செவ்வாய், செப்டம்பர் 08, 2015

சகோதரிகளை அழகென்னும் அசிங்கம்...     மேலுள்ள படத்தைப் பார்த்ததும்; உங்களில் பலருக்கும் அது என்ன திரைப்படம்/என்ன நகைச்சுவை என்பது புரிந்திருக்கும். இது நகைச்சுவை எனினும், என்னளவில் "ஒலகத்துலயே; சொந்த அக்காவை ஃபிகர்னு சொன்ன ஒரே கேடுகெட்ட தம்பி நீதான்!" எனும் வசனம் தான் பிரதானமாகத் தெரியும். இப்படிப்பட்ட காட்சியை/இந்த வசனத்தை - மிகவும் உணர்வுபூர்மாய்/அழுத்தமான கதைக்களத்தில் கையாளப்பட்டிருக்க வேண்டும். அப்படி சொல்லப்பட்டு இருந்தால்; இந்த வசனம் வெறும்-நகைச்சுவையாய்(மட்டும்) பார்க்கப்பட்டிருக்காது என நினைக்கிறேன். நகைச்சுவையாய் காட்சியிலும் - இப்படியொரு கருத்தை சொல்லப்பட்டு இருப்பது சிறப்பெனினும்; இம்மாதிரியான ஆழமான-கருத்துகள் நகைச்சுவையால் மறைக்கப்பதுவதும் வேதனையான உண்மை! இப்படி கருத்துகள் மறைக்கப்படுவது போல் தான், எவ்வளவு அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தினாலும் என்.எஸ்.கே./கவுண்டமணி/விவேக் போன்ற சிலர் தவிர...

       பெரும்பான்மையில், நகைச்சுவை நடிகர்கள் அதிகம் போற்றப்படுவதில்லை. நகைச்சுவை என்பது சிரிப்பதற்கு மட்டும் என்ற நம் தவறான-புரிதலும் கூடுதல் காரணம். எனவே தான், என்.எஸ்.கே. போன்றவர்கள் அடிக்கடி "இது சிரிக்க மட்டுமல்ல! சிந்திக்கவும் தான்!!" என்பதை வலியுறுத்த வேண்டியதாயிற்று. சரி, இத்தலையங்கத்தின் மையக்கருத்துக்கு வருவோம்; இந்த நகைச்சுவைக் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் "சகோதரிகளை அழகென்னும் அசிங்கம்!!!" பற்றிய சிந்தனைதான் மேலோங்கும். இதுபோன்ற அசிங்கத்தை முக-நூலில் அடிக்கடிப் பார்க்க நேர்கிறது. பல பெண்களின் புகைப்பட-பதிவிற்கு "Very beautiful sister!" என கருத்திடப்படுவதைப் பார்க்க முடிகிறது; பெண்களும் "லைக்"கிவிட்டு; மகிழ்ச்சியுடன்-நன்றியும் தெரிவிக்கிறார்கள். இதில் என்ன தவறு? என்று என்னாலும் எதிர்-வாதிட முடியும்! ஆனால், என்மனதில் உடனே எழும் கேள்வி "என் வீட்டுப் பெண்களின் பதிவுகளில் எவரேனும் அப்படி கருத்திட்டால்...

        எப்படி இருக்கும்?" என்பதே. முதலில், அதுபோன்ற புகைப்படத்தை சமூக-வலைதளத்தில் பதிய அனுமதிப்பதே?! இயலாத விடயம். வெகுநிச்சயமாய் "புகைப்படத்தை வெளியிடுவது ஒரு பெண்ணின் சுதந்திரம்!" என்பதில் எனக்கு(ம்) எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! என்னுடைய பார்வை; அப்படியொரு புகைப்படத்தை ஒரு பெண் வெளியிடலாமா?! வேண்டாமா??!! என்பதல்ல! அப்பதிவுகளுக்கு; மேற்குறிப்பிட்டது-போன்ற பின்னூட்டங்கள் சரியா?! தவறா??!! நம் வீட்டுப் பெண்களை அப்படி அனுகுவோமா? என்பதே! எனவே, அருள்கூர்ந்து இத்தலையங்கத்தின் மையக்கருவை சரியாய் புரிந்து கொள்ளுங்கள்! இல்லையேல், என்-கருத்துகளும் மேற்குறிப்பிட்ட நகைச்சுவைக் காட்சி போல் ஆகிவிடும்! "ஒரு சிலர்; You look very hot sister!!!"என்று கருத்திடுவதைக்-கூடப் பார்க்க முடிகிறது; அது அசிங்கத்தின் உச்சம்! சரி இதற்கு என்ன செய்யலாம்? என்றால்; கண்டிப்பாக, சம்பந்தப்பட்ட பெண் அப்படிப்பட்ட கருத்துகளை...

        நீக்கவேண்டும்! அதை ஒருபோதும் "பாராட்டாய்" ஏற்றுக்கொள்ளக் கூடாது! தீய எண்ணம்  ஏதும் இல்லாத பின்னூட்டங்கள் இருக்கும் என்பதில் எனக்கு(ம்) உடன்பாடுண்டு. மேற்குறிப்பிட்ட "நம் வீட்டுப் பெண்கள்" பற்றிய கேள்வியும் எழுகிறதே?! நான் மிக-நெருங்கிய உறவுகள்/நட்புகள் தவிர; பிறரின் புகைப்படத்திற்கு "லைக்" கூட இடுவதில்லை. "Sister" என்ற சொல்லை நீக்கிவிட்டு; அப்படி கருத்திடுவதில் எந்த மறுப்பும் இல்லை! ஆனால், அப்படி பலரும் செய்யமாட்டார்கள்! அப்படி செய்தால், கண்டிப்பாக பல பெண்கள் உடனே அக்கருத்துகளை நீக்கிடுவர்! உண்மைதானே?! அப்படியெனில், இப்படிப்பட்ட கருத்துகளில் ஒரு போலித்தன்மை இருப்பது மெய்ப்பிக்கப் படுகிறது தானே?! ஏனிந்த போலித்தன்மை? எவருக்காய் இந்த இரட்டை-நிலை? சரி, இதற்கு என்ன செய்யலாம்? என்றால், என்னளவில் கீழ்வருவதே சரியானது: முதலில் "Sister" என்ற வார்த்தையை சேர்த்து அப்படியொரு கருத்திடக் கூடாது. தங்கை என்பதையே ஒரு புதுக்கவிதையில்...

      தனித்து வரையறுத்தவன் நான்!!! சகோதரி-என அழைக்கப்பட்ட ஒருவரின் புகைப்படம் அழகாய் இருக்கிறது என்று தோன்றினால்; என்னை மன்னித்து விடு பெண்ணே! "என் சகோதரி அழகாய் இருக்கிறாள்!" என்று சொல்வதை/பார்ப்பதைக் காட்டிலும் "என் நண்பி அழகாய் இருக்கிறாள்!" என்று சொல்ல/பார்க்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டு; என் கருத்தை இடுவேன்.  அப்படி சொல்லலாமா? மற்றவர்கள் புரளி பேசக்கூடுமே?! கேள்விகள் எழும். அப்படியா? சரி, சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனியாய் சொல்லலாம். மீண்டும்... அப்படி சொல்லலாமா?! அந்த பெண்ணின் மனது காயமடையக் கூடுமே?! வெகுநிச்சயமாய்! ஆனால், நம் மனதில் இருக்கும் அழுக்கை, அந்தப் பெண்ணே தெரிந்துகொள்ளும் போது; ஏற்படும் துயரமும்/ஆற்றாமையும் - இதை விட, பன்மடங்கு பெரிதாய் இருக்கும். அந்தப் பெண் நம், பொது நட்புகளிடம் புலம்புவாளே?! அவர்கள் நம்மை இழிவாகப் பேசுவார்களே?! கேள்விகள் தொடரும்... 

         அதுவும் நிச்சயம்தான்! நம் உறவுகள் கூட அதுபற்றி விவாதித்து பிரச்சனைகள் ஏற்படுமே? ஆம், அதுவும் நிச்சயம் நடந்தேறும்! ஆனால், மனதில் இருக்கும் அழுக்கை விட; அதொன்றும் பெரிய பிரச்சனை இல்லை. மேலும், உண்மையாய் இருப்பது மிகவும் அவசியம்! மிக-மிக அவசியம்!! அப்படி நேரடியாய் சொல்லப்படுவதால்; அந்தப் பெண்ணின் புலம்பலும் சிறிது காலத்திற்கே இருக்கும்! பின், அந்த உறவேக்கூட துண்டிக்கப்படும். அப்படியொரு பொய்த்தன்மை இறுதிவரை இருந்து; ஒருவர் மனதைத் தொடர்ந்து காயப்படுத்துவதோடு மட்டுமல்ல! அந்த உறயையே அது கொச்சையாய் ஆக்கக்கூடும். உண்மை-இல்லாத எந்த உறவும் நீடிப்பது சாத்தியம் இல்லை! நீடிக்கவும் கூடாது!! எப்படிப் பார்ப்பினும், அந்த உறவு நீடிப்பது தவறே! ஒருவேளை, உண்மையைப் பகிர்ந்தும்,  "நட்பெனும் வட்டத்தில்" நீடிக்குமேயானால் - வெகநிச்சயமாக, அந்த உறவு, மிகவும் உன்னதமாய் இருக்கும்! மேற்குறிப்பிட்டது போன்ற கருத்துகளை - நாகரிக-அடையாளம்;

        சிறந்த மேலை-நாட்டு வழக்கம் - என்று நியாயப்படுத்த முயலாதீர்கள்! உடையில் துவங்கி, உணவு வரை; நம் சுயத்தை விட்டு, மேலை நாட்டு மோகத்தில் - அவற்றை பின்பற்றுவது; ஆரம்பத்தில் வேண்டுமானால், பெருத்த சந்தோசத்தைக் கொடுக்கலாம். ஆனால், அது நம் சுயத்தை அழித்துவிடும்! பின், அது பல அழிவுகளுக்கும் வித்திடும். தேவையானவற்றில் மட்டும் மேலை-நாட்டு மோகம் இருக்கட்டும். எந்த நிலையிலும்; வேறொருவரை அண்ணனென அழைக்காத/தன்னையும் எவரும் தங்கை-என "எளிதில்" அழைக்க அனுமதிக்காத பெண்களை நானறிவேன். அவர்களுடன், நான் வாதம்-கூட செய்திருக்கிறேன்; ஆனால், இப்போது யோசிக்கும்போது - அவர்களின் நிலைப்பாட்டில் உள்ள "போலித்தன்மை" குறித்த பயம் புரிகிறது. உண்மையும்/சுயமும் தான் ஒரு மனிதனின் அடிப்படை! அதை மறுத்து/மறைத்து; நாம் செய்யும் எதுவும் பாதகத்தையே விளைவிக்கும். இது என்னுடைய பார்வை மட்டுமே...

மாறாய்; இது - அ"றி"வுரை இல்லை! அ"ற"வுரையும்(கூட) இல்லை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக