சனி, செப்டம்பர் 12, 2015

யோவ் வள்ளுவரே! - "இல்வாழ்வான்? & இயல்புடைய மூவர்??' (குறள் எண்: 0041)


         
          "யோவ் வள்ளுவரே!" என்றழைத்திருப்பது உங்களில் பலருக்கும் மரியாதையின்மை என்பதாய்  தோன்றக்கூடும். நான் பல பதிவுகளில் சொல்வது போல், இது அதீத "அன்பின் வெளிப்பாடு!". இதை உணர்ந்தோர்க்கு/புரிந்தோர்க்கு - நான் சொல்வதன் அடிப்படை புரியும். சுருக்கமாய் சொல்லவேண்டும் எனில், நம்மில் பலரும் நம் தாயை "வா/போ/நீ" என்று ஒருமையில் அழைப்போம்; ஆனால், தந்தையை அப்படி அழைக்கமட்டோம்! அதனால், அப்பனின் மேலிருக்கும் மரியாதை அம்மையிடம் இல்லை என்று அர்த்தமல்ல. அது அம்மையின் மேலிருக்கும் ஒருவித "தனிப்பாசத்தில்" வருவது - அது அதீத அன்பின் வெளிப்பாடு! குணா திரைப்படத்தைப் பார்த்துவிட்டு; சென்னைக்கே உரித்தான சொல்லை சொல்லி "---- புள்ள பின்னிட்டாண்டா!" என்று நானும் என் நட்பும் பேசினோம். அது, கமலின் மேலிருக்கும் எங்கள் அதீத அன்பின் வெளிப்பாடு. சமீபத்தில் திரு. வைரமுத்துவின் கலாம்-கவிதைக்கும் அப்படி தலைப்பிட்டேன்.

      சரி, வள்ளுவரை அப்படி அழைக்க என்ன காரணம்?! இல்வாழ்க்கை என்பது எத்தனை சிரமமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். வாலிப வயதில், பலரும் அதற்கு பயந்து, திருமணமே வேண்டாம் என்று கூட நினைத்திருப்போம் (விதி வலியது என்பது வேறு விடயம்!). இல்வாழ்க்கையை புரியவைத்தல் எத்தனை பெரிய விசயம்? அதிலும் "இல்வாழ்க்கை"-கென தனி அதிகாரமே படைத்து?! நான், இதுவரை எழுதிய 40 விளக்கவுரைகளில் - இருந்த சிரமம்/சிறப்பு பற்றி சிலாகித்து எழுதி இருக்கிறேன். அந்த வகையில், இந்த அதிகாரத்தின் முதல் குறளின் (எண்: 0041), முதல் வார்த்தையே பிரம்மாண்டம் - இல்வாழ்வான்! அதே சொல்லை குறள் எண் 0042-இலும் பயன்படுத்தி இருக்கிறார். ஒரேயொரு வார்த்தை - அதன் பொருள் "இல்லற வாழ்க்கையை வாழ்பவன்" என்ற பெரும்பொருள். திருக்குறளுக்கு விளக்கவுரை எழுத முடிவெடுத்தவுடன், நான் கொண்ட ஒரேயொரு நிபந்தனை: என்னுடைய விளக்கவுரை சுருங்கி இருந்து, எந்த...

           பொருளையும் சொல்லாமல் விட்டுவிடக்கூடாது; அதே சமயம், மிக நீண்டிருந்து பொருளை நீர்த்துவிடவும் செய்துவிடாக்கூடது! என்பதே. எனவே அதற்கு, குடும்பஸ்தன் என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்து அதை குடும்ப"த்"தன் என்று எழுதி இருக்கிறேன்; இச்சொல் சரியாய் இருக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆச்சர்யம் ஆழ்ந்து அடங்குவதற்குள் "இயல்புடைய மூவர்" என்ற சொற்றொடர். யார் இந்த மூவர்? என்ற பலத்த சிந்தனை. பல விளக்கவுரைகளை ஆய்ந்ததில்...   
  • மூவர்-மாணவர், தொண்டர், அறிவர் - திரு. சி. இலக்குவனார்
  • மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் - திரு. சாலமன் பாப்பையா
  • பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் - திரு. கருணாநிதி
மேலுள்ள விளக்கங்கள் கிடைத்தன. இதில் திரு. இலக்குவனார் அவர்களின் பட்டியல் இந்த குரலுக்கு நேரடி சம்பந்தம் இல்லை என்பதால், அதை விடுவித்தேன். திரு. சாலமன் பாப்பையா மற்றும் திரு. கருணாநிதி இருவரின் பட்டியல் சரியாய் இருப்பதாய் தோன்றியது. இருப்பினும், அதில் ஏதோ ஒன்று விடுபட்டிருப்பதாய் இருப்பதாய் ஒரு நம்பிக்கை. என்னவென்று தீர யோசித்ததில் - உடன்பிறந்தோர் பற்றி எவரும் குறிப்பிடவில்லை என்பதை உணர்ந்தேன். எனவே என்னுடைய விளக்கவுரையை அதன் அடிப்படையில் மாற்றி எழுதினேன். என் விளக்கவுரை...

குடும்பத்தின் அடிப்படையான - பெற்றோர்/உடன்பிறந்தோர்/மனைவி-மக்கள் - இம்மூவர்க்கும் அறவழியில் துணை நிற்பவனே; குடும்பத்தன் ஆவான்

பின்குறிப்பு: இல்வாழ்க்கையின் முதல் குறளிலேயே "யோவ் வள்ளுவரே!" என்று வியக்கவைத்து இருக்கிறார் நம் பெருந்தகை. இனி வரும் குறள்களில், என்னை "என்னவெல்லாம் வியந்து-சொல்லி "பேச வைக்கப் போகிறாரோ?! தெரியவில்லை. அய்யனே! என்னுடைய அன்பு மென்மேலும் பெருகினால், இச்சிறுவனைப் பொருத்தருள வேண்டுகிறேன். 

2 கருத்துகள்:

  1. குடும்பத்தின் அடிப்படையான - பெற்றோர்/உடன்பிறந்தோர்/மனைவி-மக்கள் - இம்மூவர்க்கும் அறவழியில் துணை நிற்பவனே; குடும்பத்தன் ஆவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பாமா.

      இல்வாழ்க்கையின் முதல் குறளிலேயே, நம் பெருந்தகை எனக்கு பெருத்த சவால் கொடுத்து; ஆழ யோசிக்க வைக்கிறார்.

      இல்வாழ்க்கை என்பது அத்தனை எளிதான காரியமல்ல! என்பதை மறைமுகமாய் உணர்த்தி உள்ளார். :)

      நீக்கு