திங்கள், ஜூலை 04, 2016

ஊடகங்களின் இரட்டை நிலைப்பாடு...


     சமீபத்தில், நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் நடந்த கொலை தொடர்பாக - ஊடகங்களின் தரமற்ற/தர்மமற்ற அடாவடித்தனத்தை ஒரு தலையங்கமாய் நேற்று எழுதி இருந்தேன். அதில், குற்றத்தில் ஈடுபட்டவரின் குடும்பத்தார் மற்றும் அவரின் சுற்றத்தாரை எப்படி கீழ்த்தரமான கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள் என்பதையும்; அவர்களின் பலவகைப் புகைப்படங்களை எப்படி வெளியிடுகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். அதே ஊடகங்கள், கொல்லப்பட்டவரோ அல்லது கொன்றவர்/விபத்தைச் செய்தவர் "அதிக பணபலமோ/அரசியல் பலமோ - அல்லது இரண்டும் சேர்ந்த படைபலமோ" இருப்பின் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தவே இத்தலையங்கம். எடுத்துக்கொண்டிருக்கும் செய்தி என்னவென்று உங்களில் பலருக்கும் புரிந்திருக்கும். ஆம், சென்னை தரமணி அருகே நடந்த ஒரு சாலை விபத்தில், திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலாளர் கொல்லப்பட்டது...

   அனைவருக்கும் தெரிந்ததே! விபத்தை ஏற்படுத்தியது சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள் என்பது செய்தி. அதிலும், மதுவருந்திவிட்டு மகிழ்வுந்தை ஓட்டியிருப்பதாய் செய்திகள் சொல்கின்றன. இந்த சம்பவம் நடந்து சில தினங்கள் ஆகின்றன. விபத்தைச் செய்த பெண்ணைக் கைது செய்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. எல்லா ஊடகங்களும், விபத்தில் இறந்த அந்த தொழிலாளியின் புகைப்படத்தையே தொடர்ந்து வெளியிட்டன; ஆனால், அந்தப் பெண்ணின் புகைப்படமோ அல்லது தொழிலதிபரின் புகைப்படமோ - எந்த ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை! இந்த தலையங்கத்தின் முதல் வடிவத்தை நேற்று காலை எழுதியபின், நேற்றிரவு தான் - ஒரேயொரு தொலைக்காட்சி மட்டும் அப்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதாய் - முகநூல் மூலம் அறிந்தேன். உண்மையில், இதே அடிப்படையில் - இந்த எல்லையில் இருந்தே - ஊடகங்கள் செய்திகளை வெளியிடவேண்டும்...

          என்பதே மேற்குறிப்பிட்ட என் நேற்றைய தலையங்கத்தின் பார்வையும். அதவாது, சர்வாதிகார நாடுகள் மற்றும் அதிகட்டுப்பாடு கொண்ட நாடுகளில் இருப்பது போல் - ஒரு குற்றம் நடந்தால், அந்த குற்றச் செய்தியை மட்டும் வெளியிட்டால் போதுமானது. குற்றம் செய்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் - இவர்களின் எவரைப் பற்றிய எந்த செய்தியையும் வெளியிடக்கூடாது என்பதே என் விருப்பமாகவும்/நிலைப்பாடாகவும் இருக்கிறது. அந்த வகையில் - ஒரு தொழிலபதிபரின் மகள் செய்த விபத்து பற்றிய செய்திகளை வெளியி(டுவ/ட்ட)தில் - ஊடக செயல்பாடு சரியானதே! ஆனால், இந்த தலையங்கத்தில் பார்வை - இதேமாதிரியான அடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் நடந்த கொலையில் - ஏன் இந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிடவில்லை?!  என்பதே. அதிலும், அப்பெண்ணின் பல்வகை புகைப்படங்கள் வெளியிடுவதில் துவங்கி பல்வேறு அடாவடித்தனங்கள். அந்த இளைஞர் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருப்பதைக்கூட...

      அடிக்கடி காட்சிப்படுத்தும் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் - இந்த தொழிலதிபர் மகளின் பெயரைக் கூட ஏன் இதுவரை வெளியிடவில்லை?! அந்த இளைஞரின் குடும்பத்தார் அனைவரின் புகைப்படத்தையும் வெளியிட்ட ஊடகங்கள்; ஏன், குறைந்தது அந்த தொழிலதிபரின் புகைப்படத்தைக்கூட வெளியிடவில்லை?! சம்பவம் நடந்து, இத்தனை நாட்கள் ஆகியும் ஏன் இது செயல்படுத்தப் படவில்லை? ஆனால், நுங்கம்பாக்கம் சம்பவத்தைப் பற்றி மட்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம், சொன்ன செய்திகளையே கொஞ்சம் கூட வெட்கம் இன்றி; திரும்ப திரும்ப வெளியிடுகின்றன! இத்தலையங்கத்தின் இரண்டாம் வடிவத்தை இன்று காலை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட; அந்த இளைஞரை சென்னைக்கு கொண்டுவரப்பட்டதை காண்பித்து; அவர் எந்த அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்; அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கும் "வார்டு எண்" முதற்கொண்டு சொல்கின்றன. அதுமட்டுமல்ல!...

         அந்த இளைஞருக்கு 8 என்ற எண் இராசியில்லை என்றும் - பல எண்ணியல் அடிப்படையில் விரிவாய் சொல்கிறார்கள்! இவர்களுக்கு கொஞ்சம் கூட சமுதாய அக்கறையோ; சமூகம் பற்றிய பகுத்தறிவோ இல்லையா? இல்லை... பணம்தான் ஒரு குற்றத்தை விரிவாய் சொல்லவும்; அல்லது ஏதும் சொல்லாமல் மறைக்கவும் - முக்கிய காரணமாகிறதா?! அப்படியெனில், பல நன்னெறி நூல்களும் சொல்லும் "அறம் என்பது என்ன?!". இதே ஊடகங்கள், தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் "ஊடக-தர்மம் மற்றும் ஜனநாயக தர்மம்" பற்றி வாய்கிழிய பேசுகின்றனவே?! இப்படிப்பட்ட "இரட்டை நிலைப்பாட்டை"க் கொண்டிருக்கும் இவர்களுக்கு ஊடக-தர்மம் மற்றும் ஜனநாயக தர்மம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? இம்மாதிரியான இரட்டை நிலைப்பாட்டின் போது, இவர்களின் "ஊடக தர்மம்" பணத்தின் பின்னே சென்று ஒளிந்து கொள்கிறதா?! இங்கே எனக்கு இரண்டு காரணிகள் கவனத்திற்கு வருகின்றன: 1) இவர்கள் அந்த தொழிலதிபரிடம்...

          பணம் பெற்றிருக்க வேண்டும்! அல்லது 2) அவரின் பணபலத்தைக் கண்டு பயந்து பின்வாங்கி இருக்கவேண்டும். இரண்டில் எது காரணம் எனினும் அல்லது இவையல்லாத வேறொன்று காரணம் எனினும்; ஒரு சாமான்யன் கொலையைப் பற்றி சாட்சி சொல்ல முன்வராததை - விமர்சிக்கும் அருகதையை இவர்கள் இழக்கிறார்கள். அதனால் தான், ஒரு சாமான்யனுக்கு எந்த ஊடகத்தின் மேலும் "பெருத்த நம்பிக்கை" வருவதில்லை. இந்த இருட்டடிப்பை ஊடகங்கள் "தங்கள் மனசாட்சிக்கு தெரிந்தே; மனசாட்சியைக் கொன்றுவிட்டே" செய்கின்றன என்பது - பேர் அபத்தம்! சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பல பதிவுகள் வருகின்றன. அவை கண்டிப்பாக அவர்கள் கவனத்திற்கு சென்றிருக்கும். அதையும் தாண்டி, இன்னமும் இவர்கள் அந்த விபத்தைப் பற்றி எந்த அடிப்படை செய்தியையும் வெளியிடாமல்; மறுபக்கம் நுங்கம்பாக்கம் கொலையை செய்த இளைஞர் எந்த வார்டில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்பதை இந்த நொடிவரை...

   காட்சியாகவும்/செய்தியாகவும் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இவ்வளவு வெளிப்படையாய் தெரிந்த பின்னும்; எப்படி இவர்களால் "இரட்டை நிலைப்பாடு" கொண்டு செயல்பட முடிகிறது. ஒரு சாமான்யனைப் போல், அவர்களுக்கும் பயம் இருக்கும் என்பதை நான் மறுக்கவில்லை! அப்படி இருப்பின், அந்த பயத்தை நான் ஏற்கிறேன். ஆனால், மனசாட்சி சார்ந்த பயமும் - மற்றொரு குற்றம் பற்றிய செய்தியில் இருக்கவேண்டும் அல்லவா? அதற்காகத்தான், மேற்குறிப்பிட்டபடி பல நாடுகளில் இருப்பது போல் "ஊடக தர்மத்துடன்" - எந்த குற்றமாக இருந்தாலும் - அடிப்படைத் தகவல்களை மட்டும் கொடுத்தால் போதும் என்கிறேன். குற்றம் செய்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் - இவர்களில் எவரின் பெயரும் கூட தேவையில்லை! மிகமுக்கியமாய், அவர்களின் புகைப்படங்களோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களின் புகைப்படங்களோ தேவையில்லை. சுருக்கமாகச் சொன்னால்...

     மேற்குறிப்பிட்ட விபத்தை இவர்கள் கையாள்வது போல்! இருக்கவேண்டும். செல்வாக்கிற்கு அல்லது சன்மானத்திற்கு அடிபணிந்து - இவர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டோடு செயல்படக் கூடாது! ஊடகம் என்பது மிகப்பெரிய வலிமை கொண்ட, சமுதாயத்தின் நலனைக் காக்கும் கருவிகளில்/காரணிகளில் முக்கியமானது. இக்கடமை அவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய கொடை; அதை அவர்கள் சரியான நிலைப்பாட்டோடு அணுகவேண்டும். இல்லையேல்... அவர்கள் இந்தக் கடமையை செய்யாமல் இருப்பது நல்லது. இந்த "இரட்டை நிலைப்பாட்டால்" தான், ஒரு சாமான்யன் - துரதிஷ்ட்டவசமான ஒரு கொலையைப் பார்த்தும்; சாட்சி சொல்ல முடியாமல் "உள்ளுக்குள்ளே இறந்து கொண்டிருக்கிறான்" போலும்! ஒருவேளை, அந்த தொடர்வண்டி நிலையத்தில் ஒரு பெரிய அரசியல்வாதியோ அல்லது ஒரு பெரிய தொழிலதிபரோ இருந்திருப்பின் - சாட்சி சொல்லியிருப்பர்! ஏனெனில், அவர்களின் விவரம் வெளியில் தெரியாது!

என்னவிதமான "கீழ்த்தரமான இரட்டை நிலைப்பாடு" இது???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக