செவ்வாய், ஆகஸ்ட் 25, 2015

கோபம் எப்படி வெளிப்படும்...???
      நம்மில் பலருக்கும் கோபம் எப்படி வெளிப்படும்? என்பதில் பெருத்த குழப்பதாய் தெரிகிறது. இதற்கு, நமக்கு கோபத்தை எப்படி வெளிப்படுத்துவதென்று தெரியாததே காரணமோ? என்று எண்ணத் தோன்றுகிறது. கோபம் என்றால் என்ன/கோபத்தை எப்படி வரையறுப்பது/கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது - என்பது போன்ற விசயங்களில் நான் புரிந்துகொண்டதை; உங்களிடம் பகிரவே இத்தலையங்கம்.
 • "ஒருவர் உரக்கப் பேசினால்" - அது கோபத்தின் வெளிப்பாடு என்றே பெரும்பாலோர் நினைக்கின்றனர். இல்லை! அப்படி இருக்கவேண்டிய அவசியம் இல்லை; என்னைப் போன்றோருக்கு இயல்பிலேயே குரலின்-ஒலி அதிகமாய் இருக்கும். ஒரு சிறு மனக்கவலையோ/ஆற்றமையோ/இயலாமையோ ஏற்பட்டாலும் - குரலின் ஒலி மேலும் அதிகமாகும். என் சுற்றமும்/நட்பும் பல சமயங்களில் இந்த ஒலி-அதிகரிப்பைக் கோபம் என்றே நம்புகின்றனர். "அப்படி இல்லை; எனக்கு கோபம் இல்லை" என்று கூறினாலும், அதை நம்பாமல் அவர்கள் மேலும் விவாதிக்கும் போதுதான்; உண்மையில், எனக்கு கோபம் வந்துவிடுமோ?! என்ற அச்சம் ஏற்படுகிறது!
 • குரலின் ஒலியை உயர்த்துவது - கோபத்தின் வெளிப்பாடாய்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது நிரந்தர இயல்பு நிலையிலிருந்து, "தற்காலிக இயல்பற்ற" நிலைக்கு மாறி இருப்பதை உணர்த்துவதன் வெளிப்பாடு. அது, அந்த குறுகிய-காலத்து நிலைப்பாடு, அவ்வளவே!
 • உரக்கப்பேசிய அடுத்தகணம் நான் என் இயல்பு நிலைக்கு திரும்பி - மற்ற விசயங்களைப் பற்றி தொடர்ந்து விவாதிப்பேன். ஆனால், பெரும்பாலும் மற்றவர்கள் அந்த நிகழ்வைத் தாண்டி வராமல், குரல் உயர்த்தியதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது - என்னை மேலும் நிலைகுலையச் செய்யும். பின், மெளனம் காப்பது அல்லது அமைதியாய் கடந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை. {இதற்கு ஒரு உதாரணம்: நான் போர்ச்சுக்கல் நாட்டில் இருந்த போது, ஒருநாள், பக்கத்து வீட்டினர் இருவர் உரக்கப் பேசிக்கொண்டிருந்தனர்; எனக்கு அம்மொழி பரிச்சயம் இல்லாத காலகட்டம் அது! நான் அவர்கள் கோபத்தில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்று கடந்து சென்றுவிட்டேன். சிறிது நேரத்தில், நான் வெளியே வந்தபோது - அவர்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். வேறொரு சமயத்தில் தான் தெரிந்தது; அவர்கள் நம் ஊர் வரப்பு-சண்டை மாதிரி - வீட்டு தோட்டத்தில் ஏற்பட்ட ஒரு மனக்கசப்பால் அப்படி பேசினர் என்றும்; பின் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர் என்றும். அவர்களிடம் இருந்தது கோபம் இல்லை; உணர்ச்சி மிகுந்த விவாதம், அவ்வளவே! இப்படி பல நேரங்களில், நான் பல இடங்களில் அங்கே கண்டதுண்டு! என் பணியிடத்தில்; எங்கள் தலைமை கூட பொதுவில் எல்லோரிடமும் குரலை-உயர்த்தி அதிர்ந்து பேசுவதுண்டு! முதல் முறை, என் சக-பணியாளர்களிடம் என்ன இப்படி கத்துகிறார்? நான் வேறு வேலையைத் தேடப்போகிறேன் என்று சொன்னபோது "அவர்கள், தம்பி! ரொம்ப அலட்டிக்காத! இதெல்லாம் ரொம்ப சாதாரணம்" என்றனர். ஆம், அவர்கள் சொன்னது 100 % உண்மை; அடுத்த கணம் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவர்} எனவே, குரல் உயர்த்தி பேசுவதற்கும்; கோபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
 • சரி... இப்படி குரலை உயர்த்திப் பேசுவதே, கோபம் எனில்; அடிப்பது/காயப்படுத்துவது/கொலை செய்வது போன்ற செயல்கள் - எதனுடைய வெளிப்பாடு? உண்மையில், ஒருவரை அடிப்பதை நான் "கோபம்" என்பதையும் தாண்டி; ஒரு முட்டாள்தனமான செயல் என்றே பார்க்கிறேன். முன்பே சொன்னது போல்; என் தமக்கை மற்றும் தமையன் பிள்ளைகளைப் பலமுறை அப்படி அடித்திருக்கிறேன். என்னவளைக் கூட 3 நிகழ்வுகளில் கன்னத்தில்; ஒவ்வொரு அடியென்று 3 முறை அடித்திருக்கிறேன். ஏன், 2 வயது கூட ஆகாத என்மகளைக் கூட 2 முறை அடித்ததை முன்பே பதிவு செய்திருக்கிறேன். என்னளவில், ஒருவரை அடிப்பதென்பது "கோபத்தைத் தாண்டிய" முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.
 • அதுபோலவே ஒருவரைக் காயப்படுத்திக் கொலை-செய்வதும்/கொலையின் எல்லை வரை செல்வதும்! அது கோபத்தை தாண்டிய முட்டாள்தனத்தின் உச்சம்; அது ஒருவிதமான கோழைத்தனத்தின் வெளிப்பாடும் கூட. அதனால் தான், அதைப் பலரும் செய்வதில்லை. அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களை, ஏதோ அரசாங்க வேலை-செய்வதாய் பாவித்து; அப்படி செய்பவர்களை "அடியாள்" தொழில் செய்வதாய் சொல்கிறோம்.
 • சரி... அப்படியெனில் - கோபம் என்றால் என்ன? அதை எப்படி வரையறுப்பது? கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும்? மற்றவர்கள் விசயத்தில் எனக்கு திண்ணமாய் தெரியாது. ஆனால், என்விசயத்தில் என்னுடைய கோபம் எதுவென்று நானே; தெளிவாய் வரையறை செய்திருக்கிறேன். அதைத்தான் பின்வரும் விதத்தில் எடுத்துக் கூறியுள்ளேன்.    
 • என் "உண்மையான கோபத்தின்" வெளிப்பாடு பின்வரும் 3 வகைகளில் தான் இருக்கும். 1. ஓரிரு முறைகள் நிகழ்வது தவறு என்று சுட்டிக்காட்டுவேன்; அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் சரி. மீண்டும், மீண்டும் தொடர்ந்தால்; நான் அங்கிருந்து அமைதியாய்-விலகி விடுவேன்.
 • 2. அதையும் தாண்டிய கோபம் எனில், என்னுடைய கோபத்தை என்மீதே காண்பித்துக் கொள்வேன். ஆம், என்னைக் குத்திக்கொள்வது/சுவற்றில் குத்துவது/அல்லது வேறு கடினமான பொருளின் மீது குத்துவது - என்பது போன்று தான் என் கோபத்தின் வெளிப்பாடு இருக்கும். ஒருமுறை, மூன்று ஜன்னல்-கண்ணாடிகளை என் கையை-முறுக்கி உடைத்ததை என் நண்பர்கள் அறிவர் - அது என் உயிர்நண்பனை அடித்து; அவனைக் காயப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் நிகழ்ந்தது. இருப்பினும், என் கோபத்தை வெளிக்காட்டிய ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தால் அப்படி செய்தேன்.  இதை இப்போது படிக்கும் அந்த நண்பர்கள் கூட்டம்; அந்த சம்பவத்தைக் கண்டிப்பாக, நினைவு கூர்ந்து சிரிப்பர். {அதன் பின், மருத்துவமனை சென்று என் கையில் தையல் போடப்பட்டது (அந்த சுவடு இன்னமும் என் கையில் இருக்கிறது. மேலும், அதே நண்பன் என்னை மருத்துவமனை வந்து பார்த்ததும்; நாங்கள் இருவரும் கட்டிப்பிடித்து அழுததும் வேறு கதை! ஹா... ஹா... ஹா...}
 • 3. மூன்றாவது மற்றும் அதிகப்படியான கோபம் வந்தால் - எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு; நிம்மதியாய் உறங்கிவிடுவேன். இப்படி, பலமுறை நான் செய்ததுண்டு. என்மகளிடம் கோபித்துக்கொண்டு அப்படி செய்ததைக் கூட இங்கே பகிர்ந்திருக்கிறேன். ஆம், தூக்கம் நல்ல மருந்து என்பதை அதுபோன்ற நிகழ்வுகள் எனக்கு தெளிவாய் புரிய வைத்திருக்கின்றன. இது நடந்து ஓராண்டுக்கும் மேல், திரு. கமல்ஹாசன் அவர்களும் "நீங்களும், வெல்லலாம் ஓர் கோடி" நிகழ்ச்சியில் விஸ்வரூபம் படப் பிரச்சனையின் போது;  தானும் தூங்கிவிட்டதாய் சொன்னார். அப்போது, உச்சபட்ச கோபத்தின் வெளிப்பாடு - தூக்கம் தான்! என்ற என் புரிதல் மிகச்சரியென தெரிந்தது. 
 • எனவே, என்னுடைய கோபத்தின் வெளிப்பாடு இந்த 3 வழிகளில் தான் இருக்கும். என் நெருங்கிய சுற்றமும்/நட்பும் இதை நன்கு அறிவர். 1-ஆவது வழி இப்போது தேவைப் படுவதில்லை! ஒரு நிகழ்விலிருந்து விலாகமலேயே "அமைதியாய்" இருந்து - என் கோபத்தை செயலிழக்க செய்ய பழகி வருகிறேன். 2-ஆவது வழியைப் பின்பற்றி கிட்டத்திட்ட 6 ஆண்டுகள் ஆகிறது. 3-ஆவது வழியைப் பின்பற்றும் சூழல் மேற்குறிப்பிட்ட என்மகள் மீதான கோபத்திற்கு பின் வந்ததிதில்லை.
 • அதாவது, என் கோபத்தை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பழகி வருகிறேன் என்றுதான் தெரிகிறது. அதனால் தான், அதிகப்படியான கோபம் உருவாகி 2 & 3-ஆம் நிலைகளுக்கு செல்வது தேவையில்லாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். 
 • வெகு நிச்சயமாய், நமக்கு மிகவும் பிடித்த உறவுகள்/நண்பர்கள் மீது; நாம் எளிதில் கோபப்பட மாட்டோம். அப்படி கோபப்பட்டால், அது கண்டிப்பாக வெறும்-குரல் உயர்த்தலாய் இருக்காது என்பதில் எனக்கு மிகுந்த-நம்பிக்கை இருக்கிறது. எனவே, கோபம் என்பதன் வெளிப்பாடு நிச்சயம் வெறும் குரல்-உயர்த்தி பேசுவது இல்லை. இதை உணர்ந்ததால் தானோ என்னவோ; நான் எவரையும் "என்ன கோபமாக இருக்கிறீர்களா?!" என்று எளிதில் கேட்பதில்லை.
திரு. கலாம் அவர்கள் அடிக்கடி சொல்லும் "இடும்பைக்கு இடும்பைக் கொடு" என்பதன் அடிப்படியில் சொல்லவேண்டுமெனில்...

கோபத்தை; கோபப்படவைக்க நான் பழகி வருவதாகவே உணர்கிறேன்!!!

பின்குறிப்பு: உண்மையில், இத்தலையங்கத்தை என் வாட்ஸ்-ஆப் குழுவில் எனக்கு மிகவும் பிடித்த நண்பன் ஒருவன்; நான் குரல்-உயர்த்தியதைக் கோபம் என்று தவறுதலாய் புரிந்துகொண்டதைக் கண்டு - நான் மேலும், ஆற்றாமையும்/வருத்தமும் கொண்டு விளக்க முற்பட்டேன். அது, பலன் அளிப்பதற்கு மாறாக; எங்கள் விவாதத்தை அதிகமாக்கி விட்டது. அன்றே, இந்த தலையங்கத்தை எழுதினேன்; ஆனால், கடந்து 4 வாரமும் அதைப்பற்றியே சிந்தித்து - என் கருத்துகளை மேலும் செம்மையாக்கி இன்றுதான் பதிந்திருக்கிறேன். இத்தலையங்கம் கூட என்னுடைய கோபமாய் பார்க்கப்பட்டு விடக்கூடாது என்ற கவனமே அதற்கு காரணம்!!!

2 கருத்துகள்: