வெள்ளி, மார்ச் 24, 2017

அதிகாரம் 060: ஊக்கமுடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை

0591.  உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
           உடையது உடையரோ மற்று

           விழியப்பன் விளக்கம்: ஊக்கமெனும் ஒழுக்கம் உடையவரே, உடையவர் ஆவர்;
           ஒழுக்கத்தைத் தவிர்த்து, மற்றவைகளைக் கொண்டிருப்போர் - உடையவர் ஆவரோ?
(அது போல்...)
           மனிதமெனும் அடிப்படை அறிந்தோரே, சான்றோர் ஆவர்; மனிதத்தை நீக்கி, பிறவற்றை
           அறிந்தோர் - மனிதர் ஆவரோ?
      
0592.  உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
           நில்லாது நீங்கி விடும்

           விழியப்பன் விளக்கம்: ஊக்கமுடைய உள்ளத்தைக் கொள்வதே, நிலையான
           உடைமையாகும்; மதிப்பற்ற பொருளைக் கொள்வது, நிலைத்து இருக்காமல் அழிந்து
           விடும்.
(அது போல்...)
           உயிர்ப்புள்ள அன்பைப் பரிமாறுவதே, உண்மையான உறவாகும்; பணத்தை விரும்பும்
           உறவுகள், உண்மையாய் இல்லாமல் அறுந்து விடும்.
           
0593.  ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
           ஒருவந்தம் கைத்துஉடை யார்

           விழியப்பன் விளக்கம்: ஊக்கத்தை, வைராக்கியமுடன் கடைப்பிடிக்கும் முனைப்புடையோர்;
           "சம்பாதித்ததை இழந்தோம்" என்றெண்ணி தளர்வடைய மாட்டார்கள்.
(அது போல்...)
           குடும்பத்திற்காக, உறுதியுடன் உழைக்கும் இயல்புடையோர்; "சந்தோசத்தை இழந்தோம்"
           என்றெண்ணி துன்பமடைய மாட்டார்கள்.

0594.  ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
           ஊக்கம் உடையான் உழை

           விழியப்பன் விளக்கம்: தளர்வில்லாத ஊக்கம் உடையவரைச் சேர்ந்திட; அவர்களின்
           இருப்பிடத்தை அறிந்து, புகழ்/பொருள் போன்ற வளர்ச்சிகள் தாமே செல்லும்.
(அது போல்...)
           குறைவில்லாத மனிதம் கொண்டோரை அடைய; அவர்களின் சிறப்பை உணர்ந்து,
           கருணை/அறம் போன்ற குணங்கள் தாமே செல்லும்.

0595.  வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
           உள்ளத்து அனையது உயர்வு

           விழியப்பன் விளக்கம்: நீரின் ஓட்டத்திற்கு ஒப்ப, பூக்கள் வளர்ச்சி அடைவதுபோல்;
           மக்களின் ஊக்கத்திற்கு ஒப்ப, புகழ்/பொருள் போன்றவை வளர்ச்சி அடையும்.
(அது போல்...)
           சிந்தனையின் தெளிவிற்கு இணையாக, செயல்கள் அறத்தைத் தழுவுவதுபோல்;
           குடும்பத்தின் ஒழுக்கத்திற்கு இணையாக, மனிதம்/நேர்மை போன்ற அறங்கள் பெருகும்.

0596.  உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
           தள்ளினும் தள்ளாமை நீர்த்து

           விழியப்பன் விளக்கம்: சிந்திப்பது அனைத்தும், உயர்ந்த சிந்தனைகளாய் இருக்கவேண்டும்;
           அந்த சிந்தனைகள் முறிந்தாலும், ஊக்கத்தை முறிக்காத வைராக்கியம் வேண்டும்.
(அது போல்...)
           உறவுகள் அனைத்தும், ஒழுக்கமான உறவுகளாய் இருக்கவேண்டும்; அந்த உறவுகள்
           தவறானாலும், ஒழுக்கத்தைத் தளர்த்தாத முனைப்பு வேண்டும்.

0597.  சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
           பட்டுப்பாடு ஊன்றும் களிறு

           விழியப்பன் விளக்கம்: அம்புகளால் துளைத்தாலும், தன் பெருமையை நிலைநாட்டும்
           யானையைப் போல்; தோல்விகள் நேர்ந்தாலும், ஊக்கமுடையோர் தம் இயல்பை தளர்த்த
           மாட்டார்கள்.
(அது போல்...)
           ஆழ்துளைகளால் சிதைத்தாலும், தன் பொறுமையைப்  பேணிக்காக்கும் பூமியைப் போல்;
           கடன்கள் பெருகினாலும், அன்புடையோர் தம் குடும்பத்தைப் பிரிய மாட்டார்கள்.

0598.  உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
           வள்ளியம் என்னும் செருக்கு

           விழியப்பன் விளக்கம்: கொடை அளிக்கும் ஊக்கம் இல்லாதவர், புவியுலக வாழ்வில்;
           வள்ளல் எனும் உயர்ந்த நிலையை, அடைவது சாத்தியமில்லை.
(அது போல்...)
           பொதுநலம் காக்கும் முனைப்பு இல்லாதோர், அரசியல் வாழ்வில்; கர்மவீரர் எனும் சிறந்த 
           பெருமையை, அடைவது அரிதானது.

0599.  பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
           வெரூஉம் புலிதாக் குறின்

           விழியப்பன் விளக்கம்: புலியின் தாக்குதலுக்கு - பேருடம்புடன் கூர்மையான தந்தங்கள் 
           இருந்தும், யானை அஞ்சுவது போல்; ஊக்கமுடைமை, எவ்வித தடைகளையும் தகர்க்கும்.
(அது போல்...)
           அஹிம்சையின் சக்திக்கு - பீரங்கியுடன் சக்திவாய்ந்த அணுகுண்டுகள் இருந்தும், எதிரி 
           அடிபணிவது போல்; அன்புடைமை, எவ்வித உறவுகளையும் சமாளிக்கும்.

0600.  உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃது இல்லார்
           மரம்மக்கள் ஆதலே வேறு

           விழியப்பன் விளக்கம்: ஊக்கம் உடைமையே, ஒருவருக்கு அறிவாகும்! அவ்வூக்கம்
           இல்லாதோர் மரங்களே; உருவத்தால், மக்களாய் இருப்பதே வேறுபாடு!
(அது போல்...)
           வாய்மையோடு இருப்பதே, உறவுக்கு அடிப்படையாகும்! அவ்வாய்மை இல்லாதவை
           பகையே; ஊருக்காக, உறவுகளாய் இருப்பதே வித்தியாசம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக