சனி, ஜூன் 04, 2016

நம் தமிழ் படும் பாடு...



     "தமிழ்த் தாய்" என்று ஒரு அரசியல்வாதியை அவரது கட்சிக்காரர்கள் துதிபாடும் போது - எல்லோரையும் போல், ஒரு சாமான்யனாய் நானும் தலைகுனிந்து இருக்கிறேன். அந்த துதிபாடலைத் "தவறென" சுட்டிக்காட்டிய அந்தக் கட்சியின் "எதிர்கட்சிக்காரர்கள்" அவரது தலைவரை(யே) "தமிழ்" என்கின்றனர்! மற்றவர் குறையைச் சரியாய் கண்டறியும் இவர்களால், அவர்களின் குறையைக் கண்டறிய முடியாதது, எப்படி சாத்தியமாகிறது?! அவர் தமிழுக்காக ஆற்றிய அரும்பணியை மறுக்கும் எண்ணம் "துளியும்" எனக்கில்லை! ஆனால், அவரையே தமிழ் என்பது எப்படி முறையாகும்?! தமிழ்ப்பால் குடித்து, தமிழால் வளர்ந்த ஒருவரையே "தமிழ்" என்று சொல்லும்போது - இன்னொருவரை "தமிழ் தாய்" என்றால் ஏன் தவறு என்கின்றனர்? "தாய்" எனும் சொல் "தாய்மை" எனும் உணர்வு வெளிப்படும் எல்லா இடங்களிலும் பொருந்தும். அதனால் தான், ஒரு ஆண் "தாயும் ஆனவன்!" ஆகிறான். இந்த அடிப்படையில் பார்க்கும்போது...

       "தமிழ்" ஆகவே ஒருவர் ஆகும்போது; இன்னொருவர் "தமிழ் தாய்" ஆக ஆவதில் பெருத்த சிரமம் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை; தெரிந்தோர் சொல்லுங்கள்! இவர்கள் இருவருக்கும் - இவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இந்த அதிகாரத்தை எவர் கொடுப்பது? இப்படிச் சொல்பவர்களுக்கு பெருத்த ஆதாயம் இருக்கக்கூடும்! அதனால், அவர்களின் சுயத்தை அழித்துவிட்டு, இப்படிக் கூக்குரல் இடுவது எளிதாகலாம்! ஆனால், இதை ஏற்பவருக்கு சிறிதளவு கூடவா மனசாட்சி இருக்காது? குறிப்பாய், தமிழால் வளர்ந்து, தமிழுக்கு "சின்னஞ்சிறு" தொண்டு ஆற்றிய ஒருவருக்கு?! இவர்களே "தமிழ் தாய்" மற்றும் "தமிழ்" ஆகினால் - பழந்தமிழ் இலக்கியங்களைப் படைத்தவர்கள் எல்லாம் என்ன ஆவார்கள்? அதிலும், உலகப் பொதுமறையையே "நம் தமிழில்" படைத்த நம் பெருந்தகையை, எப்படி அழைப்பது? தமிழை வைத்து இவர்கள் செய்யும் அரசியலைக் கூடப் பொறுக்கலாம். ஆனால்...

இவர்களே - தமிழ் மற்றும் தமிழுக்கு தாய் - என்பதை அறவே அழிக்கவேண்டும்!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக