திங்கள், ஆகஸ்ட் 21, 2017

அதிகாரம் 075: அரண் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்

0741.  ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்
           போற்று பவர்க்கும் பொருள்

           விழியப்பன் விளக்கம்: போர்களை வென்று மக்கள் பணியாற்றுவோர்க்கு, அரண்
           முக்கியமானது; போருக்குப் பயந்துத் தம்மைக் காக்க முயல்வோர்க்கும், அரணே
           முக்கியமானதாகும்.
(அது போல்...)
           அறத்தைப் பழகி நற்செயல் புரிவோர்க்கு, மனசாட்சி புனிதமானது; அறத்துக்குப் புறம்பாகித்
           தம்மைச் சிதைத்துக் கொள்வோர்க்கும், மனசாட்சியே புனிதமானது.
      
0742.  மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
           காடும் உடையது அரண்

           விழியப்பன் விளக்கம்: தெளிந்த நீர்பரப்பும்/புதர்களற்ற அகன்ற நிலமும்/உயர்ந்த
           மலைத்தொடரும்/படர்ந்த நிழலுடைய அடர்ந்த காடும் - கொண்டிருப்பதே, இயற்கையான
           அரண்களாகும்.
(அது போல்...)
           மலர்ந்த புன்சிரிப்பும்/வஞ்சமற்ற பரந்த நட்பும்/சிறந்த அறத்தழுவலும்/பரஸ்பர புரிதலுடைய
           ஆழ்ந்த அன்பும் - இருப்பதே, அடிப்படையான குணங்களாகும்.
           
0743.  உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
           அமைவுஅரண் என்றுரைக்கும் நூல்

           விழியப்பன் விளக்கம்: ஏற முடியாத உயரம்/ஊடுருவ முடியாத அகலம்/தகர்க்க முடியாத
           உறுதி/கணிக்க முடியாத அமைப்பு - இந்நான்கும் அமையப் பெற்றதே, அரண் என்று
           மறைநூல் உரைக்கும்.
(அது போல்...)
           மறுக்க முடியாத அன்பு/பிரிக்க முடியாத பிணைப்பு/அழிக்க முடியாத நம்பிக்கை/சிதைக்க
           முடியாத குடும்பம் - இந்நான்கும் கிடைக்கப் பெற்றதே, வம்சம் என சமுதாயம் போற்றும்.

0744.  சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை
           ஊக்கம் அழிப்பது அரண்

           விழியப்பன் விளக்கம்: காவல் வீரர்கள் நிற்குமிடம் சிறியதாகி, மற்றவிடங்கள் அகன்று
           பரந்தாதாகி; போரிட வரும் பகைவர்களின், வலிமையை அழிப்பதே அரணாகும்.
(அது போல்...)
           மாவட்ட நிர்வாகிகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, பொதுமக்களின் உரிமையை
           அதிகமாக்கி; ஊழல் செய்யும் கயவர்களின், ஆதிக்கத்தை அழிப்பதே கட்சியாகும்.

0745.  கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்
           நிலைக்கெளிதாம் நீரது அரண்

           விழியப்பன் விளக்கம்: பகைவரால் கைப்பற்ற இயலாததாய், எல்லோர்க்கும் உணவை
           அளிப்பதாகி; உள்ளிருக்கும் வீரர்கள் எளிதாய் போரிடும் வாய்ப்பை, அளிக்க வல்லதே
           அரணாகும்.
(அது போல்...)
           பிறரால் குறைகாண முடியாததாய், அனைத்து வளங்களையும் காப்பதாகி; குடியிருக்கும்
           மக்கள் எளிதாய் வாழும் வழியை, வழங்க வல்லதே அரசாகும்.

0746.  எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
           நல்லாள் உடையது அரண்

           விழியப்பன் விளக்கம்: உள்ளிருக்கும் யாவர்க்கும், தேவையான அனைத்தும் கொண்டு;
           பகைவர்கள் தாக்கும்போது அவர்களை அழித்து உதவும், வலிமையான வீரர்களை
           உடையதே அரணாகும்.
(அது போல்...)
           இளைஞர்கள் அனைவருக்கும், தகுதியான வேலையைக் கொடுத்து; பொருளாதார
           நெருக்கடியில் அனைத்தையும் சமாளித்து வெல்லும், திறமையான அலுவர்களைக்
           கொண்டதே அரசாகும்.

0747.  முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
           பற்றற்கு அரியது அரண்

           விழியப்பன் விளக்கம்: படைகளை அழித்து முற்றுகை இட்டோ, முற்றுகை இடாமல்
           நெருங்கியோ அல்லது உள்ளிருப்போரை வஞ்சனையால் வீழித்தியோ; கைப்பற்றுவதற்கு  
           இயலாததே அரணாகும்.
(அது போல்...)
           விதிகளைத் தளர்த்தி சூழ்ச்சி செய்தோ, சூழ்ச்சி செய்யாமல் திட்டமிட்டோ அல்லது
           உரிமையாளரை அச்சத்தால் பணித்தோ; அபகரித்தலைச் செய்யாததே அறமாகும்.

0748.  முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
           பற்றியார் வெல்வது அரண்

           விழியப்பன் விளக்கம்: முற்றுகையில் திறமடைந்து, பல முற்றுகைகளைச் செய்தவரையும்;    
           பற்றுவதில் திறமடைந்த உள்ளிருக்கும் வீரர்கள் பற்றியதை, வெல்லச் செய்வதே
           அரணாகும்.
(அது போல்...)
           பிரிவினைகளில் கைதேர்ந்து, பல பிரிவினைகளைச் செய்தவரையும்; அன்புடைமையில்
           கைதேர்ந்த குடும்பத்திலிருக்கும் அன்பர்கள் போற்றிட, விலக்கச் செய்வதே உறவாகும்.

0749.  முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
           வீறெய்தி மாண்டது அரண்

           விழியப்பன் விளக்கம்: போர்முனையில் இருக்கும் போது, பகைவர்களைச் சாய்க்கும்
           வண்ணம்; செயலாற்ற வேண்டிய போது, உள்ளிருக்கும் வீரர்களை வீறுகொளச் செய்வதே
           அரணாகும்.
(அது போல்...)
           பொருளாதாரச் சிக்கலின் போது, ஆடம்பரத்தைக் குறைக்கும் வண்ணம்; தேவையான
           தருணத்தின் போது, குடும்பத்து உறுப்பினர்களைப் பொறுப்புணர வைப்பதே
           தலைமையாகும்.

0750.  எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
           இல்லார்கண் இல்லது அரண்

           விழியப்பன் விளக்கம்: எவ்வகை மகிமையை உடையது ஆயினும்; போரை வெல்லும்
           மகிமையற்ற வீரர்களைக், கொண்டிராமல் இருப்பதே அரணாகும்.
(அது போல்...)
           எவ்வித முனைப்பை உடையது எனினும்; ஊழலை ஒழிக்கும் முனைப்பற்ற நிர்வாகிகளைக்,
           கொண்டிராமல் இருப்பதே கட்சியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக