சனி, ஏப்ரல் 29, 2017

பாகுபலி 2 (2017)


     பெரும்பான்மையில் பலரும் எதிர்பார்த்த "பாகுபலி 2" திரைப்படம் நேற்று (மே 28, 2017) வெளியாகியது. வளைகுடா நாடுகள் போன்ற இடங்களில், 27-ஆம் தேதியே வெளியாகிவிட்டது. அபுதாபியில் 27-ஆம் தேதியே வெளியாகிய நிலையில், நேற்று "மேக்ஸ் (MAX)" திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுபோன்ற திரைப்படங்களுக்கு, "மேக்ஸ்" திரையரங்கம் கூட சிறியது தான்! "ஐமேக்ஸ் (IMAX)" மிகப் பொருத்தமாய் இருக்கும். "இது ஓர் மிகப் பிரம்மாண்டமான திரைப்படம்" என்ற வழக்கமான விமர்சனத்தைத் தாண்டி, ஒரு மாறுபட்ட கோணத்திலானா விமர்சனம் கீழே:
  • படத்தில் பேசப்படும் தமிழ்!  முதலில் குறிப்பிடவேண்டியது, படத்தில் கையாளப்பட்டு இருக்கும் தமிழ் உரையாடல்கள்! எனையொத்த தலைமுறையினர் பலருக்கும் கூட, இந்த தமிழ் உரையாடல்கள் ஓர் புதுமையான அனுபவமாய் இருக்கும். மூத்த தலைமுறையினர், இதுபோன்ற தமிழ் உரையாடல்களை நிறைய, இன்னும் ஆழமாய்/அழகாய் கேட்டிருப்பர்; அவர்களுக்கு இந்த உரையாடல்கள் அதிக ஆர்வத்தை அளிக்காமல் போகக்கூடும். ஆனால், வெகு நிச்சயமாக "இன்றைய தலைமுறையினருக்கு, இது ஓர் வரப்பிரசாதம்!". மொழியின் உச்சரிப்பு கூடுதல் பலம். இந்த அனுபவம், மற்ற இந்திய மொழிகளிலும் இருக்கும் என்றே நம்புகிறேன்; வாய்ப்பு கிடைக்கும்போது, தெலுங்கு/கன்னடம் போன்று நானறிந்த மொழிகளில் பார்த்து இரசிக்கவேண்டும்.
  • திரு. ராஜமெளலி! இம்மனிதரை எப்படி பாராட்டுவது? கதையை எழுதிய திரு. விஜயேந்திர பிரசாத் அவர்களின் பங்களிப்பை, மறுக்கவே முடியாது எனினும்; ராஜமெளியின் திரைக்கதை அமைக்கும் திறம் "இம்மாதிரியான காணொளி ஊடகங்களின்" மிகப்பெரிய பலம்! எளிதாய் சொல்ல வேண்டுமெனில், ஒரு பாடலில் வருவது போல்; இதுவும் ஒரு "ஒரு ஊரில் ஒரு ராஜா" என்பது போன்ற கதைதான்! ஆனால், சொல்லப்பட்டு இருக்கும் விதமும்; காட்சிப் படுத்தப்பட்டு இருக்கும் விதமும் தான், படத்தை இந்த உயரத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது. சபாஷ் யா ராஜமெளலி!!
  • பின்னணி இசை: எனக்கு பெரிய இசை ஞானம் இல்லை. பலரும், இவர் இசை அமைத்திருக்கலாம்/ அவர் இசை அமைத்திருக்கலாம் என பரிந்துரைக்கக் கூடும். ஆனால், என்னளவில் வேறொருவர் பற்றி யோசிக்க ஏதுமில்லை! அவ்வளவு அபாரமாய் இருக்கிறது! மேலும், இங்கே - இசையோ/நடிகரோ/நடிகையோ - இரண்டாம் பட்சம் தான். இந்த படத்தைப் பொறுத்த வரையில்; "கதைதான்" நாயகன்/நாயகி/சூப்பர்ஸ்டார் எல்லாமும்! சொல்லி இருக்கும் விதமும், காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் தான் இங்கே எல்லாமும்! எனவே, எவர் இசை அமைத்திருப்பினும் - இசை தனித்து வெளிப்பட்டு இருக்க வாய்ப்பே இல்லை! ஒருவேளை, பொருந்தாமல் இருப்பின்; தனித்து வெளிப்படக்கூடும். எனவே, பின்னணி இசையில் குறை சொல்ல எதுவுமே இல்லை.
  • நினைவுக் காட்சிகள் (Flash-back Scenes): திரைப்படமோ/நடைமுறை வாழ்வியலோ, நினைவுகளை "மலரும் நினைவுகளாய்" கூறுவது சரியாய்/முறையாய் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அது பார்வையாளர்களை ஈர்க்க தவறிவிடும்! {சுமார் 30 நிமிட இறுதிக் காட்சிகள் தவிர}  இந்த இரண்டாம் பாகம், முழுக்க முழுக்க  நினைவுக் காட்சிகள் தான்! ஆனால், எந்த தொய்வும் இல்லை! படத்தின் "தலைப்பு அட்டைகள் (Title Cards)" ஓடும்போது கூட, முந்தைய பாகத்தை வசனங்களால் சொல்லாமல், சிலை-போன்று "நிற்பிம்பங்களால் (Still Images)" சொல்லி இருப்பது மிகவும் அருமை. "வேறு படங்களில், இதுபோன்று வந்திருக்கிறதா?" என்ற புரிதல் எனக்கில்லை! ஆனால், இதுவோர் அற்புதமான முயற்சி/செயல்! என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த நினைவுக்காட்சிகள் முந்தைய படத்தைப் பார்த்தவருக்கு, நினைவூட்டும் அடிப்படையில் செய்யப்படுவது தான்! பிறகு, அதற்கேன் வசனங்கள்? என்றோர் கேள்வியும்/புரிதலும் என்னுள் எழுந்தன. எனவே, நினைவுக் காட்சிகளை வரையறுக்கும் திறன், தலைப்பு அட்டைகளிலேயே துவங்கி இருக்கிறது. படம் பார்ப்போர், மறக்காமல் அவற்றை அனுபவியுங்கள்.
  • நகைச்சுவை: இம்மாதிரியான கதைகளில், நகைச்சுவையைக் கையாள்வதில், மிக அதிகமான கவனம் தேவை! அளவுக்கதிமான, கதையோடு ஒட்டாத நகைச்சுவைகள் - படத்தின் அனுபவத்தை நீர்த்துப் போகச் செய்யும். முற்பாதியில், கட்டப்பாவை மையப்படுத்திய நகைச்சுவைக் காட்சிகள் அவ்வளவு சிரிப்பை அளித்தும், கதையின் பயணத்தைக் குலைக்காத நகைச்சுவைக்கு காட்சி அமைப்புகள்; நம்மை கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணிக்கும் பிரம்மிப்பை, நம்மையும் அறியாமல் நம்முள் புகுத்துகின்றன.
  • அன்னம் போன்ற கப்பல்: கப்பலை அன்னம் போன்று வடிமைத்து இருப்பது, மிகுந்த பாராட்டுக்குரியது. அந்த காட்சிகள் அனைத்தும் பார்வைக்கு "இராஜவிருந்து!". சிலர், இது போன்ற காட்சிகள் அந்தப் படத்தில் வந்திருக்கின்றன/இந்தப் படத்தில் வந்திருக்கின்றன என்று வாதிக்கக் கூடும்! அதையொத்த கற்பனைகள் வேறு படங்களில் இருந்திருக்கலாம். ஆனால், அதை இந்திய சூழலுக்கு ஏற்ற கற்பனையுடன்; தமிழ் செறிந்த வரிகளுடன் கூடிய பாடலால் காட்சிப்படுத்தி இருப்பதை - வேற்று நாட்டு/மொழி திரைப்படங்களில் பார்க்க முடியாது. அதுதான், இங்கே முக்கியம்; அதுதான் இங்கே அசல். எனவே, அந்த காட்சிகளை பார்த்து மகிழுங்கள்.
  • போர்க்கால நிகழ்வுகள் மற்றும் போர் தந்திரங்கள்: முதலில் குறிப்பிட்ட தமிழ் மொழியைக் கையாண்டிருப்பது போல், போர்க்கால நிகழ்வுகள் மற்றும் போர் தந்திரங்கள் குறித்த காட்சிகள், குறிப்பாய் இன்றைய தலைமுறையினருக்கு - மிகப்பெரிய வரப்பிரசாதம்! நம் தேசத்தை ஆண்ட மன்னர்களின் சிறப்பைக் குறித்து, பிரம்மிப்பாய் உணர வழிவகுப்பவை.
  • வசனங்கள்: மதன் கார்க்கியின் வசனங்கள் மிகவும் அபாரம்! வசனங்கள் ஆழ்ந்த உயிர்ப்பைப் பெற்று; நம்மைக் கவர்வதற்கு கூடுதல் காரணம் - பின்னணி இசையும், அதை நடிகர்கள் உடல் மொழியோடு சொல்லும் விதமும். உதாரணங்கள்: 1. "நீ கூறிய சொல்லால், கூரிய வாளால்" - இந்த வசனத்தை படிக்கும்போதோ, வேறெவரும் சொல்லும் போதோ - அதன் பிரம்மிப்பை உணரமுடியாமல் போகலாம்! காட்சிகளாய் பார்க்கும்போது, நிச்சயமாய் புரியும். 2. நாசர் "சிவகாமியை, சவ-காமி" என்று சொல்லும் தமிழும்/அழகும்! இப்படி பட்டியலிட, நிறைய வசனங்கள் உண்டு! பாடல் வரிகள் - பின்னணி இசையோடு, நெஞ்சை வருடவும்; காமநஞ்சாய் இன்பத்தாக்குதல் நடத்தவும் செய்கின்றன.
  • என்னுடைய ஆவல்: படத்தின் வசனங்களும்/பாடல் வரிகளும் - என்னுடைய எழுத்துகளும், ஓர்நாள் இதுபோல் கேட்கப்பட வேண்டும் என்ற உத்வேகத்தை எழுப்பின! சாத்தியமா? தெரியவில்லை; நிகழ்ந்தால் மகிழ்ச்சியே!! வசனங்களின் பாதிப்பு என்னவென்பதை, இதைப் படிப்போருக்கு கடத்தப்பட வேண்டும்; என்ற முனைப்பில் தான், என் ஆவலை இங்கே தெரிவித்திருக்கிறேன். என்னளவில், இம்மாதிரியான வாய்ப்புகளை, நம் பெருந்தகை குறிப்பிடும் "ஊழ்" வினையாகவே பார்க்கிறேன். ஆம், இம்மாதிரியான வாய்ப்புகள் - ஓர் வரம். "மதன் கார்க்கி" வரம் பெற்றவர்; அவரை மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.
  • அனுஷ்காவின் பாத்திரப் படைப்பு: முதல் பாகத்தில், அனுஷ்கா போன்ற ஒரு திறமை மிக்க நடிகையின் பாத்திரப்படைப்பு மிகவும் சுருக்கமாய் இருந்தது,  பலரையும் போல் எனக்கும் வருத்தமே! ஆனால், திரு. ராஜமெளலி அப்போதே சொல்லிய வண்ணம்; இப்பாகாதில், அனுஷ்காவின் பாத்திரப் படைப்பு சிறப்பு! "மகிழ்மதிக்கு சென்ற பின், அவரின் பாத்திரப் படைப்பு" நீர்த்து இருப்பினும், ஆண்-ஹீரோக்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்திய திரைப்படங்களோடு ஒப்பிடும்போது; இன்னமும் சிறப்பே!
  • ரம்யாகிருஷ்ணனின் பாத்திரப்  படைப்பு: ரம்யாகிருஷ்ணனின் பாத்திரப்  படைப்பு, மிகவும் அருமை! அவரும் திறம்பட நடித்து இருக்கிறார்! இருப்பினும் "நீலாம்பரியின் தாக்கமா என்னவோ?!" அவர் இன்னும் சிறப்பாய் செய்திருக்கலாமே?! என்றோர் ஏக்கம். இது, அவரின் நடிப்பைக் குறை கூறும் முயற்சி இல்லை! மாறாய், மேலும் சிறப்பாய் வெளிப்படுத்தி இருக்கலாமே என்ற ஆவல்.
  • பிரபாஸின் பாத்திரப் படைப்பு: பிரபாஸின் பாத்திரப் படைப்பு பற்றி ஏதும் சொல்லத் தேவையில்லை! அமரேந்திர பாகுபலியோ/மகேந்திர பாகுபலியோ! - அவர் தான் கதையின் மையம்/படத்தின் தலைப்பு. எனவே, அதைப் பற்றி "தனியே சிலாகிக்க" ஏதுமில்லை. சத்யராஜ், நாசர் உட்பட பிறரின் பாத்திரப் படைப்புகளும் மிக அருமை.
*****

  • இந்திய சினிமா: பலரும் "உலக சினிமா" என்ற கனவில் மூழ்கி, சிலாகித்துக் கொண்டிருக்க; ஒருவர் சத்தமில்லாமல் "இந்திய சினிமா" என்ற வரையறையை நிகழ்த்தி இருக்கிறார்! ஆம், தமிழில் வெளியாகி இருப்பதால்; இது தமிழ் சினிமா(வும்) இல்லை! கதையாசிரியரும்/இயக்குனரும் "தெலுங்கு மொழி" பேசுவோர் என்பதால், இது தெலுங்கு சினிமா(வும்) இல்லை! இந்தியாவில் பரவலாய் பேசப்படும் மொழி என்பதால், இது ஹிந்தி சினிமா(வும்) இல்லை! வெளியாகி இருக்கும் மற்ற மொழிகளுக்கும், இதுவே பொருந்தும்! இது முழுக்க/முழுக்க "இந்திய சினிமா!" - ஆம், ஓர் சரித்திரம் எழுதப்பட்டு இருக்கிறது!
  • ஆங்கில மொழியாக்கம்: இது "இந்திய சினிமா" என்பதால், முதன்முதலாய் திரைப்படம் சார்ந்த என் பதிவை; ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க இருக்கிறேன் {மொழிபெயர்ப்பை வெளியிட்டதும், இங்கே இணைப்பைத் தருகிறேன்}. "இப்படியோர் பிரம்மாண்டப் படைப்பு சார்ந்த விமர்சனம், மற்ற மொழி பேசுவோரையும் சேரவேண்டும்!" என்ற தூண்டுகோலே இப்படத்தின் சிறப்புக்கு ஓர் சான்றாகும்.  

*****
  • திரையரங்க அனுபவம்: இன்னும் சில தினங்களில், மீண்டும் ஓர் முறை திரையரங்கில் பார்க்கவிருக்கிறேன். இதைக் குறிப்பிட காரணம், இம்மாதிரியானத் திரைப்படங்களைத், திரையரங்கில் பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தவே! அதிலும், MAX (அல்லது) IMAX வாய்ப்பு இருப்போர், நிச்சயம் அதில் பார்த்து அனுபவியுங்கள். நானும், துபாயில் "தமிழ் வடிவில்" IMAX-இல் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா, என்பதை ஆய்ந்து கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு, ஹிந்தியில் தான் இருக்கிறது {"ஹிந்தி எதிர்ப்பைத் திணித்த" அந்த மொழிவிரோதிகளைச் சபிக்கிறேன். 😊}. எனினும், தமிழில் காண்பதற்கும்/கேட்பதற்கும் இணை ஏது? இல்லையெனில், மீண்டும் MAX-இலாவது பார்க்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். இம்மாதிரியான அனுபவங்களைத் தொடர்ந்து அளித்தால், நிச்சயம் "திருட்டு வி.சி.டி. க்களை வெகுவாய் குறைக்கவாவது செய்யலாம்! இது திரைத்துறையினரை எட்டுமா?!" அதுபோல் "திரையரங்க கட்டணக் கொள்ளையை" குறைக்கும் நடவடிக்கையையும் திரைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்!
                                                                            *****
  • குறைகள்: {படத்தின் ஆரம்பக்காட்சியில், யானை ஒன்று ஓடி வரும் காட்சியின் "வரைகலை (graphics)" மேலும் சிறப்பாகச் செய்யப்பட்டு இருக்கலாம்; அவ்வளவு பட்டவர்த்தனமாய் தெரிவது சரியல்ல! என்பது போன்று...} சில குறைகளைச் சொல்லலாம்! அதைக்கூட "சொல்லில் குற்றமில்லை! {என்று மனமுவந்து பாராட்டி விட்டு} ஆனால், பொருளில் தான் குற்றமிருக்கிறது!!" என்ற நக்கீரர் போல்; கதையில் எந்தக் குற்றமும் இல்லாமல் மிகப் பிரமாண்டமாய் இருப்பதால், இம்மாதிரியான சிறிய விடயங்களில் கோட்டை விட்டிருப்பது நெருடலாய் இருக்கிறது என்ற அளவிலேயே குறிப்பிடத் தோன்றுகிறது.
இது...
 "மகிழ்மதி" சாம்ராஜ்யத்தில் நிகழும் நிகழ்வுகளை 
மகிழ்ந்துணர்ந்து கொண்டாடப்பட வேண்டிய தருணம்! 
மறவாமல் (பிரம்மாண்ட) திரையரங்குகளில் (கண்டு/கொண்டு)ஆடுங்கள்!!

2 கருத்துகள்: