சனி, மே 13, 2017

அதிகாரம் 065: சொல்வன்மை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை

0641.  நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
           யாநலத்து உள்ளதூஉம் அன்று

           விழியப்பன் விளக்கம்: சொற்களை கையாளும் சொல்வன்மை எனும் வளம், ஒருவகை
           உடைமையாகும்; அந்த சொல்வளம், வேறெவ்வகை வளங்களிலும் இருப்பது அல்ல!
(அது போல்...)
           உறவுகளைப் பேணும் விருந்தோம்பல் எனும் ஒழுக்கம், ஒருவகை அறமாகும்; அந்த
           அறவொழுக்கம் வேறெவ்வகை ஒழுக்கங்களிலும் இருப்பது அல்ல!
      
0642.  ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
           காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

           விழியப்பன் விளக்கம்: வளர்ச்சியும்/அழிவும், பேசும் சொற்களில் விளைவதால்;
           உணர்ச்சியால் உந்தப்படாமல், பேசும் சொற்களில் நிதானத்தைக் கடைப்பிடித்துப்
           பழகவேண்டும்.
(அது போல்...)
           உறவும்/பகையும், இருப்பதைப் பகிர்வதில் விளைவதால்; தனதென்ற கர்வமில்லாமல்,
           பகிரும் உடைமைகளில் தர்மத்தை நிலைநாட்டி வாழவேண்டும்.
           
0643.  கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
           வேட்ப மொழிவதாம் சொல்

           விழியப்பன் விளக்கம்: கேட்டவர் மகிழும் வண்ணமும், கேட்காதவர் கேட்க விரும்பும்
           வண்ணமும்; தன்மையுடன் பேசுவதே, சொல்வன்மை எனப்படும்.
(அது போல்...)
           உறவிலிருப்போர் பெருமிதம் கொள்ளவும், இல்லாதோர் உறவில் இணைய விரும்பவும்;
           அன்புடன் உறவாடுவதே, உறவுப்பாலம் ஆகும்.

0644.  திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
           பொருளும் அதனினூஉங்கு இல்

           விழியப்பன் விளக்கம்: பேசும் சொற்களின் திறனறிந்து, சொல்வன்மை கொண்டு
           பேசவேண்டும்; அதனை விட உயரிய, அறமும்/செல்வமும் வேறேதும் இல்லை!
(அது போல்...)
           செய்யும் உதவிகளின் பலனுணர்ந்து, உதவிக்கரம் நீட்டி வாழவேண்டும்; அதை விட சிறந்த,
           நட்பும்/உறவும் வேறொன்றும் இல்லை!

0645.  சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
           வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

           விழியப்பன் விளக்கம்: நாம் சொல்லும் சொல்லை விட, வேறொரு சிறந்த  சொல் இல்லை
           என்பதை உறுதியாய் அறிந்த பின்பே; அச்சொல்லை சொல்ல வேண்டும்.
(அது போல்...)
           நாம் சிந்திக்கும் சிந்தனையை விட, வேறொரு உயர்ந்த சிந்தனை இல்லை என்பதை
           ஆழமாய் உணர்ந்த பின்னரே; அச்சிந்தனையை மேற்கொள்ள வேண்டும்.

0646.  வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
           மாட்சியின் மாசற்றார் கோள்

           விழியப்பன் விளக்கம்: கேட்போர் விரும்பும் வண்ணம் தாம் பேசுவதும், பிறர் பேசும்
           சொற்களிலுள்ள நன்மைகளை ஆராய்வதும் - பகுத்தறிந்த சான்றோர்களின் சிறந்த
           கோட்பாடாகும்.
(அது போல்...)
           மக்கள் ஆதரிக்கும் வண்ணம் தாம் அரசாள்வதும், எதிர்கட்சிகள் செய்யும் செயல்களிலுள்ள
           பொதுநலத்தை வரவேற்பதும் - கர்மமுணர்ந்த தலைவர்களின் உன்னத இயல்பாகும்.

0647.  சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
           இகல்வெல்லல் யார்க்கும் அரிது

           விழியப்பன் விளக்கம்: சொல்வன்மை உடையோர், சோர்வின்றியும்/அச்சமின்றியும்
           இருப்பர்; அவர்களை எதிர்த்து வெல்லுதல், எவர்க்கும் அரிதானது ஆகும்!
(அது போல்...)
           குடும்பத்தைக் காதலிப்போர், சுயநலமின்றியும்/பொறாமையின்றியும் இருப்பர்; அவர்களை
           வெறுத்து ஒதுக்குதல், எவர்க்கும் எளிதானது அன்று!

0648.  விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
           சொல்லுதல் வல்லார்ப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: பணிகளை முறையாய் பட்டியலிட்டு, சொல்வன்மையுடன்
           இனிமையாய் எடுத்துரைக்கும்; திறமையுடைய அமைச்சர்கள் சொல்வதை, இவ்வுலகம்
           உடனடியாய் ஏற்கும்.
(அது போல்...)
           உரிமைகளை முறையாய் வரையறுத்து, அறநெறியுடன் நேர்மையாய் பகிர்ந்தளிக்கும்;
           முனைப்புடைய உறவுகள் சொல்வதை, இச்சமூகம் முழுமையாய் நம்பும்.

0649.  பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
           சிலசொல்லல் தேற்றா தவர்

           விழியப்பன் விளக்கம்: சொல்ல வேண்டியதை, பொருத்தமான சில சொற்களால்;
           தெளிவாகவும்/பிழையில்லாமலும் சொல்லும் திறனில்லாதோர், பல சொற்களால் விளக்க
           விரும்புவர்.
(அது போல்...)
           செய்ய வேண்டியதை, தகுதியான சில ஊழியர்களுடன்; நேர்த்தியாகவும்/ஊழலில்லாமலும்
           செய்யும் வலிமையில்லாதோர், அதிக ஊழியர்களுடன் செய்ய முனைவர்.

0650.  இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது
           உணர விரித்துரையா தார்

           விழியப்பன் விளக்கம்: தாம் கற்றவற்றைப் பிறர்க்குப் புரியும் வண்ணம், விவரித்து
           சொல்லாதோர்; கொத்தாகப் பூத்தும், மணக்காத மலர்களுக்கு ஒப்பாவர்.
(அது போல்...)
           தாம் பெற்றவற்றைப் பிறர்க்கு உதவும் வண்ணம், பகிர்ந்து அளிக்காதோர்; முழுதாய்
           பழுத்தும், இனிக்காத பழங்களுக்கு இணையாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக