புதன், டிசம்பர் 14, 2016

அதிகாரம் 050: இடனறிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்

0491.  தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
           இடங்கண்ட பின்அல் லது

           விழியப்பன் விளக்கம்: முழுமையடையச் சாதகமாமான இடத்தை ஆய்ந்தறியாமல், 

           எச்செயலையும் துவங்கக்கூடாது! அதுபோல், எளிதென எண்ணி இகழ்ச்சியாகவும் 
           எண்ணக்கூடாது!
(அது போல்...)
           மக்களாட்சிக்குத் தேவையானக் காரணியை ஆழ்ந்துணராமல், எக்கட்சியையும் 
           ஏற்கக்கூடாது! அதுபோல், சரியென நினைத்து நிராகரிக்கவும் செய்யக்கூடாது!
        
0492.  முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
           ஆக்கம் பலவுந் தரும்

           விழியப்பன் விளக்கம்: கையைச் சேர்த்த, வலிமையான வீரர்களுக்கும்; பாதுகாப்பான 

           இடத்தைச் சேரும் திறன், பல்வகைப் பலன்களை அளிக்கும்.
(அது போல்...)
           வாழ்க்கையை இழந்த, சக்திவாய்ந்த வாக்காளர்களுக்கும்; சரியான நேரத்தில் எதிர்க்கும் 
           யுக்தி, பல்வகை மாற்றங்களை உருவாக்கும்.
           
0493.  ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
           போற்றார்கண் போற்றிச் செயின்

           விழியப்பன் விளக்கம்: தகுதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, தக்க பாதுகாப்புடன் 

           பகைவர்களை எதிர்கொண்டால்; வலிமை இல்லாதவரும், வலிமை கொண்டு வெல்லமுடியும்.
(அது போல்...)
           முறையான தலைமையை ஏற்றுக்கொண்டு, வைராக்கியமான மனதுடன் ஊழலாரை 
           எதிர்த்தால்; அதிகாரம் இல்லாதோரும், அதிகாரம் கொண்டு சாதிக்கமுடியும்.

0494.  எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
           துன்னியார் துன்னிச் செயின்

           விழியப்பன் விளக்கம்: தகுதியுடையோர், சாதகமான இடத்தை அறிந்து, தகுதியானச் 

           செயல்களைச் செய்தால்; அவர்களை அழிக்க எண்ணியோர், தம் எண்ணத்தை மாற்றுவர்.
(அது போல்...)
           நற்குணத்தோர், ஆரோக்கியமான உடம்பை விரும்பி, நன்மையானப் பழக்கங்களைப் 
           பழகினால்; அவருள் இருக்கும் கிருமிகள், தம் செயல்திறனை இழக்கும்.

0495.  நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
           நீங்கின் அதனைப் பிற

           விழியப்பன் விளக்கம்: ஆழமான நீரில் இருப்பின், முதலை எல்லா உயிர்களையும் 

           வெல்லும்; நீரிலிருந்து வெளியே வந்தால், பிற உயிர்கள் முதலையை வெல்லும்.
(அது போல்...)
           அதீதமான ஆடம்பரமுடன் இருப்பின், ஒருவர் அனைத்து உறவுகளையும் அவமதிப்பர்; 
           ஆடம்பரம் அனைத்தையும் இழந்துவிட்டால், மற்ற உறவுகள் அவர்களை அவமதிப்பர்.

0496.  கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
           நாவாயும் ஓடா நிலத்து

           விழியப்பன் விளக்கம்: உறுதியான சக்கரங்களைக் கொண்ட உயர்ந்த தேரால், கடலில் 

           பாய்ந்து செல்லமுடியாது; கடலில் பாய்ந்து செல்லும் கப்பலாலும், நிலத்தில் 
           உருளமுடியாது.
(அது போல்...)
           திடமான உடலைக் கொண்ட மல்யுத்த வீரரால், வளைந்து யோகா செய்யமுடியாது; 
           வளைந்து யோகா செய்வோராலும், மல்யுத்தம் செய்யமுடியாது.

0497.  அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
           எண்ணி இடத்தால் செயின்

           விழியப்பன் விளக்கம்: நிலுவை வைக்காத உறுதியுடன், இடத்தைக் கணித்து 

           செயல்களைச் செய்தால்; அஞ்சாமை எனும் துணையின்றி, வேறு துணையேதும் வேண்டாம்.
(அது போல்...)
           பிரிந்து செல்லாத திடத்துடன், உரிமைகளைப் பகிர்ந்து உறவுகளைப் பேணினால்; பாசம் 
           எனும் பிணைப்பின்றி, வேறு பிணைப்பேதும் வேண்டாம்.

0498.  சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
           ஊக்கம் அழிந்து விடும்

           விழியப்பன் விளக்கம்: சிறிய படையைக் கொண்டோர், திறமையனைத்தும் வெளிப்படும் 

           இடத்தைச் சேர்ந்திடின்; பெரிய படையை உடையவரின், மனத்திடம் சிதைந்து விடும்.
(அது போல்...)
           வறுமையான நிலையில் இருப்போர், அறமனைத்தையும் பின்பற்றும் உறுதியைக் 
           கொண்டால்; அதீத பணபலம் கொண்டோரின், செல்வாக்கு மதிப்பற்று போகும்.

0499.  சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
           உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

           விழியப்பன் விளக்கம்: நன்மையளிக்கும் அரணும், சிறப்பான படைவீரர்களும் இல்லாது 

           இருப்பினும்; சொந்த நிலத்தில் மக்களோடு இணைந்து இருப்போரை, தாக்குதல் எளிதல்ல.
(அது போல்...)
           பரிசளிக்கும் வசதியும், வலுவான வரலாறும் இல்லாமல் இருந்தாலும்; மக்கள் நலனுக்காக 
           உண்மையைத் தொடர்ந்து பயணிப்போரை, தடுத்தல் எளிதல்ல.

0500.  காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
           வேலாள் முகத்த களிறு

           விழியப்பன் விளக்கம்: வேலேந்திய வீரர்களை கண்களில் அச்சமின்றி, தாக்கவல்ல ஆண் 

           யானையை; சேற்றில் கால் புதையுண்டு இருக்கும்போது, நரி கூட கொன்றுவிடும்.
(அது போல்...)
           பகையுள்ள உறவுகளை உணர்வுகளில் பேதமின்றி, அரவணைக்கும் திட உள்ளத்தை; 
           சூழலின் பிடியில் சிக்கி இருக்கும்போது, பொய் கூட சிதைத்துவிடும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக