த்தும் வண்ணம், சூழல் உருவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக