செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

அப்பா... நான் இதோட மூனு தடவ விஷ் பண்ணியிருக்கேன்!



   இரண்டு தினங்களுக்கு முன் என்மகள் "அப்பா! உங்க பர்த்டேக்கு புது டிரெஸ் வாங்கிட்டீங்களா?!" என்று கேட்டாள். இளவயதில் என்னப்பன் விசேடங்களுக்கு புதுத்துணி எடுத்து கொடுத்ததோடு சரி. அந்த வயதில் - தீபாவளி, பொங்கல் போன்ற விசேட காலங்களில் புதுத்துணி இல்லையென்றால் பெருத்த சோகம் சூழ்வது எல்லோருக்கும் இயல்புதான். ஆனால், என்னப்பன் எங்கள் மூவருக்கும் எந்த விசேடத்திற்கும் அப்படியொரு குறை வைத்ததில்லை. வளர்ந்த பின் அப்படியொரு எதிர்பார்ப்பும் இல்லை; அது தேவையாகவும் இருந்ததில்லை. அதன் பின்னர் விசேடத்திற்கென்று புதுத்துணி எடுப்பது ஒரு வழக்கமாகவும் இல்லை! ஆனால், என்னவளுக்கோ என்மகளுக்கோ விசேட காலம் மட்டுமல்ல; வழக்கமான நாட்களில் கூட புதுத்துணிகள் எடுத்துக் கொடுப்பேன். என்னவளும் "நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று பலமுறை கூறியும் நான் வாங்கிக் கொள்ளாததால்; பின், அப்படி சொல்வதையே நிறுத்திவிட்டாள்.

          இருப்பினும்... என் மகளின் 3-ஆவது பிறந்த நாளில் இருந்து அன்றைய தினத்தில் புதுத்துணி அணிவதை "கட்டாய" வழக்கமாய் கொண்டுள்ளேன். அதிலும், அவளின் 4-ஆவது பிறந்த நாளில் இருந்து, அந்த புதுத்துணியை சில மணி நேரங்கள் அணிந்து விட்டு; ஒரு மாத இடைவெளியில் வரும் என் பிறந்த நாளுக்கு அதையே-அணிவதை வழக்கமாய் கொண்டிருக்கிறேன். கடந்த மாதம் என்மகளின் பிறந்த நாளுக்காய்; என்னவள் வாங்கிக் கொடுத்த உடைதான் மேலுள்ள புகைப்படத்தில் உள்ளது. இதை சுருக்கமாய் என்மகளுக்கு பதிலாய் சொன்னேன்; அவளுக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால் "ஓஹோ" என்றாள். இம்முறை, இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே "ஹாப்பி பர்த்டே ப்பா!" என்று வாழ்த்திக் கொண்டு இருந்தாள். நானும் "த்தேங்க்ஸ் சொல்லிவிட்டு, இன்னைக்கு இல்லடின்னு" சொல்லி வந்தேன். பிறந்த நாளான இன்றும் வாழ்த்தினாள்; நானும் "த்தேங்க்ஸ் டி விழிக்குட்டி"ன்னு சொன்னேன். உடனே, அவள்...

       "அப்பா! நான் இதோட மூனு தடவ விஷ் பண்ணியிருக்கேன் என்றாள்". நான் ஒருகணம் சந்தோசத்தில் செயலற்று போனேன். இதுதான் குழந்தைகளின் உலகம்! ஒரே நாளில் 3 முறை வாழ்த்தக்கூடாது என்று நினைத்தாளோ? அல்லது பள்ளிக்கு சென்றுவிட்டால் அப்பனுக்கு 3 முறை வாழ்த்தமுடியாது என்று நினைத்தாளோ?? - அது அவளுக்கே தெரியும். ஆனால், தன்னப்பனுக்கு 3 முறை வாழ்த்து சொல்லவேண்டும் என்ற அந்த எண்ணம்! அந்த எண்ணத்தை, தன்னப்பன் "இன்னைக்கு இல்லடின்னு சொல்லி"யபோது கூட தெரிவிக்க-மறுத்த சாதுர்யம்! அட... அட... அட...! ஆம், இதுதான் குழந்தைகள் உலகம். அதனால் தான், குழந்தை வளர்ப்பில் சிறந்து விளங்கிட; குழந்தையாய் மாறுதல் வேண்டும் என்று முன்பொரு புதுக்கவிதையில் சொல்லி இருந்தேன். என்மகள் இப்படிக்கூட யோசிப்பாள் - என்பதைக்கூட யோசிக்கமுடியாதது என் இயலாமை. அதற்கு நான் அவள் தளத்தில் இருந்து யோசிப்பது அவசியமாகிறது. அதனால் தான்...

குழந்தைகள் உலகம் மிகவும் அழகாய் - வேறொரு தளத்தில் பயணிக்கிறது!!!          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக