வியாழன், ஜூலை 07, 2016

அறத்தின் அடிப்படை - பயமா???


           சில தவறுகளை - அதாவது, அறத்திற்கு மாறான ஒன்றை - மனதால் திட்டமிட்டு; அதற்கான செயல்வடிவத்தை செய்ய முனையும் போது - அளவுகடந்த பயம் எழும். இந்த பயத்தின் அடிப்படை - தவறு வெளியே தெரிந்துவிட்டால் என்ன செய்வது? - என்று மனசாட்சி கேட்கும் கேள்வியே! தொடர்ந்து - எந்தெந்த விதத்தில் எல்லாம், அந்த தவறு வெளியே தெரியக்கூடும்?! என்ற கேள்வியை மனது முன்வைக்கும் - பின் சிந்தனையே, ஒவ்வொன்றாய் அலசும். அந்த தவறு நிகழும்போது; சம்பந்தமில்லாத வேறொரு விபத்து கூட - அந்த தவறை, வெளியே காட்டிக் கொடுக்கும்! - என்றும் மனது எச்சரிக்கும். அந்த எச்சரிக்கை(கள்) - பயத்தை மேலும் அதிகரிக்கும். அந்த பயம் - அந்த தவறுகள்/செயல்கள் சார்ந்த - அறத்தை உணர்த்தும். தவறுக்கான செயல்திட்டம் சாத்தியமாகும் முன் - பயமும்/அறம்சார்ந்த தெளிவும் - அந்த செயல்திட்டத்தை நிறுத்தும். ஒவ்வொரு முறையும் அவ்வகை தவறுகளை செய்ய முனையும் போதெல்லாம்...

       மனது இதைத் தொடர்ந்து உணர்த்தி - பெரும்பான்மையான தவறுகளை - செயல்வடிவம் பெறாமல் தடுக்கும் என்பதே எதார்த்தம். உதாரணமாய்,  மது அருந்திவிட்டு வாகனங்களை  ஓட்டக்கூடாது என்பதே எல்லா நாடுகளிலும் இருக்கும் விதி; ஆனால், எல்லா நாடுகளிலும் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் செயல்கள் தொடர்ந்து, நடந்துகொண்டு தானிருக்கிறது. பலரும், காவலரிடம் பிடிபடாமல் தப்பிக்கின்றனர்; ஆனால், எதிர்பாராமல் நடக்கும் ஒரு சாலை விபத்து - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியத் தவறை - காட்டிக்கொடுத்து விடும். இதைத்தான், மேலே சுருக்கமாய் குறிப்பிட்டேன். இப்படி ஒரு தவறை செய்யும் போது - அதைப் பலவகையில் யோசிக்கும் சிந்தனை - பயத்தை உருவாக்கி; பயத்தைத் தொடருந்து, அறம் சார்ந்த புரிதலை(யும்) கொடுக்கும். இந்தப் புரிதல், பல நேரங்களில் "புத்தியோடு" நின்றுவிடுகிறது! மனதுக்கு, இது அவ்வளவு எளிதில் புரிவதில்லை. எனவே, புத்தி அதைத் தவறு என்று சுட்டிக்காட்டினாலும்...

         மனது - நிறைய பேர் செய்கிறார்களே?! நீ செய்தால் என்ன? - என்று அந்த தவறை செய்யத்  தூண்டும். இந்தியன் திரைப்படத்தில் இதை அருமையான வசனத்தால் எழுத்துச்சித்தர் திரு. பாலகுமாரன் சொல்லி இருப்பார்: ஒரு காட்சியில் "சுகன்யா சொல்வார் - புத்திக்கு தெரியுது; ஆனா, மனசு கேட்கலை என்று; அதற்கு கமல் சொல்வார் -  எனக்கு புத்தி/மனசு ரெண்டும் ஒன்று - என்று.  இதைப் பலரும் கேட்டிருப்பினும் - மிக எளிதாய் அதை மனதுக்கு கொண்டு சேர்க்க தவறி விடுகிறோம். அதுபோல், மனதும்/புத்தியும் ஒன்றாய் செயல்படாதபோது - மேற்குறிப்பிட்ட குழப்பங்கள் நேரும். ஆனால், செயல்வடிவம் பெற முனைவதற்கு முன் - எழும் அந்த பயமும்/அறம் சார்ந்த தெளிவும் - நிச்சயம், ஒருமுறையேனும் நிகழும். மனது சுட்டும் அந்த பயத்தைத் தாண்டி - ஒரு தவறை செய்வது அத்தனை எளிதல்ல - நிச்சயம், அப்படிச் செய்யும் துணிவு எனக்கு வருவதில்லை. பெரும்பாலும், எல்லாவிதமான தவறுகள் செய்யும்போதும்...

         நம்முள் மனதும்/புத்தியும் இந்த விவாதத்தை நடத்தும். சில தவறுகளை - மீண்டும், மீண்டும் செய்ய முனைந்து - ஒவ்வொரு முறையும், இறுதியில் அந்த திட்டம் கைவிடப்படும். அது, நம்மைச் சார்ந்தவர்களுக்கு - அது எதிர்மறை புரிதலைக் கொடுக்கும். நானும் அப்படி சில தவறை மீண்டும், மீண்டும் செய்ய நினைத்து - இறுதியில் கைவிடுவதுண்டு. அந்த தருணங்களில், நம்முடன் பயணப்படும் சிலர் - "நீ கையாலாகாதவன்!" என்று நேரடியாக கூட சொல்வர். அவர்கள் அப்படி சொல்வதன் காரணம் கூட நமக்கு தெளிவாய் புரியும். இருப்பினும், அந்த அற்ப-ஆசை "மனதளவில்" இருந்து - எளிதில் நம்மை விட்டு  நீங்குவதில்லை; ஆனால், அது தவறென புத்திக்கு நன்றாகத் தெரியும். இந்த சுழற்சி மீண்டும்/மீண்டும் நடக்கும். அம்மாதிரியான தவறுகளை செய்ய - மனது தூண்டும்போதே - உடனடியாய் அதைத் தடுத்து நிறுத்த  முயல்வதே சரியான நிலைப்பாடு. அந்த அற்ப ஆசைகள் எழும்போதெல்லாம் - அந்த தவறு சார்ந்த பயத்தையும்...

        அதனால் விளையும் "அறக்"கேட்டையும் உடனடியாய் நினைப்பதே - இதற்கு சரியான தீர்வு என்று நம்புகிறேன். இப்படி செய்யும்போது, அவ்வகை தவறுகள் சார்ந்த எண்ணம் அறுபடத் துவங்கும். இருப்பினும், அந்த அற்ப-தவறுகளின் ஆணிவேரான "ஆசை" அவ்வளவு எளிதில், முழுதாய் அறுபடுவதில்லை. இது, புத்திக்கும்/மனதுக்கும் இடையே நடக்கும் "அறப்போராட்டம்!". புத்திக்கு  தெரிந்தும், மனது கற்பிக்கும் அந்த தூண்டுதலை அழிப்பது; நம் மனத் திண்மையில்  தான் இருக்கிறது. அதனால் தான், மனதைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என, பல ஞானிகளும் அறவுரை(யாய்) சொல்கின்றனர்.  நம் பெருந்தகை சொல்வது போல் "உள்ளத்தால் உள்ளலும் தீதே!" என்பதே - சிறந்தது/உயர்ந்தது! களவு சார்ந்து மட்டுமல்ல; பல அறச் செயல்களையும் நம் பெருந்தகை "மனதளவில் கூட" தவறக்கூடாது என்றே வலியுறுத்துகிறார். புத்தியைக் கடந்து, மனதளவிலும் இதைத் தவறென்று உணர்வதைப் பழகிவிட்டால், பின் எந்த தவறையும்...

        செய்யமுடியாது.  பெரும்பான்மையில், பலரும் பல தவறுகளை மனதால் கூட நினைக்காத அறம் கொண்டிருப்பர். ஆனால், சில தவறுகளில் தான் இந்த தடுமாற்றம் நிகழும்; ஆனால், எதைக் காரணமாய் மேற்கோள் காட்டியும் - நாம் அந்தத் தவறை செய்ய முனைதல் கூடாது. இப்படியாய் யோசித்திக் கொண்டிருக்கும் போது; சரி... இம்மாதிரியான தவறுகளை செய்ய முனையும் போதெல்லாம் - பயம்தான் தடுக்கிறது என்பது உண்மையாயின், "அறத்தின் அடிப்படை - பயமா???" என்ற கேள்வி எழுந்தது; மனதும்/புத்தியும் ஒருசேர ஆம் என்றது. கடவுள் என்பதையும் வகுத்தவன் மனிதன் தான் என்பதில், எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நமக்கும் மேல் ஒரு உயர்சக்தி இருக்கிறது என்ற உணர்வை - கடவும் எனும் பெயரில் பயமாய் - விதைக்கப்பட்டதற்கு  இதுவே அடிப்படை என்ற பேருண்மை புரிந்தது. அப்படி கடவுள் என்ற பெயரில் - மனிதர்களுக்கு அறத்தைப் போதிக்கும் போது - அறத்தை மீறினால் கடவுள் என்ன செய்வார்?...

        என்ற எதிர்கேள்வி எழுந்திருக்க வேண்டும்! எனவே - தவறு செய்தால் கடவுள் கண்ணைக் குத்தும்/ இறுதித் தீர்ப்பு நாளில் தண்டனை கிடைக்கும்/நரகத்தை அடைவோம் - என்றெல்லாம் பல விளக்கங்களைப் பல பிரிவினரும் கொடுத்திருக்கக் கூடும். பின், நம்மையும் மீறி தவறு நேர்ந்துவிட்டால் என்ன செய்வது? - என்ற கேள்வி  எழுந்திருக்கும். கடவுள் எனும் பயத்தை விதைத்த மனிதனே - அதற்கும் "பாவ மன்னிப்பு/இறைவனை சரணடைதல்" - போன்றவற்றை பரிகாரம் என்று வரையறுத்து இருக்கவேண்டும். அதனால் தான், அறத்தை மீறுவதால் என்ன நடக்கும்? - என்பதற்கும் பயத்தை சார்ந்தே இங்கே விளக்கங்களும் உள்ளன. எனவே,  அறத்தின் அடிப்படை பயம்தான் என்பது மேலும் தெளிவாகிறது. அதனால்தான், அறம் சார்ந்த பயம் - வேதத்தால்/மதத்தால்/கடவுளால்/நன்னெறி-நூல்களால் - என பல வகையில் நமக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. இத்தனை இருந்தும் - பல தவறுகள்/குற்றங்கள் - நிகழ்கிறது என்றால்...

     புத்திக்கு தெரிந்த பயம், மனதிற்கு தெரியவில்லை என்பதே உண்மை. இந்த பயம் ஏன் விதைக்கப்பட்டது?! என்பதை "மனதாலும்" உணர்வதே முக்கியம்; அதுதான் பகுத்தறிவு! அதுதான் "மனி(தத்தி/தனி)ன்" அடிப்படை. அதே பகுத்தறிவின் அடிப்படையில் தான், பலரும் கடவுள் மறுப்பையும் வெளிப்படுத்துகின்றனர். கடவுளை நம்புவதோ; உயிர்சக்தியை நம்புவதோ; அல்லது கடவுளை(யே) மறுப்பதோ - ஒவ்வொருவரின் தனிப்பட்ட பகுத்தறிவு! நான் அதற்குள் நுழைய விரும்பவில்லை! ஆனால், அறமற்ற செயல்களைச் செய்ய முற்படும்போது - கடவுள்/உயிர்சக்தி/மனசாட்சி - இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகள் சார்ந்த பயம் எழவேண்டும். அந்த பயம் - "கடவுள்/உயிர்சக்தி கண்ணைக் குத்துமா? அல்லது மனசாட்சி நம்மைக் கொள்ளுமா??" - என்பது, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபடும். என்னளவில், கடவுள்/உயிர்சக்தி சார்ந்த எந்த பயமும் முதலில் எழுவதில்லை! என்னளவில்...

         என் மனசாட்சி தான், முதன்மை வகிக்கிறது. அதுதான், என்னை ஓயாமல் பயமுறுத்துகிறது. எவருக்கும் தெரியாமல் தவறை செய்தாலும்; அறத்தை மீறுவது தவறடா! என்று மனசாட்சி அதட்டுகிறது. இருப்பினும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டு - சிலநாட்கள் அல்லது சிலவாரங்கள் கடந்தாலும் - மீண்டும் அந்த அற்ப ஆசை, துரத்தும்; ஆசையின்பால் எழும் எண்ண-வடிவம்; பின், மனசாட்சியால் தடுக்கப்பட்டு, செயல்வடிவம் நிறுத்தப்படும். இப்படியாய், சில சுழற்சிகள் கடந்த பின் - மனம் அயர்ச்சி அடையும். பின், எண்ண-வடிவில் கூட; அந்த தவறை செய்யும் திட்டம் நிகழாது. இப்படியாய், பயத்தால் - செயல்வடிவம் நிறுத்தப்படும் போது - பலரும் விமர்சிப்பர்; உனக்கு தைரியமில்லை! - என்பதில் துவங்கி மேற்குறிப்பிட்டது போல் - "நீ கையாலாகாதவன்" என்ற விமர்சனமும் எழும். அதையெல்லாம் தாண்டி, மனதை ஒருமுகப் படுத்தவேண்டும். அறத்தை மீறிய செயலைச் செய்ய - கையாலாகாத இயல்புதான் தடுக்கிறது எனில்...

கையாலாகாதவனாய் இருப்பதில் - எந்த குற்றவுணர்வும் தேவையில்லை!!! 

பின்குறிப்பு: அட... அட... அட..! என்னவொரு அற்புதமான ஆச்சர்யம்?! வழக்கம் போல், முதல் வடிவத்தை எழுதிவிட்டு; அதற்கு தொடர்புடைய கருத்துப்படத்தைத் தேடிய போது - மிகச்சரியாய், இந்த தலைப்பிற்கேற்ற ஒரு கருத்துப்படம் கிடைத்தது (மேலுள்ள கருத்துப்படத்தைப் பாருங்கள்). அதைப் பார்த்தபின் - அறத்தின் அடிப்படை பயம்தான்! - என்ற தெளிவு மேலும் வலுப்பெற்று இருக்கிறது.              

3 கருத்துகள்:

  1. very wrong. all indian kings followed Aram even under most troublesome times. example Harichandran Arichandran kadhai. His Moral Value was to speak Truth always. He met lot of troubles, lost kingdom, he had none to fear for except his own conscience and God.
    Fear of God is Aram. Fear of Conscience is Aram.
    Fear of Karma Vinai is Aram.
    Thevaram lines tell us =
    "Aram Paavam ennum Arum Kayirral Katti"
    Purandhol Engum Puzhu Alukku Moodi
    Means, all Atmas Humanity are tied with Punyams, Papams.
    Sanjitha Karma, Prarptha Karma, PAzha Vinai, Oozh Vinai.
    Kindly amend your blog.
    Dont Follow western scientists, philosophers = they dont know what we know. we in the east have known a lot.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதற்கன் உங்கள் கருத்திற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் கருத்தில் - எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

      என்னுடைய நட்பு சிலர் சொன்னது போல், நீங்களும் தவறாய் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றே நம்புகிறேன்.

      நீங்களே "மிகத்தெளிவாய் சொல்லி" ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் - கடவுளுக்கு பயப்படுவதும்; மனசாட்சிக்குப் பயப்படுவதும்; மற்றும் "செய்யும் வினை(கர்மா)களுக்கு பயப்படுவதும் - அறம் என்று!

      பின் ஏன் இந்த குழப்பம்?! சரி, பின்வரும் விளக்கம் உங்களுக்குப் போதுமானதாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

      இங்கே, மனிதர்களை மூன்று விதமாய் பிரிக்க விரும்புகிறேன்:

      1. முதல் வகை: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வகையினர். அவர்களுக்கும் கூட, நீங்களே சொன்னது போல் "கடவுள்/மனசாட்சி/கர்மவினை - இப்படி ஏதோ ஒன்றின் மீதான பயமே" - அறத்தின் அடிப்படை ஆகிறது. உண்மைதானே?! இந்த பிரிவினர் "எந்த நிலையிலும்" அறத்தை மீறாத ஒழுக்கமும்/மன-உறுதியும் கொண்டோர். அவ்வகை மனிதர்கள் - இப்போது "மிக மிக" அரிது (ஏன், எவரும் இல்லை என்றே கூட சொல்லலாம்!). அதைப் பற்றிய விவாதம் "இங்கே" வேண்டாம். இந்த தலையங்கம் அது சார்ந்ததும் அல்ல!

      2. இரண்டாவது வகை: அறம் என்ற ஒன்றைப் பற்றி எந்த சிந்தனையும்/புரிதலும்/பயமும் இல்லாதோர்! அவர்களுக்கு அறம் பற்றிய எந்த அக்கரையும் இருப்பதில்லை. அவர்களைப் பற்றியும் இங்கே நான் பேசவில்லை - அது தேவையுமில்லை. இதில், அறம் பற்றிய சிந்தனையும்/அறிவும் இருந்தும் - தெரிந்தும்; மனசாட்சிக்கு தெரிந்தே - மீறுவோரும் அடக்கம். இவர்களுக்கு "எதை சார்ந்த பயமும் இருப்பதில்லை!". இவர்களுக்கு "அறத்தின் அடிப்படையான (கடவுள்/மனசாட்சி/கர்ம-வினை சார்ந்த) பயம்" இல்லாதது தான் - அறத்தை மீறக் காரணமாக அமைகிறது.

      3. மூன்றாவது வகை: அறம் பற்றிய சிந்தனையும்/புரிதலும்/அறிவும் இருப்போர் - அதனால், பல அறமீறல்களையும் தவிர்த்து வாழ்வோர். இருப்பினும் - இந்த வகை பிரிவினர் சூழல்/அபத்தமான ஆசை போன்ற காரணிகளால் (இதை நியாயப்படுத்தவில்லை!) - சில தவறுகளை செய்ய முற்படுவர். - இந்த வகையினர் தான் - பெரும்பான்மையான நாம் அனைவரும்!!!!!!!!! அவர்களுக்கு - சில குறிப்பிட்ட செயல்கள் - "அற மீறல்" என்பது தெளிவாய் தெரியும்; அவர்களின் புத்திக்கு மிகத்தெளிவாய் தெரியும். இருப்பினும், மனது அவர்களை வற்புறுத்தும். செய்யடா! பார்த்துக் கொள்ளலாம் என்று உந்தும். அப்படி செய்ய முனையும் போது - அவர்களுக்குள் இனம் புரியாத பயம் வரும். அதற்கு - கடவுள் தண்டிப்பார் என்ற பயமும் காரணமாய் இருக்கலாம் (அல்லது) மனசாட்சி தண்டிக்கும் என்ற பயமும் காரணமாய் (அல்லது) கர்மவினைகள் தண்டிக்கும் என்ற பயமும் காரணமாய் இருக்கலாம் (அல்லது) சட்டம் தண்டிக்கும் என்ற பயமும் காரணமாய் இருக்கலாம். "எது காரணம்?!" என்பது இங்கே இரண்டாம் பட்சமாய் வருகிறது; ஆனால், எதையோ சார்ந்த "பயம் தான்" அவர்களைத் தடுக்கும். இந்த அடிப்படையில் தான், இவர்களை மையப்படுத்தி தான் - இந்த தலையங்கத்தை எழுதி இருக்கிறேன்.

      - எந்த வகைப் பிரிவினராய் இருப்பினும் - பயமே (கடவுள்/மனசாட்சி/கர்மவினை/சட்டம் - எதை சார்ந்தும் இருக்கலாம்!) அறத்தின் அடிப்படையாய் இருப்பதை இப்போது உணரலாம்.

      முதல்/மூன்றாம் வகையினருக்கு "பயம் இருப்பதால்" அறம் காக்கப்படுகிறது!
      இரண்டாம் வகையினருக்கு "பயம் இல்லாததால்" அறம் மீறப்படுகிறது!!

      எனவே, எந்த வகையில் பார்ப்பினும் - அறத்தின் அடிப்படை "ஏதோவொரு" பயமாகத்தான் இருக்கிறது.

      "கடவுள் என்பதே கற்பிக்கப்பட்டது என்பதால்" - எனக்கும் கடவுள் பக்தி இருப்பினும்; நான் கடவுளை ஒரு உயர்சக்தி என்பதாய் மட்டுமே பார்ப்பதால் - கடவுள் தண்டிப்பார்! என்ற மாயையான-நம்பிக்கை எனக்கில்லை. என் கடவுள் சார்ந்த நம்பிக்கை வேறு; கடவுள் தண்டிப்பாரா?! என்ற கேள்வி வேறு.

      என்னளவில் முக்கியமான "அறம் சார்ந்த அடிப்படை பயம்" - 1. என் மனசாட்சி 2. ஒவ்வொரு வினைக்கும் - எதிர்வினை உண்டு என்ற கோட்பாடு (கர்மவினை) மற்றும் 3. சட்டம் - இந்த வரிசையிலேயே எழுகிறது.

      காரணம் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆனால் "அடிப்படை பயம் மட்டுமே!".

      இதை இந்த தலையங்கத்தின் தொடர்ச்சியாய் (இரண்டாம் பாகமாய்) முடிவெடுத்து நாட்கள் பலவாகின்றன. நேரமின்மையால், செய்ய முடியவில்லை. உங்களின் கேள்வி என்னை - கிட்டத்திட்ட அந்த தலையங்கத்தை எழுதியது போன்ற அளவில் பதிலளிக்க வைத்திருக்கிறது. அதற்காய், மீண்டும் ஓர்முறை - உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      நீக்கு
    2. \\\\ Dont Follow western scientists, philosophers = they dont know what we know. we in the east have known a lot. ////

      நன்றி.

      மேற்கத்தியரோ/நம்மவரோ - எவரையும் நான் அப்படியே பின்பற்றுவதில்லை! எவர் என்ன சொன்னாலும்; என் தேடல்/புரிதல் அடிப்படையிலேயே "என் பயணம்" தொடர்கிறது.

      எவரையும்/எதையும் - முழுமையாய் ஆதரிப்பதுமில்லை! மறுப்பதுமில்லை!!.

      நன்றி. :)

      நீக்கு