ஞாயிறு, அக்டோபர் 02, 2016

"புறங்கூறாமை"யும் சமூக-வலைதளங்களும்...


         தலைப்பைப் பார்த்தவுடன், இத்தலையங்கம் எதைச் சார்ந்தது என்பதை யூகிக்க முடியும். ஆம், தமிழக முதல்வரைப் பற்றி புரளிப் பேசுவோர் பற்றிய ஆதங்கமே - இந்த தலையங்கத்தின் மையக்கரு. நடிகர்கள் துவங்கிப் பிரபலங்கள் பலரைப் பற்றியும் இப்படியான புரளிகள், சமூக-வலைதளங்களில் உலாவருவது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், ஒரு மாநில முதல்வரைப் பற்றிய இத்தகைய புரளிகள்; பொதுமக்களுக்கு எத்தகைய சிரமங்களை விளைவிக்கும் என்ற சமூக-அக்கறை இல்லாத அலட்சியம் மிகவும் கவலைக்குரியது. ஒரு தொலைகாட்சி விவாதம் நடத்தும் அளவிற்கு, இந்த புரளிகள் அரங்கேறி உள்ளன. என்ன விதமான மனிதர்கள் இவர்கள்? அப்படியென்ன, புரளிப் பேசுவதில் நாட்டம்? அதிலும், நம் பிரதிநிதியாய் இருக்கும் மாநில முதல்வரைப் பற்றி? நம் குடும்பங்களில்; எவ்வளவு பகை இருப்பினும் - ஒருவர் உடல்நிலை சரியில்லை எனில், எல்லாவற்றையும் மறந்து அவர் நலமடையவேண்டும்...

        என்று வாழ்த்துவதை எளிதாய் பார்க்கலாம்; அதுதான், மனித இயல்பு. அப்படி இருக்கையில்; எப்படி இவ்வகையான புரளிகள் அதீத அளவில் பேசப்படுகின்றன? சமுதாய அக்கறையுடன், தனிமனித ஒழுக்கத்துடன்; முதல்வரின் உடல்நிலையைப் பற்றி அறிந்து கொள்வதில் - இருக்கும் வேட்கையை எந்த விதத்திலும் மறுக்கவில்லை! அந்த எதிர்பார்ப்பும்/அக்கறையும்; வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியதே. ஆனால், அதை இப்படி தரமற்ற வகையில்; புரளியாய் பேசுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல! தற்போதிருக்கும் நிலைமை/எதிர்பார்ப்பு என்ன? தமிழக முதல்வரின் உடல்நிலை சரியில்லை; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரின் உடல்நிலையைப் பற்றி - அரசு சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும். அருமை! நல்லதொரு சமூக அக்கறை - பாராட்டுகள். கட்சிக்காரர்கள் தினமும் நிறைய சொல்லியும்; இல்லையில்லை! அரசு சார்பில் எவரேனும் அதிகாரப்பூர்வமாய்...

      சொன்னால் தான் நம்புவோம் என்கிற பிடிவாதம் இருக்கிறது. சரி, அதைக்கூட ஒரு அதீத அன்பின் விளைவாய் எடுத்துக்கொள்வோம். அதிலும், ஒரு வரைமுறை வேண்டுமல்லவா? அவரின் உடல்நிலையைப் பற்றி "அவதூறாய்/தவறாய்" புரளிப் பேசும் ஒழுக்கமின்மை எப்படி சரியாகும்? நம் பிரதிநிதியாய் இருப்பினும்; முதல்வரும் ஒரு சராசரியான தனிமனிதர். மேலும், அவர் ஒரு பெண். அதையெல்லாம் மறந்துவிட்டு "காட்சியாக/புகைப்படமாக வெளியிட்டால் தான் ஏற்போம். இல்லையேல், அவரைப் பற்றி அவதூறாய் பேசுவோம்" என்ற மனநிலை சரியானதா? ஏன், அவர்களுக்கு இந்த புரிதல் இல்லை? (அரசியல் தர்மமற்றது எனினும்) எதிர்க்கட்சியினரின் கோரிக்கையில் இருக்கும், அரசியல் ஆதாயம் சார்ந்த அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது.  ஆனால், ஒரு தனிமனிதனுக்கு அற்ப சந்தோசத்தைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?! இது, முதல் நிகழ்வு அல்ல; நிச்சயம், இது இறுதியான நிகழ்வும் இல்லை!

     முகநூல் போன்ற சமூக-வலைதளத்தில், இப்படி புரளி பேசுவதற்கென்றே சில சிறார்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் புரளிப் பேசுவதே, அவர்களின் வாடிக்கை! தொடர்ந்து "அரசியல் நையாண்டி" என்ற பெயரில்; சமூக அக்கறையின்றி பதிவிடுவோரை நான் முடக்கி விடுவேன். அவர்கள், சமூக(வலைத்தள)த்தின் "மிக அபாயமான நோய்க்கிருமிகள்!". இவர்களுக்கு எதைப் பற்றிய அக்கறையுமில்லை; அற்ப சந்தோசமே, அவர்களின் குறிக்கோள். அப்பதிவுகளை "எந்த உணர்வோ/மறுபரிசீலனையோ" இன்றி - பகிர்வோர்; பதிவர்களை விட ஆபத்தானவர்கள் என்றே நான் பார்க்கிறேன். ஏனெனில், அந்தப் பகிர்வுகள் தான் - புரளிப் பேசுவோரை; மேலும் புரளிப் பேசத் தூண்டுகிறது. அதனால் தான் "விவேகமுள்ள ஒருவரின் காதை எட்டும்போது, புரளி அழியும் (Gossip dies when it hits a wise person's ear)" என்றோர் சொற்றொடர் வழக்கில் இருக்கிறது. இதுபோன்ற, ஆங்கில சொற்றொடர்களைக் கூட; நாம் எளிதில் ஒதுக்கிவிடக்கூடும்.

     நம் பெருந்தகை "திருக்குறள்" எனும் உலகப் பொதுமறையில் "புறங்கூறாமை" என்றோர் அதிகாரத்தையே வகுத்து இருக்கிறார். அதிலும், முதல் குறளையே "அறங்கூறான் அல்ல செயினும்" என்று துவக்கி இருக்கிறார். என் திருக்குறள் விளக்கவுரையிலும், அந்த அதிகாரத்தை அதீத தாக்கம் கொடுக்கும் வண்ணம் எழுதி இருக்கிறேன். விளக்கவுரை எழுதும் முன்பே, "புரளி பேசுதல்" எனும் தலையங்கத்திலும், புரளிப் பற்றியப் பார்வையைப் பகிர்ந்திருக்கிறேன். இப்படிப் புரளி பேசுதலின் விளைவைக் கொஞ்சம் கூட உணராமல்; நம் முதல்வரைப் பற்றி இப்படி முறையற்று பேசுதல் சரியா? அதிகாரப்பூர்வ செய்தியை எதிர்பார்த்தார்கள்; மருத்துவமனை தரப்பில் இருந்து "எழுத்து மூலம்" விளக்கம் கொடுக்கப்பட்டது. அதையும் நம்பாத எதிர்க்கட்சியினர், ஆளுநர் சென்று பார்த்துவிட்டு சொல்லவேண்டும் என்றனர். மேற்குறிப்பிட்ட தொலைகாட்சி விவாதத்தில்,  ஆளுநரின் செய்தியையும் - முறையற்று விமர்சிக்கிறார்கள். ஒரு சிறிய காணொளியை...

    வெளியிட முடியாதா? என்று ஒருவர் கேட்கிறார். அதிலும் "மூத்த வழக்கறிஞர்" என்ற அடைமொழியுடன் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர் - "நான் விசாரித்தேன், முதல்வர் சிரித்துக் கொண்டே நலமுடன் இருக்கிறேன் என்று சொல்லி இருந்தால், நம்பலாம்!" - என்று, ஆளுநரின் உரையரை இப்படி இருந்திருக்கலாம் என்று பரிந்துரை செய்கிறார். இவர்களைப் போன்றோரை எல்லாம், முன்பே தீர்க்கமாய் உணர்ந்துதான் - "மானிடர்களே! இல்லற வாழ்வில் கூட , புறங்கூறாமை இருக்கக்கூடாது!" - என்று குரல் உயர்த்தி சொல்லத்தான்; அந்த 10 குறள்களை "இல்லறவியல்" எனும் இயலில் வகுத்தாரோ? என்ன செய்ய? - "வள்ளுவரையும்/குறளையும்" கூட - தமிழ் "இரண்டாயிரம் வருடப் பழமையானது!" என்று பீற்றிக்கொள்ளும் போது மட்டும்தானே நினைவு கொள்கிறோம்? சமூக வலைத்தளங்களில் அறநெறிப் பற்றி விரிவாய் பேசுவோர் சிலர் கூட, புரளிப் பேசுவதைப் பார்க்கும்போது; மனது மிகவு கணக்கச் செயகிறது.

அரசியல்வாதியாய்(மட்டும்) பார்க்காமல்; நம்மில் ஒருவராய்(ஆவது) நினைத்து...
நம் முதல்வர் விரைவில் குணமடைய வேண்டுவோம்! 
அதுவரை, நம் பொறுமைக் காப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக