வெள்ளி, ஜனவரி 13, 2017

அதிகாரம் 053: சுற்றந்தழால் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053: சுற்றந்தழால்

0521.  பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் 
           சுற்றத்தார் கண்ணே உள

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் எல்லாவற்றையும் இழந்த பின்னும், அவருடனான கடந்தகால
           அனுபவங்களைப்; பாராட்டி வலிமையூட்டும் சிறப்பு, சுற்றத்தாரிடம் உண்டு.
(அது போல்...)
           ஓர்தலைவர் உயிரோடு இல்லாத போதும், அவருடைய முந்தைய ஆட்சியை; மெய்சிலிர்த்து
           நினைவூட்டும் இயல்பு, சமுதாயத்தில் இருக்கும்.
      
0522.  விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
           ஆக்கம் பலவும் தரும்

           விழியப்பன் விளக்கம்: குறையற்ற அன்புடைய சுற்றம், ஒருவருக்கு கிடைக்குமானால்;
           எல்லாவிதமான செல்வங்களும், குறைவில்லாத வளர்ச்சியுடன் தொடரும்.
(அது போல்...)
           மாசற்ற வாய்மையுடைய குடும்பத்தலைவர், ஓர்குடும்பத்தை வழிநடத்தினால்; அனைத்து
           பண்புகளும், அழிவில்லாத நிறைவுடன் இருக்கும்.
           
0523.  அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
           கோடின்றி நீர்நிறைந் தற்று

           விழியப்பன் விளக்கம்: உறவுகளும்/நட்புகளும் சுற்றியிருக்க, அவர்களுடன் உறவாடி
           வாழாதோரின் வாழ்க்கை; சுற்றுக்கரை இல்லாத குளத்தில், நீர் நிறைந்திருப்பதைப்
           போன்றதாகும்.
(அது போல்...)
           எண்ணமும்/செயலும் ஒருமுகப்பட்ட, அவற்றை அலசி ஆராயாதோரின் செயல்பாடு;
           உயிர்ப்பு இல்லாத நிலத்தில், விதைகளை விதைப்பதற்கு ஒப்பாகும்.

0524.  சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
           பெற்றத்தால் பெற்ற பயன்

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் பெற்றிருக்கும், செல்வத்தின் உண்மையான பயன்; அவரின்
           உறவு மற்றும் நட்புகளால், சூழப்பட்டு வாழ்வதில் இருக்கிறது.
(அது போல்...)
           ஒருவர் பெற்றிருக்கும், பிறவியின் நிறைவான பயன்; அவரின் எண்ணம் மற்றும் செயலில்,
           பொதுநலத்தைச் சேர்ப்பதில் இருக்கிறது. 

0525.  கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
           சுற்றத்தால் சுற்றப் படும்

           விழியப்பன் விளக்கம்: இருப்பதைப் பகிர்வது/இன்மொழியில் பேசுவது - இரண்டையும்
           பழகினால்; பெருகிடும் சுற்றம், எப்போதும் சூழ்ந்து இருக்கும்.
(அது போல்...)
           நல்லதைச் செய்வது/எளிமையாய் இருப்பது - இரண்டையும் செய்தால்; நிறைந்த
           தொண்டர்கள், எக்காலமும் தொடர்ந்து வருவர்.

0526.  பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
           மருங்குடையார் மாநிலத்து இல்

           விழியப்பன் விளக்கம்: அதீதமாய் கொடையளித்து/சினம் இல்லாமலும் - இருப்போரை
           விட; பெருமளவு சுற்றமுடையவர், விரிந்த உலகத்தில் மற்றொருவர் இல்லை.
(அது போல்...)
           ஓயாமல் உழைத்து/குடும்பத்தைப் பிரியாமலும் - வாழ்வோரை விட; சுதந்திரமான
           சூழலுள்ளோர்; அகண்ட அகிலத்தில் வேறொருரவர் இல்லை.

0527.  காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
           அன்னநீ ரார்க்கே உள

           விழியப்பன் விளக்கம்: மறைக்காமல் - கிடைப்பதைப் பகிர, சுற்றத்தாரை அழைக்கும்
           காக்கையின்; பகிர்ந்தளிக்கும் குணமுள்ளவரையே, செல்வமும்/புகழும் சென்றடையும்.
(அது போல்...)
           மறுக்காமல் - பயின்றதைப் பயிற்றுவிக்க, மாணவர்களைச் சேகரிக்கும் ஆசிரியரின்;
           பயிற்றுவிக்கும் முனைப்புடையவரையே, கல்வியும்/ஞானமும் சேரும்.

0528.  பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
           அதுநோக்கி வாழ்வார் பலர்

           விழியப்பன் விளக்கம்: எல்லோரையும் சராசரியாய் பார்க்காமல், ஒவ்வொருவரின்
           தனித்திறனையும் - மன்னன் ஆய்ந்தறிந்தால்; அவ்வியல்பைப் பாராட்டி, பற்பலர்
           சுற்றிவாழ்வர்.
(அது போல்...)
           எல்லாவற்றையும் ஒன்றாய் பாவிக்காமல், ஒவ்வொரு தனித்துறையையும் - கல்வி-
           நிறுவனங்கள் மேம்படுத்தினால்; அவ்வாய்ப்பைக் கொண்டு, பல்துறையினரும் பயனடைவர்.

0529.  தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
           காரணம் இன்றி வரும்

           விழியப்பன் விளக்கம்: சுற்றத்தாருள் ஒருவராய் இருந்து, நம்மைப் பிரிந்து சென்றவர்;
           பிரிந்து சென்றதற்கான காரணம், தவறென உணரும்போது - மீண்டு(ம்) வருவர்.
(அது போல்...)
           பதவிகளில் ஒன்றைக் கொண்டிருந்து, கட்சியைப் பிரிந்து சென்றவர்; பிரிந்து சென்றதன்
           விளைவு, பாதகமென உணர்ந்தால் - மீண்டு(ம்) இணைவர்.

0530.  உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
           இழைத்திருந்து எண்ணிக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: காரணமின்றி பிரிந்து, காரணத்தோடு மீண்டும் வருவோரை;
           அரசாள்பவர் - ஆராய்ந்து அறிந்தபின், சுற்றத்தில் இணைத்துக் கொள்ளவேண்டும்.
(அது போல்...)
           பணத்திற்காக விலகி, பணத்திற்காக இணைய வருவோரை; நிர்வாகத்தினர் - தீர்க்கமாய்
           ஆராய்ந்தபின், பணியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக