புதன், ஆகஸ்ட் 19, 2015

தடிந்தெழிலி தான்நல்கா (குறள் எண் 0017)



      "நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்" என்ற குறள் எண்  0017-இல் வரும் "தடிந்தெழிலி தான்நல்கா" எனும் சொற்றொடரைக் கவனியுங்கள். அட... அட... அட...! நம் பெருந்தகையின் மீதான என் பெருமிதம் - குறளுக்கு, குறள் உயர்ந்து கொண்டே செல்கிறது. மழையின் சிறப்பை சொல்லுதலே, சிறப்பு! மழைக்கென ஒரு அதிகாரம் வகுத்ததிலேயே பெருந்தகை மழைக்கு கொடுக்கும் முக்கியத்துவமும்/சிறப்பும் தெளிவாய் விளங்குகிறது. அதையும், மென்மேலும் சிறப்பாய் சீர்பட சொல்வதற்கு இதுபோன்ற சொற்றொடரை மிக இலாவகமாக கையாண்டிருக்கிறார். சரி, அதில் அப்படியென்ன சிறப்பு என்று பார்ப்போம். இந்த குறளின் பொதுப்பொருள்: "மேகம் கடலில் இருந்தே உருவாவதால், அது மீண்டும் மழையாய் பெய்யாது போனால், கடலும் வற்றும்" என்பதே! இந்த பொருள்படும்படி பெருந்தகை எளிதாய் இக்குறளை சொல்லி இருக்கமுடியும். ஆனால், அவர் நெடுங்கடல் என்கிறார்; கடலே பெரியது! நெடுங்கடல் என்றால்?! 

       நீண்ட/ஆழமான கடல்; அதாவது, பெருங்கடல். மேலும், "தடிந்து" என்கிறார்; அதென்ன? 'தடிந்து' என்ற சொல்லுக்கு மணக்குடவர் 'மின்னி' என்றும்; காலிங்கர் 'பூரித்து' என்றும்; பரிமேலழகர் 'குறைத்து' என்றும் பொருள் கூறுகின்றனர். ஏறக்குறைய மின்னி/பூரித்து இரண்டும் ஒரே பொருள் தரும்; குறைத்து என்பதைக் கூட பூரிப்பைக் குறைத்து என்று பொருள் கொள்ளலாம். "தான்நல்கா" என்று தொடர்வதைப் பார்க்கும் போது, பூரித்து என்பதே மிகவும் பொருத்தமானதாய் எனக்கு தோன்றியது. அதாவது, மழை பெய்யாது போனால் மட்டுமல்ல! அப்படி பொழிவது பூரிப்புடனும் இருக்கவேண்டும் என்கிறார். அதாவது, பூரிப்புடன் இருப்பது அவசியம் என்று எச்சரித்து சொல்வதாய் புரிந்தது. எந்த விளக்கவுரையிலும், பூரித்து என்ற சொல் உபயோகிக்கப்பட வில்லை. எனவே "மேகமானது பூரிப்புடன் மழையைப் பொழியாது போனால்; நீண்ட ஆழமான கடலும், தன் தன்மையை இழக்கும்" என்று என்னுடைய விளக்கவுரையை எழுதி இருக்கிறேன்.

இது வெறும் 0017-ஆவது தான்! இன்னும் நெடுந்தூரம் "தடிந்து" பயணிக்கவேண்டும்!!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக