ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

என்ன விதமான அரசியல் இது??? (பாகம் 2)...

           இன்று முகநூலில் ஒரு காணொளியைக் காண நேர்ந்தது. அதைப் பகிர்ந்தவர் "இதைவிடவா அவர் கேவலமாக பேசிவிட்டார்?!" என்று தலைப்பிட்டு கேட்டிருந்தார். அக்காணொளி, தற்போது தமிழகத்தில் நடந்து வரும்; ஆளும்கட்சி போராட்டத்தைத் தொடர்பு படுத்தியது. இப்போராட்டம் நிச்சயம் முறையானது அல்ல! ஒருவர் கொச்சையாய் பேசியதை சட்டரீதியாக எதிர்கொள்ள பல வழிகள் இருக்கிறது என்பதில் எனக்கு(ம்) மாற்றுக்கருத்தில்லை. ஆனால், காலம் கடந்து நடந்தாலும் - போராட்டத்திற்கான மூலத்தை "முதலில்" பார்க்கவேண்டும். பள்ளிகள் துவங்கி, எல்லா இடங்களிலும் "ஒரு ஆணும்/பெண்ணும் பேசுவது எதார்த்தம்; முந்தைய தலைமுறைகள் போல் எந்த அடிப்படையும்-இன்றி, அதைத் தவறாய் பார்க்கவோ/சித்தரிக்கவோ கூடாது" என்ற மிகப்பெரிய சமுதாய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! இந்த சூழலில், ஒரு மாநில முதல்வரும்; நாட்டின் பிரதமரும் சந்தித்து பேசியதை அநாகரீகமாய்...

        "ஒரு ஆணும்/பெண்ணும்" சந்தித்து பேசியதைப் போல கொச்சையாய் ஒரு அரசியல்வாதி பேசுவதே தவறு!" அதிலும், மேற்கூறிய வண்ணம் ஒரு மிகப்பெரிய சமுதாய மாற்றம் நிகழும் வேளையில் அப்படி "கொச்சையாய்" பேசுவது ஒழுங்கீனத்தின் உச்சமல்லவா?! மேலும், எந்த குற்ற உணர்வும் இல்லாது; தான் பேசியது சரியென்று இன்னமும் நியாயப்படுத்திக் கொண்டிருப்பது எத்தனை பெருந்தவறு?! அப்பேச்சை; ஆளும்கட்சியினர் சில நாட்கள் கழித்து போராட்டங்கள் மூலம் எதிர்த்து வருவது - அரசியல் ஆதாயத்தைக் காட்டுகிறதோ? என்ற சந்தேகம் எனக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அப்படி ஒருவர் கொச்சையாய் பேசியது தவறு என்பதையே நாம் முதலில் பார்க்கவேண்டும். இந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது; என்ன விதமான அரசியல் இது??? என்ற தலையங்கத்தின் இரண்டாவது பாகம் எழுதவேண்டிய தருணமிது என்று உணர்தேன். இப்போராட்டத்திற்கான காரணம் அந்த பேச்சு தான் என்பதால், முதலில் அதை நிவர்த்தி...

       செய்ய முயலவேண்டும்! எரிவதைப் பிடுங்கினால், கொதிப்பது அடங்கும் என்பது போல் - பின்னர் "இந்த முறையற்ற" போராட்டமும் நின்று போகும்; நின்றே ஆகவேண்டும்! ஆனால், அதை  விடுத்து; அப்படி பேசியவர் அதை நியாப்படுத்த முனையும் போதும்; அவருக்கு ஆதரவாய் மேற்கூறிய வண்ணம் எவரேனும் பதிவுகள் இடும்போதும்; என் மனம் இன்னும் கலங்குகிறது! ஏன் இவர்கள் தன்னொழுக்கம்/மனிதநேயத்திலிருந்து விலகி இருக்கிறார்கள்? என்ற ஆற்றாமை அதிகமாகிறது. ஒரு அசிங்கத்தை விவாதிக்கும் போது; அதைவிடவா அசிங்கம்?! என்று கேட்பது குறைபாடுள்ள-மனநிலையையே காட்டுகிறது. மேலே விவரித்த நிகழ்வை விட அந்த கானொளியில் இருக்கும் பேச்சு; ஆண்களையே முகம் சுளிக்க வைக்கும்! என்னால், அக்காணொளியை முழுதாய் காணமுடியவில்லை. அக்காணொளி பின் என் வாட்ஸ்ஆப் குழுவிலும் பகிரப்பட்டது. அங்கே, அக்காணொளி தவறென்று சுருக்கமாய் சுட்டிக்காட்டிவிட்டு, என் மனக்குமுறலை...

             இங்கே எழுத்துகளா(ய்/ல்) வடித்துக் கொண்டிருக்கிறேன். அக்கானொளியில் உள்ள பேச்சு "ஆபாசத்தின் உச்சம்!". அதனாலேயே அது உதாசீனப் படுத்தப் பட்டிருக்கும். ஆம்! எந்த ஒரு செயலின்/நிகழ்வின் இரண்டு எல்லைகளை (Extremes) நாம் உற்று-நோக்குவதில்லை; அது மனித இயல்பும் கூட. உதாரணத்திற்கு மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளை(யே) எடுத்துக் கொள்வோம்; இந்த நிகழ்வுகளின் மூலம் "தனிமனித ஒழுக்கம்!". எல்லாவற்றையும் போல, இதிலும் இரண்டு எல்லைகள் உண்டு: 1. தனிமனித ஒழுக்கத்தை உயிராய் கடைபிடிப்போர் 2. துளியும் தனிமனித ஒழுக்கம் இல்லாமல் இருப்போர். முதல் எல்லைக்கு உதாரணம் - திரு. கலாம் போன்ற உயர்ந்த மனிதர்கள். அவர்களை நாம் நெருங்கி/உற்றுநோக்கி கவனிக்காமல்; உயரிய நிலையில் வைத்து நாம் விலகி நிற்போம் - இது "உயரிய மரியாதை"யால் வருவது. இதற்கு, நேரெதிர்-எல்லை அந்த கானொளியில் பேசியவர் (அல்லது இன்னும்-கூட கொச்சையாய் பேசுவோர்)...

      போன்றவர்கள் - அவர்களையும் நாம் நெருங்காமல் தள்ளி வைப்போம்! ஆனால், இது "அசிங்கத்தை நாம் நெருங்கக்கூடாது" என்ற அருவருப்புடன் விலகி நிற்பது! இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை சரியாய் புரிந்து கொள்ளவேண்டும். எனவே, நாம் எப்போதும் நெருங்கி பேசி ஒரு பரஸ்பரமான-உறவில் வைத்திருக்க முயற்சிப்பது; இடைப்பட்ட நிலையில் உள்ளவர்களையே! அதாவது, முதல் நிகழ்வில் பேசிய நபர் போன்று! அவரிடம் எடுத்துக் கூறினால், புரிந்து கொள்வார்; ஒரு புரிதல் ஏற்பட்டு அந்த நிகழ்வை முடிக்கலாம் என்ற நம்பிக்கையில் கூட இப்போராட்டம் இருக்கலாம். இவையிரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அந்த கானொளியில் "ஒழுங்கீனத்தின் எல்லையில்" இருந்து பேசுபவர், கும்பிடுவதைப் பற்றி பேசியதைக் கேட்டதும்; நான் எனக்கு பிடித்த மனிதர்களின் காலை என் மிகுதியான-அன்பினால், தொட்டு வணங்குவது நினைவுக்கு வந்தது. அந்த அன்பை புரியாமல் கொச்சையாய்...

      விவாதிக்கும் அந்த அநாகரீகமான பேச்சை என்னால் தொடர்ந்து கேட்கமுடியவில்லை! பெற்றோர் காலில் விழுவதற்கே கூச்சப்படுபவர் பலருண்டு - ஏன்?! நாமே கூட அப்படி ஒருவராய் இருப்போம்! நிதர்சனம் இப்படியிருக்க, பொதுவெளியில் ஒரு-தலைவியின் காலில் விழுந்து வணங்கும் ஒருவருக்கு; எத்தனை அன்பு-மிகுதி இருக்கும்?! அதற்கு, ஏதேனும் ஆதாயம் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை! நம் பெற்றோரால் இனியும் ஆதாயம் இல்லை என்று நினைக்கும் கயவர்களால்-தானே? முதியோர் இல்லங்கள் பெருகுகின்றன?! ஒரு ஆதாயத்தால் கூட, அப்படி ஒரு அன்பின் வெளிப்பாடு இருந்துவிட்டு போகட்டுமே! அதனால், பிறருக்கு நேரடியாய் எந்த கெடுதலும் இல்லாதபோது, ஏன் இப்படி ஒழுங்கீனத்தின் உச்சத்தில் நின்று கொச்சைப்படுத்த வேண்டும்?! அப்படி பேசுவதே "3-ஆம் தர ஒழுக்கம் கெட்ட செயல் எனும்போது" எனில், நடந்து கொண்டிருக்கும் அசிங்கத்தை; அதை வைத்து மறைக்க முயற்சிப்பதை என்னவென்பது?!

        இப்படி ஒப்பிட்டு பேசுவதும் - இன்றைய தலைமுறைப் பெண்களிடம் "அப்படி என்ன, நீங்க பெரிதாய் கொடுமை கண்டீர்கள்?! சென்ற தலைமுறைப் பெண்கள் உடன்கட்டை கூட ஏறி இருக்கிறார்கள் தெரியுமா??!!" என்று அறிவிலித்தனமாய் வினவுவதும் ஒன்றே!!! வெகு நிச்சயமாய், என்றோ நிகழ்ந்த ஆணாதிக்கத்தால், இன்றைய ஆண்கள் பலவிதத்திலும் பாதிக்கப் படுகிறார்கள்! என்பதை நானேக் கூட பதிவு செய்து இருக்கிறேன். ஆனால், உடன்கட்டையோடு ஒப்பிட்டு கேள்வி கேட்பது முறையற்றது! ஏனெனில், இரண்டும் வெவ்வேறு சூழல்களில் நடந்தவை. அன்றைய ஆண்கள் போல், அத்தனைக் காட்டுமிராண்டித் தனமாய் இன்றைய ஆண்கள் இல்லை! இருக்கவும் முடியாது!! எனவே, அந்த காட்டுமிராண்டித் தனத்துடன் ஒப்பிட்டு நாம் கேள்வி கேட்கமுடியாது. அப்படித்தான், மேற்கூறிய ஒப்பீட்டுக்-கேள்வியையும் நான் பார்க்கிறேன். ஏன், இவற்றையெல்லாம் எவரும் யோசிப்பதில்லை?! இதுபோன்று நியாயமானவற்றை யோசிக்க முடியாத...

அளவிலா; தனிமனித ஒழுக்கம் இங்கே சீர்குலைந்து இருக்கிறது???

பின்குறிப்பு: சமீபத்தில் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுத ஆரம்பித்திருக்கும் என் பணியை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். 3-ஆம் அதிகாரமான "நீத்தார் பெருமை"யை ஆரம்பித்திருக்கும், இன்றைய தினத்தில் - தன்னொழுக்கம் பற்றி இப்படி ஒரு தலையங்கம் எழுத ஒரு வாய்ப்பு கிடைத்ததை; நம் பெருந்தகையின் ஆசிர்வாதமாகவே கருதுகிறேன்.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக