செவ்வாய், ஆகஸ்ட் 18, 2015

அசைந்தசைந்து செல்லும் வாத்து...



       விடுமுறையில் இந்தியா செல்லும்போது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்மகளைப் பள்ளியில் கொண்டு விடும் ஒவ்வொரு முறையும் என்னுள் எழும் எண்ணம், பின்வருவது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த எண்ண-ஓட்டம் என்னுள் ஓடிக்கொண்டு தானிருக்கிறது. மற்ற நேரங்களில் என்மகள் நன்கு வளர்ந்து வருவது போல் தோன்றினாலும், பள்ளி சீருடையில் இருக்கும் போது மட்டும் அவள் இன்னும் வளராமல் மழலையாய் இருப்பது போல தோன்றும். மற்ற பிள்ளைகளுடன் சேர்த்து பார்க்கும்போது அவள் மிகவும் சிறியதாய் தெரிவாள். ஆனால், அதில் ஒரு தனித்துவமான/அபாரமான அழகு இருப்பதை நான் கண்டு மகிழ்கிறேன். ஆம்! 4 வயதுக்கு மேல் உள்ள பிள்ளைகளை - இளம்-மழலை போலவே நாம் பார்ப்பதில்லை. அவர்களைக் கண்டிப்பதில் துவங்கி, அறவுரை சொல்வது வரை - இப்படி பல மாற்றங்கள் நம்மையும் அறியாமல் நிகழும். ஆனால், என்மகளின் உருவம் - இன்னமும் அவளை மழலைப் போலவே....

        பாவிக்க தூண்டுகிறது; குறிப்பாய் பள்ளி சீருடையில் பார்க்கும்போது! எனவே, சீருடையோடு அவளைப் பள்ளியில் விடும் ஒவ்வொரு முறையும் - நான் பள்ளி வாசற்கதவு வரை சென்று, புத்தக-மூட்டையை (ஆம்! அதை பை என்று சொல்லிட எனக்கு தோன்றுவதே இல்லை! அது நிச்சயமாய் "தேவையற்ற எடையுடைய" மூட்டை!!) அவளின் முதுகுப்புறம் தொங்கும் வண்ணம் மாட்டிவிட்டு; கையில் மதிய உணவுப்-பையை கொடுத்துவிட்டு, அவளுக்கு ஒரு முத்தம் கொடுப்பேன். பின், அவள் எனக்கு கன்னத்தின் இருபுறமும் ஒவ்வொன்று, நெற்றியில் 1,  கீழ்த்தாடையில் 1 என - மொத்தம் 4 கொடுப்பாள். சென்ற சூலையில் சென்றபோது வரை இப்படியே தொடர்கிறது; தொடரும். பின்னர், அவளுக்கு விடை கொடுத்து அனுப்புவேன். ஆனால், நான் அங்கேயே நின்று கொண்டிருப்பேன்; அவளும் அடிக்கடி திரும்பி எனக்கு கையை அசைத்துவிட்டு நடக்கத் துவங்குவாள். எப்படியும், 200 மீட்டருக்கும் மேல் நடக்க வேண்டும் என்பதால், வெகு நேரம்...

     மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நின்று கவனிப்பேன். அந்த மூட்டை கொடுக்கும் அழுத்தத்தால் என்மகள் அசைந்து, அசைந்து நடப்பாள். பார்ப்பதற்கே என் நெஞ்சம் கனக்கும்; இந்த வயதில் எதற்கிந்த "தேவையற்ற எடை???" என்ற கோபமும்; நம் கல்வி முறை மீதான, நான் பதிந்த என் பார்வையும் - அந்த குறுகிய இடைவெளியில் மின்னலாய் எரிந்து அடங்கும். ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி என்மகள் அசைந்து, அசைந்து நடக்கும் அழகு இருக்கிறதே! அட... அட... எத்தனைக் கொடுத்தாலும் கிடைக்காத பேரின்பம் - அந்த சில நிமிட நடைப்பயணம். அதை நான் ஆழ கவனித்து அனுபவிக்கத் தவறியதே இல்லை. இன்று வரை ஒரு நாள் கூட சலிப்பு ஏற்பட்டதே இல்லை. ஒரு அழகிய சின்னஞ்சிறு வாத்து நடப்பது எவ்வளவு நளினமாய்/அழகாய் இருக்கும்?! அதைக் கற்பனை செய்து பாருங்கள். ஆம், என்மகள் அப்படித்தான் நடப்பாள்! அவள் என் கண்ணிலிருந்து மற்ற பிள்ளைக்கடலில் கலந்து மறையும் வரைப் பார்த்துவிட்டு பின்தான்...

      அங்கிருந்து நகர்வேன். பல தந்தைகளும் இருசக்கர வாகனத்தில் வந்து சாலையிலேயே இறக்கி விட்டுவிட்டு செல்வதைப் பார்க்க நேரிடும். வாகனத்தைக் கூட ஓரமாக நிற்க வைப்பதில்லை. அவர்களின் அவசரம் எனக்குப் புரிந்திடினும், மேற்குறிப்பிட்டதை எல்லாம் அவர்கள் காணத் தவறுகின்றனரே! என்ற ஆதங்கம் என்னுள் எழும். நான் விடுப்பில் இருப்பதால், அத்தனை நிதானமாய் என்னால் அங்கிருந்து இரசிக்க முடிகிறது என்பதை நான் மறுக்கவில்லை. அவ்வாறு யோசித்துப் பார்த்து என்னை நானே "நீ இங்கு வந்து பணியாற்றும்போது; இப்படித்தான் செய்வாயா?!" என்று கேட்டிருக்கிறேன். நன்கு யோசித்தபின் ஒரு தெளிவான பதில் கிடைக்கும். இல்லை! எந்த நிலையிலும், நான் இந்த அனுபவத்தை/அழகியலை இழக்கமாட்டேன் என்ற உறுதியான பதில் கிடைக்கும். ஆம்! வெகு நிச்சயமாய் எனக்கு தேவையான அந்த சில நிமிடங்களை வைத்துக்கொண்டு தான் என்மகளைப் பள்ளிக்கு அழைத்து செல்வேன். எந்த...

       காரணத்திற்காகவும் நான் அந்த சுகத்தை இழக்கமாட்டேன். எத்தனை நாள் தொடர்ந்து பார்த்தாலும்; நித்தம் நித்தம் அது ஒரு புது அனுபவமாகவே இருக்கும். அதற்காக சில நிமிடங்களை ஒதுக்கி செலவிடுவேன்; என் வேலையை அதற்கேற்றார்ப்போல் மாற்றி அமைப்பேன். பெரும்பான்மையில், அவர்களுக்கு இப்படியொரு அழகியல் இருப்பது தெரிவதில்லை; இல்லையேல், அவ்வளவு அவசரமாக சாலையிலேயே இறக்கிவிட்டு செல்லமாட்டார்கள். அவர்களில் ஒருசிலராவது இந்த தலையங்கத்தைப் படித்து, இந்த அழகியலைக் காண வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். என்னைப்போல் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இப்படி ஒரு பதிவை எழுதி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எத்தனித்தாலும், நேரம் கிடைக்காது போகக்கூடும்.  வெகுநிச்சயமாய் அப்படியொரு அழகியலை அனுபவிக்க மட்டுமல்ல; உங்களுடன் பகிரவும் எனக்கு நேரம் கிடைத்திருப்பது...

எல்லாம் வல்ல அந்த இறையருளால் தான் என்பதை மறுப்பதற்கில்லை!!!         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக