வெள்ளி, ஆகஸ்ட் 11, 2017

அதிகாரம் 074: நாடு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு

0731.  தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
           செல்வரும் சேர்வது நாடு

           விழியப்பன் விளக்கம்: உற்பத்தியை நிறுத்தாத விவசாயிகள்/அறத்தை மறக்காத சான்றோர்
           /எதற்கும் தாழ்ச்சியடையாத செல்வந்தர் - இவர்கள் சேர்ந்ததே நாடாகும்.
(அது போல்...)
           அறத்தை மீறாத பெற்றோர்/நீதியைச் சிதைக்காத ஆட்சியர்/எதிலும் குறைவில்லாத
           முன்னோர் - இவர்களை உள்ளடக்கியதே சமுதாயமாகும்.
      
0732.  பெரும்பொருளால் பெட்டக்க தாகி அரும்கேட்டால்
           ஆற்ற விளைவது நாடு

           விழியப்பன் விளக்கம்: அளவுகடந்த பொருள் வளத்தால், எல்லோரின் விருப்பத்திற்கும்
           உள்ளாகி; எவ்வித கேடுகளும் இல்லாமல், அளவற்ற விளைச்சலைக் கொண்டிருப்பதே
           நாடாகும்.
(அது போல்...)
           குறையற்ற சமுதாயப் பயனால், அனைவரின் ஆதரவையும் பெற்று; இயற்கைக்கு பாதகம்
           ஏதுமின்றி, எண்ணற்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதே வளர்ச்சியாகும்.
           
0733.  பொறையொருங்கு மேல்வரும்கால் தாங்கி இறைவற்கு
           இறையொருங்கு நேர்வது நாடு

           விழியப்பன் விளக்கம்: பல்வகை சுமைகள் ஒருங்கிணைந்து, தம்மேல் சுமத்தப்படும் போது;
           அவற்றைத் தாங்கி அரசாள்பவரோடு ஒருங்கிணைந்து, அரசுக்குத் துணை நிற்பதே
           நாடாகும்.
(அது போல்...)
           பல்வேறு குழப்பங்கள் ஒருசேர, தம்முள் அழுத்தும் போது; அவற்றைக் களைந்து
           உறவுகளோடு ஒன்றுசேர்ந்து, இன்பத்திற்கு வழி வகுப்பதே இல்லறமாகும்.

0734.  உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
           சேராது இயல்வது நாடு

           விழியப்பன் விளக்கம்: அதீத பசி/தீராத நோய்/அண்டை நாட்டுப் பகை - இவை மூன்றும்;
           தன்னைச் சேராது, காக்க முயல்வதே நாடாகும்.
(அது போல்...)
           அதீத மோகம்/குறையாத மனவுளைச்சல்/உறவை வஞ்சிக்கும் தீக்குணம் - இவை மூன்றும்;
           தனக்கு இல்லாமல், வாழ முயற்சிப்பதே ஒழுக்கமாகும்.

0735.  பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
           கொல்குறும்பும் இல்லது நாடு

           விழியப்பன் விளக்கம்: பல்வகைப் பிரிவினைகள்/பொதுநலத்தைப் பாழாக்கும் உட்பகை/
           அரசை அலைக்கழிக்கும் துணை அரசாங்கம் - இவையேதும் இல்லாதிருப்பதே நாடாகும்.
(அது போல்...)
           பல்வேறு விரிசல்கள்/இல்லறத்தைப் பாதிக்கும் தனிப்பகை/சுற்றத்தை அழிக்கும் குடும்ப
           உறவுகள் - இவையாவும் இல்லாததே வம்சமாகும்.

0736.  கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
           நாடுஎன்ப நாட்டின் தலை

           விழியப்பன் விளக்கம்: பகைவர்களால் அழிவைச் சந்திக்காமல், அழிவேதும் நிகழ்ந்தாலும்;
           எவ்வித வளத்திலும் குறையாத நாடே, எல்லா நாடுகளிலும் தலையானது எனப்படும்.
(அது போல்...)
           உணர்வுகளால் பாதிப்புக்கு உள்ளாகாமல், பாதிப்பேதும் அடைந்தாலும்; எவ்வித
           உணர்ச்சியாலும் வெளிப்படுத்தாத மனிதரே, எல்லா மனிதரிலும் புனிதர் எனப்படுவர்.

0737.  இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
           வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

           விழியப்பன் விளக்கம்: நிலத்தடி-நீர் மற்றும் நிலப்பரப்பு-நீர்/நீண்டு உயர்ந்த
           மலைத்தொடர்கள்/மலையிலிருந்து வழியும் நீர்/வலிமையான கோட்டை - இவையாவும், ஓர்
           நாட்டின் முக்கியமான உறுப்புகளாகும்.
(அது போல்...)
           அனுபவ-அறிவு மற்றும் கேள்வி-அறிவு/ஆழ்ந்து உணர்ந்த அறநெறிகள்/அறநெறியிலிருந்து
           கிடைக்கும் அறிவு/உறுதியான சுயவொழுக்கம் - இவையாவும், ஓர் மனிதனின் உயர்வான
           அம்சங்களாகும்.

0738.  பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
           அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து

           விழியப்பன் விளக்கம்: உயிரழிக்கும் நோய் இல்லாமை/பல்வகைச் செல்வங்கள்/குறையாத
           விளைச்சல்/இயல்பான இன்பம்/வலிமையான காவல் - இவை ஐந்தும், நாட்டை
           அலங்கரிக்கும் அணிகலன்கள் ஆகும்.
(அது போல்...)
           உணர்வழிக்கும் மூர்க்கம் இல்லாமை/பல்வேறு நற்குணங்கள்/பரஸ்பர புரிதல்/புனிதமான
           உறவு/உண்மையான ஒழுக்கம் - இவை ஐந்தும், வாழ்வை சிறப்பிக்கும் காரணிகள் ஆகும்.

0739.  நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
           நாட வளந்தரும் நாடு

           விழியப்பன் விளக்கம்: பெரு முயற்சியால், செயற்கையான வளங்களைப் பெறும் நாடு
           உயர்ந்தது அல்ல! பெரு முயற்சியின்றி, இயற்கையான வளங்களைப் பெற்றிருக்கும் நாடே
           உயர்ந்தது ஆகும்!
(அது போல்...)
           உணர்ச்சி வயப்பட்டு, பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் கட்சி சிறந்தது அல்ல!
           உணர்ச்சி வயப்படாமல், உண்மையான வாக்குறுதிகளை அளிக்கும் கட்சியே சிறந்தது
           ஆகும்!

0740.  ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
           வேந்தமைவு இல்லாத நாடு

           விழியப்பன் விளக்கம்: ஓர் நாட்டிற்கு, மக்களாட்சியை உணராத அரசு வாய்ப்பின்; நாட்டின்
           இலக்கணத்திற்கான எல்லாக் காரணிகள் இருப்பினும், அவற்றால் எவ்விதப் பயனும்
           இல்லை.
(அது போல்...)
           ஓர் மனிதனுக்கு, மனசாட்சியை மதிக்காத மனது இருப்பின்; மனித அடிப்படைக்கான
           அனைத்துத் தகுதிகள் இருப்பினும், அவற்றால் எந்தப் பலனும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக