புதன், ஆகஸ்ட் 12, 2015

கோளில்??? (குறள் எண்: 0009)



      நேற்று வெளியிட்ட "கோளில் பொறியிற் குணமிலவே" எனும் குறள் எண்: 0009-க்கான விளக்கத்தை நீங்கள் படித்திருக்கக் கூடும். அதில் வரும் "கோளில்" எனும் சொல்லுக்கு ஆங்கே சுட்டிக்காட்டிய வண்ணம், பல விளக்கவுரையாளர்களும் "பயனற்ற" மற்றும் "இருந்தும் உபயோகமற்ற" என்ற பொருளிலேயே விளக்கம் கொடுத்திருகின்றனர். இப்பொருள் மாற்றுத் திறனாளிகளை(யும்) குறிப்பிடும் வண்ணம் உள்ளதால் - அதை சரியாய் "உபயோகிக்கப் படாத புலன்கள்" அல்லது "உபயோகிக்க முயற்சிக்காத புலன்கள்" என வரையறுத்ததையும் இன்னுமோர் பதிவில் சொல்லியிருந்தேன். இன்று காலை, இதுபற்றி மேலும் விளக்கலாம் என்று தோன்றியது; கூடவே, எப்படி என்ற கேள்வியும் பிறந்தது. உடனே "கோளில்" என்ற சொல்லை வைத்தே விளக்கலாம் என்றொரு தெளிவான யோசனை வந்தது. ஆம் "கோளில் = கோள் + இல்"; இங்கே கோள் என்பது "கொள்ளுதல்"; இல் என்பது "இல்லாத" - என்பன ஆகும்.

         எனவே "கொள்ளுதல் இல்லாத" என்று பொருள். என்ன மிகவும் குழப்பமாய் இருக்கிறதா?  அதாவது, "இருந்தும் இல்லாத" என்று(ம்) பொருள். நமக்கு நன்கு பரிச்சயமான "இருக்கு! ஆனா இல்லை!" என்ற தமிழ்த்திரைப்பட நகைச்சுவையை உதாரணமாய் எடுத்துக்கொள்வோம். அந்த நிகழ்வு இருக்கு என்றும் பொருள்படும்; இல்லையென்றும் பொருள் படும். ஒருநேரம் இருந்தது, இன்னொரு நேரம் இல்லை. அல்லது, ஒருவர் கண்ணுக்கு தெரிந்ததால் இருக்கு; மற்றவர் கண்ணுக்கு தெரியாததால் இல்லை! அதாவது, இருந்தும் இல்லாமல் இருப்பது. அதுபோல் இன்னுமோர் பிரபலமான நகைச்சுவை "வரும்! ஆனா வராது!" என்பதைப் பார்ப்போம். அங்கே, கேட்கப்பட்ட கேள்வி "மகிழ்வுந்து வருமா?!" என்பது; கிடைத்த பதில் "வரும்! ஆனா வராது!". வண்டிக்கு பழுதேதும் இல்லை; பயணிக்கும் நிலையில்தான் இருக்கிறது. ஆனால், வராது! என்ன பொருள்? அவருக்கு வண்டியை ஓட்டவும் தெரியும்! ஆனால், வராது என்கிறார்...

           ஏன்? அது தான் சூழலும், அதற்கேற்ற தன்மையும். வண்டி பயணிக்கும் நிலையில் இருந்தும்; அவருக்கு வண்டியை ஓட்டத் தெரிந்திருந்தும் அப்படி சொல்வதால் - அவரால் அந்த சூழலில் ஓட்ட இயலாது என்பதே பொருள். முதலில் சொன்ன உவமானத்தில் அப்படியொரு பெண் அங்கே இல்லவே இல்லை என்பதும் தவறு; இரண்டாவதில், வண்டியை அவருக்கு ஓட்டத் தெரியாது என்பதும் தவறு! அது சரியான-விதத்தில்/உபயோகப்படும்-வகையில் இல்லை என்பதே அதன் பொருள். அப்படி சில புலன்கள் - சூழலால் அல்லது அறியாமையால் சரியாய் உபயோகிக்கப்-படாமல்/உபயோகிக்க-முயற்சியே செய்யப்படாமல் போகக்கூடும். "எட்டு-குணங்களைக் கொண்டவனை வணங்காதவர்களின் தலை, அப்படிப்பட்ட புலன்களைப் போன்றது!" என்ற பொருளில் தான் "கோளில் பொறியிற் குணமிலவே" என்ற குறளைச் சொல்லியிருக்கவேண்டும் நம் பெருந்தகை. பார்த்தீர்களா? இப்படி யோசிக்க, யோசிக்க - நம் உலகப் பொதுமறையில்...

"தொட்டனைத் தூறும் மணற்கேணி"யாய் பொருளெடுக்க இன்னும் பலவுள்ளன!!!

பின்குறிப்பு: மேற்சொன்ன பொருளில் தான், மேற்குறிப்பிட்ட நகைச்சுவைகளை சம்பந்தப்பட்டவர்கள் காட்சிப் படுத்தினார்களா என்று தெரியவில்லை. ஆனால், இந்த குறளின் பொருளை விளக்க - அவையிரண்டும் பொறுத்தமான காட்சிகள் என்றே தோன்றுகிறது.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக