புதன், அக்டோபர் 05, 2016

அதிகாரம் 043: அறிவுடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை

0421.  அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
           உள்ளழிக்க லாகா அரண்

           விழியப்பன் விளக்கம்: 
அறிவு, ஒருவரை அழிவிலிருந்து காக்கும் கருவியாகும்; அது 

           பகைவர்கள் அழிக்க முடியாத, உள்ளரணாகவும் அமையும்.
(அது போல்...)
           பயம், ஒருவரை தீமையிலிருந்து காக்கும் திசைக்காட்டியாகும்; அது பேராசையால் 
           திசைதிருப்ப முடியாத, நங்கூரமாகவும் இருக்கும்.
        
0422.  சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
           நன்றின்பால் உய்ப்ப தறிவு

           விழியப்பன் விளக்கம்: 
விரும்பும் எல்லாவற்றிலும் மனதைச் செலுத்தாமல், தீயவற்றை 

           அழித்து; நல்லறப் பாதையில், மனதைச் செலுத்துவதே அறிவாகும்.
(அது போல்...)
           மயக்கும் விடயங்களில் நேரத்தைச் செலவிடாமல், சிற்றின்பத்தைக் குறைத்து; பேரின்பத் 
           தேடலில், சிந்தனையை வளர்ப்பதே பிறவியாகும்.
           
0423.  எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
           மெய்ப்பொருள் காண்ப தறிவு

           விழியப்பன் விளக்கம்: எந்த விளக்கத்தையும், எவர் எப்படி விவரித்தாலும்; 

           அவ்விளக்கத்தின், உண்மையான விளக்கத்தை உணர்வதே - பகுத்தறிவாகும்.
(அது போல்...)
           எந்த மோகத்தையும், எவர் எப்படி வற்புறுத்தினாலும்; அம்மோகத்தின், ஆழமான
           விளைவை ஆராய்வதே - சுயமாகும்.

0424.  எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
           நுண்பொருள் காண்ப தறிவு

           விழியப்பன் விளக்கம்: 
நாம் அறிந்தவற்றைப், பிறருக்கு எளிதாய் விளக்குவதும்; பிறர் 
           சொல்வதை,  ஆழமாய் விளங்கிக் கொள்வதுவமே பகுத்தறிவாகும்.
(அது போல்...)
           நாம் பெற்றதை, வேண்டுவோர்க்கு மனமுவந்துப் பகிர்வதும்; பிறர் கொடுப்பதில், 
           தேவையானதை மட்டும் ஏற்பதுமே மனிதமாகும்.

0425.  உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
           கூம்பலும் இல்ல தறிவு

           விழியப்பன் விளக்கம்: 
உலக உயிர்களை, அரவணைப்பதே சிறந்த அறிவாகும்; பார்த்ததும் 
           மலர்ந்து, பின்னர் சுருங்கும் இயல்பற்றதே அறிவாகும்.
(அது போல்...)
           சக ஊழியர்களை, உயர்த்துவதே உன்னத நேர்மையாகும்; நம்பிக்கை அளித்து, பின் 
           வஞ்சிக்கும் குணமற்றதே நேர்மையாகும்.

0426.  எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
           அவ்வது உறைவ தறிவு
         
           விழியப்பன் விளக்கம்: உலகில், வாழ்வியல் எவ்வாறு நிகழ்கிறதோ; அவ்வகையில், 
           உலகுடன் ஒன்றி வாழ்வியலை நிகழ்த்துவதே, அறிவுடைமை ஆகும்.
(அது போல்...)
           சமூகத்தில், மக்களின் தேவை எதுவாகிறதோ; அதையொத்து, மக்களுடன் இணைந்து 
           திட்டங்களை வகுப்பதே, மக்களாட்சி ஆகும்.

0427.  அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
           அஃதறி கல்லா தவர்

           விழியப்பன் விளக்கம்: 
பகுத்தறியும் திறமுடையோர், நிகழவிருக்கும் விடயங்களை 
           முற்கூட்டியே அறிவர்; பகுத்தறிய இயலாதோர், அப்படி அறியும் ஆற்றல் இல்லாதவர் ஆவர்.
(அது போல்...)
           உணர்வுப்புரிதல் இருப்போர், புறங்கூறுவதன் விளைவுகளை ஆழமாய் ஆராய்வர்; 
           உணர்வுப்புரிதல் இல்லாதோர், அப்படி ஆராயும் திறம் இல்லாதவர் ஆவர்.

0428.  அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
           அஞ்சல் அறிவார் தொழில்

           விழியப்பன் விளக்கம்: 
அறம்சார்ந்த பயத்திற்கு அஞ்சாதது, அறியாமையாகும்; அறம்சார்ந்த 
           பயத்திற்கு அஞ்சுவதே, பகுத்தறிவின் இயல்பாகும்.
(அது போல்...)
           மனதறிந்த துரோகத்திற்கு தயங்காதது, தீவிரவாதமாகும்; மனதறிந்த துரோகத்திற்கு 
           தயங்குவதே, நற்குணத்தின் தன்மையாகும்.


0429.  எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
           அதிர வருவதோர் நோய்

           விழியப்பன் விளக்கம்: 
எதிர்காலத் தேவையை உணர்ந்து, அதற்கேற்ப திட்டங்களை 
           வகுக்கும் அறிவுடையவர்க்கு; அவரை நிலைகுலையைச் செய்யும், எந்த இன்னலும் 
           நேர்வதில்லை.
(அது போல்...)
           தலைவர்களின் தகுதிகளை ஆராய்ந்து, அதையொத்து தேர்தலில் வாக்களிக்கும் 
           மக்களுக்கு; அவர்களைச் சோதனைக்கு உள்ளாக்கும், எந்த ஆட்சியும் அமைவதில்லை.

0430.  அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
           என்னுடைய ரேனும் இலர்

           விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் திறமுடையோர், வாழ்வியலுக்குரிய எல்லாமும் 

           உடையவராவார்; அவ்வறிவு இல்லாதோர், எதைக் கொண்டிருப்பினும் - இல்லாதவரே 
           ஆவர்.
(அது போல்...)
           உறவைப்பேணும் அன்புடையோர், புகழுக்குரிய உறவுகளெல்லாம் கொண்டிருப்பர்; 
           அப்படிப் பேணாதோர், எல்லா உறவுகளிருந்தும் - ஆதரவற்றவரே ஆவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக