வெள்ளி, பிப்ரவரி 17, 2017

அன்புள்ள (கமல் ஹாசனைச் சார்ந்த) நம்மவர்களுக்கு...

உறுதி ஏற்போம்! கை கோர்ப்போம்!!

{திரு. கமல் ஹாசன் சொன்னதில்...
"களம்புகுந்தோர் களமறியார்!" என்பதற்கு ஆர்ப்பரித்த நாம்; 
"களமறிந்தோர் களமிறங்கார்!" என்றதை ஆழ்ந்து கவனிக்கவில்லையோ?!

*******

அன்புள்ள (கமல் ஹாசனைச் சார்ந்த) நம்மவர்களுக்கு!

          சென்ற வாரம் "அன்புள்ள திரு. கமல் ஹாசனுக்கு!" என்ற தலைப்பில் திரு. கமல் ஹாசனுக்கு எழுதிய பகிரங்க கடிதத்தைப் படித்திருப்பீர்! அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது ஒருபுறம் இருக்கட்டும்! அதற்கு முன், நாம் என்ன செய்யவேண்டும் என்பதை - நம்மவர்களான உங்களுடன் பகிர்வதும் என் கடமை ஆகிறது! "ஒருவேளை, அரசியலில் இறங்கி; அவர் தோற்றுவிட்டால் என்ன ஆவது?!" என்ற கவலை சிலருக்கு இருக்கக் கூடும்! அப்படியோர் கவலை அவருக்கே கூட இருக்கக்கூடும். அந்த கவலையைக் களைந்தெறியும் முனைப்பே இந்த பதிவு. இந்த விடயத்தில், நாம் செய்ய வேண்டியவற்றை கீழே விளக்கி இருக்கிறேன்:
  • வெகுநிச்சயமாய், மேற்குறிப்பிட்ட அழைப்பு "திரு. கமல் ஹாசன் அரசியலில் நுழைந்து, தனியாய் வெல்வார்" என்ற அடிப்படையில் அல்ல; அது சாத்தியமும் அல்ல! நிஜ வாழ்வில், அவரும் நம்மைப் போன்ற "ஒரு சாமான்யனே" என்பது நிதர்சனம். அவரின் படங்களில் கூட "அப்படிப்பட்ட நாயகத்தனத்தை" அவர் செய்வதில்லை; கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கலாம்! ஆனால், காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டவர் அவர். அதுதான் "A Wednesday" என்ற படத்தின் தழுவலுக்கு "உன்னைப் போல் ஒருவன்" என்ற தலைப்பிட காரணம்! ஆம், அவர் நம்மைப் போன்று; நம்மில் ஒருவர்; A comman man!
  • திரு. கமல் ஹாசனின் முடிவு ஒருபுறம் இருக்கட்டும்.  அதற்கு முன், நம்முடைய "நேரடிப் பங்கீடு" இல்லாமல்; அவர் மட்டுமல்ல! எவராலும் இதைச் சாத்தியப்படுத்த முடியாது என்பதை நினைவில் நிறுத்துவோம். சாமான்யர்கள் பலருக்கும், திரைப்படங்களில் வருவது போல் "நமக்காக எல்லாவற்றையும் செய்ய, தீப்பிழம்பாய் ஒருவன் வருவான்!" என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை தவறில்லை! ஆனால், அப்படி யோசித்தவுடன் அல்லது வசனம் பேசியவுடன் - "அதிர வைக்கும்" பின்னணி இசையோடு "மிரள வைக்கும்" ஒரு நாயகன் நம்முன் தோன்றிட, இது சினிமா அல்ல! வாழ்க்கை! அந்த நம்பிக்கையை சாத்தியமாக்க "ஒப்பற்ற உழைப்பு" தேவை! அந்த உழைப்பும் "கூட்டு உழைப்பாய்" இருந்தால் மட்டுமே;  எதிர்பார்க்கும் வெற்றி சாத்தியம்!
  • "யாராவது வந்து குரல் கொடுத்தால், தொடர்ந்து களத்தில் இருந்தால்; அவரை ஆதரிப்போம்!" என்ற மனநிலை பலருக்கும் இருக்கிறது. அப்படி யோசிக்கும் நமக்கே "அப்படி எவரும் வரமுடியாத சூழலில் அரசியலும்/சமுதாயமும் சீர்கெட்டு இருக்கிறது!" என்பது திண்ணமாய் தெரியும். இங்கே விவாதிக்கப்படும் விடயம் "வீட்டில் இருக்கும் சாக்கடையை சுத்தம் செய்யும் விடயம் அல்ல! சமுத்திரத்திலேயே கலந்துவிட்ட சாக்கடையை சுத்தம் செய்யும் விடயம்!!" "எவரேனும் வந்து குரல் கொடுப்பார்! பின்னர், அவரோடு இணைவோம்!" என்பது நடைமுறைக்கு ஒவ்வாத விடயம்! ஆனால், அப்படி ஒரு ஆற்றலும்/ஈர்ப்பும் உள்ள ஒருவரைக் கண்டறிந்து, அணுக முடியும்! அப்படி நாம் கண்டறிந்த ஒருவராகத் தான் திரு. கமல் ஹாசன் அவர்களை பார்க்கிறேன். ஆனால், அவரால் தனியாய் சாதிக்க முடியாது!
  • தமிழகத்தில் ஒரு "நிலையான/முறையான அரசியல் மாற்றம்" உருவாகிட - அமைப்பாளர்கள்/செயலாளர்கள்/மாவட்ட நிர்வாகிகள் துவங்கி சட்டமன்ற & நாடாளுமன்ற உறுப்பினர்கள்/மேயர்கள் வரை - குறைந்த பட்சம் 500 "நேர்மையான நபர்கள்" தேவை! தலைவன் மட்டும் நேர்மையாய் இருப்பின், இங்கே மாற்றங்கள் நிகழ்வது ஒருக்காலும் சாத்தியமில்லை! அந்த நபர்களில் ஒருவராய், என்னை முதல் ஆளாக அறிவிக்க; எனக்கு எந்த தயக்கமும் இல்லை. திரு. கமல் ஹாசனுக்கு பல ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களில், 500 நபர்களைத் தேர்ந்தெடுப்பது மிக எளிதான விடயம். அதற்கு நாம் தான், முதலடி எடுத்து வைத்து; அவருக்கு தேவையான உறுதியை அளிக்க வேண்டும். நமக்கிருக்கும் எல்லா ஐயங்களையும் ஒதுக்கி வைத்து, அவருக்கு இதைத் தெளிவாய் உணர்த்தி; அவரை அழைப்போம்! எனவே, நம்முடைய உறுதியை அவரின் பார்வைக்கு கொண்டு செல்வதும் நம் கடமை! அருள்கூர்ந்து, உங்களின் உறுதியையும் வெளிப்படுத்துங்கள்; இக்கருத்தைப் பகிருங்கள்.
  • அந்த உறுதி கிடைத்தால் மட்டுமே; அவரோ அல்லது அவர் போன்ற ஒருவரோ "தீப்பிழம்பாய் வெகுண்டெழுந்து" பொதுவாழ்க்கைக்கு வருவது சாத்தியம்! பொதுவாழ்வில் தம்மை அர்ப்பணிக்கும் எண்ணம், ஆயிரக் கணக்கானோர்க்கு உண்டு! ஆனால், ஒவ்வொருவருக்கும் இருக்கும் தயக்கம்; தனித்து எப்படி செய்வது என்பதே! இது தனிமனிதனால் சாத்தியமில்லை! இது கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமானது. அதை ஒருங்கிணைக்க தான் திரு. கமல் ஹாசனை அழைக்கிறேன். நீங்களும் தொடர்ந்து அழையுங்கள்! அவரின் மனமும் ஓர் நாள், ஓர் கணம் - மாறும்! அப்படி மாற்றவேண்டியது நம் கடமை!
  • "களம்புகுந்தோர் களமறியார்!" என்று அவர் சொன்னதை மட்டும் ஆரவாரமாய் பார்த்த நாம், அதற்கடுத்து சொன்ன "களமறிந்தோர் களமிறங்கார்!" என்பதை ஆழ்ந்து கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது! "களமறிந்தோர்" என்ற அவரின் பட்டியலில் எவரெவர் இடம்பெற்றனர் என்பது தெரியாது! ஆனால், அவருக்கு தெரியாமலாவது; அந்த பட்டியலில் அவர் இருக்கிறார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. என் பட்டியலில், அவர் நிச்சயம் முதன்மையில் இருக்கிறார். எனவே, அவருக்கு அரசியல் தெரியாது என்று அவர் கூறுயது; ஒரு நிருபரின் கேள்விக்கு வேண்டுமானால் "சிறந்த பதிலாய் இருக்கலாம்!". ஆனால், அவரின் இயல்பான சமுதாய அக்கறையும், அறிவியல் ஞானமும் அனைவரும் அறிந்ததே.
  • நாமெல்லாம் ஒன்றாய் சேர்ந்து, ஒத்தக் குரலில்; அவரை நோக்கி நாம் அனைவரும் "உம்மைப் போல் ஒருவன்" என்று உறுதியளிப்போம்! சமீபத்தில் "இந்தியா டுடே (India Today)" இதழுக்களித்த பேட்டியில் அவரே சொன்னது போல் "அவருக்குள் இருக்கும் சமுதாயக் கோபம் 40 ஆண்டுகள் முதிர்ந்தது!" என்பது நாமறிந்ததே. அந்தக் கோபத்தை, அவரின் அரசியல் ஞானத்தோடு சேர்த்து அரசியலுக்குள் கொண்டு சேர்ப்பது; நம் அனைவரின் கடமை. எனவே, அவரின் தயக்கத்தைத் தகர்த்தெறிந்து; அவரோடு நாமும் இணைந்து நாம் அனைவரும் விரும்பும் "அரசியல் மாற்றத்திற்கு" வழிவகுக்க வித்திடுவோம்! வாருங்கள், அவரைத் தொடர்ந்து அழைப்போம்! நம் உறுதியை தெரிவிப்போம்!! கூட்டாய் வெல்வோம்!!!
  • மேலும், நம் வள்ளுவப் பெருந்தகை  "காலமறிதல்" மற்றும் "இடனறிதல்" போன்ற அதிகாரங்களில் தெளிவாய் சொல்யிருப்பது போல்; முறையான "அரசியல் மாற்றம்" உருவாக, மிகச்சரியான இடமும்/காலமும் இப்போது வாய்த்திருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல்; செயல்களைத் துவங்குவது மிக முக்கியம்! அதற்கு திரு. கமல் ஹாசன் போன்றோர் தேவை என்பதே; உங்களை அனைவரின் சார்பான என் பார்வையும்/கோரிக்கையும்.
  • "இத்தனை கோடி மக்களில் வேறொரு தலைமையே இல்லையா?!" என்ற கேள்வி சிலரின் மனதில் எழலாம்; தவறில்லை! இது வேறொரு தலைவன் இல்லாததால் விளைந்த முடிவு அல்ல! இங்கே, ஆயிரமாயிரம் தலைவர்கள் இருக்கக்கூடும்!  ஆனால், அவர்களின் பெயர் கூட, நம்மில் பலருக்கும் தெரியாது. எல்லோர்க்கும் தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்; அதிலும் நம்பிக்கையான ஒருவர் தேவை! அதனால் தான், திரு. கமல் ஹாசனை முன்மொழிகிறேன்! மாற்று இருப்போர் சொல்லுங்கள்; அவரைத் தொடரவும் எந்த தயக்கமும் இல்லை! தலைமையைத்  தாண்டி, இப்போது தேவையான பெருத்த முனைப்பு;  மேற்குறிப்பிட்ட 500 பேர்களைக் கண்டறிவதே! நம்மில் இருந்து தான், அவர்களைக் கண்டறிந்து; தேர்ந்தெடுக்க வேண்டும்! அவர்களை வேறெங்கும் தேட முடியாது.
  • முன்பு என் வலைப்பதிவில் "என்னுள் உதித்தது" என்ற பிரிவில் பதிந்த; ஒரு கருத்துப்படத்தை இட்டு, இந்தப் பதிவை முடிக்க எண்ணுகிறேன். ஆம்! "அரசியல் எனும் சமுதாயக் கடமையில்" - விமர்சகர்கள் ஆகிய நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. வாருங்கள், நம் சமுதாயக் கடனை ஒருங்கிணைந்து ஆற்றுவோம்! வெற்றி கொள்வோம்!! 

"சிறு துளி பெருவெள்ளம்" என்று நாம் அறிந்ததை; நடைமுறைப் படுத்துவோம்!!! 

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக