புதன், செப்டம்பர் 09, 2015

சுயம் என்பது எது? எப்படி வரையறுப்பது??



     கோபம் எப்படி வெளிப்படும்...??? என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-ஒலியை மாற்றிப் பேசுவது; பலரையும் நான் கோபப்படுவதாய் நினைக்கத் தூண்டுகிறது. என் குரலின்-ஒலி அதிகமாக இருப்பது என்னுடைய சுயம். ஆனால், என்னுடைய பேச்சின் நோக்கம் சரியாய் புரிந்து கொள்ளப்படாததால்; என்னுடைய பேச்சையே குறைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். மனதில் பட்டதை வெளிப்படையாய் பேசுவதும் - என் சுயம். பல விடயங்களில், என் வெளிப்படையான பேச்சே எனக்கு எதிராய் திரும்பி; அதனால் பல பிரச்சனைகள் எழுந்திருப்பினும் - வெளிப்படையாய் பேசுவதை நான் மாற்ற முனைந்தது இல்லை. ஏனெனில், "என் சுயத்தை" எவர்-மாற்றுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. என்-மூத்த ஆராய்ச்சியாளரின் ஒரு-ஆசான், ஆய்வுக்கட்டுரையைத் திருத்தும் போது; மற்றவரின் சுயம் மாறாமால் திருத்தம் செய்வார் என்பதை நானறிவேன்.

         எனக்கு மிகவும் பிடித்த செயல் என்பதால், நானும் எவரின் ஆய்வுக்கட்டுரையை (அல்லது வேறேதேனும் ஆவணங்கள்) திருத்தினாலும் - சம்பந்தப்பட்டவரின் சுயத்தை மா(ற்)றாமல் காப்பேன். அது ஒரு கலை! அந்த கவனம் என்-சுயத்தின் மீதும் இருப்பதால்; வெளிப்படையாய் பேசும் என் சுயத்தை; நான் மாற்ற முயல்வதில்லை. ஆனால், குரலின்-ஒலி தவறான புரிதலைக் கொடுப்பதால், என் பேச்சைக் குறைத்து; அதே சமயம், என் மனதில் தோன்றுவதை எழுத்து-வடிவில் பிரதிபலிக்க துவங்கினேன். எழுத்தால் உரையாடுவது - அதிலும், அலைபேசியில் தட்டச்சு செய்வது - பெருத்த சிரமம் எனினும், அதை சிறிது நாட்களாக கடைப்பிடித்து வருகிறேன். இதைத் தொடர்ந்து கவனித்த நட்பொன்று "ஏன், இப்போதெல்லாம் பேசுவதே இல்லை?" என்று கேட்டது. நான் எடுத்திருக்கும் நிலைப்பாட்டைக் கூறி; என் கருத்துகள் தவறாய் புரிந்து கொள்ளப்படுவதில், வருத்தம் மட்டுமல்ல; அதில் எனக்கு உடன்பாடும் இல்லை! 

       இது, நானே விரும்பாத என் சுயத்திற்கு எதிரானது; எனத் தெரிந்தாலும் என் கருத்துகள் உ(ய)ரிய பலனளிக்க வேண்டும் என்பதால், இப்படி செய்வது - இங்கே முக்கியம் என உணர்கிறேன்" என்று பதிலளித்தேன். அந்த நட்பு உன் சுயத்தை நிச்சயம் நீ காக்கவேண்டும். அதே வேளையில், மற்றவர்களின் சுயத்தை காக்க; அவர்களின் தவறுகளை "உடனடியாக" சுட்டிக்காட்டுவதை(யும்) தவிர்க்கவும் என்றது. என் எழுத்தும்-தவறாய் புரிந்து கொ(ல்ல/ள்ள)ப்பட்டதையும் கடந்து, ஒருவரின் தவறை சுட்டிக்காட்டுதல் எப்படி அவரின் சுயத்தை மாற்றும் செயலாகும்? என்ற வருத்தமே மிகுதியானது. ஆனால், அதைப்பற்றி விவாதிக்கவில்லை. என் கருத்து தவறாய் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதே, இங்கே முக்கியமான விடயம். கருத்தையும் தாண்டி; என் குரல்-ஒலி பிரதானமாகப் பார்க்கப்படுகிறது என்பதே முக்கியம்! வேடிக்கையாய் "அடப்பவிகளா! எழுத்தில் சொல்லியுமாடா, கன்ஃபியூஷன்?! ஸ்ஸ்ஸ்ஸ்... யெப்பா!" என்றேன். 

          என் தற்-பெருமையாய் சொல்லவில்லை! எனக்கு - எவர் எப்படிப் பேசினாலும்; அவர்களின் பேச்சை/அந்த வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு - அதன் பொருளை மட்டும் உள்வாங்கும்/கவனிக்கும்-திறன் - இருப்பதாய் நம்புகிறேன். இதை எல்லோரும் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பதோ/நிர்ப்பந்திப்பதோ - தவறு என்பது(ம்) எனக்குத் தெரியும். ஆனால், எல்லோரும் அப்படி செய்தல், அது ஒரு ஆரோக்கியமான உறவையும்/நட்பையும் வள(ர்)க்கும். "பலவகையான சுயங்கள் ஒவ்வொருவருக்கும் இருப்பதால்; சுயம் என்பதற்கு பொதுவான விளக்கம் கொடுப்பது சிரமம் என உணர்கிறேன். எனவே, குறைந்தது, இந்த "விடயத்திலாவது சுயம் என்றால் என்ன? என்பதை (எனக்கு தெரிந்த வகையில்) வரையறுக்க வேண்டும் என்பதற்கே - இத்தலையங்கம். சரி, இது போன்று எழுதுவதா சுயம்? என்றால், இல்லை! அது வேலை/கடமை ஆகிறது. ஆனால், இது போன்ற பதிவுகள் எழுதிட, தொடர்ந்து யோசிக்கிறேன் அல்லவா?

        அந்த யோசிக்கும்-செயல் ஒருவரின் சுயம் ஆகும். தொடர்ந்து யோசித்து ஒரு புரிதலை நோக்கி பயணிக்க; மேலும், தொடர்ந்து யோசிப்பதைக் கடைப்பிடிப்பதும்  ஒருவரின் சுயம். நம் கருத்துகளில், பலரின் பங்களிப்பு இருக்கும்; நாம் செய்யும் விடயங்களிலும் பலரின் பங்களிப்பு இருக்கும். அதுபோல, நம்மைச் சிந்திக்கவைக்க கூட, சிலரின் தூண்டுதல் காரணமாய் அமையக்கூடும். ஆனால், நம் சிந்தனை - அது நம் சுயம்! நாம் யோசிக்கும் விதம் - நம் சுயம்!! ஒரு மாறுபட்ட கோணத்தில் இருந்து பார்ப்பது - நம் சுயாமாகும்; அதனால் தான் "விழியப்பன் பார்வை" என்று என் வலைப்பதிவுக்கு தலைப்பிட்டேன். நம் புரிதல் பிறரைச் சென்றடைய வேண்டும் என்று நினைப்பதும் ஒரு-சுயம். அதுபோல், நம் புரிதலில் இருக்கும் தவறுகளைத் திருத்திக் கொள்ள இல்லையெனில், நம் சுயம் தவறாகிவிடும்; அதனால் தான், என் வலைப்பதிவின் தலைப்பின் கீழ்  "என் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும்... 

         பாண்டிய மன்னர்களுக்கும்; குறைகளைச் சுட்டிக் காட்டும் நக்கீரர்களுக்கும் நன்றிகள் பல!!!" என்று கொடுத்தேன். ஏனெனில், நம் சிந்தனயில் - அதவாது "சுயத்தில்" - உள்ள குறைகளை எவரும் சுட்டிக்காட்டினால், அதை ஏற்றுக்கொள்வது மிக-முக்கியம். இல்லையெனில், சுயத்தின் அடிப்படை சிதைந்துபோகும்! சுயத்தின் நோக்கமும் - அதவாது புரிதலைப் பகிர்வது - சிதைக்கப்படும்!! தவறான விமர்சனங்களும்; தவறாக சுட்டிக்காட்டப் படும் குறைகளும் இருக்கும் - தவறில்லை! அவற்றையும் நம் சுயத்தால் (சிந்தனையால்)ஆய்ந்தறிந்து தெளியலாம். இங்கே, சுயம் சார்ந்த - கீழ்வரும் சில காரணிகளை வலியுறுத்த விரும்புகிறேன்: 
  • நம் எழுத்தை(சிந்தனையை) எவரும் "குறையாய்"விமர்சிக்கவே கூடாதென்பதும்; அக்குறைகளை, நம் சுயத்தை(சிந்தனையை) தொடுவதாய் எண்ணுவதும் பெரும்-தவறு!! 
  • குறை இல்லாதவர் எவருமில்லை; குறைகளை எடுத்துரைப்பது/களைவது - இவ்விரண்டும் அறமே! எனவே, குறை இருப்பதையே; பெரிய-குறையாய் எண்ணி வருந்தத் தேவையில்லை.
  • நம் சிந்தனையில் உள்ள குறைகளை எவரும் சுட்டிக்காட்டினால், அதை பரிசீலித்து திருத்திக்கொள்ளவேண்டும். நம் சிந்தனையையே தவறென்றால் - அது மறுக்கப்படவேண்டும்! 
  • குறைகளை - இடமும்/சூழ்நிலையும் சரிபார்த்து - சுட்டிக்காட்டுதல் நலம். இல்லையெனில், தவறாக புரிந்துகொள்ளப்படும்; அப்படி சில தவறுகள் நான் செய்து, அனுபவித்ததுண்டு.
  • சுட்டிக்காட்டப்படும் குறைகளின் மேல் கவனம் செலுத்துதலே அவசியம். அதை விடுத்து சுட்டிக்காட்டும் நபரைத் தனிப்பட்ட முறையில் கவனிப்பது(??!!) நியாயமற்றது.
  • தொடர்ந்து குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் ஒருவரிடம் எச்சரிக்கையாய் இருப்பது மட்டுமல்ல; நாமும் அதுபோன்று செய்யகூடாது என்ற எச்சரிக்கையும் தேவை. 
  • நம் குறைகளை எல்லோரும் சுட்டிக்காட்ட மாட்டார்கள். நம் நலனில் அக்கறை உள்ளவர்கள் மட்டுமே; அதே அக்கறையுடன் சுட்டிக்காட்டுவர் - எனவே, கவனம் தேவை.


தவறுகளை - சுட்டிக்காட்டுதல் மட்டுமல்ல; திருத்திக்கொள்வதும் - "நம் சுயமே"!!!      

3 கருத்துகள்: