செவ்வாய், ஜூன் 07, 2016

அதிகாரம் 031: வெகுளாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 031 - வெகுளாமை

0301.  செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
           காக்கின்என் காவாக்கா லென்

           விழியப்பன் விளக்கம்: அதிகாரம் உள்ள இடத்தில் சினத்தைக் காப்போரே, சினங்காப்பவர் 
           ஆவர்;  அதிகாரம் இல்லாத இடத்தில், சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் 
           என்ன??
(அது போல்...)
           பசியால் துடிக்கும் உயிர்கட்கு உணவை அளிப்பதே, அன்னதானம் ஆகும்; பசி இல்லாத
           உயிர்கட்கு, உணவை அளித்தால் என்ன? அளிக்காவிட்டால் என்ன??

0302.  செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் 
           இல்அதனின் தீய பிற

           விழியப்பன் விளக்கம்: அதிகாரமற்ற இடத்தில் வெளிப்படும் சினம், தீமையானது; 
           அதிகாரமுள்ள இடத்தில் வெளிப்பட்டாலும், சினத்தை விட தீயது வேறேதுமில்லை.
(அது போல்...)
           நியாயமற்ற விதத்தில் நடக்கும் அடக்குமுறை, அழிவானது; நியாயமான விதத்தில் 
           நடந்தாலும்,  அடக்குமுறையை விட அழிவானது வேறில்லை.
           
0303.  மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
           பிறத்தல் அதனான் வரும்

           விழியப்பன் விளக்கம்: சினம் கொள்வதால், தீய பின்விளைவுகள் விளையும் என்பதால்; 
           எவரிடத்திலும் சினம் கொள்ளாமல், மறப்பது சிறந்ததாகும்.
(அது போல்...)
           கடன் பெறுவதால், அதீத மனவழுத்தம் உருவாகும் என்பதால்; எதற்காகவும் கடன் 
           பெறாமல், வாழ்வது உயர்ந்ததாகும்.

0304.  நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
           பகையும் உளவோ பிற

           விழியப்பன் விளக்கம்: முகத்தில் புன்னகையையும், அகத்தில் மனநிறைவையும் அழிக்கும் - 
           சினத்தை விட; கடுமையான பகை வேறெதுவும் உண்டோ?
(அது போல்...)
           எண்ணத்தில் பிரிவினையையும், செயலில் சூழ்ச்சியையும் விதைக்கும் - இனவெறியை
           விட; அதீத தீவிரவாதம் வேறெதுவும் உள்ளதோ?

0305.  தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 
           தன்னையே கொல்லுஞ் சினம்

           விழியப்பன் விளக்கம்: நம்மையே நாம் காத்திட விரும்பினால், சினத்தைக் காக்க 
           வேண்டும்; அப்படி காக்காவிட்டால், அந்த சினமே நம்மை அழித்துவிடும்.
(அது போல்...)
           நம்மையே நாம் மதித்திட எண்ணினால், அந்தரங்கத்தை ஒழிக்க வேண்டும்; அப்படி 
           ஒழிக்கவிட்டால், அந்த அந்தரங்கமே நம்-மதிப்பை சிதைக்கும்.

0306.  சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
           ஏமப் புணையைச் சுடும்

           விழியப்பன் விளக்கம்: நெருப்பைப் போன்று, சேர்ந்தவரை அழிக்கும் சினமானது; நம்மை 
           மட்டுமன்றி, நம் நலம் விரும்பும் சுற்றத்தையும் அழிக்கும்.
(அது போல்...)
           போதையைப் போன்று, பழகியவரைச் சிதைக்கும் கள்ள-உறவானது; உடலை மட்டுமன்றி, 
           நம் சுயம் காக்கும் மனதையும் சிதைக்கும்.

0307.  சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
           நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

           விழியப்பன் விளக்கம்: சினத்தைப் பொருட்டாய் எண்ணி, அதைக் கையாள்பவரின் அழிவு; 
           நிலத்தை அறைந்தவரின் கைவலியைப் போன்று, தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
(அது போல்...)
           பணத்தை உயர்வாய் எண்ணி, அதைத் தொடர்பவரின் வீழ்ச்சி, உறவைப் பிரித்தவரின் 
           மனவலியைப் போன்று, தடுக்கமுடியாத ஒன்றாகும்.

0308.  இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் 
           புணரின் வெகுளாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: அதீத சக்திகொண்ட நெருப்பில் தள்ளியது போன்ற, தீமையைச் 
           செய்தவர் மேலும்; சினம்கொள்ளாமல் இருக்கமுடிந்தால் நன்மையே.
(அது போல்...)
           கூரிய நஞ்சுகலந்த ஈட்டியால் குத்தியது போன்ற, மனவலியைக் கொடுத்தவர் மேலும், 
           பகையின்றி பழகமுடிந்தால் நன்மையே.

0309.  உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
           உள்ளான் வெகுளி எனின்

           விழியப்பன் விளக்கம்: மனதளவிலும், சினம் கொள்ளாமல் இருக்கமுடியும் எனில்; அவர்கள் 
           நினைப்பவை எல்லாம், நினைத்தவுடன் சாத்தியமாகும்.
(அது போல்...)
           நகைச்சுவையிலும், அறம் தவறாமல் எழுதமுடியும் எனில்; அவர்கள் படைப்புகள்
           அனைத்தும், விரைந்து பாராட்டப்படும்.

0310.  இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
           துறந்தார் துறந்தார் துணை

           விழியப்பன் விளக்கம்: சினத்தின் எல்லையைக் கடந்தவர், இறந்தவருக்கு இணையாவர்; 
           சினத்தைத் துறந்தவரோ, தவத்தில் சிறந்த  துறவிகளுக்கு இணையாவர்.
(அது போல்...)
           காமத்தின் வரையறையை மீறுதல், கற்பழிப்புக்கு இணையாகும்; காமத்தைக் கடத்தல், 
           அறம் விதைக்கும் நற்செயலுக்கு இணையாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக