புதன், பிப்ரவரி 08, 2017

ஏன் பெரும்பான்மையில் பலரும் எதிர்க்கிறார்கள்?

{முன்குறிப்பு: திரு. ஓ.பி.எஸ். அவர்களின் நேற்றைய இரவுப் பேட்டிக்கு முன்பே எழுதியது! 
ஓரிரு நாட்கள் கழித்து பதிவதே திட்டம் - சூழல் காரணமாய் இன்றே பதிகிறேன்}
*******

  திருமதி. சசிகலா நடராஜன் முதலமைச்சராகப் பதவியேற்பதைப் பொதுமக்களில் பெரும்பான்மையில் பலரும், எதிர்க்க என்ன காரணம்? அவர் மேல் எவருக்கும் தனிப்பட்ட வெறுப்போ/பகையோ இல்லை! பின் ஏன், ஒரேநேரத்தில் ஒருசேர பலருக்கும் அப்படித் தோன்றவேண்டும்? சில புரிதல்கள் கீழே:
  1. நம்மில் பலரும், ஒரு பதவிக்கு அல்லது உயர்பதவிக்கு - நம் சக பணியாளரை/போட்டியாளரை - பின்னுக்குத் தள்ளிவிட்டு அல்லது ஏமாற்றிவிட்டு வரவேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பே! அதைச் சார்ந்து, அறத்தை மீறிய செயல்களைக் கூட செய்திருப்போம். அத்தைய செயல்களை, அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் விமர்சித்து இருப்பார்கள்; சபித்தும் இருப்பார்கள். இருப்பினும், அது ஒரு பணிப்போராட்டம்; அப்படித்தான் நிகழும் என்ற சமாதானத்துடன் கடந்திருப்போம்.
  2. மேற்குறிப்பிட்ட உதாரணத்தில், நாமும் அடிப்படைத் தகுதியுடன், அதே பணிச்சூழலில் இருப்போர் என்பதை உணரவேண்டும். எந்த அனுபமும், தகுதியும் இல்லாமல் - கட்சியிலோ/ஆட்சியிலோ/பதவியிலோ - ஒருபோதும் அங்கம் வகிக்காதவர் எடுத்தவுடன் அரசாங்கத்தின் உயர்பதவியில் அமர முயல்வதே பெருத்த எதிர்ப்புக்கு காரணமெனத் தோன்றுகிறது. கட்சிக்காரர்கள் பலரும் சொல்வது போல்; நிழலாய் அவர் பல காரியஙகள் செய்திருப்பது உண்மையாய் இருக்கலாம். மறைந்த அந்த தலைவியால் ஏன் “மறைமுகமாய் கூட” அது சுட்டிக்காட்டப் படவில்லை?! என்ற கேள்வியைக் கூட ஒதுக்கி விடலாம். ஆனால், பதவியில் அமரமுடியாத இடைஞ்சல்கள் வந்த போதெல்லாம், திரு. பன்னீர் செல்வத்தைத் தானே பதவியில் அமர்த்தி இருக்கிறார்? என்ற உண்மையும் கேள்வியாய் எழுகிறது.
  3. திரு. ஸ்டாலின் அவர்கள் தி.மு.க. வில் பல ஆண்டுகள் உறுப்பினராய்/மேயராய்/பலபதவிகளை வகித்தவர் என்பதை அனைவரும் அறிவர். அவரே கூட “தலைவர்” என்ற பதவிக்கு நிகரான ஒரு பதவியைப் பெறும்போது; குடும்ப அரசியல் என்றே பலரும் விவாதிக்கின்றனர். வயதில் மூத்த அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்களே?! என்ற வாதம் வைக்கின்றனர். அப்படி, களப்பணி செய்த ஸ்டாலின் போன்றோருக்கே மறுப்புகள் இருக்கும்போது; இந்த எதிர்ப்பு நியாமாகத் தானே தோன்றுகிறது?
  4. "அனுபவம் இல்லையென்றால் என்ன? நாமும் படித்தவுடனே எந்த முன் அனுபவமும் இல்லாமல் தானே முதலில் பணியில் அமர்கிறோம்?" என்றோர் கேள்வி எழலாம். உண்மைதான், அதை மறுப்பதற்கில்லை! ஆனால், அப்பதவியைப் பெறுவதற்குரிய கல்வியெனும் அடைப்படைத் தகுதியோடு தானே அப்பணியைப் பெறுகிறோம்? அப்படியான அடிப்படைத் தகுதி கூட இல்லையே! என்பதும் எதிர்ப்புக்கு காரணமாய் இருக்கிறது. 
  5. மேலும், முந்தைய தலைமை இறந்த 2 மாத காலத்தில்; இப்படி அடுத்தடுத்துப் பதவிகளை அடைய நினைப்பதும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது! இந்த ஆட்சியின் ஆயுட்காலம் இன்னும் 4 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது. குறைந்தது ஓராண்டாவது பொறுமையாய் இருந்து, இம்மாதிரியான ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தால்; இப்போது எதிர்ப்பவரில் பலரும் கூட ஆதரவாய் இருப்பர் என்றே தோன்றுகிறது. அதுவரை, அவர் முன்பே "நிழலாய் இருந்தார்!" என்ற கூற்றுப்படி; இப்போதும் நிழலாய் இருந்து பல விடயங்களைச் செய்து - அவரின் பலத்தை/திறமையை நிரூபிப்பதே முறையான வழியாய் இருக்கும்.
  6. தாம் வாக்களித்து, பதவியில் அமர்த்திய தலைவி இறந்து, இரண்டு மாதமே ஆன நிலையில்; இப்படியோர் முடிவை சர்வாதிகாரம் கொண்டு செய்ய நினைப்பது, மக்களின் மனதில்; எதிர்ப்புடன் சேர்ந்து பெருத்த பயத்தையம் உருவாக்கி இருக்கிறது. அந்த பயம் தான், பெரும்பான்மை எதிர்ப்பாய் மாறி இருக்கிறது. இதில் விந்தை என்னவென்றால், ஜெயலலிதா எனும் ஆளுமையை; அவர் உயிரோடு இருந்தபோது  தவறாய் விமர்சித்தோர் கூட,  இன்று அவரை நினைத்து வருந்திக் கொண்டிருப்பதே. அவர்களும், அவர் விட்டுச் சென்ற கட்சி இன்னும் தழைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எதிர்ப்பைக் காட்டுக்கிறார்கள்.
  7. இப்படி பல விதங்களில் எதிர்ப்புகள் இருக்க, ஒரு சர்வாதிகார எண்ணத்துடன்; அவரின் அரசியல் பிரவேசம், பதவியைக் குறிவைத்து இருப்பது சரியாய் தோன்றவில்லை! ஒருவேளை, இப்போது அவர் பதவியைப் பெற்று, ஏதேனும் ஒரு காரணத்திற்காய்; பின்னர் தோல்வியை அடைந்தால் அது அவருக்குத்தான் பெரிய பாதகத்தை விளைவிக்கும்.
  8. எனவே, அவர் இன்னும் ஓரிரு ஆண்டுகள்; அவருக்கு இருக்கும் செல்வாக்கை வைத்துக்கொண்டு - திரைக்கு பின்னிருந்து இயக்கும் இயக்குனர்கள் போல் - பின்னிருந்து கட்சியையும்/ஆட்சியையும் நடத்துவதே சிறந்தது. அதை சிறப்பாய் செய்துகாட்டினால், அவர் மேல் நம்பிக்கைப் பெருகி அவருக்கு ஆதரவாய் மாறும். இடையில், அவரின் அரசியல் ஞானத்தையும், அனுபவத்தையும் விரிவாக்கிக் கொள்ளலாம். அப்படி பொறுமை காத்து, ஓரிரு ஆண்டுகள் கழித்து பதவியை அணுகுவது சரியாய் இருக்கக்கூடும்.
  9. முதல்வர் போன்ற பதவியை அடைய ஒருவர் ஆசைப்படுவதோ அல்லது சூழ்ச்சி செய்வதோ; அரசியல் களத்துக்கு புதிதல்ல! ஆனால், அது எந்த வகையில் நிகழ்கிறது என்பதையே; மக்கள் முக்கியமாய் பார்க்கிறார்கள். முன்னாள் முதல்வரின் மரணத்தில் இருக்கும்  சந்தேகமே தீர்க்கப்படாத நிலையில்; அதுபற்றி கட்சிக்காரர்கள் சரியான காரணங்களைக் கூறாத நிலையில் - இப்படி பதவியைக் குறிவைத்து செயல்கள் நடைபெறுவது, மக்களுக்கு மேலும் பல சந்தேககங்களை உருவாக்கி இருக்கிறது. அந்த சந்தேகங்கள், பயமாய் மாறி; எதிர்ப்பாய் அலைவீசுகிறது என்பதே நிதர்சனம். 
  10. சட்டமன்ற உறுப்பினர்கள், திருமதி. சசிகலாவுக்குப் பெரும்பான்மையான ஆதரவைக் கொடுக்கலாம்; அரசியல் சாசனப்படி, அது முறையானதாகவும் இருக்கலாம்! ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களையே தேர்ந்தெடுத்தது, ஜனநாயக அடிப்படையிலான பொதுமக்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகக் கடமையாகிறது. எனவே...  
மக்களின் ஆதரவு இருப்பவர் ஒருவரை, முதல்வர் பதவியில் அமர்வதே... 
ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் செயலாகும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக