சனி, மார்ச் 04, 2017

அதிகாரம் 058: கண்ணோட்டம் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்

0571.  கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
           உண்மையான் உண்டுஇவ் வுலகு

           விழியப்பன் விளக்கம்: 
பொதுவாழ்வில் ஈடுபடுவோரிடம், வலிமையானப் பேரழகான; மனிதம்  
           இருப்பதால் தான், இவ்வுலகம் உயிர்ப்புடன் இருக்கிறது.
(அது போல்...)
           குடும்பத்தில் இருப்போரிடம், நிலையானப் பேரன்பான; உறவு இருப்பதால் தான், இல்லறம் 
           மலர்ச்சியுடன் தொடர்கிறது.
      
0572.  கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்
           உண்மை நிலக்குப் பொறை

           விழியப்பன் விளக்கம்: 
மனிதமெனும் கருணையத் தழுவி, இயங்குகிறது இவ்வுலக 
           வாழ்வியல்; அந்த கருணை இல்லாமல் இருப்போர், பூமிக்கு தேவையற்ற சுமையாவர்.
(அது போல்...)
           பரம்பரையெனும் உறவைத் தழுவி, அமைகிறது இக்குமுகாய அடிப்படை; அந்த உறவைத் 
           தகர்த்து வாழ்வோர், தலைமுறைக்கு தேவையற்ற இடைவெளியாவர்.
           
0573.  பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
           கண்ணோட்டம் இல்லாத கண்

           விழியப்பன் விளக்கம்: 
பாடலின் பொருளோடு பொருந்தவில்லை எனில், இசையால் என்ன          
           பயன்? கருணையின் அடிப்படையோடு தோன்றவில்லை எனில், கண்ணால் என்ன பயன்?
(அது போல்...)
           ஒழுக்கத்தின் இயல்போடு பயணிக்கவில்லை எனில், சமூகத்தால் என்ன பயன்? அன்பின் 
           அடிப்படையோடு அரவணைக்கவில்லை எனில், பெற்றோரால் என்ன பயன்?

0574.  உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்
           கண்ணோட்டம் இல்லாத கண்

           விழியப்பன் விளக்கம்: 
மனிதமெனும் கருணையை, அடிப்படையான அளவில் கூட 
           வெளிப்படுத்தாத கண்கள்; வெறுமனே முகத்தில் இருப்பதை விட, அவற்றால் என்ன பயன்?
(அது போல்...)
           வாய்மையெனும் நெறியை, ஆபத்தான நிலையில் கூட தூண்டாத மூளை; வெறுமனே 
           தலையில் இருப்பதை விட, அதனால் என்ன பயன்?

0575.  கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்
           புண்என்று உணரப் படும்

           விழியப்பன் விளக்கம்: 
கண்களை அலங்கரிக்கும் உண்மையான அணிகலன், மனிதமெனும் 
           கருணையே! அக்கருணை இல்லையெனில், கண்கள் புண்ணென்றே உணரப்படும்.
(அது போல்...)
           பிள்ளைகளை சான்றோராக்கும் சிறந்த காரணிகள், படைத்தவரெனும் பெற்றோரே! 
           அப்பெற்றோர் இல்லையெனில், பிள்ளைகள் பாதையற்றோராக உணரப்படுவர்.

0576.  மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
           இயைந்துகண் ஓடா தவர்

           விழியப்பன் விளக்கம்: 
கண்ணின் இயல்பை அறிந்து, மனிதமெனும் கருணையக் 
           காட்டாதோர்; மண்ணின் இயல்பை ஒத்து வளராத, மரத்திற்கு இணையாவர்.
(அது போல்...)
           தலைமுறையின் கடைமையை உணர்ந்து, உறவெனும் சந்ததியோடு வாழாதோர்; பிறப்பின் 
           கடமையை உணர்ந்து வளராத, விலங்குக்கு சமமாவர்.

0577.  கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார்
           கண்ணோட்டம் இன்மையும் இல்

           விழியப்பன் விளக்கம்: 
மனிதமெனும் கருணை இல்லாதோர், கண்ணிருந்தும் கண் அற்றவர் 
           ஆவர்! கண்களை உடையோர், கருணையின்றி இருப்பதும் சாத்தியமில்லை!
(அது போல்...)
           மழலையெனும் மகிமை உணராதோர், குழந்தையிருந்தும் குழந்தை அற்றவர் ஆவர்! 
           குழந்தைகள் உடையோர், மழலையறியாது இருத்தலும் அரிதானது!

0578.  கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
           உரிமை உடைத்துஇவ் வுலகு

           விழியப்பன் விளக்கம்: கடமையின்
 குறிக்கோளைச் சிதைக்காமல், மனிதத்தை 
           வெளிப்படுத்தும் திறமை உடையோர்க்கு; இவ்வுலகமே, உரிமை உடையதாக மாறும்.
(அது போல்...)
           குடும்பத்தின் அடிப்படையை அழிக்காமல், உரிமையைப் பரிமாறும் வைராக்கியம் 
           உடையோர்க்கு; இச்சமூகமே, பெருமை சேர்ப்பதாக அமையும்.

0579.  ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
           பொறுத்தாற்றும் பண்பே தலை

           விழியப்பன் விளக்கம்: 
எல்லோரையும் தண்டிக்கும் குணம் உடையவரையும் பொறுத்து; 
           அவர்களை மனிதமுடன் அணுகும் பண்பே உயர்வானது.
(அது போல்...)
           அனைத்தையும் விமர்சிக்கும் தன்மை உடையவரையும் மதித்து; கண்ணியமுடன் 
           பதிலளிக்கும் பழக்கமே சிறந்தது.

0580.  பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
           நாகரிகம் வேண்டு பவர்

           விழியப்பன் விளக்கம்: 
போற்றத்தக்க, கண்ணோட்டம் எனும் நாகரிகம் வேண்டுவோர்; 
           தரப்படும் உணவில் நஞ்சு இடப்படுவதை அறிந்தும், அதை உண்டு உறவைத் தொடர்வர்!
(அது போல்...)
           மதிக்கத்தக்க, நட்பெனும் ஊக்கத்தை விரும்புவோர்; சொல்லும் சொல்லில் வஞ்சகம் 
           இருப்பதை உணர்ந்தும், அதைக் கேட்டு நட்பைத் தொடர்வர்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக