செவ்வாய், ஜூலை 05, 2016

இரண்டாமாண்டு இரமதான் நோன்பு...


            "இளங்கோவும் இஃப்தாரும்" என்ற தலையங்கத்தில் சொல்லியிருந்தது போல், சென்றாண்டு முதன்முதலில் இரமதான் நோன்பு இருந்தேன். அதை இந்த ஆண்டும், இனி வரும் ஆண்டுகளிலும் தொடரவேண்டும் என்று ஒரு ஆவல்; உள்மனமும் அதை வலியுறுத்தியது. அதுபோலவே, இந்த ஆண்டும் இரண்டாவது முறையாய் நோன்பு இருக்கிறேன். இறையருளின் துணையுடன், இன்றிரவு நோன்பு நிறைவுபெறுகிறது. இதுவரை எந்த சிரமும் இல்லை; எனக்கு, இந்த நோன்பு இருக்கும் முறை பிடித்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட தலையங்கத்தில் சொல்லியிருந்தது போல்; என் நோன்பு-குரு காதர் எனும் நண்பன், இந்த ஆண்டும் என் சந்தேகங்களை உடனுக்குடன் நீக்கி; எனக்கு துணை புரிந்தான். அதுபோலவே, எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவிலும் - பயனுள்ள இஸ்லாமியச் சிந்தனைகளைப் பகிர்ந்தான். எனக்கு மட்டுமல்ல; மற்ற நண்பர்களுக்கும் அந்த சிந்தனைகள் நல்ல புரிதல்களை உருவாக்கியது. ஒவ்வொரு ஆண்டு, இந்த நோன்பு தொடரும்...

           என்ற நம்பிக்கை நிறைந்திருக்கிறது. நோன்பிருத்தல் நல்ல விடயம்; உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஓய்வையளிக்கிறது நோன்பு. அதனால் தான், வேறுபாடு ஏதுமின்றி - தங்கள் நம்பிக்கைக்கு ஏற்ற வகையிலும்; தங்கள் வாழ்வியலுக்கு ஏற்ற வகையிலும் - எல்லா மதங்களும் நோன்பை வலியுறுத்துகிறது. உடல் உறுப்புகளை மட்டுமல்ல; மனதைக் கட்டுப்படுத்தவும் - நோன்பு உபயோகமாய் இருக்கிறது. மனது தன் கட்டுப்பாட்டிற்குள் வரும்போது, நல்ல சிந்தனைகள் எளிதில் சாத்தியமாகும். இந்த நல்ல சிந்தனைகள் - நாம் செய்யும் தவறுகளையும், நமக்குத் தெளிவாய் உணர்த்துகின்றன. பெரும்பாலான தவறுகள், உடனுக்குடன் திருத்தப்படும். வைராக்கியத்துடன் முயன்றால், எல்லா தவறுகளும் திருத்தப்படும். உடலையும், மனதையும் கட்டுப்படுத்தி - வாழ்வியலை நன்முறையில் அனுபவிப்பதே நோன்பின் அடிப்படையாகப் பார்க்கிறேன். இந்த அடிப்படையில் தான், இரமதான் நோன்பையும் அணுகுகிறேன். வள்ளுவப் பெருந்தகையின் 

      "செவிக்குண வில்லாத போழ்து" எனும் குறளும் இதைத்தான் வலியுறுத்துகிறது. இந்தக் குறளின் நேரடிப் பொருள் "கற்றல் எனும் செவிக்குண்டான உணவு இல்லாத வேளையில், வயிற்றுக்குண்டான உணவை அளிக்கவேண்டும்" என்பதே. இதையே சற்று எதிர்வினையா(ய்/ல்) யோசித்தால்; வயிறுமுட்ட உண்டால், செவிக்குண்டான உணவான கற்றலை சரிவர மேற்கொள்ள முடியாது என்பது(ம்) விளங்கும். தேடல் துவங்கி, கற்பனை/சிந்தனை வரையான பலவும் கற்றல் எனும் பிரிவில் வருபவையே. எனவே, நோன்பு என்ற வரையறை மூலம் வயிறுமுட்ட உண்ணாமல், வயிற்றைக் காலியாக வைத்திருந்தால் - தேடல் துவங்கி கற்பனை/சிந்தனை அனைத்தும் எளிதில் சாத்தியப்படும் என்பதே இக்குறள் விளக்கும் மற்றொரு பொருள். இதை என் அனுபவத்தில் நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அந்த அனுபவத்தைத்தான் "உணவும் கற்பனையும்" என்ற கவிதையில் வெளிப்படுத்தி இருந்தேன்; இதுதான் என் இரமதான் நோன்பின் அடிப்படை.

      மற்றபடி, என் நோன்பிருக்கும் நிலைப்பாட்டில் மதம் சார்ந்த விடயம் ஏதுமில்லை! ஏதோ இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய நினைப்பதாய் தோன்றக்கூடும். ஆனால், என் நோக்கமோ/விருப்பமோ அதுவல்ல. வேண்டுமானால், இரண்டு குதிரைகளை வைத்துக் கொண்டு "மனிதம் எனும் வண்டியில்" நான் பயணிக்க முனைவதாய் சொல்லலாம். அதில், எந்த தவறும் இல்லை. ஒற்றைக் குதிரையில் செய்யும் பயணத்தை விட; இரட்டைக் குதிரைகளைக் கொண்டு வண்டியில் செய்யும் பயணம் - அதிசுகமாய் இருக்கும். ஆனால், இரண்டு குதிரைகளையும் சரியான விதத்தில் கடத்தும் திறன் வேண்டும்; எனக்கு அந்த திறம் இருப்பதாக பெரிதாய் நம்புகிறேன். மேலும், இங்கே என்னுடைய கவனம் எந்தக் குதிரையின் மேலும் இல்லை! என் முழுக்கவனமும், மனிதத்தை அடிப்படையாகக் கொண்ட என் பயணத்தில் தானிருக்கிறது. அந்தக் கவனம் இருக்கும் வரை - இரண்டு குதிரைகள் மட்டுமல்ல! இரண்டுக்கும் மேற்பட்ட குதிரைகளைச் சேர்ப்பினும்...

          என் பயணம் செவ்வனே தொடரும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது. மேலும், மதம் என்றால் என்னவென்பதை; என் பார்வையில் முன்பே மதமும்... "மாதா"வே!!! என்ற மனதங்கத்தில் விளக்கி இருக்கிறேன். எனவே, என்னுடைய குறிக்கோள் - மிக்கது தெளிவாய் மனிதமெனும் வண்டியைச் செலுத்துவதில் முனைப்பாக இருக்கிறது. எனவே, நோன்பிருத்தல் ஒரு மிகப்பெரிய வாழ்வியல் அனுபவம் என்பதை உணரவேண்டும். எந்த நோன்பு பிடித்தமான இருக்கிறதோ - அந்த நோன்பில் கவனமாய் இருப்பதே முக்கியம்; கார்த்திகை மாத விரதத்தையும் தொடர்ந்து மேற்கொள்கிறேன். அதுபோல், ஒன்றுக்கு மேற்பட்ட நோன்பைக் கூட கடைப்பிடிக்கலாம்! ஆனால், நோன்பின் இயல்பான/அடிப்படையான - உடம்பை/சிந்தனையை தெளிவாக வைத்திருப்பதில் கவனம் இருக்கவேண்டும். நல்ல உடல்நிலையும்/நற்சிந்தனைகளும் - நல்ல மனிதத்தை உருவாக்கும் என்பது, என் அனுபவப்பூர்வமான புரிதல். மனிதம் கற்கும்/காக்கும் என் முனைப்பில்...

இரண்டாமாண்டு இரமதான் நோன்பும்... 
இறையருளுடன் இன்று நன்முறையில் நிறைவடையும்!!!               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக