வெள்ளி, மே 12, 2017

"மாணாக்கர்களின் தரவரிசையில்" என்ன இருக்கிறது???

 

      மேனிலைப்பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில், முதலிடம் பெற்ற மாணாக்கர்களின் தரவரிசைப் பற்றிய விபரங்களை வெளியிடக் கூடாதென பள்ளிகளுக்கும், ஊடகங்களுக்கும் அரசு ஆணையொன்று வெளியிட்டிருப்பதாய் தெரிகிறது. சில மாணவர்கள், இந்த ஆணை வருத்தம் அளிப்பதாய் ஊடகத்தில் தெரிவிக்கிறார்கள். இந்த ஆணை பெரிதாய் வரவேற்கப் படவேண்டிய ஒன்று. வருடா வருடம் தேர்வு முடிவுகள் வெளிவரும்போது, தரவரிசைப் பட்டியலிட்டு; முதலிடம் பெற்ற மாணவர்களைக் கொண்டாடுவது வழக்கம். முன்பொரு பதிவில், இந்தக் கொண்டாட்டத்தைக் குறிப்பிட்டு; அப்படி வருடா வருடம் முதலிடம் பெற்றவர்களில், எவரேனும் பிற்காலத்தில் சாதித்தது என்னவென்று கேட்டிருந்தேன்! என்னறிவுக்கு எட்டிய வகையில், அப்படி முதலிடம் பெற்றவர்களில் எவரும்; பெரியதாய் சாதித்ததாய் தெரியவில்லை! தெரிந்தவர் எவரும் இருப்பின் தெரிவியுங்கள். "அவர்கள் எதையும் சாதிக்கமாட்டார்கள்!"...

      என்பதல்ல வாதம்; மாறாய், அத்தகையப் பாராட்டுகளும்/கொண்டாட்டமும் அவசியமில்லை என்பதே வாதம்! படிப்பதை முழுவதுமாய் புரிந்து படிக்காமல், வெறுமனே மனனம் செய்யும் இந்த கல்விமுறையே தவறானது! இதில், இம்மாதிரியான ஆர்ப்பாட்டங்கள் தேவையா? இந்த தரவரிசைப் பட்டியல்கள்; தனியார் பள்ளிகள் தங்கள் வணிகத்தைப் பெருக்கவே பெரிதும் பயன்படுகின்றன! முதலிடம் பெறுவதில், அதீத போட்டி நிலவி; மாணவர்களைப் பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாக்குகிறது! அவர்களுடன் சேர்ந்து, அவர்களின் பெற்றோர்களும் மனவுளைச்சலுக்கு ஆளாகி; தத்தம் வாழ்வியலைத் தொலைக்கிறார்கள்! மாணவர்களும்/பெற்றோர்களும் வாழ்வியலையே தொலைத்து; அப்படியோர் போட்டியில் கலந்துகொள்ளதான் வேண்டுமா? இம்மாதிரியான பட்டியல்கள் தேவையற்றது என்பதே உண்மை. இதிலும், சில கட்சிகள் அரசியல் ஆதாரம் தேட முனையலாம்! எதிர்க்கட்சி தலைவர் கூட, இது கல்வித் தரத்தை உயர்த்த உதவிடாது...

    என்று பேட்டி அளித்திருக்கிறார்! கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என்பதில், அவரின் கருத்துக்கு எவருக்கும் மறுப்பில்லை! ஆனால், இப்படியான போட்டி எதுவும் இல்லாமல் படிக்கும்போது; மாணாக்கர்களுக்கு, படிக்கும் பாடத்தில் சந்தேகங்கள் எழும்; சந்தேகங்கள் அவர்களின் புரிதலை அதிகரிக்கும். மொத்தத்தில், மறைமுகமாய்; இது ஓரளவிற்கு கல்வித்தரத்தை உயர்த்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை! அப்படியே இல்லையெனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உளவியளுக்கு உள்ளாகி; உடலளவிலும் பாதிப்படைவதில்லை இருந்து தடுக்கப்படுவது வெகு நிச்சயம்! அதற்காகவாது, எதிர்க்கட்சிகளும் இதுபோன்ற ஆணைக்கு ஆதரவு அளிக்கவேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் ஆதாரத்தைத் தேடுவது முறையானது அல்ல! இனிவரும் காலங்களிலாவது, மாணாக்கர்கள்; அவர்களின் இயல்பான இளமைப்பருவத்தை அனுபவிக்கட்டும். எனவே, அரசின் இந்த ஆணையை அனைவரும் ஏற்கவேண்டும்...

       என்பதே என் விருப்பம். இந்நிகழ்விலும், ஊடகங்கள் வியாபாரப் புத்தியை வெளிப்படுத்துவது வருத்தமளிக்கிறது! ஆம்... மாணவர்களின் தவரிசைப் பட்டியல் கிடைக்காத நிலையில் (அல்லது) அது மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில்; "மாவட்டங்களின் அடிப்படையில்" தரவரிசையை வெளியிட்டு, தங்கள் திறமையை நிரூபிக்க முயல்கிறார்கள். முடிவுகள் வெளிவந்த நேரத்தில் இருந்து தொடர்ந்து ஒளிபரப்புகிறார்கள். சில மாணவர்களின் மதிப்பெண்களை அறிந்து கொண்டு, அவர்களிடம் பேட்டி எடுத்து; அதையும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள். இவர்களை என்ன செய்வது? அதெப்படி சிறிதளவும் ஊடக தர்மமும்/சமுதாயக் கடமையும் இல்லாமல் இவர்களால் செயல்பட முடிகிறது? "சில மாணவர்கள், தரவரிசையை வெளியிடாதது தவறு என்று சொல்கிறார்கள்!"; அதையும், ஊடகங்கள் காண்பிப்பது ஆறுதல். ஆனால், அவர்களின் முனைப்பு மாவட்ட வாரியான தரவரிசையைத் திணிப்பதிலேயே இருக்கிறது.

        மாவட்டங்களின் அடிப்படையில் மட்டுமல்ல...! ஊர்/வட்டம்/பள்ளி/பாலினம்/பயில்வழி - இப்படி எப்பட்டியலும் தேவையில்லை! ஒட்டுமொத்த தமிழகத்தில், எத்தனை விழுக்காடு மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்ற ஒரேயொரு செய்தி மட்டும் போதுமே?! அதையும், சாதாரண செய்தியாய் சொல்லிவிட்டு கடந்துவிடலாம்! மற்றபடி... மாணாக்கர்கள் எடுத்த மதிப்பெண்கள் கூட; அவர்கள் அடுத்து சேரவிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்! இந்த ஆர்ப்பாட்டங்களால் எப்பலனும் இல்லை! முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கும்; அவர்களின் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில்; எவருக்கும் எந்த மறுப்பும் இல்லை! ஆனால், எத்தனை இலட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் - அந்த 10 இலக்கத்தோடு போட்டி போட்டு; மனவுளைச்சலுக்கு ஆளாகி; வாழ்வியலைத் தொலைத்தார்கள்?! என்பதே இங்கு முக்கியம். எனவே, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து...

மாணாக்கர்களையும்; அவர்களின் பெற்றோர்களையும்... 
தத்தம் வாழ்வியலை, இயல்பாய் வாழ்ந்திட வழிவகுப்போம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக