சனி, டிசம்பர் 24, 2016

அதிகாரம் 051: தெரிந்து தெளிதல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 051 - தெரிந்து தெளிதல்

0501.  அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
           திறந்தெரிந்து தேறப் படும்

           விழியப்பன் விளக்கம்: ஒருவரின் - அறவினை/உடைமை/இன்பம்/உயிர்பயம் - இவை
           நான்கின் தரத்தையும் ஆய்ந்தறிந்து, அவரை மதிப்பிடுதல் வேண்டும்.
(அது போல்...)
           ஓருறவின் - அடிப்படை/சாத்தியக்கூறு/தேவை/நிலையாமை - இவை நான்கு
           காரணிகளையும் உணர்ந்தறிந்து, அவ்வுறவில் இணைதல் வேண்டும்.
        
0502.  குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
           நாணுடையான் சுட்டே தெளிவு

           விழியப்பன் விளக்கம்: அறமுணர்ந்த குடும்பத்தில் பிறந்து, குற்றங்களைக் களைந்து;
           பழியளிக்கும் செயல்களுக்கு அஞ்சுவோரைத், தெரிந்து தெளிய வேண்டும்.
(அது போல்...)
           சமமுணர்ந்த கொள்கையில் இணைந்து, ஊழலை எதிர்த்து; அறமழிக்கும் கூட்டணியைத்
           தவிர்ப்போரை, அறிந்து போற்ற வேண்டும்.
           
0503.  அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் 
           இன்மை அரிதே வெளிறு

           விழியப்பன் விளக்கம்: அரிதான விடயங்களையும் கற்று, குற்றங்களைக் களைந்த
           சான்றோரிடமும்; அவர்களைத் தெரிந்து தெளிந்தால், அறியாமை இல்லாமல் இருத்தல்
           சாத்தியமல்ல.
(அது போல்...)
           நிறைவான பழக்கங்களைப் பழகி, தீயவற்றை ஒதுக்கிய உயர்ந்தோரிடமும்; அவர்களை
           நெருங்கிப் பழகினால், சிற்றின்பம் இல்லாமல் இருத்தல் அரிது.

0504.  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
           மிகைநாடி மிக்க கொளல்

           விழியப்பன் விளக்கம்: ஒருவரின் நற்குணங்களையும், குற்றச்செயல்களையும் ஆழ்ந்து 
           ஆராய்ந்து; அவற்றுள் மிகையானது எதுவென்பதை, தெரிந்து தெளிதல் வேண்டும்.
(அது போல்...)
           ஓராட்சியின் பொதுநலத்தையும், சுயநலத்தையும் நடுநிலையோடு அலசி; அவற்றுள் 
           அதீதமானது எதுவென்பதை, பகுத்து அறிதல் வேண்டும்.

0505.  பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
           கருமமே கட்டளைக் கல்

           விழியப்பன் விளக்கம்: ஒருவரின் மேன்மை குணத்திற்கும், சிறுமை குணத்திற்கும்;
           அவர்களின் செயல்களே அடிப்படை என்பதைத், தெரிந்து தெளிவடைதல் வேண்டும்.
(அது போல்...)
           சமுதாயத்தின் உயர்ந்த ஒழுக்கத்திற்கும், தாழ்ந்த ஒழுக்கத்திற்கும்; தனி-நபரின்
           ஒழுக்கமே காரணி என்பதை, உணர்ந்து விமர்சித்தல் வேண்டும்.

0506.  அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
           பற்றிலர் நாணார் பழி

           விழியப்பன் விளக்கம்: அறத்தின் மேல் பயமில்லாதோர் - எவ்வித பற்றும் இல்லாமல்,
           எப்பழிக்கும் அஞ்சமாட்டர் என்பதால்; அவர்களை நம்பித் தெளிதல் கூடாது.
(அது போல்...)
           வாய்மையின் வலிமையை உணராதோர் - எவ்வித பயமும் இல்லாமல், எப்பகைக்கும்
           பின்வாங்கார் என்பதால்; அவர்களை நம்பி எவரையும் பகைத்தலாகாது.

0507.  காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
           பேதைமை எல்லாந் தரும்

           விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவின் சிறப்பை அறியாதவர்களை, அவர்கள் மேலிருக்கும்
           அன்பால்; ஆராயாமல் நம்பித் தெளிதல், எல்லாவகை அறியாமையையும் அளிக்கும்.
(அது போல்...)
           மனிதத்தின் அடிப்படை உணராதோரை, அவர்கள் மேலிருக்கும் ஈர்ப்பால்; புரியாமல்
           தொடர்ந்து செல்லுதல், அனைத்து தீமைகளையும் விளைவிக்கும்.

0508.  தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
           தீரா இடும்பை தரும்

           விழியப்பன் விளக்கம்: ஆராயாமல் - பிறர் சொல்வதை நம்பி, ஒருவரைத் தெளிந்தால்;
           அவருக்கும், அவரைத் தொடர்வோர்க்கும் - தீர்க்க முடியாத துன்பங்களை விளைவிக்கும்.
(அது போல்...)
           சிந்திக்காமல் - புறக் காரணிகளை நம்பி, ஓருறவில் இணைந்தால்; அவருக்கும், அவரின்
           சந்ததிக்கும் - அழிக்க முடியாத ஒழுக்கமின்மைகளை விளைவிக்கும்.

0509.  தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
           தேறுக தேறும் பொருள்

           விழியப்பன் விளக்கம்: ஆராயாமல், எவரையும் தேர்வு செய்யக்கூடாது; அப்படித் தேர்வு
           செய்தபின், அவரைப் பற்றித் தெரியவேண்டிய விடயங்களைத், தெரிந்து தெளிதல்
           வேண்டும்.
(அது போல்...)
           சிந்திக்காமல், முறையற்ற உறவில் இணையக்கூடாது; அப்படி இணைய நேர்ந்தபின்,
           அவ்வுறவைப் பற்றி அலசவேண்டிய விடயங்களை, அலசி முடிவெடுத்தல் வேண்டும்.

0510.  தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
           தீரா இடும்பை தரும்

           விழியப்பன் விளக்கம்: ஆராயாமல் ஒருவரை நம்புவதும்/நம்பியவர் மேல் சந்தேகம் 
           கொள்வதும் - என்றுமழியாத துன்பத்தை விளைவிக்கும்.
(அது போல்...)
           சிந்திக்காமல் தவறான உறவில் இணைவதும்/இணைந்தபின் உறவை அலசி ஆராய்வதும் 
           - தீர்வற்ற சிக்கலை உருவாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக