வியாழன், ஜூலை 14, 2016

திரைப்படங்கள் "தமிழ் பேசக் கற்பிக்கின்றனவா?"


         முகநூலில் - நட்பொருவர் "தமிழ்ப்படங்களால்தான் புலம்பெயர்ந்த நாடுகளில் இளைஞர்கள் இன்னும் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்றொரு பதிவிட்டிருந்தார். அதில், எனக்கு உடன்பாடில்லை என்பதால் "என்னளவில்... ஏற்புடையதல்ல!" என்று கருத்திட்டு இருந்தேன். அதற்கு அவர் விளக்கம் கேட்டிருந்தார்; அதுசார்ந்த என் புரிதலும்/விளக்கமும் நீண்டது என்பதால், இப்படியோர் தலையங்கமாய் எழுதி - அங்கே இணைப்பைக் கொடுக்க திட்டமிட்டேன். அப்பதிவில் இருக்கும் "புலம்பெயர்ந்த" என்ற வார்த்தை - இருவகையான புலம்பெயர்ந்த தமிழர்களைக் குறிக்கிறது என்றெண்ணுகிறேன்: 1. சொந்த நாட்டில் "வாழ்வதற்கே" வழியின்றி, வேறுவழி"யே"யின்றி புலம்பெயர்ந்தோர்; 2. சொந்த நாட்டில் "வசதிகள் குறைவு" என்று; தன் பிறப்பின் மூலத்தையே "கருவறுத்து" புலம்பெயர்வோர் - என்ற இரண்டே அவை. இதில், முதல் வகையையே - மேற்குறிப்பிட்ட நட்பு குறிப்பிட்டிருக்கிறார் என்று நம்புகிறேன்.

       இதில் "இரண்டாம் பிரிவினர்" பற்றி முன்பே என் ஆதங்கத்தை ஒரு தலையங்கமாய் எழுதி இருப்பதால்; அவர்களை பற்றி மேற்கொண்டு, விவாதம் தேவையில்லை என்று எண்ணுகிறேன். எனவே, மேற்குறிப்பிட்ட பதிவு "முதல் பிரிவினரையே" குறிக்கிறது - என் புரிதலின் அடிப்படையில் - அதன் மீதான என் பார்வை கீழே:
  • சொந்த நாட்டில் "வாழ்வதற்கே வழியின்றி" - மனக்குமுறலோடு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு புலம் பெயர்ந்தோர்க்கு - "இறக்கும் வரை, தாய்மொழி மறப்பதற்கு வழியே இல்லை!". அவர்கள் மறப்பது மட்டுமல்ல; அடுத்த சந்ததியர்க்கு கற்பிக்கவும், அவர்கள் தவறுவதில்லை!  இன்னும் அழுத்தமாய் சொல்லவேண்டுமெனில், அவர்களின் தாய்மொழிப் பற்று மேலும் பல்கிப் பெருகவே செய்யும். அதைத்தான், நம் இலங்கைத் தமிழ் அன்பர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். 
  • புலம் பெயர்ந்த நாடுகளில் - தினசரிகள்/பத்திரிக்கைகள் துவங்கி; வானொலி/தொலைக்காட்சி வரை - பலவும் இருக்க, அவர்களின் தமிழ்ப் பற்றே காரணம். 1970-களில் (அல்லது) அதற்கு முன் பிறந்தவர்களுக்கு; சிங்கப்பூரில் இருந்து வெளியாகிய ஒரு தமிழ்-வானொலி, நன்கு தெரிந்திருக்கும். அதில் இருந்தவை - "வெறும் திரைப்பட" பாடல்கள் அல்ல! அதில், நிறைய தமிழும்/அன்பும் கலந்திருந்தது. அதற்கு காரணம், தமிழ் எனும் தம் தாய்மொழி மேல் அவர்களுக்கு இருந்த பற்று. அதுதான், அப்படியோர் வானொலி நிலையத்தையே நிறுவ வித்திட்டது.  மாறாய், வானொலி நிலையம் அவர்களுக்கு(ள்) - தமிழ் உணர்வை விதைக்கவில்லை.
  • இத்தலையங்கத்தின் முதல் வடிவம் எழுதும் போதுகூட; நான் வழக்கம் போல் "A9Radio" என்ற வானொலியைத் தான் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படிப் புலம்பெயராமல்; மாற்று காரணத்திற்காய், புலம் பெயர்ந்தவர்கள் நடத்தும் வானொலி நிலையங்களில் - பேசப்படும் தமிழை; நான் விமர்சிக்க விரும்பவில்லை! அதுபற்றி உங்களுக்கே தெறியும். எனவே, முதல் பிரிவு-புலம்பெயர்ந்தோர் இருக்கும் நாடுகளில் - இருக்கும், வசதிகள்; அவர்களின் மொழிப்பற்றால் உருவானவை. மாறாய், அந்த வசதிகளால் - அவர்களின் தமிழும்/தமிழ்ப்பற்றும் வளவரில்லை!
  • அதுபோல், புலம்பெயந்த நாடுகளில் - அங்கிருக்கும் இளைஞர்களுக்கு, தமிழை வளர்க்க வேண்டுமென்ற ஆர்வத்தில் - எவரும், தமிழ்த் திரைப்படங்களை வெளியிடவில்லை! "அந்த ஆர்வத்தில் - வெளியிடவேண்டும்" என்பது, என் கோரிக்கையும் அல்ல! திரைப்படத் துறை என்பதும் - நாம் சார்ந்த துறைகளைப் போல் - வணிகம்/பணம் சார்ந்து இயங்குவதே. எனவே, அவர்கள் - தங்கள் வியாபாரத்தைப் பெருக்கவே - தமிழ் உயிர்ப்போடு இருக்கும் நாடுகளில்; மேற்குறிப்பிட்ட அடிப்படையில் - புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் குடியிருக்கும், நாடுகளில் வெளியிடுகின்றனர். உண்மையில், அங்கிருப்போரின் தமிழ் உணர்வே - இப்படி திரைப்படங்களை வெளியிட வித்திடுகிறது.
  • போர்ச்சுக்கல் போன்று - அதிக வணிகம் நிகழாத - நாடுகளில், எவரும் தமிழ் திரைப்படம் வெளியிட விரும்புவதில்லை. இதை, நான் அங்கு 8 ஆண்டுகள் வசித்தபோது - நேரடியாய் அனுபவித்து இருக்கிறேன். ரஜினி போன்ற "மாபெரும்" நட்சத்திரங்கள் நடித்த படத்தை வெளியிட கூட முயன்று, பலர் தோற்றிருக்கின்றனர். எனவே, புலம்பெயர்ந்த நாடுகளில் - திரைப்படங்கள் வெளியாவதாலேயே; அங்கிருக்கும் இளைஞர்கள் தமிழ் பேசுகின்றனர் என்பது என்னளவில் ஏற்புடையதல்ல! மேலும், தமிழ் மொழியை அறியாத இளைஞர்கள் - தமிழ்ப் படங்களைக் கண்டு தமிழைக் கற்கின்றனர் - என்பதே அடிப்படையில் தவறானது. மொழி புரியாத படத்தைப் பார்ப்பதில் - எவருக்கும் ஆர்வம் இருப்பதில்லை என்பதே உண்மை.
  • இது உண்மையெனில், தொலைக்காட்சி "தொடர்களால்" - தமிழகம் முழுவதும்; உறவுகள் பலப்பட்டு இருக்கவேண்டும். என்னதான், தொடர்களில் வரும் பாத்திரப் படைப்புகள் - நாள்தோறும், காழ்ப்புணர்வோடு மற்ற உறவுகளைச் அழச்செய்து கொண்டிருப்பினும்; இறுதியில் - திருந்தி குடும்பம் அமைதியாய் இருப்பதாய் தான் நிறைவு செய்கின்றனர். அப்படியெனில், உறவுகள் மேம்பட்டு இருக்கவேண்டுமே? ஏன் அவ்வாறு நிகழவில்லை? தொலைக்காட்சி தொடர்களுக்கும் - உறவு பலப்படுவதற்கும் எப்படித் தொடர்பில்லையோ; அதுபோல், ஒருவரின் தாய்மொழி பற்றுக்கும் - தாய்மொழி திரைப்படங்களுக்கும் தொடர்பில்லை.  
  • மேற்குறிப்பிட்ட பிரிவில் - எந்த பிரிவைச் சேர்ந்தவர் எனினும்; அவர்களின் உண்மையான தாய்மொழிப் பற்று - பிறப்பிலேயே விதைக்கப்பட்டு இருக்கும்.  அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல; வெறெந்தவொன்றின் பாதிப்பும் தேவையில்லை. அது, இயல்பாய் நிகழும். தாய்மொழி உணர்வே இல்லாதோர்க்கு - எந்தவொன்றும், தாய்மொழியை நிலைநாட்ட முடியாது. மேலும், தாய்மொழியில் பேசுவது மட்டும் தாய்மொழி உணர்வாகி விடாது; அது "தாய்மொழி"யில் சிந்திப்பதில்/எழுதுவதில்/படிப்பதில் இருக்கிறது. அவற்றைத் திரைப்படங்கள் விதைக்கமுடியாது.
  • இம்மாதிரியான ஊடகங்கள் - ஒரு "குறிப்பிட்ட விழுக்காடு" மக்களை - தமிழோடு தொடர்புடன் இருக்க வைக்கிறது!" - என்பது ஏற்புடையதே. ஆனால், அந்த ஊடகங்கள் "மட்டும்" தான் - அவர்களை தமிழ் பேச வைக்கிறது என்பது ஏற்புடையதல்ல! தாய்மொழி சார்ந்த அறிவு, சிறிதேனும் - அவர்களின் பெற்றோர்களால் விதைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே - தாய்மொழி திரைப்படங்ளை அவர்கள் பார்ப்பது சாத்தியமாகும். இல்லையெனில், அங்கு தமிழ்மொழிப் படங்கள் வெளியாவதே - "மேற்குறிப்பிட்ட நாடுகள் போன்று" - சாத்தியமாவதில்லை. 
  • புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் "முதல் பிரிவு" புலம்பெயர்ந்தவர்களின் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு - அடிப்படை தமிழ் அறிவு, மறுக்காமல் கடத்தப்பட்டு இருக்கும். அந்த இளைஞர்கள் அனைவருக்கும், தமிழ் உணர்வு உயிர்ப்போடு இருப்பதால் தான் - முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் - பலரும், தமிழில் "எழுதி உரையாடுவதை" காண்கிறோம். தமிழில் எழுதுவது கூட, மறக்கவில்லை எனில் - அவர்கள் தமிழ் பேசுவதற்கு, திரைப்படங்கள் எப்படி காரணமாக முடியும்? 
  • என் மைத்துனன் ஒருவன் இங்கிலாந்தின் "செளத்தாம்பட்டன்" நகரில், தன் மகளுக்கு - பள்ளியில் தமிழ்ப்படம் இல்லாததால், வெளியே/தனியாய் - தமிழைக் கற்பிப்பதை பற்றி ஒரு தலையங்கம் எழுதி இருக்கிறேன். அவனின் தமிழ் உணர்வை - உயிர்ப்புடன் வைக்க செய்தது - அவனுடைய மனத் திண்மையே! அதற்கு, உறுதுணையாய் இருந்தது - புலம்பெயர்ந்த தமிழ் அன்பர்களின் "மாபெரும் மொழிப் பற்று!".  அதனால் தான், அவர்களின் அடுத்த இளைய-தலைமுறை இப்படி தமிஸ் கற்கின்றனர்; அந்த குழந்தைகள் படிக்கும், பாடத் திட்டமே - பெருத்த வியப்புக்கு உரியது. அது ஓர் உதாரணம் மட்டுமே; இப்படியே, ஒவ்வொரு புலம்பெயர்ந்த நாடுகளிலும் - தமிழ் அன்பர்களால் இப்படிப்பட்ட வாய்ப்புகள் பலவும் இருக்கின்றன. அப்படி, இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் "தமிழ் அறிவை" - பள்ளி தாண்டிய கல்வி மூலம் - கற்பிக்கும் தமிழர்கள் ஏராளம். இதை விரிவாய் "தமிழ் உணர்வு" என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். 
  • அதுபோல், தமிழ் வளர உண்மையாய் என்ன செய்யவேண்டும்? என்பதை "தமிழை யார் வளர்ப்பது???" என்ற தலையங்கத்தில் எழுதி இருக்கிறேன். அதுபோல் "தமிழ் வளர..." என்றோர் கவிதையைக் கூட எழுதி இருக்கிறேன்; அதை 1. சாதாரண கவிதை நடை மற்றும் 2. விருத்தப்பா - என்று இரண்டு வடிவங்களில் எழுதி இருக்கிறேன். விருப்பமிருப்போர், இணைப்புகளைச் சொடுக்கிப் படிக்கவும். இவையே - தமிழ் உட்பட எல்லா தாய்மொழிக்கும் அடிப்படை.  மற்றபடி, திரைப்படம் போன்றவை "பெருமளவில்" எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. 
  • மேற்குறிப்பிட்ட என் முந்தைய பதிவுகளில் விவரித்து இருப்பதுபோல் - தமிழ் தழைப்பதும்/வளர்வதும் - நம் ஒவ்வொருவரின் பங்கீட்டில்/செயல்பாட்டில் இருக்கிறது. அதை "வெளியே இருந்து, திரைப்படம் போன்ற எந்த காரணியாலும்" நம்முள் விதைக்கமுடியாது. தாய்மொழி மீதான பற்றும்; தாய்மொழி எனும் உணர்வும் - இயற்கையாய் ஒருவருக்கு இருக்கவேண்டும்! அதுமட்டும் தான், அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு - அந்த உணர்வைக் கடத்தும். அப்படி செய்யும் முனைப்புடைய பெற்றோர்களால் - வளர்க்கப்படும் இளைஞர்களே - பெரும்பான்மையான "முதல் பிரிவு" புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்பதாய் நான் பார்க்கிறேன். அந்த இளைஞர்களின் தமிழ் உணர்வு "இன்னமும், உயிர்ப்புடன் இருப்பதால் தான்" - அங்கே தமித் திரைப்படங்களே வெளிவருகின்றன!
எனவே, என்னளவில்... 

"தமிழ்ப்படங்களால்தான் புலம்பெயர்ந்த நாடுகளில் 
இளைஞர்கள் இன்னும் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறார்கள்"

என்பது ஏற்புக்கு உரியதல்ல!

"அரைகுறை" தமிழில் பேச வேண்டுமானால்,
திரைப்படம் போன்ற ஊடகங்கள் உதவலாம். அதற்கு,
புலம்பெயர்ந்த நாடுகள்வரை செல்ல வேண்டாம்!

 தமிழகத்திலேயே - அப்படி தமிழ் கற்போர் - உதாரணமாய் இருக்கின்றனர்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக