செவ்வாய், ஜூலை 26, 2016

"சார்புணர்ந்து சார்புகெட" மற்றும் "சார்தரா சார்தரு" (குறள் எண்: 0359)


         இன்று பதிந்த குறள் எண்: 0359-இற்கான என் விளக்கவுரையைப் படித்திருப்பீர். அதற்கான விளக்கவுரையை எழுதி 22 நாட்கள் ஆகின்றன. அதை எழுதி முடித்தவுடன் என்னுள் பரமத்திருப்தி; எதையோ பெரியதாய் சாதித்தது போன்றோர் உணர்வு. வெகுநிச்சயமாய் - இதுவரை எழுதிய விளக்கவுரைகளுள், மிகப்பெரிய சவாலாய் இருந்த ஒன்று. என் மகிழ்ச்சியை உடனடியாய் "குறளும் வாழ்வியலும்" என்ற எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் கீழ்வருமாறு பகிர்ந்தேன்: 

\\\\ அட... அட... அட... இன்னும் 22 நாட்களில் பதியப்போகும்; குறள் எண் 0359-இற்கான விளக்கவுரையை எழுதுவதற்குள் - அடேங்கப்பா! என் சித்தம் கலங்கி தெளிந்தது!

தற்பெருமையில்லை! என்னளவில், "அந்த குறளை இப்படி உள்வாங்கி பொருள் தந்தோர் - இதுவரை எவருமில்லை!" என்றே நம்புகிறேன். எல்லாம், பெருந்தகையின் அருள். அதைப்பற்றியே தனியே - ஒரு பதிவெழுதவேண்டும்.

யோவ் வள்ளுவரே! ஏன்யா? எப்படியா? எப்படியா இப்படியெல்லாம் யோசித்தீர்?! ////

         முன்பு குறிப்பிட்ட "யோவ் வள்ளுவரே!" என்ற ஆனந்தக்கதறல், இந்த குறளில் - பன்மடங்கு அதிகமானது. என்னவிதமான மனிதர் அவர்? எப்படி இவ்வாறெல்லாம் அவரால், யோசிக்க முடிந்திருக்கிறது? எந்த அளவுக்கு ஆழமாய் யோசித்து இருந்தால்; இப்படி "ஒரே வார்த்தையை, நான்கு முறை சொல்லி" அடக்கமுடியும்?! ஐன்ஸ்ட்டின் (சொன்னதாய்)கூற்று ஒன்றுண்டு: "உன்னால் சுருக்கமாய் விளக்க முடியவில்லை எனில்; நீ அதை தேவையான அளவுக்கு புரிந்து கொள்ளவில்லை!" என்பதே அது (மேலுள்ள கருத்துப்படத்தை கவனிக்க!); மிகப்பெரிய விடயம் இது. அதுதான், திருக்குறளின் தனிச்சிறப்பே! ஆனால், அதை "ஆழமாய்" புரிந்துகொள்ள - திருக்குறளை படிப்போரும்; பெரிய புரிதலோடும்/தேடலோடும் இருத்தல் அவசியமாகிறது. ஆனால், அவ்விரண்டும் இன்று மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது. அதனால்தான், பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்த - கவிதை நடை மாறி - இன்று உரைநடைகள் முக்கியமாயின.

     "எழுதுவது சிரமம்" என்ற காரணத்தினாலேயும் கவிதைகள் குறைந்துவிட்டன! அதிலும், வெண்பா போன்ற இலக்கணம் கொண்ட கவிதைகள், மிகப்பவரவலாய் குறைந்துவிட்டன. படிப்போர் பலரும், எல்லாவற்றையும் விளக்கமாய் சொல்லவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். அதனால் தான், திரைப்படமும்/நாடகமும் நம்மை "வெகுவாய்" ஈர்க்கிறது. சமயங்களில், அவையும் சரியாய் புரிந்து கொள்ளப்படுவதில்லை; அதற்கு மிகசிறந்த உதாரணம் தான் சமீபத்தில் வெளியான கபாலி திரைப்படம். அதுவே, சில புதுக்கவிதைகள்/கவிதைகளை; நான் தலையங்கமாகவும் எழுதக் காரணம். புதுக்கவிதை புரியவில்லை என்போரும் உண்டு; தலையங்கம் நீளமாய் இருக்கிறது என்போரும் உண்டு. எனவே, முக்கியமானவற்றை இரண்டு வடிவங்களிலும் எழுகிறேன். அதை மேலும் சுருக்கி, "என்னுள் உதித்தது" என்ற பிரிவில் "கருத்துப் படமாயும்" பதிகிறேன். அவரவர்க்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளட்டும். இதே அடிப்படையில் தான், நம் பொதுமறையாம்...

       திருக்குறளுக்கு விளக்கவுரைகள் தேவைப்படுவதும்! இத்தனைக்கும், இப்போது இருக்கும் திருக்குறள் பலவும் - மிகவும் "எளிதாய் சீர் பிரித்து எழுதப்பட்ட வடிவமே!"; அதற்கே விளக்கவுரைகள் தேவைப்படுகிறது. அதனால், வள்ளுவர் "ஆழப் புரிந்து; சுருங்க சொல்லவில்லை!" என்று பொருளல்ல! அதை உள்வாங்கும் அளவிற்கு; நம் புரிதலும்/தேடலும் இல்லாமல் போனதே காரணம். அவ்விரண்டையும் செய்ய - எல்லோருக்கும் போதிய நேரமும்/வாய்ப்பும் கிடைப்பதில்லை - என்ற உண்மையும் எனக்குப் புரிகிறது. இவற்றையும் மீறி - திருக்குறளில் உள்சென்று ஆழப் பார்க்க - பல்வகை விடயங்கள் புதைந்து இருக்கின்றன; அதுதான், நான் விளக்கவுரை எழுதக் காரணம். அந்த அடிப்படையில், மேற்குறிப்பிட்ட திருக்குறள் - ஒரு மிகப்பெரிய உவமானம். அதில் பொதிந்திருக்கும் "அதி ஆழமான கருத்தை; இப்படி ஒரே வார்த்தையை 4 முறை சொல்லி" வேறெவராலும் விவரிக்கமுடியாது. ஆனால், நம் பெருந்தகைக்கு - அது மிக எளிதான ஒன்று.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
                                           சார்தரா சார்தரு நோய்

           இதுதான், அந்த குறள். இக்குறளுக்கு முக்கியமான ஆசிரியர்கள் என்ன விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்:
  • மணக்குடவர் உரை: தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட ஒழுகுவானாயின் அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவனவாய துன்பங்கள். 
  • பரிமேலழகர் உரை: சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா. 
  • மு. வரதராசன் உரை: எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.
  • மு. கருணாநிதி உரை: துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.
  • சாலமன் பாப்பையா உரை: எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.
      மேற்குறிப்பிட்டுள்ள விளக்கவுரைகள் - சில குறுகியதாகவும்; சில நீண்டும் - இருக்கின்றன! அவர்கள் எல்லோரும், மிக்கபெரிய சான்றோர்கள்; அவர்களுடன், ஒப்பிட்டால் - நான் மிகச்சிறியன்! ஒரு கற்றுக்குட்டி. இந்தப் பதிவு, அவர்களின் விளக்கவுரையை குறை காணும் முயற்சியல்ல! இந்த தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் - "சார்புணர்ந்து சார்புகெட" மற்றும் "சார்தரா சார்தரு" - இந்த 4 வார்த்தைகளை, மணக்குடவர் தவிர்த்து மற்றவர்கள் சரியாய் கையாண்டிருப்பதாய் டெஹ்ரியவில்லை! சார்பு என்ற வார்த்தை - சார்ந்திருப்பது/தொடர்புடையது; சார்ந்து-விளைவது/தொடர்ந்து-விளைவது; தொடர்ச்சி - போன்ற பலவகைகளில் பொருள்படும். இங்கே, துன்பதிற்கு காரணமானவைகளை - அதாவது, எவையெவை எல்லாம்; துன்பத்தோடு தொடர்புடையவையோ - அவற்றை ஒழிக்க வேண்டும் என்ற கரு, சரியாய் கையாளப்படவில்லை என்பதே என் புரிதல். எனவே, என்னுடைய விளக்கம் கீழ்வருவதே:

விழியப்பன் விளக்கம்: துன்பத்தின் தொடர்புகளை உணர்ந்து, அத்தொடர்பறுத்து வாழ்ந்திடின்; அவ்வொழுக்கத்தை அழித்து, நம்மைத் தொடராது - அத்தொடர்பு தரும் துன்பம்.

(அது போல்...)

தீய-அறத்தின் வேர்களைக் கண்டறிந்து, அவ்வேரறுத்துப் பழகிடின்; அப்பழக்கத்தை ஒழித்து, நம்முள் வேரூன்றாது - அவ்வேர் உயிர்ப்பிக்கும் தீய-அறம்.

        இக்குறளுக்கு விளக்கவுரை எழுதவே - அயர்ச்சி வெகுவானது. நிகர்விளக்கம் எழுத மேலும் பெருத்த சிரமமானது.  இவற்றைத் தாண்டி, கருத்துப்படம் ஒன்றை இடவேண்டும்; என் மனம் "யோவ் வள்ளுவரே! ஏன் யா? ஏன் யா இப்படி? - என்று கதறியது!" 2 நாட்களுக்குப் பின் "ஓரளவுக்கு இணையான" கருத்துப்படத்தையும் கண்டுபிடித்துவிட்டேன். அதன் பின்னர், இந்தப்  பதிவிற்கு(ம்) ஒரு கருத்துப்படம் வேண்டும் என்று யோசித்தபோதே மயக்கமே வந்துவிட்டது. ஒருவராய், இந்தப் பதிவின் முதல் வடிவம் எழுதும் போது - இதற்கு தொடர்புடைய ஐன்ஸ்டினின் கூற்று ஒன்று நினைவுக்கு வந்தது; அதையும் இந்தப் பதிவோடு தொடர்புபடுத்தி எழுதி - அந்த கருத்துப் படத்தை, இந்தப் பதிவிற்கு இட்டுவிட்டேன். எப்படியோ... ஐன்ஸ்டின் காப்பாற்றி விட்டார். இருப்பினும், இந்தக் கேள்வியை கேட்டே ஆகவேண்டும்:

யோவ் வள்ளுவரே! ஏன் யா? ஏன்?? முடியலை யா...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக