சனி, அக்டோபர் 01, 2016

ஆண்/பெண் உறவு - ஓர் அலசல்! (பாகம் 2)


        முதல் பாகத்தில் சொல்லியிருந்தது போல், பெரும்பான்மை ஆண்கள் காதலை முறையாய் வெளிப்படுத்தாததற்கு - உறவை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்ல வாழ்க்கையோடு போராடி, ஓய்வின்றி ஓடிக்கொண்டிருப்பதே - காரணம். அப்பதிவில் குறிப்பிட்ட காதல்/கள்ளத்தொடர்பு சார்ந்த - இரண்டு உறவுகளும்; அங்கீகாரம் இல்லாதது (அல்லது) முழுமை அடையும் உறுதி இல்லாதது - என்பதால், இந்த அசலில் இருந்து விளக்கிவிடலாம். எனவே, குடும்ப அமைப்பில் இணைந்திருக்கும் உறவு சார்ந்த ஆண்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒரு பெண்ணுக்கு எவ்வொரு சிக்கல் நேர்ந்தாலும் - அவள் சார்ந்திருக்கும் ஆண் உறவுகளையே (தந்தை/சகோதரன்/தமையன்) இந்த சமூகம் கேள்விக்கு உட்படுத்தும். எனவே, ஆண்கள் இந்த சமூகத்தையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சரி, குடும்ப வளர்ச்சி சார்ந்த உழைப்பு அதிகமாய் தேவைப்படாத ஆண்கள் "காதலை வெளிப்படுத்துவார்களா?!" என்றால்...

       நான் பார்த்த வகையில்; அவர்களால், குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட முடிந்த ஆண்களால், வெகு நிச்சயமாய் - இயல்பான வாழ்க்கையோடு ஒன்ற முடியும். வீட்டின் சூழல், அவர்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும். எல்லாப் பெண்களின் மனதிலும் - அடுத்த கட்டம் பற்றிய சிந்தனை இருப்பது போல்; அதுபோல், எல்லா ஆண்களின் மனதிலும் - காதல் சார்ந்த சிந்தனைகள் இருக்கத்தான் செய்கின்றன! "சரி, அதை எப்போது தான் வெளிப்படுத்துவர்?" என்றால்; முதலில், பெண்கள் - ஆண்களைப் பெரிதும் சார்ந்திருப்பதில் இருந்து வெளிவரவேண்டும். அதற்கு தகுந்த சூழலை உருவாக்குவதில், சமூகத்திற்கு பெரிய பங்குண்டு. சமீபத்திய "இரயில்நிலையக் கொலை..." பற்றி நினைத்தால்; அந்த சூழல் விரைவில் வருவதற்கு சாத்தியமேயில்லை. அடுத்து, ஆண்களின் பொறுப்புகள் குறைக்கப்பட வேண்டும். இதற்கு, சில நாடுகளில் இருப்பது போல்...

        பெற்றோரின் சொத்துகளைப் பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடாது! என்று சட்டம் வரலாம்; தவறில்லை. தன் பிள்ளைகளுக்கு "என்ன தேவை? எவ்வளவு தேவை?" என்பதைக் கூட நிர்ணயிக்க முடியாமல்; இந்த சமூகம் ஒரு ஆணைத் துரத்திக் கொண்டிருக்கிறது. ஆண்களும், தம் இலக்கு எதுவென்று உணரக்கூட நேரமின்றி ஓடுகிறான். மேலை நாட்டு ஆண்களுக்கு, இம்மாதிரி இலக்கின்றி ஓடும் நிலையில்லை. அதனால் தான், அங்கிருக்கும் ஆண்களால் - காதல் உணர்வை - எளிதில் செயல்வடிவில் வெளிப்படுத்த முடிகிறது. நம்முடைய சூழலில், பிள்ளைகளை வளர்த்து, அவர்கள் மூலம் - பெயரன்/பெயர்த்தியைப் பார்த்து மகிழ்ந்த பின்னர் தான் - ஒரு ஆணுக்கு, வாழ்க்கையின் முழுமையை உணரும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் தான், அவனால் இயல்பான விடயங்களில்/நிகழ்வுகளில் கவனம் செலுத்தமுடியவில்லை. ஆனால், திருமணமாகிக் குழந்தைப் பிறந்தவுடனேயே; ஒரு பெண்ணால் வாழ்கை முழுமையடைந்ததாய் உணரமுடிகிறது.

       எனவே, குடும்பத் தேவைகள் பூர்த்தியான பின், வயதான காலத்தில் தான் - ஆண்களுக்கு, அடிமனதில் ஆழ்ந்து புதைந்திருந்த காதல் சார்ந்த உணர்வுகள் மேலெழ ஆரம்பித்து, ஒரு ஆணால் காதலை மையப்படுத்திப் பார்க்க முடிகிறது! அதை எதிர்பார்த்து/எதிர்பார்த்து மனதால் சோர்ந்துபோன பெண்ணால், அவனின் உணர்வை ஏற்கும் சூழலில், அப்போது இருக்க முடிவதில்லை. எனவேதான், வயதான ஆண்கள் பலரும் பின்வரும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறார்கள்: "1. கிழத்துக்கு, இப்பத்தான் பாசம் பொங்குதாக்கும்?; 2. இத்தனை வருசத்துல, ஒருதடவையாவது இவ்வளவு அன்பா இருந்திருக்கியா யா?; 3. மீசை நரைத்தாலும், கிழத்துக்கு ஆசை மறையவில்லை; 4. வேலைவெட்டி இல்லாம, வீட்டிலேயே இருந்தால்; இப்படியெல்லாம் தான் சிந்தனை வரும்!". இதில் மிக-முக்கியமானது, 4-ஆவது தான்; அதில் மறைந்திருக்கும் உண்மை - "வேலைப்பளு அதிகம்" இருந்ததால் தான் - இளமைக்கு காலத்தில், ஆண்களால்...

    காதல் உணர்வை வெளிப்படுத்த முடியவில்லை என்பதே! அதை ஒரு பெண் இரண்டு காலக்கட்டத்திலும் புரிந்து கொள்ளாதாது தான், ஒரு ஆணின் உச்சபட்ச துரதிஷ்ட்டம். போதாக்குறைக்கு, பிள்ளைகளும் வயதான  ஆணை உதாசீனப் படுத்துவதும் நிகழும். பிள்ளைகள் விரட்ட/விரட்ட, மனைவியிடம் ஓடுவான்; "முன் செய்ததன் வினைபோல்" மனைவியும் உதாசீனப்படுத்த - என்ன செய்வது? என்று குழம்பும்போது - "நீ ஆம்பளைடா!" - என்று உள்ளும்/புறமும்(சமூகம்) - குரல் ஒலிக்கும்! அந்த "வறட்டு"கெளவரம்" கடந்து, காதல் உணர்வு மீண்டு(ம்) வரும்; மீண்டும், மனைவியைத் தேடும் - மீண்டும் "ஆம்பளைடா!" குரல். இப்படியே - ஒரு பந்து போல் தான் - பல ஆண்களின் வாழ்க்கை அமைகிறது! அவனின் சூழலும்/உணர்வும் புரியாமல்; அது "ஆண் திமிர்" என்றே வெளியுலகத்தால் பார்க்கப்படுகிறது. தன் இயலாமை மற்றும் ஆற்றாமை காரணமாய; ஆணும், "ஆண் திமிர் தான் டா!" எனும் மாயப் போர்வையில் ஒளிந்துகொள்கிறான்.

இந்த அலசல் இன்னும் முழுமை அடைந்தாய் தோன்றவில்லை! எனவே...

தொடரும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக