செவ்வாய், செப்டம்பர் 01, 2015

அதிகாரம் 003: நீத்தார் பெருமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 01 - பாயிரவியல்;  அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை

0021.  ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
           வேண்டும் பனுவல் துணிவு

           விழியப்பன் விளக்கம்: ஒழுக்கத்திற்காக, ஒழுங்கீனத்தைத் துறந்தவர்களின் பெருமையை;
           சிறப்பிக்கும் வண்ணம் - நூல்களின் பொருளும்/துணிவும் இருக்கவேண்டும்.
(அது போல்...)
           பொதுநலனுக்காக, சிறு-ஊழலையும் மறுத்தோரின் கொள்கையை; வளர்க்கும்
           எண்ணத்தில் - மக்களின் ஆதரவும்/செயல்பாடும் இருக்கவேண்டும்.

0022.  துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
           இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

           விழியப்பன் விளக்கம்: பற்றற்றவர்களின் பெருமையை அளவிட முயல்வது; இவ்வுலகில்,
           இதுவரை இறந்தவர்களைக் கணக்கிட முனைவது போன்றதாகும்.
(அது போல்...)
           குடும்பத்-தலைவரின் தியாகங்களை மதிப்பிட நினைப்பது; விண்ணுலகில், தோன்றும்
           நட்சத்திரங்களை எண்ணிட முனைவது போன்றதாகும்.

0023.  இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் 
           பெருமை பிறங்கிற்று உலகு

           விழியப்பன் விளக்கம்: செயல்களின் இருவகை சாத்தியக்கூறுகளை அறிந்து; இப்பிறவியில்
           அறத்தைப் பின்பற்றுவோரின் பெருமையே இவ்வுலகில் உயர்ந்தது.
(அது போல்...)
           நடந்தவை அனைத்தையும் நடுநிலையோடு விவாதித்து; எந்நிலையிலும் நேர்மையைக்
           கடைப்பிடிப்போரின் நீதியே இவ்வுலகில் சிறந்தது.

0024.  உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
           வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

           விழியப்பன் விளக்கம்: மனவலிமை எனும் அங்குசத்தால் "யானை-போன்ற" ஐம்புலன்களை
           அடக்குபவரே; துறவறமெனும் நிலத்திற்கு உயிர்ப்புள்ள விதையாவர்.
(அது போல்...)
           ஒழுக்கம் எனும் கேடயத்தால் "இமயம்-போன்ற" ஐந்துகுணங்களை காப்பவரே;
           இல்லறமெனும் விவசாயத்திற்கு தரம்வாய்ந்த உரமாவர்

0025.  ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் 
           இந்திரனே சாலுங் கரி

           விழியப்பன் விளக்கம்: ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றலுக்கு; விரிந்த வானத்தில்
           உள்ளவர்களின் மன்னனான, இந்திரனே சான்று.
(அது போல்...)
           ஐந்து-குணங்களை காப்பவரின் மகிழ்ச்சிக்கு; இன்பக்கடலில் மிதக்கும் அக்குடும்பத்
           தலைவனான, தகப்பனே சான்று.

0026.  செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் 
           செயற்கரிய செய்கலா தார்

           விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள் செயற்கரிய செயல்களை செய்வர்; சிறியவர்கள்,
           செயற்கரிய செயல்களை செய்ய முடியாதவராவர்.
(அது போல்...)
           கூட்டுக்குடும்பங்கள் பெருஞ்சிக்கல்களைச் சமாளித்து வெல்லும்; தனிக்குடும்பங்கள்,
           பெருஞ்சிக்கல்களைச் சமாளித்து வெல்லும் திறனற்றவை.

0027.  சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் 
           வகைதெரிவான் கட்டே உலகு

           விழியப்பன் விளக்கம்: சுவை, ஒளி, தொடுதல், ஒலி மற்றும் மணம் - இவை ஐந்தையும்;
           ஆராய்ந்து தெளிந்தருக்கு, இவ்வுலகம் எளிதில் வசப்படும்.
(அது போல்...)
           அன்பு, பண்பு, உறவு, அறம், மற்றும் நட்பு - இவை ஐந்தையும்; ஆழ்ந்துணர்ந்த அன்னைக்கு,
           குடும்பம் முழுதாய் கட்டுப்படும். 

0028.  நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 
           மறைமொழி காட்டி விடும்

           விழியப்பன் விளக்கம்: மொழித்திறன் நிரம்பிய சான்றோர்களின் பெருமையை; இப்பூமியில்
           நிலைத்திருக்கும் அவர்களின் அறம்-சார்ந்த நூல்கள் பிரதிபலிக்கும்.
(அது போல்...)
           வளர்ப்புத்திறன் மிகுந்த பெற்றோர்களின் பெருமையை; இவ்வுலகில் தொடர்ந்திடும்
           அவர்களின்  ஒழுக்கம்-நிறைந்த சந்ததியர்கள் பிரதிபலிப்பர்.

0029.  குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 
           கணமேயும் காத்தல் அரிது

           விழியப்பன் விளக்கம்: குணமெனும் குன்றின் உச்சியில் ஏறி நின்றவரின் கோபம்; ஒரு
           கணம் கூட நிலைத்திருத்தல் அரிதானது.
(அது போல்...)
           மதமெனும் யானையின் கழுத்தில் ஏறி, சம்மணமிட்டு அமர்ந்திருப்பவரின் சாதிய-உணர்வு;
           ஒரு கணம் கூட வெளிப்படுதல் அரிது.

0030.  அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
           செந்தண்மை பூண்டொழுக லான்

           விழியப்பன் விளக்கம்: மற்ற எல்லா உயிர்களிடத்தும், தாய்மை-கலந்த அன்பைக்
           கடைப்பிடித்து; அறவழியில் நடப்போரே, அந்தணர் ஆவர்.
(அது போல்...)
           தன்னைச் சாராத மக்களிடமும், விதியை-மீறாத நேர்மையைக் கடைப்பிடித்து;
           சமத்துவத்தைக் காப்பவரே, சிறந்த தலைவராவர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக