ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

அதிகாரம் 056: கொடுங்கோன்மை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை

0551.  கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு
           அல்லவை செய்தொழுகும் வேந்து

           விழியப்பன் விளக்கம்: பொதுமக்களை அலைக்கழித்து, அறமல்லவைச் செய்து பழகும்
           அரசாள்பவர்; கொலைச் செய்வோரை விட, அதீத கொடுமையானவர் ஆவர்.
(அது போல்...)
           உறவுகளை வெறுத்து, வாய்மையல்லவைப் பேசி ஒதுக்கும் உறவினர்; கையூட்டுப்
           பெறுவோரை விட, மிக ஆபத்தானவர் ஆவர்.
      
0552.  வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
           கோலொடு நின்றான் இரவு

           விழியப்பன் விளக்கம்: செங்கோல் ஏந்திய அரசாள்வோர், பொதுமக்களின் பொருளை
           வேண்டுவது; அரிவாள் ஏந்திய கொள்ளையர், வழிப்போக்கரிடம் கொடு என்பதைப்
           போன்றதாகும்.
(அது போல்...)
           வேலை செய்யும் பிள்ளைகள், பெற்றோரின் சொத்தைப் பிடுங்குவது; பல்தொழில் புரியும்
           அதிபர்கள், வாடிக்கையாளரின் பணத்தை ஏய்ப்பதைப் போன்றதாகும்.
           
0553.  நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
           நாள்தொறும் நாடு கெடும்

           விழியப்பன் விளக்கம்: ஒவ்வொரு நாளும் - ஆராய்ந்தறிந்து முறையான செங்கோலைச்
           செலுத்தாத, அரசாள்பவரின் நாடு - ஒவ்வொரு நாளும், தன் வாழ்வியலை இழக்கும்.
(அது போல்...)
           ஒவ்வொரு நிலத்தையும் - போற்றிக்காத்து இயற்கையான விவசாயத்தை செய்யாத,
           இனத்தின் சந்ததி - ஒவ்வொரு பாரம்பரியத்தையும், தன் வழக்கிலிருந்து இழக்கும்.

0554.  கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
           சூழாது செய்யும் அரசு

           விழியப்பன் விளக்கம்: செங்கோல் தவறி, சிந்தனையின்றிக் கொடுங்கோலைச் செய்யும்
           அரசாங்கம்; உணவையும், குடிமக்களையும்; ஒருசேர ஒரே நேரத்தில் இழக்கும்.
(அது போல்...)
           அடிப்படை மறந்து, உணர்வின்றி உறவுகளை நீக்கும் பரம்பரை; சொத்தையும்,
           சந்ததியையும்; ஒன்றாக ஒரே தலைமுறையில் இழக்கும்.

0555.  அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
           செல்வத்தைத் தேய்க்கும் படை

           விழியப்பன் விளக்கம்: துன்பத்தில் ஆழ்ந்து, தேறமுடியாமல் அழும் பொதுமக்களின்
           கண்ணீர்தானே; கொடுங்கோல் புரியும் அரசாள்பவரின், செல்வத்தை அழிக்கும் ஆயுதம்?
(அது போல்...)
           வாழ்வியல் தொலைந்து, தங்கமுடியாமல் அலையும் விலங்குகளின் சாபம்தானே;
           காடழிக்கும் குணமுடைய இனத்தின், ஆணிவேரை வெட்டும் கோடரி?

0556.  மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
           மன்னாவாம் மன்னர்க்கு ஒளி

           விழியப்பன் விளக்கம்: அரசாள்வோர்க்கு நிலைத்த புகழைத் தருவது, செங்கோல்
           தவறாமையாகும்; மாறாய் கொடுங்கோல் புரிந்தால், அரசாள்வோரின் புகழ் நிலைக்காது.
(அது போல்...)
           வல்லரசுக்கு நீடித்த பலம் கொடுப்பது, பாதுகாப்பு குறையாததாகும்; மாறாய் பாதுகாப்பு
           குறைந்தால், வல்லரசின் பலம் நீடிக்காது.

0557.  துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
           அளியின்மை வாழும் உயிர்க்கு

           விழியப்பன் விளக்கம்: மன்னனின் அருளொளி கிடைக்காத, நாட்டு மக்களின் வாழ்வியல்;
           மழைத்துளி பொழியாததால், உலகத்துக்கு விளையும் கேட்டைப் போலிருக்கும்.
(அது போல்...)
           பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத, வீட்டுப் பிள்ளைகளின் வளர்ச்சி; சுற்றுவேலி
           இல்லாததால், பயிர்களுக்கு உண்டாகும் அழிவைப் போலிருக்கும்.

0558.  இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
           மன்னவன் கோல்கீழ்ப் படின்

           விழியப்பன் விளக்கம்: முறையான செங்கோலைச் செலுத்தாத, அரசாள்பவரின் ஆட்சியில்;
           வறுமையோடு இருப்பதை விட, உடையவராய் இருப்பதே கொடியதாகும்.
(அது போல்...)
           உண்மையான வாழ்வியலைக் கற்பிக்காத, சமூகத்தின் மத்தியில்; பொய்யராய் இருப்பதை
           விட, நேர்மையாய் வாழ்வதே சிக்கலானதாகும்.

0559.  முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
           ஒல்லாது வானம் பெயல்

           விழியப்பன் விளக்கம்: அரசாள்பவர், செங்கோல் தவறி ஆட்சி செய்தால்; விண்ணிலிருந்து
           பொழிய வேண்டிய மழை, பொழியாமல் தவறும்.
(அது போல்...)
           சமுதாயம், அறம் தவறி வாழ்வியலை நடத்தினால்; அன்பிலிருந்து இணைய வேண்டிய
           உறவுகள், இணையாமல் பிரியும்.

0560.  ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
           காவலன் காவான் எனின்

           விழியப்பன் விளக்கம்: நாட்டைக் காக்கவேண்டிய அரசாள்வோர், காக்கக் தவறினால்;
           பசுவின் பயனான பால்வளம் குன்றும்! இறைப்பணியைத் தொழிலாய் கொண்டோர்,
           அறநூல்களை மறப்பர்.
(அது போல்...)
           புரிதலைக் கற்பிக்கவேண்டிய ஆசிரியர், கற்பிக்கத் தவறினால்; படிப்பின் பயனான
           சிந்தனை குறையும்! ஆன்மீகத்தைப் போதிக்கும் குருக்கள், நீதிபோதனையை மறப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக