சனி, ஆகஸ்ட் 22, 2015

அதிகாரம் 002: வான் சிறப்பு (விழியப்பன் விளக்கவுரை)

             பால்: 1 - அறம்; இயல்: 01 - பாயிரவியல்;  அதிகாரம்: 002 - வான் சிறப்பு

0011.  வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
           தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

           விண்ணிலிருந்து இடையறாத பொழிதலால், உலகைக் காத்து வருதலால்; மழையை,
           சாகாமருந்தென உணர்தல் தன்மையாம்.
(அது போல்...)
           வீட்டிலிருந்து ஓயாத அக்கறையால், குடும்பத்தை உயிர்ப்பித்து வருவதால்; தாயை,
           உயர்சக்தியென நினைத்தல் சிறந்ததாம்.

0012.  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
           துப்பாய தூஉம் மழை 

           விண்ணிலிருந்து தூறும் மழை - உண்பவர்களுக்குத் தேவையான உணவை,  உற்பத்தி செய்ய
           உதவுவது மட்டுமல்ல; தானுமே ஓர் உணவாகிறது.
                                                                        (அது போல்...)
           குடும்பத்திலிருந்து உழைக்கும் தாய் - உயிர்ப்பவர்களுக்குத் தேவையான அணுக்களை,
           கருவறை கொடுத்து உயிர்ப்பிப்பது மட்டுமல்ல; தானுமே ஓர் அணுவாகிறாள்.

0013.  விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
           உள்நின்று உடற்றும் பசி

           விண்ணிலிருந்து பொழியும் மழை பொய்த்துவிட்டால், பரம்பிய கடல் நீரால் சூழ்ந்த இந்த
           அகன்ற உலகத்தில்; உணவேதுமின்றி பசி வருத்தும்.
(அது போல்...)
           மனிதனிலிருந்து உதிக்கும் மனிதம் மரித்துவிட்டால்,  பெருகிய மனித இனத்தால் நிரம்பிய
           இந்த அகன்ற மண்ணுலகில்; அறமேதுமின்றி பயம் ஆக்கிரமிக்கும்.

0014.  ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
           வாரி வளங்குன்றிக் கால்

           விவசாயத்தால் கிடைக்கும் வருவாய் வளம், மழைக்குறைவால் பாதிக்கப்பட்டால்; உழவர்கள்
           நிச்சயமாய் ஏர்கொண்டு உழமாட்டார்.
(அது போல்...)
           வரிமூலமாய் உயரும் அரசாங்க கருவூலம், வரிஏய்ப்பால் குறைந்துவிட்டால்; அரசு-
           இயந்திரங்கள் கண்டிப்பாக அறம்சார்ந்து இயங்காது.

0015.  கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
           எடுப்பதூஉம் எல்லாம் மழை

           பொய்த்து துன்பப்படுத்துவது; மேலும், அப்படி துன்பப்பட்டோர்க்கு துணையாய் நின்று
           மீட்டுயர்த்துவது - இப்படி யாவுமாய் மழை இருக்கிறது.
(அது போல்...)
           ஆண்களை உயிர்ப்பிப்பது; தேவையெனில், அப்படி உயிர்ப்பித்தவர்களை திண்ணமாய்
           இருந்து அழிப்பது - இப்படி எல்லாமுமாய் பெண் இருக்கிறாள்.

0016.  விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
           பசும்புல் தலைகாண்பு அரிது

           விண்ணிலிருந்து விழும் மழைத்துளி இல்லையென்றால்; பின் இவ்வையகத்தில் ஒரு
           பச்சைப்புல் முளைப்பதைக் கூட பார்க்கவியலாது.
(அது போல்...)
           அடிமனதிலிருந்து வெளிப்படும் உன்னத-அன்பு இல்லையெனில்; பின் இவ்வுலகில் ஒரு
           உண்மையான ஊறவைக் கூட பார்க்கமுடியாது.

0017.  நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
           தான்நல்கா தாகி விடின் 

           மேகமானது பூரிப்புடன், மழையைப் பொழியாது போனால்; நீண்ட ஆழமான கடலும், தன்
           தன்மையை இழக்கும்.
(அது போல்...)
           குருவானவர் மனப்பூர்வமாய், ஆசிர்வாதத்தை வழங்கத் தவறினால்; நிகரில்லா வல்லவர்
           ஆயினும், தன் வல்லமையை இழப்பர்.

0018.  சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
           வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

           வானம்(மழை) வறண்டு போனால்; வானுலகத்தில் உள்ளவர்களுக்காக செய்யப்படும்
           விழாக்களும்/வழிபாடுகளும் நின்றுபோகும்.
(அது போல்...)
           மனிதன்(வயிறு) பசியில் வாடினால்; குடும்பத்தில் இருப்போர்க்காக திட்டமிட்ட
           பயணங்களும்/பொழுதுபோக்குகளும் வலுவிழக்கும்.

0019.  தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
           வானம் வழங்கா தெனின்

           வானம் மழையை வாரி வழங்காவிடின்; தானம் செய்வதும், நோன்பு நோற்பதும்  - இந்த
           அகன்ற உலகத்தில் நிலைக்காது.
(அது போல்...)
           உள்ளம் அறத்தை ஆழ்ந்து உணராவிடின்; மனிதம் நேசிப்பதும், ஒழுக்கம் பேணுவதும் - இந்த
           வலிமையான சமூகத்தில் தொடராது.

0020.  நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
           வான்இன்று அமையாது ஒழுக்கு

           நீரில்லாமல் உலகின் வாழ்வியல் கோளாறடையும் என்பதால்; மழை இல்லாமல்,
           எப்படிப்பட்டவருக்கும்  ஒழுக்கம் தவறும்!
(அது போல்...)
           தாயின்-கருவறையின்றி மனிதனின் பிறப்பு முழுமடையாது என்பதாய்; தாயின்
           அன்பில்லாமல், எவருக்கும் மனிதமும் நிறைவடையாது!

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக