வியாழன், ஆகஸ்ட் 27, 2015

அ"ற"வுரை...      என்னப்பன் எப்போதும் அ"ற"வுரை என்றே கூறுவார். அவரிடம் இருந்து நானும் அதைக் கற்றுக்கொண்டேன்; நானும் அறவுரை என்று கூறுவதே வழக்கம். சென்ற வாரம் என் நண்பன் ஒருவன் நான் சொன்னவற்றை அ"றி"வுரை என்றெண்ணி; அப்படி சொல்லவேண்டாம் என்று சொன்னான். நானும் அது அறவுரை அல்ல! என்று பதிலளித்தேன். பின்னர், அவன் அறிவுரை என்கிறான்; நான் அறவுரை என்றேன் - இவற்றுள் என்ன வேறுபாடு? என்ற சிந்தனை  எழுந்தது. என்னப்பன் கூறுவதால்; நானும் அப்படியே பழகினேனேத் தவிர; அதுவரை அதன் உட்பொருள் என்னவென்று ஆராய்ந்ததில்லை. அப்போது இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் எனக்கு புரிந்தது. அறிவுரை என்று சொல்லும்போது; அது ஒருவருக்கு அறிவு (அறியும் திறன்) குறைவாய் இருப்பது போலவும் - அதை சுட்டிக்காட்டி அறிவை விசாலமாக்க சொல்லப்படுவது - என்றும் பொருள் படக்கூடும். அந்த அடிப்படையில், எவரேனும் தம் தவறை...

     சுட்டிக்காட்டும் போதோ; அல்லது நமக்கு ஏதேனும் விளக்கும்போதோ ஒரு ஆற்றாமை வருகிறது; இது மனித இயல்பே! ஆனால், அறவுரை என்பது "அறத்தைச் சார்ந்த உரை" என்று பொருள். அதாவது, எது - சரியான/உண்மையான/நேர்மையான - அறம் என்பதை விளக்குவது என்ற  பொருள் வருகிறது. இங்கு எல்லோருக்கும் அறிவு சமமாய் தான் இருக்கிறது! நம் செயல்பாடுகள் அறத்தை தழுவி இருக்கிறதா?! என்பதே முக்கியம். அதனால் தான் "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்" என்று; முதல் அதிகாரத்தில் {குறள் எண்: 0008} துவங்கி; ஆங்காங்கே "அறம்" என்ற வார்த்தையை நம் பெருந்தகை பயன்படுத்தினார் என்பதும்; அதனாலேயே ஒரு பிரிவையே அறத்துக்கென ஒதுக்கினார் என்பதும் புரிந்தது. என்னப்பன் என்னையோ அல்லது என் உடன்பிறப்புகளையோ "படி"யென்று திட்டியதேயில்லை. அறிவு இல்லாதவர்கள் என்று சொன்னதே இல்லை! அவர் சொல்லியதெல்லாம் "இந்த வயதில் படிப்பது உன் கடமை! நீ படித்தால்...

       நீ நன்றாக இருப்பாய்! உன் வாழ்க்கை நன்றாக இருக்கும்!" போன்ற சொற்றொடர்களே! படிப்பு வரவில்லை என்பதற்காக, எங்கள் எவரையும் அவர் கடிந்து கொண்டதே இல்லை. எங்கள் மூவருக்குள்ளும்; வெவ்வேறு அளவிலான படிப்புத்திறன் இருந்தும் - ஒருபோதும் அவர் எங்களை ஒப்பிட்டுப் பேசியதேயில்லை! ஆம்! அவருக்கு அறம் என்னவென்பது தெளிவாய் தெரியும். இன்றும் அப்படித்தான்; அவரின் தவறை நான் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்வார் - மன்னிப்பும் கோருவார்! அதன் வெளிப்பாடு தான் அவர் இன்றுவரை அறவுரை என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்துவதன் பின்புலன் என்று இப்போது விளங்குகிறது. இந்த புரிதலோடு என் பதிவுகளை/விமர்சனங்களை/வாதங்களை; நான் இதுவரை செய்ததில்லை! எனினும், ஒன்று மட்டும் நிச்சயம்: "மற்றவர்களுக்கு தெரியாது" என்ற ஆணவத்தில் நான் எதையுமே செய்ததில்லை; இது சத்தியம்! எனவே, இங்கே கூறியிருப்பவையும்; நான் முன்பு பதிந்தவைகளும் என்னுடைய...

அ"றி"வுரை அல்ல! அது அ"ற"வுரையைத் தவிர வேறொன்றும் இல்லை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக