வெள்ளி, செப்டம்பர் 11, 2015

மற்றெல்லாம் புறத்த புகழு மில (குறள் எண்: 0039)      குறள் எண்: 0039-இல் வரும் "மற்றெல்லாம் புறத்த புகழு மில" என்ற சொற்றொடரைப் படித்ததும், வழக்கம்போல் - நம் பெருந்தகை என்னுள் ஒரு சிந்தனைச் சுடரை ஏற்றினார். மேற்பார்வையில், இந்த குறள் "அறம் தருவதே இன்பம்; மற்றதெல்லாம் வேறு; புகழ் கூட இல்லை" என்ற பொருள் தரும். அதன் அடிப்படையில்தான் பல விளக்கவுரைகளும் - "மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது" என்பது போன்ற பொருளில் - இருக்கின்றன. என்னுடைய கேள்வி "இன்பம் பற்றி பேசும்போது; எதற்காக, நம் பெருந்தகை, அங்கே புகழை" குறிப்பிடவேண்டும்?!  என்பதே. அறத்தால் வருவது இன்பம் - ஆம், சரிதான்; மற்றவை "புகழ் ஆகாது" என்பது சரியாகும்? இன்பத்தின் எதிர்ப்பதம் "துன்பம்/இன்னல்/இடும்பை/..." போன்றவை தானே? - பின்னெப்படி "புகழ் ஆகாது (அல்லது) புகழ் கூட இல்லை" என்பது சரியாகும்? சிந்தனைகள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தது.

      தொடர்ந்து பயணித்ததில், நம் பெருந்தகை என்ன சொல்ல வருகிறார்?! என்று யூகிக்க முடிந்தது. என்னுடைய புரிதல் பின்வருவதுதான்: "புகழு மில" என்றால் - முதலில், புகழும் இல்லை என்றுதான் பொருள் வரும். தொடர்ந்து யோசித்தால்; மற்றவை, வேறானவை/துன்பமானவை - புகழும் கூட என்று புரியும். மேலும், ஆழ்ந்து யோசித்தால் "அது புகழே ஆனாலும் கூட" என்ற முழுப்பொருள் விளங்கும். சரி, புகழ் எதற்கு வந்தது? புகழ் ஒருவருக்கு "இன்பம்" அளிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! எனவே, அறத்தால் வருவது மட்டுமே "உண்மையான" இன்பம்; மற்றவை எல்லாம் வேறானவை - அவை இன்பங்கள் அல்ல. அது, புகழால் கிடைக்கும் இன்பமே ஆனாலும் கூட! என்பதைத்தான் நம் பெருந்தகை சொல்கிறார். அதனால் தான் என்னுடைய விளக்கவுரையை "அறத்தின் வழியால் கிடைப்பவையே இன்பம்; மற்றவை எல்லாம் துன்பங்களாகும், அது புகழாய் இருப்பினும் கூட" என்று எழுதினேன்.

ஆம், புகழே ஆனாலும் கூட; அது இன்பத்தில் சேராது!!!

பின்குறிப்பு: என் நட்புகள் சில, ஒவ்வொரு நாளும் - ஒரு குறளுக்கு விளக்கவுரை பதிவதற்கு பதில்; வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது நேரம் கிடைக்கும்போதோ "ஒவ்வொரு அதிகாரமாய்" பதியலாம் என்றனர். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை! நம் பொதுமறையில் - மேலும், மூழ்கி எடுக்க பல முத்துக்கள் கிடைக்கும் என்பதே - என் அசாத்திய நம்பிக்கை. ஒவ்வொரு நாளாய் - ஒவ்வொரு குறளாய் - ஆ(ய்/ழ்)ந்து யோசித்தால் தான்; அப்படிப்பட்ட முத்துக்களை கண்டெடுக்கமுடியும்! மேலும், நான் தொடர்ந்து நம் போதுமரைக்கும் மூழ்கி இருக்க விரும்புகிறேன். ஆனால், எல்லோருக்கும் அப்படி நேரம் கிடைக்காது என்பதையும் நானறிவேன்; அவர்களை, அருள்கூர்ந்து, தனியாய் பதியப்படும்  "ஒவ்வொரு-முழு' அதிகாரத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக