வியாழன், செப்டம்பர் 10, 2015

மெளனம் - இயலாமையா? ஆளுமையா??


முன்குறிப்பு: மெளனத்தைப் புரியவைத்தல் அத்தனை எளிதல்ல! என்பதால்; இங்கே விரிவாய் எழுதவேண்டிய நிர்ப்பந்தம்!! அதனால், தலையங்கத்தின் நீளம் அதிகமானது!!! }


            இன்று காலை என் முகநூல் நட்பொருவரின் \\\\மௌனம் என்பது தனி மொழி அல்ல. எல்லா மொழிகளிலும் இருக்கும் இயலாமை//// என்ற பதிவிற்கு நான் கீழ்வருவம் இரண்டு கருத்துகள் இட்டேன்: 1. நன்று. ஆனால், அது இயலாமை மட்டுமல்ல அண்ணாச்சி. சரியாயன இடத்தில், முறையாய் பயன்படுத்தப்பட்டால், அது மிகப்பெரிய ஆளுமை! {எனக்கு சில மெளனங்கள் நிறையக் கற்றுக் கொடுத்திருக்கின்றன!} 2. அதுபோல், பல மெளனங்கள் - களைக்கப்பட வேண்டும் என்பதும் உண்மை! என்னை முதன்முதலில் மெளனத்தால் புரட்டிப்போட்டவள் என்னவள்! அவளின் மெளனம் தான்; மெளனம்-சார்ந்த என் பல புரிதல்களுக்கு அடிப்படை! அவளின் மெளனங்கள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்ததோடு; என்னையும், மெளனம் பயில வைத்திருக்கிறது. என்னுடைய பதிவுகள்/விவாதங்கள்-இன் அடிப்படியில் நான் அதிகம் பேசக்கூடியவன் என்ற தவறான புரிதல் இருக்கக்கூடும். என்னுடைய குடும்பத்தாருடன் பேசினால் சொல்வார்கள்; நான்...

          எப்படிப்பட்ட மெளனவாதி! என்று - முக்கியமாய், என் தமக்கை. "ஏண்டா, எதுக்கேட்டாலும் - சாமியார் மாதிரியே அமைதியா இருக்க?!" என்று அடிக்கடி கேட்பார். அதற்கும் மெளனம் தான் பதிலாய் கிடக்கும் என்பது வேறு விடயம்; ஆனால், தொடர்ந்து கேட்பார். நான் இங்கு விளக்கியிருக்கும் புரிதலின் அடிப்படையில், என் குடும்பத்தாரிடம் மெளனம் கடைப்பிடிக்கவில்லை. ஏனோ, அவர்களிடம் நிறையப் பேசவேண்டும் என்று எனக்குத் தோன்றியதே இல்லை. அது, எனக்கே தெரியாமல்/புரியாமல் கடைபிடிக்கப்பட்ட மெளனம். நான் இங்கே சொல்ல முனைவது, என் சுய-சிந்தனையால், எனக்கு தெரிந்த/புரிந்த - மெளனம்! மேற்குறிப்பிட்ட பதிவையும்; என் பதிலையும் அடிப்படையாகக் கொண்டு, இத்தலையங்கத்திற்கு "மெளனம் - இயலாமையா? ஆளுமையா??" என்று தலைப்பிட்டேன்! இதுதான், பொருத்தமானது என்று நம்புகிறேன். என் புரிதலின் மூலம், மெளனத்தை கீழ்வருவது போல், வகைப்பிரிக்க விரும்புகிறேன்:


இயலாமை-மெளனம்

    இயலாமையின் கீழ் வரும் மெளனத்தை, 2 உட்பிரிவுகளாய் வகுத்துள்ளேன். இவற்றை "இயலாமை" என்று சொல்லக் காரணம் - இவையனைத்தும் - சொற்ப வார்த்தைகளைக் கொண்டு மெளனம் களை(ந்/த்)து, பேச்சால் விளக்கக்கப்படக் கூடியவையே! ஆயினும், சிலர் காக்கும் இவ்வகை மெளனத்தால் - அவர்கள் வேண்டுமானால் நிம்மதியாய் இருக்கலாம். ஆனால், அவர்களின் மெளனம் மற்றவர்களை ஆரோக்கியமற்ற சூழலுக்கு உட்படுத்துகிறது என்பதை உணரவேண்டும். இதைத் தெரிந்தும் செய்பவர்கள் இருக்கிறார்கள்! தெரியாமல் செய்பவரும் இருக்கிறார்கள்!! இவ்வகை மெளனங்கள், அவர்களின் ""இயலாமை"யை உணர்த்துகிறது.   

சரியான-இயலாமை:
  • நாம் பேசுவதை, சரியான விதத்தில் - அதிலுள்ள மெய்ப்பொருளை மற்றவர்கள் உணரவில்லையே?! என்ற ஆதங்கத்தில் ஏற்படும் மெளனம். அதை மேற்கொண்டு எப்படி விளக்கவேண்டும் என்று தெரியாத இயலாமையால் நிகழும் மெளனம்.
  • நம் பேச்சு, ஒருவரை தவறென்று சுட்டிக்காட்டி வரை வருத்தக்கூடுமே என்பதால் விளையும் மெளனம். பேசாததால், வேறொருவர் வருத்தம் அடைவார் எனினும் "பொய்மையும் வாய்மை இடத்த" என்பது போல், இதை சரியான இயலாமை-மெளனமாக ஏற்கலாம்.
தவறான-இயலாமை:
  • நாம் சொல்லும் உண்மையால் - ஒரு ஆரோக்கியமற்ற சூழல், அறவே களையப்படும் என்று தெரிந்தும், எவரையும் காயப்படுத்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் காக்கப்படும் மெளனம். அது மற்ற பலரையும் கலவரத்திற்கு உட்படுத்துவதால், தவறான-இயலாமை ஆகிறது.
  • மனைவி போன்ற உறவுகள் இடத்தே; நாம் ஏதாவது சொன்னால் - பிரச்சனையாய் ஆகிவிடுமோ?! என்றஞ்சி காக்கும் மெளனம். இது ஒரு சுயநலம்-ஆன மெளனம் என்பதால், இதை தவறான-மெளனம் என்கிறேன்.
  • ஒரு குழுவில் இருக்கும்போது; ஒருவருடன் தனிப்பட்ட முறையில் இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாய் (எக்காரணம் ஆனாலும்!) நேரடியான உரையாடலில், காக்கப்படும் மெளனம்.
  • கருத்து சார்ந்து ஒரு பிரச்சனை உருவாகி, அப்பிரச்சனையின் தடமே மறைந்த பின்னரும்; நாம் சார்ந்த உறவு/நட்பு - இடையில் கடைப்படிக்கும் மெளனம். 

ஆளுமை-மெளனம்

         சில மெளனங்கள் நாம் எதிர்பார்த்த பலனை, நமக்கு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் - நம் மெளனத்தைச் சந்தித்தவருக்கும் பல புரிதல்களை கொடுக்கும். செயல்படுத்தும் விதத்தில்/கடைப்பிடிக்கும் பொறுமையில் - அவர்களின் மெளனத்தில், ஆளுமை இருக்கும். இதை சரியாய்-உணர்வது மிக-மிக கடினமானது; ஏனெனில், அதற்கு நிறைய இழப்புகளை சந்திக்க வேண்டும்! பல தியாகங்களை செய்யவேண்டும். அவற்றை, விரைவில் உணர்தல் இன்னும் சிறப்பானது - ஆனால், அது கிட்டத்திட்ட சாத்தியம் இல்லாதது. சரி, ஆளுமையான மெளனங்கள் எவை?
  • நான் சந்தித்த முதல் ஆளுமை-கொண்ட மெளனம், என்னவள் காட்டியது! அவளின் பல மெளனங்கள் என்னை திகைக்க வைத்தன; இன்னமும் திகைக்க வைக்கின்றன! ஒருவரின் மெளனத்தை உற்று கவனிக்கவேண்டும் என்ற புரிதலை என்னுள் விதைத்தவள் அவளே. இதைக் கண்டிப்பாக நானே சுயமாய் உணரவேண்டும் என்று அவள், தெரிந்தே செய்திருக்க வேண்டும். இயல்பாய், அது எனக்கு கைகூடவும் செய்தது.
  • ஆளுமையான-மெளனங்களை; சரியா? தவறா?? என்ற அடிப்படையில் அணுகவே கூடாது. அப்படிப்பட்ட மெளனங்களில் வெகுநிச்சயமாக இரண்டும் கலந்தே இருக்கும். ஆனால்,  தவறுகளையும் தாண்டி; குறிப்பிட்ட அந்த உறவை மட்டும் (மைய/முதன்மை)ப்படுத்தி பார்ப்பது அவசியம். அப்படிப் பார்த்தால், அதில் இருக்கும் தவறுகள் மன்னிக்கப்படலாம் என்பது புரியும். ஆனால், அது அத்தனை எளிதல்ல! மேற்குறிப்பிட்டது போல், பல இழப்புகளைச் சந்தித்து, தியாகங்களையும் செய்வது மிகவும் அவசியம்.
  • இதுவரை நான் சந்தித்த ஆளுமை-மெளனங்களில்; என்னளவில் "உயர்ந்த/அசாத்திய ஆளுமை" என்றால் அது 6-வயதான என்மகள் காட்டியதே!!! ஆம், படிக்கும்போது அவள் கடைப்பிடிக்கும் மெளனம். அவள் படிப்பின் மீது ஆர்வமில்லாமல் அதைச் செய்யவில்லை; மாறாய், படிக்கும் முறை அவளுக்கு பிடிக்கவில்லை என்பது வெகு-நிச்சயமாய் எனக்கு தெரியும். இப்போதைக்கு, எங்களுக்கு, வேறு வழியில்லை! அவள் இந்த படிப்பு-முறையைக் கடைப்பிடித்து தான் ஆகவேண்டும். சென்றமுறை விடுப்பில் சென்றபோது, அப்படியொரு படிக்கும் சந்தர்ப்பத்தில் - அவளை முதுகில் ஒருமுறை அடித்தும் விட்டேன். ஆம்! ஆளுமையான் மெளனங்கள் நம்மை, இப்படித்தான் தடம்புரட்டும்! என் ஆற்றாமை பெருகுகிறது; ஆனால், அவள் மெளனத்தை சிறிதும் களையவில்லை! என் ஆற்றாமை உச்சத்தைத் தொட்டது; மீண்டும் "வேறு வழியே இல்லாமல்" நானே, என் இயல்பு நிலைக்கு திரும்பினேன். சிரித்து அவளை சமாதானம் செய்ய எத்தனித்தேன். ஆனால், அவளோ, அப்போதும் சிலை-போல் மெளனித்தே இருந்தேன். "சாரிம்மா! அப்பாவை மன்னிச்சுடு!!" என்பது போன்று பலவற்றையும் செய்த பின்தான் அவளின் மெளனத்தைக் களைத்தாள். அவ்வளவு-அதிகமாய் பேசக்கூடியவள் மெளனம் காக்கிறாள் என்றால், தெரிந்தே தான் செய்கிறாள் - என்று அர்த்தம்! எனவே, என்னளவில், இதுவரை நான் சந்தித்த மெளனங்களில், அவளின் மெளனம் தான் ஆளுமையின்-உச்சம்!
  • மீண்டும் எச்சரிக்கிறேன்! ஆளுமையான-மெளனங்கள், நம்மை எளிதில் தடம்புரளச் செய்யும்! அப்படிப் தடம் புரண்டதால் தான் - நான் என்மகளை அடித்தேன். இதுவே, வேறொரு உறவாய் இருந்திருப்பின்; அல்லது, என்மகளே 20 வயதானவள் என்றிருந்தால் - அது பெரிய-பிரச்சனைக்கு ஆரம்பமாய் இருந்திருக்கக்கூடும். எனவே, அப்படிப்பட்ட ஆளுமைகளை அணுகுவதில் பெரும்-எச்சரிக்கையும்/பொறுமையும் தேவை. 
       எப்படிப்பட்ட மெளனங்களை எதிர்கொள்கிறீர்கள் என்பதும், அவற்றை எப்படி வகைப்பிரித்து அணுகுகிறீர்கள் என்பதும் உங்கள் புரிதலில் இருக்கிறது! அதுபோலவே, எப்படிப்பட்ட ஆளுமைகளை கையாளவேண்டும் என்பதற்கும், உங்களின் புரிதலே அடிப்படை. பெரும்பாலும், நான் இயலாமை-மெளனத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அதுபோல், இதுவரை இரண்டே முறைதான் ஆளுமையான-மெளனத்தைக் கடைப்பிடித்து இருக்கிறேன். 1. அவரே "தன் வளர்ச்சிக்கு என்னையே முழுக்காரணம்!" என்று சொன்ன ஒருவரை, நானே விலக்கி வைக்கவேண்டிய சூழலால் நிகழ்ந்தது. அந்த நட்பை என்னுடைய எண்ணத்தில்-இருந்தே விலக்கிவிட்டேன். 2. இப்போது, இன்னுமோர் நட்பிடம் அப்படிப்பட்ட ஆளுமையான-மெளனத்தைக் கடைப்பிடித்து வருகிறேன். மிக-மோசமான வார்த்தைகள் கொண்டு என்னைப்-பலமுறை விமர்சித்தும் - என் மெளனம், இதுவரைக் களைக்கப்படவில்லை! இந்த நட்பை(யும்) முழுதாய் விலக்குவதும்/மீண்டு(ம்) ஏற்பதும் - அந்த நட்பு என் மெளனத்தை சரியான-விதத்தில் எதிர்கொண்டு; தன் குறைகளைக் களைவதில் இருக்கிறது.

எதிர்கொள்ளும் மெளனத்தையும்; காட்டவேண்டிய மெளனத்தையும் - வகைப்படுத்துதல்... 
நம் கடனே! நம் கடனே!! நம் கடனே!!!

4 கருத்துகள்: