வெள்ளி, ஆகஸ்ட் 07, 2015

இருள்சேர் இருவினை (குறள் எண்: 0005)...



        குறள் எண் 0005-ற்கான என் விளக்கவுரையைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதுவரை எழுதியுள்ள 5 விளக்கவுரையில் இக்குறள் முதல் சவால். "இருள்சேர் இருவினை" என்றால் என்ன? என்று யோசிக்க ஆரம்பித்தேன். பார்க்கும்போது/படிக்கும்போது விளக்கம் நேரடியாய் இருப்பது போல் தோன்றும்; அதிலிருக்கும் கருத்தாழம் எளிதில் விளங்காது. பெரும்பாலான விளக்கவுரைகள் - நல்வினை/தீவினை என்ற இரண்டு வினைகள் - என்ற பொருளிலேயே இருக்கின்றன. எனக்கென்னவோ "இரு(இரண்டு) வினை" என்ற பொருளில் சொல்லப்படவில்லை என்றே தோன்றுகிறது. மேலும் மேலும் தேடினேன்; ஒரு விளக்கவுரையில் "இருளில் கிடப்பது கயிறா/பாம்பா எனும் குழப்பம் போல்" என்று கூறப்பட்டிருந்தது. அப்போது ஒரு பொறி தட்டியது! அதாவது நன்று/தீது மட்டுமல்ல; சரி/தவறு; நியாயம்/அநியாயம்; விருப்பு/வெறுப்பு - போன்றவை யாவும் ஒரே வினையின் (செயலின்) இருவிதமே என்பது புரிந்தது.

          எனவே நம் பெருந்தகை கூற விழைவது எந்த ஒரு வினையின் இருவிதமும் என்ற பொருளில் என்று புரிந்தது. ஆம்! அதனால் தான் "இருவினை" என்று கூறப்பட்டு இருக்கவேண்டும். நான் அடிக்கடி குறிப்பிடுவது போல், பொதுவான உவமானங்கள் தான் நம் பெருமறையின் மிகப்பெரிய தனித்திறன் - அதனால் தான் அது பொதுமறை ஆனது. இப்படிப்பட்ட புரிதல்களைப் பார்ப்பதே என் விளக்கவுரையின் முக்கிய நோக்கம். எனவே இக்குறளுக்கு "இறைவனின் புகழைப் பகுத்தறிந்து பரப்புவோரை; நன்று/தீது போன்ற எந்த இருவினை குழப்ப-இருளும் சூழாது" என்று பொருள் சொன்னேன். வழக்கம் போல், என் பார்வையில் "மெய்ப்பொருள் காணும் சான்றோரை; மின்னுவது பொன்னா? இல்லையா?? என்பது போன்ற எந்த சந்தேக-இருளும் சூழாது" என்று இன்னுமோர் விளக்கம் கொடுத்தேன். ஏனிந்த விளக்கவுரை என்று முன்னர் கொடுத்த விளக்கத்தை தொடர்ந்து நியாயப்படுத்துவதும் என் கடமை. உங்கள் அனைவரின் அன்பு-ஆதரவுடன்...

என் விளக்கவுரைப் பணி செவ்வனே தொடரும் என்று திடமாய் நம்புகிறேன்!!!


பின்குறிப்பு: இப்படி ஒரு விளக்கத்தை உணர்ந்து இப்பதிவை எழுதிய பின்னரும் ஒரு ஐயம் ஏற்பட்டது. பின், என்னப்பனை அலைபேசியில் அழைத்து, சுருக்கமாய், திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதும் முயற்சியை சொன்னேன்; அகமகிழ்ந்தார். என் தமிழுக்கும் அவர்தானே வித்திட்டார்! அம்மகிழ்ச்சி இருக்கும் தானே? பின்னர் "இருள்சேர் இருவினை" பற்றிய என் புரிதலை சொன்னேன்; அவரும் ஒப்புக்கொண்டார். பின்னர், ஒரு தைரியம் பிறந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக