புதன், மே 03, 2017

அதிகாரம் 064: அமைச்சு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு

0631.  கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
           அருவினையும் ஆண்டது அமைச்சு

           விழியப்பன் விளக்கம்: செய்தற்கரிய செயல்கள் அனைத்திலும் - முக்கிய கருவிகளுடன்,
           சரியான நேரத்தில், நேர்த்தியான செயல்முறையுடன் - ஆள்வதே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
           கிடைக்கற்கரிய உறவுகள் எல்லாவற்றிலும் - பரஸ்பர புரிதலுடன், சரியான விகிதத்தில்,
           முறையான ஒழுக்கத்துடன் - அன்பைப் பரிமாறுவதே வாழ்வியல் ஆகும்.
      
0632.  வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு
           ஐந்துடன் மாண்டது அமைச்சு

           விழியப்பன் விளக்கம்: அச்சமற்ற கண்கள், குடிமக்களைக் காத்தல், அறம் கற்றல்,
           கற்றவற்றை ஆய்ந்தறிதல், வினைகளை முடித்தல் - ஆகிய ஐவகை காரணிகளுடன்
           இருப்பதே அமைச்சரவை ஆகும்.
 (அது போல்...)
           குற்றமற்ற எண்ணங்கள், பிள்ளைகளை வளர்த்தல், பெற்றோரைப் போற்றுதல்,
           போற்றியவரைப் பேணுதல், பாரம்பரியம் காத்தல் - ஆகிய ஐந்து இயல்புகளுடன் வாழ்வதே
           இல்லறம் ஆகும்.
           
0633.  பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
           பொருத்தலும் வல்லது அமைச்சு

           விழியப்பன் விளக்கம்: படைகளைப் பிரித்தாள்வது, பெரியோரைப் பேணித்
           துணைக்கொள்வது மற்றும் பிரிந்து சென்றோரைப் பொருத்தருளி ஏற்பது - இவற்றில்
           சிறந்ததே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
           உரிமைகளைப் பகிர்ந்தளிப்பது, முதியோரிடம் பயின்று கற்றுக்கொள்வது மற்றும் பிரிந்த
           உறவுகளைப் புறங்கூறாமல் இருப்பது - இவற்றில் உயர்ந்ததே இல்லறம் ஆகும்.

0634.  தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
           சொல்லலும் வல்லது அமைச்சு

           விழியப்பன் விளக்கம்: வினைகளை ஆராய்ந்து அறிவது/வினைகளைத் தெளிவுடன்
           செய்வது/ இரட்டைச் சாத்தியங்களை ஒதுக்கி; வினைகளை ஒருமுகமாய் விவரித்தல் -
           இவை அனைத்திலும் சிறந்ததே அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
           விதிகளை அறிந்து ஏற்பது/அறமுடன் விதிகளை மேற்கொள்வது/அதிகார
           முறைகேடுகளைத் தவிர்த்து; விதிகளை சமமாய் பகிர்வது - இவை அனைத்திலும் சிறந்ததே
           சமுதாயம் ஆகும்.

0635.  அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
           திறனறிந்தான் தேர்ச்சித் துணை

           விழியப்பன் விளக்கம்: அறவினைகளை அறிந்து, அறிவார்ந்து பேசும் இயல்போடு;
           எக்காலத்திலும் செயல்திறனும் உடையவரின் பண்புகள் - அமைச்சர்களுக்கு
           துணையாகும்.
(அது போல்...)
           நல்லுறவுகளைக் கொண்டு, அன்பைப் பகிரும் அடிப்படையோடு; எந்நிலையிலும் உறவைக்
           கைவிடாதோரின் இயல்புகள் - சந்ததியர்க்கு சிறப்பாகும்.

0636.  மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
           யாவுள முன்னிற் பவை

           விழியப்பன் விளக்கம்: நூல்களின் மூலம் கற்பதுடன், நுண்ணிய சிந்தனை அறிவையும்
           உடைய அமைச்சர்களை; எதிர்த்து நின்று வீழ்த்தும், நுண்ணிய சூழ்ச்சிகள் எவை
           உள்ளன?
(அது போல்...)
           உறவுகளின் அடிப்படையில் உதவுவதுடன், வலிமையான மனிதமெனும் உணர்வையும்
           கொண்டு உதவிடுவோரை; விலகிச் சென்று அழிக்கும், வலிமையான எதிரிகள் எவர்
           உள்ளனர்?

0637.  செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து
           இயற்கை அறிந்து செயல்

           விழியப்பன் விளக்கம்: நூல்களின் வழியே, செயல்களை செய்யும் செய்முறைகளை
           அறிந்திருப்பினும்; குடிமக்களின் இயல்பை அறிந்து செய்வதே, அமைச்சரவை ஆகும்.
(அது போல்...)
           உறவுகளின் வழியே, இல்லறத்தை நடத்தும் நடைமுறையை அறிந்திருப்பினும்;
           குடும்பத்தாரின் இயல்பை அறிந்து வாழ்வதே, குடும்பம் ஆகும்.

0638.  அறிகொன்று அறியான் எனினும் உறுதி
           உழையிருந்தான் கூறல் கடன்

           விழியப்பன் விளக்கம்: அரசாள்வோர், அமைச்சர்கள் அறிந்தவைகளை அறியமாட்டார்கள்
           எனினும்; அவைகளை உறுதியாய் எடுத்துரைப்பது, அருகிலிருக்கும் அமைச்சரின்
           கடமையாகும்.
(அது போல்...)
           முதியவர்கள், இளைஞர்களின் வேகத்தோடு வரமாட்டார்கள் எனினும்;
           தொழில்நுட்பங்களை பொறுமையாய் கற்பிப்பது, உறவிலிருக்கும் இளைஞர்களின்
           கடமையாகும்.

0639.  பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
           எழுபது கோடி உறும்

           விழியப்பன் விளக்கம்: அறமல்லாத விடயங்களைச் சிந்திக்கும், அமைச்சரவை
           அருகிலிருப்பது; எழுபது கோடி பகைவர்கள், பக்கத்தில் இருப்பதற்கு ஒப்பானதாகும்.
(அது போல்...)
           முறையில்லாத உறவுகளைக் கொண்டிருக்கும், மனிதர்கள் நட்பிலிருப்பது; எழுபது கோடி
           துன்பங்கள், வாழ்க்கையில் இருப்பதற்கு இணையாகும்.

0640.  முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
           திறப்பாடு இலாஅ தவர்

           விழியப்பன் விளக்கம்: செயல்திட்டங்களை, முறையான வகையில் வகுத்திருப்பினும்;
           தேவையான செயல்திறம் இல்லாத அமைச்சர்கள், முழுமையாகாத செயல்களையே
           செய்வர்.
(அது போல்...)
           தொழில்நுட்பங்களை, பயனுள்ள வகையில் உருவாக்கியிருப்பினும்; இயல்பான
           சிந்தனைத்திறன் இல்லாத மனிதர்கள், தர்மமில்லாத வழியிலேயே உபயோகிப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக