புதன், ஆகஸ்ட் 26, 2015

இதற்கு எவர் காரணம்???


      சமீபத்தில் வாட்ஸ்-ஆப் குழுவில் ஒரு விவாதத்தின் போது; நான் ஏன், இந்தியாவில் வந்து வேலை செய்யக்கூடாது?! என கேட்கப்பட்டது. என் மனதில் இருந்ததை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு கொடுத்த கேள்வி என்பதால் - அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கே, சிலவற்றை சுருங்கக் கூறினேன். கண்டிப்பாக, நான் வெளிநாட்டில் வேலை செய்ய முக்கிய-காரணம், நான் அடிக்கடி குறிப்பிடுவது போல் - என் பொருளாதாரத் தேவையே! சமீபத்தில், என்னுடைய தேவையைக் கூட வரையறை செய்திருப்பதை ஒரு பதிவில் எழுதியிருந்தேன். இருப்பினும், 2 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலும் வேலை தேடினேன். ஆனால், அங்கு சில அரசு பல்கலைக்கழகங்களில் இருக்கும் நடைமுறை என்னைப் பெரும் அதிர்ச்சிக்கும்; மன உளைச்சலுக்கும் உண்டாக்கியது. ஆம்! விரிவுரையாளர்/பேராசிரியர் பணியில் ஒருவரை அமர்த்த "இவ்வளவு பணம்" என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடியாக உயர்பதவியில்...

         உள்ளவர்கள் கேட்கவில்லை எனினும், அவர்களின் கட்டளையின்படி கீழ்-மட்டத்தில் உள்ள ஊழியர்களால் வெளிப்படையாகவே நடைபெறுகிறது. எனக்கு முதலில் எழுந்த ஆற்றாமை, நான் ஏன் பணம் கொடுக்கவேண்டும்? எனக்கு தகுதி இல்லையா?! என்பதே! உண்மையில், எனக்கு தகுதி இல்லையெனில்; நான் பணம் கொடுக்க "ஆலோசனையாவது" செய்யலாம். ஆனால், துரதிஷ்டவசமாய் எனக்கு தேவையான தகுதிகள் இருக்கின்றன! பின் ஏன், நான் பணம் கொடுக்க வேண்டும்?! அவர்கள் ஏன் பணம்-கேட்கிறார்கள் என்று கூட என்னால் யூகிக்க முடிகிறது. அவர்கள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அந்த பதவியை அடைகின்றனர் என்பது அப்பட்டமான உண்மை. எனவே, உயர்பதவியில் இருப்பவர்கள்; அவர்களின் பதவியைத் தாண்டி, முதலீட்டாளர்கள் என்றும் அங்கம் வகிப்பவர். அவர்கள் செய்த முதலீட்டுக்கும் மேலாய், சம்பாதிப்பது அவர்களைப் பொருத்தவரையிலாவது "தார்மீகக் கடமை" ஆகிறது.

           எனவே, அவர்களின் நிலையைக் கூட என்னால் புரிந்து கொண்டு; விலக முடிகிறது. ஆனால், அப்படி கொடுப்பதற்கு வரிசையில் நின்று காத்திருப்பவர்களை என்ன செய்வது? என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது. உயர்பதவியை அடைய பணம் கொடுக்க தயாராய் இருப்பினும்; அதை வாங்கிக்கொண்டு பணியில் அமர்த்தும் அரசியல்வாதிகளை என்ன செய்வது? என்ன செய்வது என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஆனால் "இது வாங்குவோர் குற்றமா? அல்லது கொடுப்பவர் குற்றமா??" - என்றால், பெருங்குழப்பமே எஞ்சும். இந்தியன் திரைப்படத்தின் "நீங்க கேக்கறதால தானே நாங்க கொடுக்கறோம்?! நீங்கள் கொடுக்கறதால தானே நாங்க வாங்கறோம்?!" என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது. எனவே, இதைத்தாண்டி பின்வருமாறு யோசிக்கிறேன்: பேராசிரியர் பதவிக்கு பணம் கொடுப்பவர்களில்; பெரும்பான்மையோர் திறமை இல்லாதவர்களே! தகுதியும்/திறமையும் இருந்தும்; பணம் கொடுத்து பணியில் அமர்வோரும் உண்டு...

    என்பதை மறுப்பதற்கில்லை! அப்படி தகுதியும்/திறமையும் இல்லாத ஒருவர் பணத்தின் அடிப்படையில் வேலைக்கு வந்தால்; அவரிடம் நேர்மையான/முறையான கற்பித்தல் எப்படி இருக்கும்? பின் மாணாக்கர்கள் எப்படி நன்கு படித்து நேர்வழி நடப்பது?! இது நம் உடலில் முதலில் உருவாகும் ஒரு நோய்க்கிருமி போல! "இளைதாக முள்மரம் கொள்க" என்பது போல் அந்த கிருமியை அழிக்காவிட்டால்; அது மற்ற நல்ல கிருமிகளையும் கெடுத்துவிடும். அதுதான், இப்போது பெருமளவில் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, மதிப்பெண்ணின் அடிப்படையில் மாணாக்கர்களின் தகுதி/திறமையை "தவறாய்" கணிக்கும் பள்ளி கல்வி முறை! அந்த தவறான அடிப்படையில் வளர்ந்து; மேல்கல்விக்கு வந்தால், இப்படிப்பட்ட நேர்மையற்ற பேராசிரியர்களால் கற்பிக்கப்படுவது. மீண்டும் சொல்கிறேன்; எல்லோரும் நேர்மையற்றவர்கள் என்பதல்ல என் வாதம். இத்தலையங்கம் நேர்மையற்ற வழியில் பணி-நியமனம் பெறுவோர் குறித்தே!

           சாமான்யர்கள் போல், முதலில் கையூட்டைப் பெறுகின்ற அரசியல்வாதிகள் தான் தவறென்று யோசித்து; பின், இல்லை கொடுப்பவர் தான் முதல் குற்றவாளி என்றுணர்ந்தேன். ஆம்! ஒரு பதவிக்கு பலர் போட்டியிடும் நிலையில்; அதில் சிலர் சென்று நான் இவ்வளவு பணம் தருகிறேன் என்று சொல்லும்போது தான் - அதிலும் "இன்னுமோர்" போட்டி இருப்பதைப் பார்த்து அதற்கேற்ப "விலையும்" நிரனயிக்கப்படுகிறது. எரிவதைப் பிடுங்கினால்; கொதிப்பது அடங்கும் என்பது போல் - எல்லோரும் கொடுக்க மாட்டோம் என்ற உறுதிமொழி கொண்டால் - இந்த வசூல்-வேட்டை எப்படி நடக்கும்?! இதை எண்ணும்போது தான்; தனிமனித ஒழுக்கம் தறிகெட்டு இருப்பதைக் கண்டு  வெகுண்டெழுகிறேன். அதுதான், என் பார்வையின் பிரதிபலிப்பு! இந்த பணம் கொடுக்கும் விசயத்துக்கு அடுத்த தகுதி - நல்ல-பரிந்துரை(யாளர்) தேவைப்படுவது. இவ்விரண்டும் ஒரு பதவிக்கான விளம்பரம் செய்யப்படும்போதே; எவரை நிரனயிக்கவேண்டும்...

      என்பதையும் தீர்மானித்து விடுகிறது; மற்றதெல்லாம் கண்துடைப்பு. விளைவு?! தகுதியும்/திறமையும் இருந்தும்; நேர்முகத் தேர்வுக்கு கூட அழைக்கப்படாமல் போவது. இது ஏனோ, என்னுடைய அனுபவம் என்று மட்டும் எண்ணவேண்டாம்; மனதுக்குள்ளேயே தம் குமுறல்களை அடக்கிக்கொண்டு இருப்போர் ஏராளம். என்னைப்போன்று முனைவர் பட்டம் பெற்றோர் வெளிநாடுகளில் இருப்பதற்கு, இதுவும் ஒரு மிகமுக்கியமான காரணம். என்னுடைய கேள்வி இது மட்டும்தான்: எனக்கு தேவையான தகுதி இருந்தும், நான் ஏன் பணம் கொடுக்கவேண்டும்? அந்த தொகையை நான் வங்கியில் வைப்பு-நிதியில் வைத்தாலே; எந்த சிரமும் இல்லாமல் எனக்கு நல்லதொரு தொகை "வட்டியாய்" கிடைக்குமே?! இதில் வேதனையான விசயம் என்னவென்றால்; பெரும்பாலோர் அந்த தொகையை வட்டிக்கு வாங்கிக் கொடுப்பது தான் - அவர்களை என்ன செய்வது?! இது தவிர்த்து, அப்படி பணம் கொடுத்து அரசாங்க வேலை வாங்கினால்...


         அதை வைத்து நிறைய-வரதட்சனை வாங்கலாம்! என்றொரு கூட்டமும் இருக்கிறது. நான் ஏதோ விளையாட்டுக்காய் சொல்கிறேன் என்று நினைக்காதீர்... இது வேதனையான உண்மை. உயர்பதவியில் இருப்போர் எப்படி; ஒரு முதலீடு-செய்து அந்த பதவிக்கு வருகிறார்களோ?! - அதே அடிப்படையில் பேராசிரியர் போன்ற கீழ்-மட்ட பணி புரிபவரில் பலரும் "முதலீடு" செய்கின்றனர். பாருங்கள்! ஒருவரால் "கையூட்டு" கொடுத்து பெறப்படும் பதவி; தொடர்வினையாய் சென்று எத்தனை பேரை அதே தவறை செய்ய வைக்கிறதென்று?! நான் இங்கே சொல்லி இருப்பது; எனக்கு தெரிந்த துறை பற்றி மட்டுமே! இப்படி ஏராளமான துறைகள் உள்ளன. எல்லாவற்றிலும், அரசாங்கம் அத்தனை பேரை நியமித்து கண்காணிக்க முடியாது; இது ஒரு தனி மனிதனின் தன்னொழுக்கம் தவறுவதில் துவங்குகிறது! அதுதான் "கெயாட்டிக்(Chaotic)" கோட்பாட்டின் படி மற்ற தொடர் வினைகளுக்கு காரணமாகிறது! அதனால் தான், நான் இதை முதலில்...

           தனிமனித ஒழுக்கம் என்ற அடிப்படையில் இருந்தே பார்க்க விரும்புகிறேன். நான் என்னவோ அரசாங்கம்/ஆட்சியாளர்களை ஆதரிப்பதாய் பொருள் கொள்ளவேண்டாம்! இன்னும் எத்தனை காலத்திற்கு தான், எல்லாவற்றிற்கும், அரசையும்/ஆட்சியாளர்களையும் குறை கூறிக்கொண்டே "எதுவுமே மாறமால்; அதே ஏமாற்றத்துடன்" இருக்கப்போகிறோம்?! இப்படி பணம் கொடுத்து பதவி வகிப்போர் உயர்மட்டத்தில் இருந்து; கடைநிலை ஊழியர் வரை இருக்கும்போது - எப்படி எல்லாமும் ஒழுங்காகும்?! பணம் கொடுத்தும் நடக்கவில்லை எனில்; ஒரு அரசியல்வாதி/சம்பந்தப்பட்ட-ஊழியரை "ஆள் வைத்து அடிக்கும்" கொடுமையை  செய்வது எவர்?! தனியொரு மனிதன் தானே??!! அந்த அடிப்படையை மாற்றாமல்; ஆட்சியாளர்கள் மட்டும் மாறவேண்டும் என்று நினைப்பது சரியா?! அவர்களின் எண்ணிக்கை ஊழியர்களின் எண்ணிக்கையை விட மிகக்குறைவு. எனவே, என்னளவில், தனிமனித ஒழுக்கம் சீர்பெறாத வரையில்...


இதுமாதிரியான குற்றங்களும்/ஊழல்களும் அகற்றப்படுவது சாத்தியமேயில்லை!!!

பின்குறிப்பு: என் மனதை ரணமாக்கிய நிகழ்வு ஒன்றை பகிர ஆசைப்படுகிறேன். ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தை வேலைக்காக அணுகியபோது; அதன் இயக்குனர் என்னுடைய "Curricular Vitae"-இன் வடிவத்தை, அதாவது Format-ஐ மாற்ற சொன்னார். எனக்கு உடன்பாடே இல்லையெனினும்; அதை மாற்றிக் கொடுத்தேன். பின்னர், அடுத்த முறை சந்தித்தபோது; மீண்டும் நான் முன்பே கொடுத்த வடிவத்தில் கொடுக்க சொன்னார். இப்படியா ஒருவரின் "Curricular Vitae"-வை தரம் பார்ப்பது? இன்றுவரை, மீண்டும் என்னுடைய "Curricular Vitae"-வை கொடுக்கவே இல்லை. அப்படிப்பட்ட ஒருவரின் கீழ் வேலை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக