செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

எண்குணத்தான் (குறள் எண்: 0009)
            குறள் எண்  0009-இல் சொல்லப்பட்டிருக்கும் "எண்குணத்தான்" என்பதற்கு, நானும் மற்ற விளக்கவுரை போல் "எட்டு குணங்கள் உடையவன்" என்ற பொருளில் முதலில் விளக்கவுரை எழுதிவிட்டேன். பின் எவை அந்த எட்டு குணங்கள்? என்ற கேள்வி எழுந்தது. முதலில் "அன்பு, பண்பு, பாசம், நேசம்...." என்பது போன்றெல்லாம் கற்பனை செய்து பார்த்தேன்; திருப்தி இல்லை. அப்போது நம் முண்டாசுக்கவி இவைகளை "1. அனந்தஞானம் 2. அனந்த வீரியம் 3. அனந்த குணம் 4. அனந்த தெரிசனம் 5. நாமமின்மை 6. கோத்திரமின்மை 7. அவாவின்மை 8. அழியாயியல்பு" என்று பட்டியல் இட்டிருப்பது கண்டேன். அது போலவே, பரிமேலழகரும், மணக்குடவரும், மற்றவரும் வெவ்வேறு பட்டியல்கள் இட்டிருப்பதைக் காண முடிந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை!அவை யாவும் எனக்கு ஏற்புடையதாய் இல்லை.  ஆனால், கண்டிப்பாக வேறேதேனும் ஒரு பட்டியலாய்த்தான் இருக்கும் என்ற நம்பிக்கை மட்டும் மிகுந்திருந்தது.

        சற்றும் மனம்தளராமல், இணையத்தில் தொடர்ந்து தேடினேன். திரு. ஹரி கிருஷ்ணன் என்பவர் தன் ஆசிரியர் கூறியதாய் ஒரு பட்டியல் இட்டிருந்தார். அதைப் படித்ததும், இதுதான் சரியான விளக்கம்; இதுதான் நான் தேடியது என்று தோன்றியது. அவரோ, அவர் ஆசிரியரோ எவரென்று எனக்கு தெரியாது; அருள்கூர்ந்து, அவர்களை தெரிந்தவர்கள் எவரேனும் இருப்பின், எனக்கு தெரிவிக்கவும். அவர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அதற்கு முன், மானசீகமாய் என்னுடைய நன்றியை அவர்கள் இருவருக்கும் உரித்தாக்குகிறேன். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்; "ஏனிந்த விழியப்பன் விளக்கவுரை?" என்ற பதிவில் விளக்கி இருப்பதுபோல் திருக்குறளில் மூழ்கி எடுக்க இன்னும் ஆயிரமாயிரம் முத்துக்கள் இருக்கின்றன. மேற்குறிப்பிட்டது போல், சிலரால் கண்டெடுத்த முத்துக்களே-கூட இன்னும் பலரையும் பொதுவில் சென்று சேராக்கதைகளும் இருக்கின்றன.

      அந்த முயற்சியில் தான் இப்பணியை தொடர்கிறேன். இன்னும் ஆயிரமாயிரம் பேர்கள் எழுதக்கூட திருக்குறளில் ஏராளம் உண்டு. எனவே, விளக்கவுரை எழுதுவது கண்டிப்பாய் என்னோடு முடிந்து விடப்போவதில்லை. இப்பிரபஞ்சம் உள்ளவரை எவரேனும், மேற்கொண்டு முயன்று கொண்டுதான் இருப்பர். சரி, அப்படி அவர் கூறியது என்ன? குறளின் எண்-வரிசைப்படி; இக்குறள் 9-ஆவதாய் வருகிறது. அதற்கு முன் இருக்கும் 8 குறள்களை ஆழ்ந்து கவனித்தால், ஒவ்வொரு குறளும்; இறைவனின் ஒவ்வொரு குணத்தை குறிப்பிடுவது புரியும். எனவே, மொத்தத்தில் எட்டு-குணங்கள் கணக்காகிறது. அந்த எண்வகை குணங்களையே நம் பெருந்தகை சொல்வதாய்; அந்த ஆசிரியர் குறிப்பிடுவாராம். என்ன ஒரு அருமையான விளக்கம்? என்னைப்போலவே, உங்களுக்கும் இவ்விளக்கம் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். அவர் சொல்லி இருந்ததன் அடிப்படையில் "சிறு மாற்றத்துடன்" கீழ்க்கண்டவாறு எண்குணங்களை வரையறுக்கிறேன்:

             1. உலகின் முதன்மையாய் இருப்பவன் 2. பகுத்தறிந்தவன் 3. மலர் மீதும் அமரக்கூடியவன் 4. விருப்பு/வெறுப்பு அற்றவன் 5. பெரும்புகழ் படைத்தவன் 6. ஐம்புலன்களை பன்படுத்தியவன் 7. தனக்கு எதுவுமே ஒப்பற்றவன் 8. கடலளவு அறம் கொண்டவன் - என்பவையே அந்த எட்டு குணங்களாம். இம்மாதிரி வேறெந்த குறளுக்காவது முற்றிலும் மாறுபட்ட பரிமாணம் தெரிந்தோர் எனக்கு தெரிவிக்கவும். இப்புரிதலுடன் விளக்கவுரை எழுதும்போது, இதே குறளிலேயே எனக்கு இன்னுமொரு மாற்றுச்சிந்தனை தோன்றியது. "கோளில் பொறியிற் குணமிலவே" எனும் சொற்றொடருக்கு எல்லா விளக்கவுரைகளும் "பயனற்ற புலன்கள்" மற்றும் "இருந்தும் உபயோகமற்ற" புலன்கள் என்றே வரையறுத்துள்ளன. இது ஏற்புடையதே எனினும்; அது மாற்றுத் திறனாளிகளை(யும்) குறிப்பிடும் வண்ணம் உள்ளதால் - கண்டிப்பாக, நம் பெருந்தகை இதை வேறொரு பார்வையில்தான் சொல்லி இருப்பார் என்று மேலும் சிந்திக்கலானேன்.

         அப்போது பின் வரும் விளக்கம் கிடைத்தது. இச்சொற்றொடரை, சரியாய் "உபயோகிக்கப் படாத புலன்கள்" அல்லது "உபயோகிக்க முயற்சிக்காத புலன்கள்" என்று வரையறுப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றியது. எனவே, இல்லாத/செயல்படாத புலன்கள் இங்கே கணக்கில் கொள்ளப்படவில்லை. புலன்கள் இருந்தும், அவற்றை சரியாய் பயன்படுத்தாமல் இருப்போர்; இருப்பர் தானே?! அப்படிப்பட்ட புலன்களோடுதான் நம் பெருந்தகை ஒப்பிட்டு இருப்பார் என்று திடமாய் நம்புகிறேன். எனவே, அந்த பொருளில்தான் என் விளக்கவுரையை எழுதி இருக்கிறேன்.

வாருங்கள்... எண்குணத்தானை சிரம்-தாழ்த்தி வணங்கிடுவோம்!!!          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக