ஞாயிறு, ஜூலை 03, 2016

நவீனமும், பாரம்பரியமும்...


       மேலுள்ள புகைப்படம், சமீபத்திய "நீயா? நானா?" நிகழ்வின் போது எடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், இந்த சம்பவத்தைக் கண்டிருக்கக் கூடும். நவீன-மயமான இந்த தலைமுறை பெண்ணுக்கும்; பாரம்பரியத்தை மதிக்கும் சென்ற தலைமுறை ஆணுக்கும் இடையே "உரையாடலே இல்லாமல்" நடந்த ஒரு மெளன-நாடகம் அது. மிக சுவராஸ்யமான நாடகம் அது; இந்தப் பதிவு - எவரையும் குறை கூறவோ; அல்லது உயர்த்தி சொல்லவோ - முயற்சிப்பது அல்ல. மாறாய், அவர்களின் இயல்பை விவரிக்கும் ஒரு மனதங்கம். படத்தில் இருக்கும் அந்த பெண், மூன்றாவது சிறப்பு விருந்தினராய் - சிறிது நேரம் கழித்து வந்தார். அவருக்கு அந்த இருக்கையின் ஓரத்தில் தான் இடமிருந்தது; அந்த இருக்கையின் இடப்படக்கம் சிறிது இடமிருந்தும் - அந்த இரு ஆண்களும் தள்ளி உட்காரவில்லை! அது, அவர்களின் தவறும் அல்ல; ஏனெனில், அவர்கள் நிகழ்ச்சியோடு ஒன்றி  இருந்தனர். எனவே, அந்தப் பெண் இருந்த/கிடைத்த இடத்தில்...

     வெகு-இயல்போடு அமர்ந்தார்; அதே இயல்போடு, கால்மேல் கால் போட்டு அமர்ந்தார்! அருகிலிருந்த அந்த ஆணுக்கு ஏதோ ஒரு இயல்பற்ற உணர்வு - அது உடனடியாய் தெரிந்தது. அவர் அந்த பெண்ணின் காலை "பார்த்தும் பார்க்காதவாறு" பார்த்தார். ஆனால், அந்த பெண்ணிற்கு இதுபற்றிய எந்த உணர்வும் இல்லை - ஏனெனில், அவர் அமரும்போது அந்த ஆடவர்கள் இருந்த - அதே இயல்போடு அவரும் நிகழ்சசியோடு ஒன்றியிருந்தார். ஓரிரு நிமிடங்கள் கடந்தன - அந்த இடைவெளியில், அந்த ஆடவர் தன் "அசைவது தெரியாமல் அசைந்து" பார்த்தார். பின் ஒருவழியாக, எவரின் கவனத்தையும் சிதைக்காத வண்ணம் அவர் தள்ளி உட்கார்ந்துவிட்டார்; அவர் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. இங்கே - எவரின் மேலும் தவறில்லை! என் வசதிக்கேற்ப அமர்வதே சிறந்தது - என்ற சிந்தனையில் ஒரு தலைமுறை; அடடே... இது எனக்கு பொருந்தாத விடயமாயிற்றே?! என்ற சிந்தனையில் ஒரு தலைமுறை. ஆனால், அவர்களில்... 

           எவரும் அடுத்தவர் - சுதந்திரத்தில் தலையிடவில்லை! ஆனால், இருவரும் தத்தம் இயல்போடு இருந்தனர். அடுத்த காட்சியில் - அந்த பெண் இரண்டு கால்களையும் கீழூன்றி அமர்ந்திருந்தார். இடையில் என்ன நடந்தது என்பது தெரியாது - அது அவசியமும் இல்லை. காலில் ஒருவித வலி வந்து - மீண்டும் தன் இயல்போடு கூட அந்தப் பெண் அப்படி அமர்ந்திருக்கலாம்! ஆனால், அதுவொரு சுவராஸ்யமான நாடகம் - எந்த வசனமும் இல்லாமல், எவரின் இயல்பும் கெடாமல் "நவீன தலைமுறைக்கும்; பாரம்பரிய தலைமுறைக்கும்" இடையே நடந்த அற்புதமான நாடகம். இப்படித்தான், தலைமுறை இடைவெளிகள் அணுகப்படவேண்டும். எனக்கும், இம்மாதிரியான உணர்வு உண்டு; எனக்கும், இம்மாதிரியான நிகழ்வுகள் நேர்ந்ததுண்டு - அடுத்தவரின் கால் என் மேல் பட்டுவிடுமோ (அப்படி பட்டால் தான் என்ன? என்ற உணர்வு அப்போது வருவதில்லை!) என்ற எண்ணத்தில் தள்ளி அமர்ந்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் - பிறரிடம் என் இயலாமையைச் சொல்வதில்லை! சொன்னால்... என் இயலாமை அவருக்கு கடத்தப்படும். இம்மாதிரி...

தலைமுறை இடைவெளிக்குள் நடக்கும்; இயல்பான நிகழ்வுகள் - அற்புதமானவை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக