சனி, ஜூலை 02, 2016

ஒரு கொலையைத் தடுக்க/தவிர்க்க மறுப்பதன் பின்னணி என்ன???


      சமீபத்தில், சென்னையில் ஓர் இளம்பெண் பகலில் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே! வழக்கம் போல், அந்த பெண்ணின் நடத்தைப் பற்றி - சில புல்லுருவிகலும்; நடந்த கொலைக்கு "சாதிச் சாயம்" பூச - சில புல்லுருவிகளும் - முயன்று கொண்டிருக்கும் அவலங்கள் ஒருபுறம் இருக்கட்டும். காரணம் என்னவென்பது முக்கியமே இல்லை; காரணத்தைக் கண்டுபிடிப்பதால் - அந்தப் பெண் திரும்ப வரப்போவது இல்லை. அதுபோல், ஒரு சகமனிதனை கொலை செய்வது நியாயமா? என்ற அறம்சார்ந்த விடயத்திற்கு உள்ளேயும் நான் போக விரும்பவில்லை. ஒரு விலங்கைக் கொல்வது கூட தவறு என நம் வள்ளுவப் பெருந்தகை "புலால் மறுத்தல்" என்ற அதிகாரத்தில் சொன்ன கருத்து சார்ந்த ஓர் விவாதத்தை, நேற்று தான் ஒரு தலையங்கமாய் எழுதி இருந்தேன். இந்த தலையங்கத்தில் - என்னுடைய பார்வை, தொடர்வண்டி நிலையம் போன்ற - பொதுமக்கள் பலரும் கூட்டமாகப் புழங்கும் ஓரிடத்தில்...

       "ஒரு தனிமனிதன் எப்படி இப்படியோர் கொலையைச் செய்துவிட்டு மிக எளிதாய் பலரின் முன்னிலையில் தப்பிச் செல்லமுடிகிறது?" என்பதே. வெகுநிச்சயமாய் "அங்கு கூடியிருந்த ஒருவருக்கு கூட மனிதமே இல்லை!!!" என்ற கூற்றை நான் அறவே மறுக்கிறேன். அந்த அளவில் மனிதம் மரித்துவிட்டதாய் நான் உணரவில்லை! ஏனெனில், அத்தனை கூட்டம் இருந்ததாய் சொல்லப்படும் ஒரு சூழலில் - கூலிப்படை அல்லாத ஒரு சாதாரண தனிமனிதனை - தடுத்து நிறுத்துவது ஒரு பெரிய விடயமே அல்ல! அப்படி எனில், ஏன் அந்தக் கொலை தடுத்து நிறுத்தப்படவில்லை! பலரையும் போல் "அங்கு கூடியிருந்தோரைக் குறை கூறும் மனநிலை எனக்கும் இருக்கிறது; அதுபோல், பலரையும் போல் நான் அங்கு இருந்தால் நிச்சயம் ஏதேனும் செய்திருப்பேன்!!" என்ற எண்ண ஓட்டமும் இருக்கிறது. அப்படியோர் சூழலில், நான் என்ன செய்திருப்பேன்? என்பதை அப்படியோர் சூழல் வரும்போதுதான் சரியாய்... 

    கணிக்கமுடியும். அதுவரை, நான் அதைத் தடுக்க முயன்றிருப்பேன்! என்ற நம்பிக்கை தொடரட்டும். அம்மாதிரி ஓர் சூழலே வராத சமுதாயம் உருவாகவேண்டும் என்பதே, என் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால், அப்படி ஒருவேளை நடந்தால்... என்ன செய்யவேண்டும்?! ஏன் செய்யமுடியவில்லை?! என்பதை அலசவே இந்தப் பதிவு. ஏனெனில், இதை நாம் ஒவ்வொரு தனிமனிதனாய், நம் கடமையாய் எண்ணி செய்யாதவரை "குற்றமற்ற சமுதாயம்" உருவாகவேண்டும் என்பது ஒரு கனவாகவே தொடரும். சடடம்/ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது என்ற "அரசியல் ஆதாயம் தேடும் சிலரைப்போல்" நான் இந்தக் கொலையை காவல்-துறையைக் கண்டித்து; ஆளும்-கட்சியை விமர்சிக்க விரும்பவில்லை. அப்படியெனில், ஆயிரமாயிரம் பொதுமக்கள் நிம்மதியாய்/சுதந்திரமாய் இப்படி இன்னமும் வீட்டுக்கு வெளியே உலவிக்கொண்டு இருக்கமுடியாது. சட்டம்-ஒழுங்கு 100 விழுக்காடு சரியாய் இருக்கிறது என்பது(ம்)...

           என்னுடைய வாதம் அல்ல! அதுபோல், மிகக் கடுமையான சட்டதிட்டங்கள் உள்ள நாடுகளில் கூட, இம்மாதிரியான குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன! இருப்பினும், காவல்துறை மேல் பொதுமக்களுக்கு இருக்கும் "பயத்தை" நான் மறுக்க விரும்பவில்லை. காவல்துறை மேல் இருக்கும் பயம், மற்றும் நீதிமன்றத்துக்கு அலையவேண்டி இருக்கும் என்ற கவலை காரணமாகத்தான் - இப்படி ஓர் கொலை தடுக்க/தவிர்க்க மறுக்கப்படுகிறது! என்பதை நான் உணர்கிறேன். சரி, இந்த பயங்களுக்கு என்ன காரணம்? நடைமுறை வாழ்வில், எத்தனை சாமான்யர்கள் - இதுமாதிரி காவல்துறை/நீதித்துறையால் அலைக்கழிக்கப் படுகிறார்கள்?! என்றால்; இங்கே, நூற்றில் ஒருவருக்கு கூட அந்த அனுபவம் இருக்காது! ஏன், நம் சுற்றத்தில் அப்படி எவரும் ஆராய்ந்தால் கூட - நம்மில் பலருக்கும் - ஒரு அனுபவம் சார்ந்த உண்மை தெரியாது. ஆனால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் - இந்த பயம் இருக்கத்தான் செய்கிறது.

      பின்னெப்படி இந்த பயங்கள் விதைக்கப்பட்டன?! என்று யோசித்தால் மூன்று விடயங்கள் முதன்மை வகிக்கின்றன. 1) எவரோ ஒருவர் தன் அனுபவித்ததை - பிறருக்கு இயல்பாய் சொல்ல; அது, மனித இயல்புகளில் ஒன்றான "புரளியா(ய்/ல்)" பன்மடங்கு உயர்ந்து மற்றவரை அடைவது ஒருவகை. 2) அளவுக்கதிகமான கற்பனைகள் அடங்கிய, குற்றவியல் சார்ந்த நாவல்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதாய் உணர்கிறேன். 3) இது தான் மிகமுக்கியமாய் படுகிறது: திரைப்படம் போன்ற காணொளி ஊடகங்கள்! இவற்றில், மிகப்பெரும்பான்மையான மிகைப்படுத்தல் காடசியமைக்கப் படுகிறது. இதைப் பலரும் உணர்வதேயில்லை! எனவே தான், எல்லோரும் பாராட்டிய "விசாரணை" என்ற தமிழ்த் திரைப்படம் என்னை சிறிதும் கவரவில்லை! அந்தப்படத்தைப் பற்றி ஓர் விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்தது; நேரமின்மையால் அதை இன்றுவரை செய்யவில்லை. என்னளவில், விசாரணை என்ற அந்த திரைப்படம் - சமுதாயத்தின்...

         தன்மையைக் குலைக்கும் - ஓர் குப்பை! அதில் உண்மையே இல்லை எனவில்லை! ஆனால் - இரண்டு மாநிலங்களில் இருக்கும் எல்லா காவல் நிலையங்களில் இருக்கும் எல்லாக் காவலர்களும் தீயவர்கள்!; நட்சத்திர அந்தஸ்த்துள்ள ஒரேயொரு நடிகர் தான் உண்மையான காவலர்! என்ற காடசியமைப்பு - மிகப்பெரிய சமூக அநீதி. திரைப்படம் என்ற மாபெரும் சக்தியின் மகிமையை உணர்ந்தவர்கள், இம்மாதிரி சமூக அக்கறையில்லாமல் - காவல்துறையை களங்கப்படுத்துவது பேர்கொடுமை! அந்தப் படத்தைப்  பலரும் கொண்டாடியதே - "எந்தவொரு சொந்த நடைமுறை அனுபவமும் இல்லாமல்" - பலரும் காவல்துறை மேல் பயத்தில் இருப்பதற்கு ஒரு சான்று. நாம் ஒவ்வொருவரும், நம் கிராமம்/நகரம்/பெருநகரம் இவற்றில் இருக்கும் காவல்-நிலையத்தை பல நாட்கள் கடந்தே செல்கிறோம். அப்படி எல்லா காவல் நிலையங்களும், தினம் தினம் அப்பாவிகளை அலைக்கழிப்பதாய் நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை! ஆனால்...

     காவல் நிலையத்தைக் காண்பதைக் கூட தவிர்த்து நடப்போரே நம்மில் அதிகம்! காவல் நிலையத்தின் வாசலை மிதிப்பதைக் கூட குற்றமாய் பார்க்கும் மனநிலையே நம்மில் பலருக்கும் இருக்கிறது! அதனால் தான், அப்படி எவரும் காவல் நிலையம் சென்றுவந்தால் - அவரை, இந்த சமுதாயம் குற்றவாளி போல் பார்க்கிறது. எந்தவொரு நடைமுறை அனுபவமும்; சரியான கேள்வி-அறிவும் இல்லாமல், இந்த பயம் எப்படி சாத்தியமானது? சரி, இதை எப்படி களைவது? மற்றவர் மேல் பழி போடுவதை விட்டுவிட்டு; நாம் ஒவ்வொருவரும் தனிமனிதனாய் இல்லாமல் போனாலும்; கூட்டமாக சேர்ந்தாவது இந்த பயத்தை அழிக்கவேண்டும்! எவருக்குமே விருப்பம் இல்லை எனினும், இம்மாதிரியான துரதிஷ்ட்டவசமான சம்பவங்கள் நேர்ந்தால், நாம் கூட்டமாய் சேர்ந்து தடுக்க முனையவேண்டும். அப்போது, காவல்துறையோ/நீதித்துறையை எந்த அநீதியையும் இழைக்க முடியாது! அதைத்தான், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில்...

     "அரசியல் ஆதாயம் தேடும் கயவர்கள்" மற்றும் சாதி/மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கீழ்த்தரமானவர்கள் செய்கிறார்கள். ஒரு தனி மனிதனின் பயம் - பல தனிமனிதர்கள் சேரும்போது - உயர்-சக்தியாய் உருப்பெறும் - என்பதற்கு தவறானவர்கள் எனினும், அவர்களே சான்றாகிறார்கள். சரி, இதை எவர் செய்வது? எவர் முதலில் வருவது? - நல்ல கேள்விதான்! நம் ஒவ்வொருவருக்கும் "ஹீரோவாய்/ஹீரோயினாய்" ஆகவேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும். இம்மாதிரியான துரதிஷ்ட்டமான நிகழ்வுகளின் போது - அதை நிஜமாக்க முனையவேண்டும். எவரோ முன்வருவர்... நாம் பின்தொடரலாம் என்பதை விட்டுவிட்டு - நாமே முன் செல்லவேண்டும்! எவர்பின்னேயும் நாம் தொடர காத்திருக்காமல்; நாம் முன்சென்றால் பலர் பின்வருவர் என்ற எண்ணம் வரும். இந்த தயக்கத்தால் தான், அரசியலில் கூட வேறெவரோ வந்து அதிசயம் நிகழ்த்துவர் என்று எதிர்பார்த்து/ஏமாற்றமடைந்து காத்திருக்கிறோம்! குறைந்தது, இம்மாதிரியான சூழலிலாவது...

         நாம் முதல் அடியெடுத்து வைக்கவேண்டும்! இல்லையேல்... அரசியல்வாதிகள் போல்; நாமும் மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டுதான் இருக்கப் போகிறோம். உணர்வுப்பூர்வமான கேள்வி எனினும், பின்வருவதைக் கேட்கத்தான் வேண்டும்: நமக்கோ அல்லது நம்மைச் சார்ந்தவருக்கோ - இப்படியோர் நிலை வந்தால் - நாம் ஒரு சிறு-துரும்பையாவது அசைக்கமாட்டோமா?! நாம் அப்படி செய்யவில்லை எனில்; நாமில்லாத போது, நம்மைச் சார்ந்த ஒருவருக்கு இந்நிலை வந்தாலும் - பலரும் மவுனித்துதான் இருப்பர். இதைத்தான் கிராமத்தில் கூட வழக்குமொழியாய் "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்; தன்பிள்ளை தானே வளரும்!" என்று சொல்வர். அந்த வழக்குமொழியின் அடிப்படை இதுதான்: நாம் முன்னடி எடுத்து வைத்து, நமக்கு சம்மந்தமே இல்லாதவர் (அதாவது ஊரார்) ஒருவரின் கொலையைத் தடுத்தால்; நமக்கு வேண்டியவர் (தன்பிள்ளை) ஒருவருக்கு அப்படி நேர்ந்தால் இன்னொருவர் (ஊரார்) முன்னடி எடுத்து வைப்பர்.

பிறரையே (குற்றம்சாட்டி/எதிர்பார்த்து) கொண்டிருக்காமல்...
நம்மால் இயன்றதை முதலில் செய்வோம்!!!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக