வெள்ளி, செப்டம்பர் 11, 2015

அதிகாரம் 004: அறன் வலியுறுத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 01 - பாயிரவியல்;  அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்

0031.  சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
           ஆக்கம் எவனோ உயிர்க்கு

           விழியப்பன் விளக்கம்: புகழ்/பெருமையோடு பொருளும் தந்து, நம்மை மென்மேலும்
           உயர்த்துவதில்; அறத்தை விட, சிறந்தது வேறெதுவோ?
(அது போல்...)
           உடல்/உயிரோடு தாய்ப்பாலும் தந்து, நம்மை தொடர்ந்து உயிர்ப்பிப்பதில்; தாயை விட, 
           உன்னதமான-உறவு வேறெதுவோ?

0032.  அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை 
           மறத்தலின் ஊங்கில்லை கேடு

           விழியப்பன் விளக்கம்: அறத்தைப்போல் நமக்கு நன்மையப்பதும் எதுவுமில்லை; அறத்தை 
           மறப்பதால் விளையும் அழிவைவிட, வீரியமானதும் எதுவுமில்லை.
(அது போல்...)
           நல்நட்பைப்போல் நம்மை ஊக்குவிப்பதும் ஏதுமில்லை; அந்நட்பை இழப்பதால் விளையும் 
           ஊக்க-குறைவைவிட, பாதிப்பும் ஏதுமில்லை.

0033.  ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
           செல்லும்வாய் எல்லாம் செயல்

           விழியப்பன் விளக்கம்: செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும், காரணமேதும் கற்பிக்காமல்; 
           இயன்ற அளவில், தவறாமல் அறச்செயல்களைச் செய்யவேண்டும். 
(அதுபோல்...)
           இருக்கும் உறவுகள் அனைத்திலும், குறைகளேதும் சொல்லிடாமல்; முடிந்த மட்டும், 
           தவறாமல் அன்பைப் பேணவேண்டும். 

0034.  மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் 
           ஆகுல நீர பிற

           விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றிலும் அறத்துடன் இருப்பதால் மட்டுமே உள்ளத்தூய்மை 
           அடையமுடியும்; மற்றவை ஆரவாரத் தன்மையுடையவை.
(அது போல்...)
           எந்தநிலையிலும் நீதி/நேர்மை கடைபிடிப்பவர்களே சிறந்த ஆட்சியாளர்கள் ஆவர்;
           மற்றவர்கள் வாய்ச்சொல் வீரர்களாவர்.

0035.  அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
           இழுக்கா இயன்றது அறம்

           விழியப்பன் விளக்கம்: பொறாமை, பேராசை, கோபம், தீய-வார்த்தைகள் - இவை 
           நான்கையும்; கடினப்பட்டு விலக்கிவைப்பதே அறமாகும்.
(அது போல்...)
           மண், பொன், மது, மாது - இந்நான்கு ஆசைகளையும்; சிரமப்பட்டு விலக்கிவைப்பதே,
           மனிதத்தை நிலைநிறுத்தும் வழியாகும்.

0036.  அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது 
           பொன்றுங்கால் பொன்றாத் துணை

           விழியப்பன் விளக்கம்: நாளை ஆலோசித்து செய்யலாம் என்றெண்ணாமல், இன்றே 
           செய்யும் அறமே; நாம் இறக்கும் காலத்தில், இறவாத் துணையாகும்.
(அது போல்...)
           முதிர்ச்சிக்காக காத்திராது, நம் குழந்தைகளின் குறைகளை அவ்வப்போது களைதலே; 
           அவர்களின் வருங்காலத்தை வளமாக்கிட உதவும்.

0037.  அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
           பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

           விழியப்பன் விளக்கம்: பல்லக்கைத் தூக்குவோர் மற்றும் அதில் பயணிப்போரை ஒப்பிட்டு - 
           இதுதான் அறவழி என ரையறுப்பது வேண்டாம்.
(அது போல்...)
           தண்டனைப் பெறுவோர் மற்றும் தண்டனையை அளிப்போரை ஒப்பிட்டு - இதுதான்
           சரியென  என நிர்ணயித்தல் தவறானது.

0038.  வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
           வாழ்நாள் வழியடைக்கும் கல்

           விழியப்பன் விளக்கம்: வீணான நாளொன்றே இல்லாமல் நல்லது செய்தால்; அதுவே, 
           ஒருவனின் மறுபிறப்பின் பாதையை அடைக்கும் கல்லாகும்.
(அது போல்...)
           ஒருநாளும் தவறாமல் உடற்பயிற்சி செய்தால்; அதுவே, ஒருவரை முதுமை-
           நோய்களில் இருந்து காக்கும் மருந்தாகும்.

0039.  அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
           புறத்த புகழு மில

           விழியப்பன் விளக்கம்: அறத்தின் வழியால் கிடைப்பவையே இன்பம்; மற்றவை எல்லாம் 
           துன்பங்களாகும், அது புகழாய் இருப்பினும் கூட.
(அது போல்...)
           ஊழலற்ற வழியில் சம்பாதிப்பவையே மனநிறைவைத் தரும்; மற்றவை எல்லாம் இன்னல்கள்,
           அது மாளிகையே ஆயினும் கூட. 

0040.  செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
           உயற்பால தோரும் பழி

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் பகுத்தறிந்து செய்யத்தக்கது அறச்செயல்களாகும்; 
           அதுபோல், ஆராய்ந்துணர்ந்து ஒழிக்கத்தக்கது பழிச்செயலகளாகும்.
(அதுபோல்...)
           ஓர்கட்சி அறமுணர்ந்து தொடரக்கூடியது பொதுநலமாகும்; அதுபோல், 
           உண்மையறிந்து நிறுத்தவேண்டியது சுயநலமாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக