திங்கள், ஆகஸ்ட் 24, 2015

என்னுடைய தேவை எது? எவர் நிர்ணயிப்பது??         என்மகளைப் பிரிந்து, நான் இங்கே தனித்திருக்க காரணம் - என்னுடைய பொருளாதாரத் தேவை என்பதை பலமுறை பதிந்திருக்கிறேன். ஆனால், சமீப காலமாய் "என்னுடைய தேவை எது? எவர் நிர்ணயிப்பது??" என்ற கேள்விகள், குழப்பங்கள். உண்மையில், என்னுடைய தேவை எது என்பதை சரிவர நிர்ணயிக்க எனக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது; பலவற்றை புரிந்து கொள்ள வேண்டியிருந்தது! எப்போதும், என்னுள் இருக்கும் ஒரேயொரு வைராக்கியம்: என்னப்பனின் கடனால் நான் இப்படி தனித்திருப்பது போல் - எந்த நிலையிலும், என்மகளுக்கு அப்படி நேரக்கூடாது என்பதே. ஆம், அதற்காகத்தான் அத்தனையையும் தாங்கிக்கொண்டு; நான் இங்கே தனித்திருக்கிறேன். அவளுக்கு "பணம் என்ற காகிதக் குப்பையின்" பின்னால் சென்று; வாழ்வின் மற்ற அழகியல்களை அனுபவிக்க-முடியாத நிலை வரவே கூடாதென்ற திண்ணம். இங்கே சமுதாய சூழலையும் ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது. தான் சம்பாதிப்பது தனக்கும்...

           தான் சார்ந்த "உடனடி (Immediate)"குடும்பத்திற்கு மட்டுமே! என்ற இயல்பு-நிலை - இங்கே பலருக்கும் இல்லை. அப்படி இருக்குமானால்; எல்லோர் வாழ்வும் இன்ப-மயமாய் இருக்கும். அப்படியோர் நிலை இங்கேயில்லை என்பதால்தான், மேலைநாடுகளைப் பார்த்து நாம் "மயங்கிப்" போகிறோம்! அங்கே, எவரும் - தம் பிள்ளைகளுக்காகக் கூட - சம்பாதிப்பதே இல்லை. பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான்; பெற்றோர் நிழலில்! பின்னர், அவர்கள் தனித்து விடப்படுவர். அதனால் தான், அங்கே உறவுகள் அவ்வளவு அற்புதமாய் இருக்கிறது. அங்கே, நம் மனிதமற்ற அரசியல்வாதிகள் போல், எவரும் "அறிவிலித்தனமாய்" 20-தலைமுறைகளையும் தாண்டி சொத்து சேர்ப்பதில்லை! அதில், அர்த்தமே இல்லை என்பதை அவர்கள் நன்கறிவர். நம் நாட்டில் மட்டுமே இப்படியொரு சமமின்மை!!! ஒருவேளை சாப்பாட்டிற்கே கடினப்படுவோரும் உண்டு! 20-தலைமுறைக்கு மேலும் சொத்து சேர்ப்பவரும் இங்குண்டு!! அரசியல்வாதிகள் மட்டுமல்ல...

          ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள்/சொத்துகள் வைத்திருக்கும் மத்தியத்தர வர்க்கம் முதல் - எல்லா நிலையிலும் இந்த சமமின்மை இருக்கிறது. இவற்றுக்கு அரசாங்கத்தை (மட்டும்) குறை கூறி பயனில்லை; ஏனெனில் - ஒரே வீட்டில்; ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகளிடையேயும் - இந்த சமமின்மை உண்டு. எனவே, அரசாங்கம் மட்டும் இதற்கு பொறுப்பல்ல! எங்கள் மூவரையும் எந்த குறையும்/வேறுபாடும் இல்லாமல் தான் என்னப்பன் வளர்த்தார். ஆனால், விதியுடன் என் திறமையும் சேர; நான் மட்டும் நன்கு-வளர்ந்து ஒரு சமமின்மையை உருவாக்கிவிட்டேன். அதில் என் பங்கும் உண்டென்றே கருதுகிறேன். என்னவளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியில் இன்று வரை நிறைவேறாத ஒன்றேயொன்று - வீடு வாங்குவது. இன்றே கூட, வங்கிக்கடன் வாங்கி அதை நிறைவேற்றமுடியும். ஆனால், அப்படி கடன் வாங்கி இன்றைய வாழ்வை; தொலைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மேலும், அது இன்னுமொரு சமமின்மையை, என்கடனால்...

        என்மகள் மூலம் உருவாக்கிட வழிவகுக்கும்; அதிலும் எனக்கு உடன்பாடில்லை! வீடைக் கேட்டு துன்புறுத்தாத என்னவளின் நிலைப்பாடும் அதற்கு பேர்துனை; அவளுக்கு என் சூழலும்/முடிவும் நன்கு தெரியும். சரி, வீட்டைத் தவிர; எனக்கு வேறென்ன தேவை? இதுவரை என்னவளின்/என்மகளின் மற்ற எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தது போல்; இனியும் செய்யவேண்டும் - அதற்கான தேவை. சரி, மேலும்? அடுத்த முக்கியமானது; இந்தளவிற்கு வளர்ந்து இப்படியொரு சமமின்மையை என் வீட்டில் உருவாக்க - நான் ஏறிய ஏணியின் சில படிகள். ஆம்! அப்படி உதவிய என் உடன்பிறப்புகளுக்கு நான் செய்யவேண்டிய கடமையுண்டு. அவர்களுக்கு எல்லாமும் செய்யமுடியுமா?! என்றால், வெகுநிச்சயமாக இல்லை; என்னால் எல்லாமும் செய்யமுடியாது! ஆனால், நான் அவர்களுக்கு ஒரு படியாய் இருக்க முடியும். எப்படி? எங்கனம்? அவர்களின் தேவையும்; என்-சூழலும் அதை நிர்ணயிக்கும். அதற்கு தேவையான வகையிலும்...

          என்னைத் தயார் செய்து கொள்ளவேண்டி இருக்கிறது. நாம் ஏறிய ஏணியின் சில படிகளாய் இருந்தவர்களை; நாமேன் திரும்பிப் பார்க்கவேண்டும்? என்ற மனிதமற்ற கேள்வி எழலாம்! அப்படி நினைத்து, தங்கள் வாழ்க்கையை மட்டும் பிரதானமாய் எண்ணி வாழ்வோரும் உண்டு. அவர்களால் குறுகிய காலத்தில் தம் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளவும் முடியும். ஆனால், அது என் சுயமல்ல! என்னை இந்த நிலைக்கு கொண்டு சேர்த்துவிட்டு, இன்றும் கீழே இருப்போரை - அப்படியே விட்டுவிட, என்னால் இயலாது! மேலும், என் வளர்ச்சிக்கு வித்திட்ட அவர்களுக்கு - என்னுடைய கடனைத் திரும்ப செய்து - அதனால் ஏற்பட்ட சமமின்மையை சரி செய்ய முயல்வது என் கடமை அல்லவா? ஆம், நம் ஊரின்/மாநிலத்தின்/நாட்டின் சமமின்மையை சரிசெய்வதென்பது - நம் வீட்டை சமன் செய்வதில் இருந்தே துவங்க வேண்டும்! அதை நாமே செய்துகொள்ள வேண்டும்; அரசாங்கம் இதற்கு "நேரடியாக" எதுவும் செய்ய முடியாது! அப்படி செய்தாலும்...

          அது நிரந்தரமாய் இருக்காது! அப்படி, என்வீட்டை சரி செய்வதற்கான அடித்தளங்களை நான் அமைத்து கொடுத்திருக்கிறேன். இனி, அந்த சமமின்மையை முற்றிலும் அகற்றுவது அவர்களின் பொறுப்பாகும். எனவே, இப்போது எஞ்சியிருப்பது என்மகளும்/என்னவளும் ஆன என்-உடனடி குடும்பத்தை நிலைநிறுத்துதல் மட்டுமே! சரி... அதற்கு எவ்வளவு காலம் தேவை? இது தான் இறுதிக்கெடு என்று ஒரு கால-வரையறை செய்திருக்கிறேன்; அதுவரை, என் மூச்சிருக்கும் என்று நம்புகிறேன். அப்படியிருப்பின், என் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு; இந்த ஓட்டத்தில் இருந்து விலகிவிடுவேன்! இந்த ஓட்டத்தை என்மகளோ/என்னவளோ தொடரக்கூடாது என்ற எண்ணமே என் சிந்தனை முழுக்க நிறைந்திருக்கிறது. என்மகளும், என் மற்ற சந்ததியனரும் ஆவது - இப்படி மூச்சிரைக்க ஓடாமல், நிதானமாக நடந்து; இந்த உலகத்தின் பல்வேறு அழகியல்களை அனுபவித்து வாழவேண்டுமென ஆசைப்படுகிறேன். எனவே, என்னுடைய தேவைகளை...

நானேதான் முடிவு செய்து, நிர்ணயித்து - நிறைவேற்றியும் வருகிறேன்!!!

2 கருத்துகள்:

  1. தேவைகளின், தேடல்களினால்தான் "தேக்கங்கள்" இல்லா ஓடைகளாக ஓடிக்கொண்டிருக்கிறோம்...

    பதிலளிநீக்கு